3 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகளிடையேயான இன்றைய சந்திப்பு தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து




தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுகாலை இரண்டாவது தடவையாக கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. அத்துடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கூடுவதென்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா), தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீ ரெலோ ஆகிய கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தன. இக்கலந்துரையாடல் தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் பல தமிழ்க் கட்சிகள் கூடி கலந்துரையாடினோம். இதில் கலந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நானும் சிவாஜிலிங்கம் அவர்களும் கதைத்தபோது இரா.சம்பந்தன் அவர்கள் மறுப்புக் கூறவில்லை. தன்னுடைய கட்சியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு கூறுவதாக தெரிவித்தார். இது மிகவும் சிறந்ததொரு ஆரம்பமாகவே நான் பார்க்கின்றேன். நிச்சயமாக இதுவொரு தேர்தலுக்கான கூட்டு அல்ல. சில வேளைகளில் தேர்தல்களில் கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது வேறு கூட்டுகளில் இருந்தோ கேட்கலாம். இது ஒரு அரங்கம் என்றவாறே நாம் கூறமுடியும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துபேசி ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டுவர வேண்டுமென்கிற ஆர்வத்தை இங்கு கலந்து கொண்டிருந்த ஒவ்வொருவரிடையேயும் என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் புளொட் தலைவர் பதிலளித்துள்ளார்.

கேள்வி: இனப்பிரச்சினை தொடர்பாக இந்தக் கட்சிகளின் மத்தியில் ஏதேனும் பேசப்பட்டதா?

பதில்: அடிப்படையிலேயே இதுபற்றி எதுவுமே இன்று பேசப்படவில்லை. அதாவது நாங்கள் அனைவருமே கட்சிகளை ஒன்றுபடுத்திக் கொண்டுவர வேண்டுமென்பதிலேதான் ஆர்வமாக இருந்தோம். அதைவிட உடனடிப் பிரச்சினைகள், உதாரணமாக உயர்பாதுகாப்பு வலயம் அல்லது மக்கள் குடியேற்றப்படாமை இவை சம்பந்தமாக எங்களுடைய ஆட்சேபத்தை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கூறப்பட்டன. ஆனால் அடுத்த கூட்டத்திலேதான் இவ்விடயத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்.

கேள்வி: இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரியவகையில் அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்: நானும் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் திரு சம்பந்தன் அவர்களுடன் கதைத்திருந்தோம். அவர் அது தொடர்பில் ஆர்வமாகவும், ஆதரவாகவுமே கதைத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அவர்களை மீண்டும் மீண்டும் கலந்து கொள்வதற்கு கேட்பதற்கும் யோசித்துள்ளோம். நிச்சயமாக அவர்களும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாகுமென்றே நினைக்கின்றேன்.

கேள்வி: இந்தக் கட்சிகள் ஒன்று கூடியதற்கும் தேர்தல்களுக்கும் ஏதேனும் தொடர்புகளுண்டா?

பதில்: இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் வருகின்றபோது தேர்தல் கூட்டுக்கள் எவ்வாறு மாறும் எவ்வாறு இருக்குமென்பதைப் பற்றி தற்போது கூறமுடியாதிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உங்களுடைய கட்சி போட்டியிடுமாக இருந்தால் எவ்வாறான முடிவினை எதிர்பார்க்கிறீர்கள்:

பதில்: கடந்த பாராளுமன்றத் தேர்தல் போலல்லாமல் இம்முறை கவனமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து ஒரு கணிசமான அங்கத்துவத்தை பெற வேண்டுமென்ற ஆர்வமிருக்கிறது. அதற்காக தனித்துப் போட்டியிடுவோமென்று நான் கூறவரவில்லை. எப்படியும் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவந்து போட்டியிடுவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமென்று நான் கருதுகிறேன்.

கேள்வி: தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கம் தற்போது வெளிப்படுகிறதா?

