16 ஜூன், 2011

ஐ.நா. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும்: அலென்சாண்டர்

ஐ.நா. அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் அரசாங்கப் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க் குற்றத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது என்று அறிக்கையில் விடயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அதேவேளை, அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் சொந்த விசாரணை குழுவானது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கை ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும்.

உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து போர்க் குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் டக்ளஸ் அலென்சாண்டர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றத் தெரிவுக் குழுவானது சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடவே: யோகராஜன்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடும் நோக்கிலானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரவிக்கையில், அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ள. இவ்விடயத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கின்றது. எனினும் இந்தத் தெரிவுக்குழுவில் பயனில்லை என்பதே எமது தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு நிலையங்களில் தற்போது 3ஆயிரத்து 497 பேர் மாத்திரமே உள்ளனர்: சுதந்த ரணசிங்க
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவாயிரத்து 497 பேர் மாத்திரமே தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான தொழிற்பயிற்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வுவனியாவில் ஐந்து புனர்வாழ்வு நிலையத்திலும் பொலன்நறுவையில் இரண்டு நிலையங்களிலும் 106 முன்னாள் பெண் போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கனடாவில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76 பேரை கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணுராஜ தேவராஜ் (வயது 33), அந்தோனிமுத்து (வயது 33), கந்தசாமி (வயது 39) மற்றும் ஜெயசந்திரன் கனகராஜ் (வயது 32) ஆகியோரே கனேடிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத காலப்பகுதியில் ஓசன் லேடி என்ற கப்பல் மூலம் மேற்படி இலங்கையர்கள் 76 பேரையும் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

எயிட்ஸ் பேராபத்தை எதிர்நோக்கும் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் கனடா பல்கலைக்கழகத்துடன் நடத்திய ஆய்வில் தகவல் இலங்கையில் எயிட்ஸ் அபாயம்இலங்கையில் எச். ஐ. வி/ எயிட்ஸ் நோயின் பேராபத்துக்கு முகம் கொடுத்தவர்களாக ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் உயிர் வாழுகின்றார்கள் என மதிப்பிடப்பட்டிருப்ப தாக சுகாதார அமைச்சின் கீழுள்ள எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் நிமல் எதிரிசிங்க தெரிவித்தார்.

எச். ஐ. வி/ எயிட்ஸ் கட்டுப் பாட்டுக்கான தேசிய வேலைத் திட்டம் கனடா மெனிட்டோபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருப் பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் வியாபார நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் 40 ஆயிரம் பேரும், தன்னினச் சேர்க்கையாளர் 33 ஆயிரம் பேரும், ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் 40 ஆயிரம் பேரும் இருப்பது இந்த ஆய்வின் மூலம் இனங்காணப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாலியல் மற்றும் இனவிருத்தி ஆரோக்கியம் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கவனம் என்ற தொனிப்பொருளில் இலங்கை குடும்பத் திட்டம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில் :-

எச். ஐ. வி/ எயிட்ஸ் பரவுதல் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கி வருகின்றது. என்றாலும், இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேண முடியுமா? என்ற ஐயம் இப்போது மேலெழுந்திருக்கின்றது. இந்நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் 1987 ஆம் ஆண்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டார். அன்று முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையும் 1350 பேர் இத் தொற்றுக்குள்ளானவர்களாக எமது சிகிச்சை நிலையங்களில் பதிவாகியுள்ளனர். இவர்களில் 221 பேர் எயிட்ஸாகி உயிரிழந்து உள்ளனர். 313 பேர் எயிட்ஸணுடன் உயிர் வாழுகின்றனர். என்றாலும், இந்நாட்டில் மூவாயிரம் பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு உள்ளானவர்களாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், கனடாவின் மெனிட்டோபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாம் நடாத்திய ஆய்வில், இந்நாட்டில் வியாபார நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 40 ஆயிரம் பெண்களும், தன்னின சேர்க்கையில் ஈடுபடும் 33 ஆயிரம் பேரும், ஹெரொய்ன் போதைப் பொருள் பாவனையாளர்கள் 40 ஆயிரம் பேரும் இருப்பது என்பது ஆரோக்கியமானதல்ல. அதிலும் பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் குறைந்தது நான்கைந்து ஆண்கள் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலமை குறித்து உடனடியாக விசேட கவனம் செலுத்துவது மிக அவசியம்.

ஆண் பெண் தவறான பாலியல் தொடர்பு, தன்னினச் சேர்க்கை, போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்றனவே எச். ஐ. வி. பரவுவதற்கான பிரதான வழிகளாக விளங்குகின்றன. அதனால் எச். ஐ. வி/ எயிட்ஸின் பேராபத்திலிருந்து இலங்கையரைப் பாதுகாக்க விசேட கவனம் செலுத்துவது மிக முக்கியமான பணி என்றார்.

சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ஒகஸ் தலைமையிலான இச் செயலமர்வில் மகப் பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் லக்ஷ்மன் சேனநாயக்கா, டாக்டார்கள் ஹரிச்சந்திர யஹந்தாவல, லொசான் முனசிங்க ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இன உறவை சீரழிக்கும் சதியே சனல் - 4 காட்சி அரசாங்கம் முற்றாக நிராகரிப்பு புலிகளின் பணப்பலத்தால் சோடிக்கப்பட்டதே விவரணக் காட்சிகள்


இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சனல் - 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பணிப்பு க்கமைய, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத ஆயுதக் குழுவொன்றினால் பலாத்காரமாக பணயக் கைதிகளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் இதுவரைக்கும் உலகெங்கிலுமே நடைபெற்றிராத பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வது நிச்சயமற்றதென்ற நிலையில் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் இலங்கை இராணுவம் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதனால் இலங்கையின் கீர்த்தியும், புகழும் உலகம் முழுதும் வியாபித்தது.

இதைத் தாங்கிக்கொள்ள இயலாத புலிச் சார்பு ஊடகங்களே சனல் 4 விவரணப் படத்தில் இலங்கைக்கு எதிராக பாரிய புரளியை கிளப்பி விட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன உறவையும் புரிந்துணர்வையும் சீர்குலைத்து மீண்டும் இங்கு பிரிவினைவாதம் பயங்கரவாதத்தை தூண்டி அதனூடாக ஆதாயம் காண முயல்வோரின் கெட்ட வேலைகளே இவை. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க ஆணைக்குழு இதுவரைக்கும் இரு நூறுக்கும் மேலான மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளது. எனினும் இலங்கை இராணுவத்துக் கெதிரான எந்த முறைப்பாடுகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்டு அவை நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நல்லிணக்க ஆணைக்குழு தயாராகவுள்ளது- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. சட்ட இறைமையுள்ள அரசொன்று செய்ய வேண்டிய பணிகளே இலங்கையின் கடைசி யுத்தத்தில் செய்யப்பட்டன.

சனல் - 4 விவரணப் படம் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் புலிகளின் தரப்பால் வழங்கப்பட்டவை. அதிநவீன தொழில்நுட்ப உதவிகள், புலிகளின் பண வசதிகளைக் கொண்டு நன்கு கச்சிதமாக சோடிக்கப்பட்டவை. சனல் 4 விவரணக் காட்சிகளின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இதை நம்பத் தயாராக இல்லை.

ஆனால் வெளிநாடுகளிலுள்ள சில புலிச் சார்பு குழுக்களே தங்களது சொந்த நலனுக்காக இதைத் தூக்கிப் பிடிக்கின்றன. இவ்விடயத்தில் இலங்கை அரசு அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.

பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழுகின்ற இன்றைய சூழலில் இவ்வாறான போலி விவரணக் காட்சிகள் அம்மக்களின் சந்தோஷம், சுதந்திரம் என்பவற்றை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்ற முயற்சியாகவே இதை மக்கள் கருதுவதாக அரசாங்கம் கருதுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்
ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று ரஷ்யா பயணமாகிறார்.

‘புதிய யுகத்தை நோக்கி எழுச்சி பெறும் தலைமைத்துவம்’ எனும் தொனியில் நடைபெறவுள்ள இம்மாநாடு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் (16, 17, 18 ) ரஷ்யாவின் சென்பீட்டர்ஸ் பேர்க் நகரில் நடைபெறவுள்ளது. ரஷ்யா, சீனா, ஸ்பெயின், பின்லாந்து உட்பட பல நாடுகள் இப்பொருளாதார மன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. இம் மாநாட்டில் இலங்கை பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மேற்படி மாநாட்டில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட

முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாநாட்டில் குடியிருப்பாளர் பதிவு என்பதில் உண்மையில்லை குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவே வழமையான தகவல் திரட்டும் பணி


யாழ். குடாநாட்டில் ஆட்களை பதிவு செய்வதாக கூறப்படுவதில் எதுவித உண்மையுமில்லை என யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நேற்று தெரிவித்தார்.

குடாநாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக குடாநாட் டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் தமது பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள வீடுகள் வர்த்தக நிலை யங்களின் விபரங்களை திரட்டு கிறது. இப்பகுதிக்குள் புதிய வர்களின் வரவு, இரவு நேர ஆள் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபடும் நோக்குடனேயே இவ்வாறான தரவுகள் திரட்டப்படுகின்றன.

பொலிஸ் நிலையங்கள் தமது பிரிவிலுள்ள அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்களின் விபரங்களை திரட்டவில்லை. பதியவுமில்லை.

இதனை வைத்துக் கொண்டு குடாநாட்டு மக்கள் அனைவரையும் பதியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. இதில் எதுவித உண்மையுமில்லை என்றும் மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க கூறினார்.

குடாநாட்டில் குற்றச் செயல்கள், சட்டவிரோத செயல்கள் அதிகரித்திருந்தன. இவற்றை தடுப்பதற்காக இராணுவத்தினரும், பொலிஸாரும் தொடர்ந்தும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன.

இரவு நேர ரோந்து சேவைகள் உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளன என்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...