10 டிசம்பர், 2009

வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்திய சிறையதிகாரி கைது

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சிறைச்சாலை அதிகாரி இன்றுமுற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த அதிகாரி வெலிக்கடைப் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது பொலீசார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இளைஞர் பலி,


பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்- புத்தளம் மாவட்டம் முந்தல் மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தினால் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி பிரதேசத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். தனியார் சொகுசு பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட முந்தல் பொலீஸ் அதிகாரி, சொகுசு பஸ் சாரதிக்கு சார்பாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், குறித்த பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ஸ்தலத்திற்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு
விசாரணை குற்றப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு- சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை குற்றப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று கல்கிசை நீதவான் ஹர்ச சேதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் கையடக்கத் தொலைபேசியை களவாடிய சந்கேதநபரான ஆட்டோ சாரதியொருவரை இம்மாதம் 24ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபாவினால் சம்பள உயர்வு வழங்குவேன்-ஜெனரல் சரத்பொன்சேகா- தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபாவினால் சம்பள உயர்வு வழங்குவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா உறுதியளித்துள்ளார். இன்று எதிர்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அரச சேவையாளர்கள் மட்டுமன்றி தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்வதற்கு அவர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 40வருடங்களாக அரச சேவையில் அனுபவமுள்ளவன் என்றவகையில் அரச ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் இன்னல்களை தான் நன்கு அறிந்தவரென்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறுகிறது
-அகில இலங்கை ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கம்- தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்வரும் ஆண்டும் ஜனவரியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் பதவியுயர்வு வழங்குவது இடம்பெற்று வருவதாக ஒன்றிணைந்த புகையிரத பொது ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சுமதிபால மானவடு தெரிவித்துள்ளார். அரசின் இவ்வாறான நடவடிக்கைகளை தேர்தல் சட்ட விதிகளை மீறுவதாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்க ஆதரவு வழங்க பதிவு செய்யப்பட்டுள்ள பிரதி வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அந்த சங்கம் இத்தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகம் நிறைந்த சுதந்திரமான வாழ்க்கையைப் பெற்றுத்தந்தமையாலேயே தாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் இன்று சர்வதேச ரீதியில் பிரசித்து பெறுகின்றமைக்கு முப்பது வருடகாலமாக நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதியே காரணமென்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்-
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்- புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென ஜெனரல் சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக ஆதரித்துள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. முன்னாள் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்ததன் பின்னர் அவரை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தன. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய ஜே.விபியின் எம்.பி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் நடைபெற்றுவரும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவுகட்டி தாய்நாட்டைக் காக்கவே ஜெனரல் சரத்பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா 30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்நடவடிக்கையின்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்த வெற்றிக்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பலர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறு பெறப்பட்ட வெற்றியினை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கோருவது எந்தவகையில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.


அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்-

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து நேற்றையதினம் முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவசரகால சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 26தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தம்மை விடுதலை செய்யும்வரை இப்போராட்டம் தொடருமென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கூறியுள்ளனர்.

மருதானையில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்
- கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4மணியளவில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமது ஆதரவாளர்கள்மீது வானில் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அத்தனகல, கொழும்பு 07, நாரெகென்பிட்டிய, தும்புள்ள உள்ளிட்ட பிரதேசங்களிலும் இவ்வாறான தாக்குதல்கள் தமது ஆதரவாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு
- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

தேர்தலை பகிஷ்கரித்தல்,தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல்,யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல்,தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு,தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளனர்.

நேற்றையக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன்(தற்போது இந்தியாவில்), எஸ்.ஜெயானந்தமூர்த்தி(தற்போது லண்டனில்), சதாசிவம் கனகரத்தினம் (தற்போது தடுப்புக் காவலில்) ஆகியோர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் அமைதி ஊர்வலம்வழக்கு விசாரணைகளின்றி நீண்ட நாட்களாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி, வவுனியாவில் அமைதிப் பேரணி நடைபெற்றுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டார்கள். தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி வவுனியா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் பேரணியை அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் எதிரே கூடிய இவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தார்கள். தமது கோரிக்கையை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்தனர்.அதன் பின்னர் வவுனியா புகையிரதநிலைய வீதிவழியாக குருமண்காட்டுச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து மன்னார் வீதிவழியாக வவுனியா அரச செயலகத்திற்குச் சென்று பேரணி முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் வி.சகாதேவனும் கலந்து கொண்டார்.விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தைக்கோரும் மகஜர் ஒன்று வவுனியா அரச செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சருடன் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், இக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களை பிணையில் விடவும் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்வதற்கும் நீதி அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழர்கள் கெளரவம், சமவாய்ப்புடன் வாழ அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வே தேவை-றொபேட் ஓ பிளேக்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அவர் ஊடகவியலாளர்களை கொழும்பில் நேற்றுச் சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாடு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:இலங்கைப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படவேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் இலங்கையர்கள் அனைவரும் ஜனநாயக முன்னெடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்குபற்ற முடியும்.
குறிப்பாக வட மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வு அவசியமானதாகின்றது. இலங்கைப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படும் பட்சத்திலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் கௌரவத்துடனும், சம வாய்ப்புகளுடனும் வாழ்கின்றமையை உறுதிப்படுத்த முடியும். அரசும் எதிர்க்கட்சிகளும் அதிகாரப் பகிர்வின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படுவார்களென அமெரிக்கா நம்புகின்றது.

ஜனாதிபதித் தேர்தல்இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் ஜனநாயக விழுமிய பண்புகளுக்கு அமையவும் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. இத் தேர்தலின் பின்னர் அதிகாரப் பகிர்வின் மூலம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முன்னெடுப்புகள் காத்திரமான முறையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

அமெரிக்கா ஏனைய நாடுகளின் தேர்தல்களில் எந்தத் தரப்பு வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை. ஆனால், இத்தேர்தல் நீதியாகவும், நேர்மையாகவும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாகவும் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா பூரண ஆதரவு வழங்கும். இத்தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான நிலையிலேயே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மெனிக் பாமுக்கு விஜயம்யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கின்றது. இந்த அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நான் மெனிக்பாம் முகாமிற்குச் செவ்வாய்க்கிழமை காலை சென்றிருந்தேன். அங்கு ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அவதானித்தேன். அங்குள்ள மக்களுக்கு விரும்பிய இடத்திற்குச் சென்றுவர பெரிய அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டமையைக் கண்டு மகிழ்ந்தேன்.
மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் சிலரையும் சந்தித்தேன். அங்கு சில இடங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும். ஊடகவியலாளர்கள் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வேறுபட்ட கருத்துக்களைக் கூட வெளிப்படையாகப் பேசக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய சூழல் உருவாகவேண்டும்.அண்மையில் அமெரிக்கா விஜயம் செய்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகாவை அங்கு அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினர் யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த முயன்றமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த றொபட் பிளேக், அது தமது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயம் இல்லை என்பதால் கருத்துக்கூறமுடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...