பதில்: அது ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற நிலைமைக்குப் போகக் கூடாது. ஜனநாயகம் இருக்கவேண்டும். சில விடயங்கள் தொடர்பாக கருத்தொற்றுமை இருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய விடயமாக இருக்கும். முக்கியமாக அரசியல்தீர்வு சம்பந்தமாகவும், மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும், அதனை அணுகுவது சம்பந்தமாகவும் ஒத்தகருத்துகள் இருக்குமென்றால் அது ஒரு மிகப்பெரிய விடயமே.

கேள்வி: தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறான நிலையேற்படும்போது தமிழ்க் கட்சிகளுடைய வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: அரசாங்கத்திற்கு உள்ளேயே அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் உருவாகிக் கொண்டு வருகின்ற காரணத்தினால் விரைவில் தேர்தல் முறைகள் மாற்றப்படுமென்று நான் நம்பவில்லை. தேர்தல் முறைமைகள் மாற்றப்பட்ட பின்புதான் நாங்கள் அது பற்றி தீவிரமாக ஆராயமுடியும்.
மேலும் இங்கே தொடர்க...

சூரிச் மாநகரில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்









தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். இந்தவகையில் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00மணியளவில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, அஞ்சலிக் கூட்டம் என்பன இடம்பெறவுள்ளன. இக்கூட்டத்தில் கழகத் தோழர்கள், தோழமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளும் இடம்பெறவுள்ளன. மற்றும் விநோதவுடைப் போட்டி, சிறுவர்களின் நாட்டியம், நாடகம், இசைநிகழ்ச்சிகள், பாட்டுக்கேற்ற அபிநயம், நகைச்சுவைக் கதம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன், இதில் பங்கேற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைத்துத் தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு






தூத்துக்குடி துறைமுகத் தில் ரூ. 18கோடி மதிப்புள்ள 4 திட்டப்பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் மோகன்தாஸ் நேற்று தூத்துக்குடி வந்தார். திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி- கொழும்பு இடையே முதல்கட்டமாகவும், ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே 2-வது கட்டமாகவும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் கப்பல் போக்கு வரத்தை அரசே நடத்தும் திட்டம் எதுவுமில்லை. தனியார் கப்பல் நிறுவனங்கள்தான் இந்த பயணிகள் கப்பலை இயக்கும் இந்த திட்டத்தில் பயணிகள் விசா இல்லாமல் சென்று வரலாமா? அல்லது பயணம் செய்ய விசா வேண்டுமா? என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்,

சேது சமுத்திர திட்டத்தில் தற்போது எந்தவித முன்னேற்றமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்ப தால் எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறை வேற்றுவது தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

78 வயதில் ஆண் குழந்தைக்கு தந்தை ஆன முதியவர்

78 வயதில் ஆண் குழந்தைக்கு தந்தை ஆன முதியவர்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ரேமண்ட் கல்வெர்ட் (78), இவர் தன்னைவிட 54 வயது இளையவரான சார்லோட் (25) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கடந்த 10 வாரங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரேமண்ட் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த தள்ளாத வயதிலும் ஒரு குழந்தைக்கு தந்தையான சந்தோஷ வெள்ளத்தில் ரேமண்ட் திளைக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள நானும் எனது மனைவியும் திட்டமிட்டோம்.அதற்காக நான் வயாகரா மாத்திரையையோ அல்லது வேறு ஊக்க மருந்துகளையோ பயன்படுத்தவில்லை என்றார்.

குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த பின் நாங்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தவில்லை என வெட்கம் கலந்த புன்கையுடன் அவரது மனைவி சார்லோட் தெரிவித்தார்.அதற்கு முன்பு 76 வயது முதியவரான டென்னிஸ் இலாம் எனபவர் தனது மனைவி கோரா மூலம் கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பெற்று உலக சாதனை படைத்து இருந்தார். அந்த சாதனையை ரேமண்ட் கல்வெர்ட் முறி யடித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

மரபணு சோதனை மூலம் ஒரு மனிதனின் வாழ்நாளை கண்டுபிடிக்க முடியும். மனிதன் பிறக்கின்ற போதே அவனது இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் அவன் எத்தமரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்புனை நாள் உயிருடன் வாழ்ந்துவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைவான் என்று இதுவரை யாராலும் கணக்கிட முடியாமல் இருந்தது.

