கரடியனாறை
மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக மாற்றுமாறும், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கரடியனாறு பொலிஸ் நிலையத்தை நவீன முறையில் அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும்,
"கரடியனாறில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் கமநலசேவை வளாகத்தில் அமைந்திருந்துள்ளது.
அந்த வளாகத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையம், நெல் களஞ்சியசாலை, கமநல சேவை நிலையம், என்பன அமைந்திருந்தன. இவை அனைத்தும் சேதமாக்கப்பட்டு விட்டன.
இங்கிருந்த பொலிஸ் நிலையம் தற்காலிகக் கொட்டகையில் இயங்கி வருகிறது. அத்துடன் கால்நடை வைத்திய காரியாலயம், அருகிலிருந்த ஆலயம், தபாலகம் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு முழு அளவிலும் பகுதியளவிலும் அரச, தனியார் கட்டடங்கள் கரடியனாறில் சேதமடைந்துள்ளன.
எனவே விசேட புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைத் திட்டம் ஒன்றை கரடியனாறில் ஆரம்பித்து மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக அதனை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இந்த இடத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றி, கரடியனாறு பொலிஸ் நிலையத்தைப் புதிய முறையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
பதுளை வீதியில் கரடியனாறு நகரம் என்பது, ஏ 5 வீதியின் மையப் பகுதியிலும், ஆயித்தியமலை உன்னிச்சை வீதி சந்திக்குமிடமாகவும், வேப்பவெட்டுவான் மாவடியோடை பகுதியை இணைக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.
இப்பகுதியிலுள்ள 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம், மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு வருபவர்களாவர்.
இலங்கையின் முக்கியமான மரக்கறி மாதிரிப் பண்ணைகளில் ஒன்றான கரடியனாறு இங்கு அமைந்துள்ளதால் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இங்கு விவசாய விளைபொருள் வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்கள் பாரிய நன்மையடைவார்கள். இதன்மூலம் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.