ஆனால் தற்போது ஒரு மனித உடலில் உள்ள மரபணுக்களை வைத்து அவனது வாழ்நாள் கணக்கிட முடியும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பயோலா செபாஸ்தியானி, தாமஸ் பெர்ல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இவர்கள் நியூ இங்கிலாந்து பகுதியில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது மரபணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து மனிதனின் வாழ்நாளை கணிக்க முடியும் என்றும் தெரியவந்தது. சில மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் தருகின்றன. இதன்மூலம் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் அறிய முடிந்தது.

இந்த ஆய்வின் மூலம் ஒரு மனிதனின் ஆயுள்காலத்தை 77 சதவீத அளவு துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் ஐநா உயர்ஸ்தானிகரம் மூடப்படவில்லை : யு.என்.எச்.சி.ஆர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டு விட்டதாக வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதே தவிர முற்றாக மூடப்படவில்லையென யு.என்.எச்.சி.ஆர் மட்டக்களப்பு அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் 93 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளது.அவை பூர்த்திசெய்யப்பட்டதும் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மட்டக்களப்பிலுள்ள இவ்வலுவலகம் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளும். எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை எதிர்கொள்ளும் : மத்திய வங்கி

ஜி.எஸ்.பி பிளஸ் உட்பட எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் ஏற்றுமதி வரிச்சலுகை நிறுத்தப்படக் கூடும் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"2009 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, இலங்கையில் தைக்கப்பட்ட ஆடைகளில் 50 வீதமானவை மாத்திரமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்படி ஏற்றுமதி செய்யப்பட்டவற்றில் 60 வீதமானவை மாத்திரமே ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றன.

ஒட்டுமொத்தமாக 78 மில்லியன் யூரோக்கள் மாத்திரமே இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையால் கிடைத்த பலன்.

இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் மாத்திரம் வழங்கப்படும் ஒரு தலைப்பட்ச வரிச்சலுகை. அது பரஸ்பரம் நன்மையானதல்ல. அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்ற ஆபத்தை கடந்த காலங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளோம்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ரத்தால் ஏற்படக்கூடிய சவால்களை இலங்கை ஏற்றுமதித்துறை இலகுவாக எதிர்கொள்ளும் நிலையை எட்டியுள்ளது."

இவ்வாறு மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

அவையில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்பட்ட நபர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான விமர்சனங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற பார்வையாளர் கூடத்தில் குழுமுவதனால் அவதானமாக செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நிதானத்துடன் செயற்படுமாறு உறுப்பினர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பக்கச் சார்பற்ற முறையில் சபாநாயகர் எடுத்தத் தீர்மானம் பாராட்டுக்குரியதென எதிர்க்கட்சிகளி;ன் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு பொருத்தமற்ற வசனங்களைப் பயன்படுத்தக் கூடாது என சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுவது யார்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்





இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.

மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா?

இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ""ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.

ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் பகுதியில் ராணுவ குடியிருப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்

தீவு பகுதியில் ராணுவ குடியிருப்பு அமைப்பதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினருக்கு நிரந்தர குடியிருப்பு கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை இலங்கை அரசு கைவிட வேண்டும்.

மேலும், வன்னி உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பகுதிகளில் புதிதாக ராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது. வன்னிப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட ராணுவ முகாமை உடனடியாக மூடவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜனத் ஜெயசூர்யா அண்மையில் பேசும்போது, முல்லைத்தீவு பகுதியில் ராணுவ வீரர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று கூறினார். இந்த திட்டத்துக்கு ஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த அவர், போரில் ராணுவம் வெற்றிப் பெற்றதை பாராட்டி எழுதினார்.

தமிழர் பகுதியில் மீண்டும் வன்முறை தலைதூக்கக்கூடாது, நாட்டில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தமிழர் வசிக்கும் பகுதிகளில் அண்மைக்காலமாக ராணுவத்தினரும், சிங்கள மக்களும் அதிக அளவில் குவிக்கப்படுவது தமிழர் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தற்காலிக குடியிருப்புகளில் வாழும் தோட்ட தொழிலாளருக்கு நிரந்தர வீடுகள் பட்ஜட் விவாதம் முடிந்ததும் பணிகள் ஆரம்பம்


மலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

தற்காலிகக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் காணிகள்

பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு பிரிவு, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், நிர்வாக ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதில் முன்பு முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிரந்தரமாகக் குடியிருப்பு வசதிகள் இருப்பவர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து சரியானவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாகக் குழுவை அமைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு தொடரும் ஜி.எஸ்.பி விவகாரத்தை வைத்து பகையை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சி


ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடனான எமது நட்புறவு தொடரும். ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி. எஸ். பி. நிவாரண விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் நிரந்தரப் பகைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீடிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை களை முன்வைத்திருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை.

இலங்கை இறைமையும், சுயாதிபத்தியமும் தனித்துவம் மிக்க ஒரு நாடு என்ற வகையில் நாம் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேறு உதவி ஒத்துழைப்புக்களை நாம் பெற்றுக் கொள்ளுவோம்.

நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியுள்ளோம். எமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதற்கு வடக்கும் கிழக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாணய கையிருப்பு பாரியளவு அதிகரித்துள்ளது. இந்த வரவு - செலவு திட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார, கூட்டமைப்பு மேம்பாட்டுக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது.

புலிப் பயங்கரவாதிகளால் அச்சம், பீதி கொண்டிருந்த மக்களை அந்த பீதியிலிருந்து விடுத்துள்ளோம். அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

புலிகளின் பிடியில் சிக்கி இருந்த சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் கடந்த வருடம் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உலகில் எந்த நாடும் செய்யாத அளவு நாம் சேவை செய்துள்ளோம். இது வரலாறாகும். புலிகளுடன் தொடர்புடையவர்கள் சிறுதொகையினர் மாத்திரமே தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகள் முடிவுற்றதும் அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்
மேலும் இங்கே தொடர்க...

3 இலங்கை மீனவர்கள் விடுதலை இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

இந்தியாவில் கைது செய்யப்பட்டி ருந்து விடுவிக்கப்பட்ட 13 இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நாடு திருப்பியுள்ளனர்.

இந்திய கடலோர காவற்படை யினரால் கைது செய்யப்பட்டிருந்த இந்த மீனவர்களின் இரண்டு படகுகள் ‘லைலா’ புயலால் திருத்திய மைக்க முடியாதவாறு சேதமடைந்து விட்டன. இதனால், விடுதலையான இவர்களை இலங்கை - இந்திய சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் கைய ளித்தனர்.

கடற்படையினர் இவர்களை ரண விக்கிரம கப்பல் மூலம் நேற்று முன் தினம் (01) மாலை பொறுப்பேற்று காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மீனவர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும் கடற்படையினரும் இணைந்து மீனவர்களின் துரித விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு சந்திரஹாசன், வரதர், டக்ளஸ், சங்கரி, சித்தர் உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு




தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவை யாகவும் கொழும்பில் நடைபெற்றது.

ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் ஆகியோருடன் த. ம. வி. பு. சார்பில் கைலேஷ்வரராஜா, நிஷாந்தன் ஆகியோரும் முதல் முறையாக கலந்துகொண்டனர்.

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர் களும் நேற்றைய சந்திப்பின் போது கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள், குறுகிய கால திட்டங்கள், மக்களின் உடனடித் தேவைகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அணுகுமுறை போன்ற விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள் அடுத்தடுத்து வரும் கூட்டங் களில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து வரைபு ஒன்றை தயாரிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது.

இதற்கென 8 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மீண்டும் கூடும் போது மேற் படி குழு தயாரிக்கும் வரைபு சமர்ப்பிக்க ப்படும்.

இந்த வரைபின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மேற்கொள்ளும். அத்துடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மேற்படி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தினுள் உள்வாங்குவது தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் செயற்படுவது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...