4 அக்டோபர், 2010

சிறையில் உள்ள புலி உறுப்பினர்களால் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்: கரு ஜயசூரிய

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை பார்வையிடுவதற்காக கரு ஜயசூரிய இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கரு,

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 30 மாத கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சரத் பொன்சேகாவிற்கு போதியளவு பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையரைப் பணிக்கமர்த்தத் தடை : சவூதி அரேபியா தீர்மானம்

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதைத் தடைச் செய்ய சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபிய வர்த்தமானியில் இது குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு இலங்கையரையும் வேலைக்கமர்த்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அரபு இராச்சியத்தின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அரபு இராச்சியத்தின் இலங்கைத் தொழிலாளர் ஒன்றியம், இலங்கைத் தொழில் அலுவலகம் என்பவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடு காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் : அமெரிக்கா

இலங்கை தொழில் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சலுகைத் திட்டத்தை வென்றெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் தொழிற்சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என அமெரிக்க நிறுவனமொன்று முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறைப்பாடுகள் குறித்து அமெரிக்காவில் அண்மையில் விசாரணைகள் நடைபெற்றன.

தொழில் அமைச்சருக்கு காணப்படும் அதீத அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென அமெரிக்க நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான சலுகைத் திட்டத்தை ரத்து செய்வது நோக்கமல்ல எனவும், தொழிற்சட்டங்களை நெறிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தொழிற்சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என அமெரிக்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் இம்முறை 300 பேர் புனித ஹஜ் பயணம்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை கிழக்கு மாகாணத்தின் பழம் பெரும் முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடியிலிருந்து சுமார் 300 பேர் புனித மக்கா பயணமாகவுள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு இம்மாதம் 16ஆம் திகதி காத்தான்குடியிலிருந்து பயணமாகின்றது. இக்குழு இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தில் புனித மக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம், மற்றும் ஏனைய ஹஜ் முகவர் நிலையங்களுடாக மக்காவுக்குப் பயணிக்கும் ஹஜ்ஜாஜிகள் 20ஆம் திகதி முதல் பயணமாகவுள்ளனர்.

இம்முறை காத்தான்குடியில் அங்கீகரிக்கப்பட்ட 3 முகவர் நிலையங்களூடாகவும் கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள முகவர் நிலையங்களூடாகவும் இத்தொகையினர் புனித ஹஜ் கடமைக்காகச் செல்லவுள்ளமை குறிப்படத்தக்கது.

ஹஜ் கடமைக்காகப் புனித மக்கா செல்வோருக்கான பொது பிரியாவிடை வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் ஜாமியுழ் ழாபிரீன் பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இலங்கை விஜயம்

சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமைற் கொள்கலன் வெடிப்பு சம்பவம் பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து நாடளாவிய ரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இப்புலனாய்வுக் குழுவினர் ஆராய்வை மேற்கொள்வர் எனவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.அதேவேளை கரடியனாறு வெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை இந்த சீன ஊடகமான சிங்குவா மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ முகாம்களை அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசு வன்னி மக்களைக் கண்டு கொள்ளாதிருக்கின்றது-த.தே.கூ

வன்னி நிலப் பரப்பில் இராணுவ முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்ற அரசாங்கம், மீள் குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தற்போதைய மழை வெள்ளத்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாது தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாது இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மீள்குடியேற்றக் கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெய்து வருகின்ற மழையின் காரணமாக மக்கள் பல் வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடு த்து வருகின்ற நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பி. யுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மீள் குடியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற எமது மக்கள் தற்போது பெய்து வருகின்ற அடை மழையினால் செய்வதறியாது தவிக்கின்றனர். மீள் குடியேற்றக் கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் சகலரும் இயற்கையின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற அதேவேளை ஒதுங்கி நிற்பதற்கும் இடமில்லாது அவதிப்படுகின்றனர்.

நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்காததன் விளைவாகவே எமது மக்கள் இவ்வாறு கஷ்டப்படுகின்றனர். மழை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே இன்றைய நிலைமை குறித்து அரசாங்கத்துக்கு அறிவித்தோம். மீள் குடியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் மழைக் காலத்தின்போது பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தோம்.

ஆனால் இவ்விடயத்தில் அலட்டிக் அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளிவிட்டுள்ளதையே காண முடிகின்றது. மழை வெள்ளத்தைக் கருத்திற் கொண்டு மாற்றுத் திட்டங்கள் எதுவுமே வன்னி நிலப் பரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இராணுவ முகாம்களையும் பொலிஸ் நிலையங்களை அமைத்து அதன் பணிகளை பூர்த்தி செய்து கொள்வதில் மாத்திரம் அரசாங்கம் தனது கடமையை மிகவும் சாதுரியமாக மேற்கொண்டு வருகின்றது. உண்மையில் இது எமக்கு கவலையளிக்கின்றது. நிரந்தரமில்லாத அரை குறையான மீள் குடியேற்றத்தை நம்பிய தமிழ் மக்கள் இன்று இரட்டிப்பான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இன்று மேன்முறையீடு

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அவரது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேன்முறையீட்டை இன்று தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இரண்டாவது இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அதற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதிக்கு குறித்த தீர்ப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரைகளுக்கே முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டார்.

அதன் பிரகாரம் அவருக்கு 30 மாதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டார். இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவ விலைமனுக்கோரல் முறைமைகளுக்கு புறம்பாக செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை குற்றவாளியாக இனங்கண்டது.

இரவு நேரங்களில் பார்க்கக் கூடிய தொலைநோக்கி, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி, சக்திவாய்ந்த மின் உபகரணங்கள் மற்றும் சுழலக்கூடிய யூஎச்எப் அன்ரனாக்களை முறையற்ற வகையில் கொள்வனவு செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை கைவிடுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை

தமிழகத்தில் சரணடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு இலங்கை அகதிகள் எத்தனிப்பதாகவும், இவ்வாறான முனைப்புக்களை கைவிடுமாறும் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகாம்களிலிருந்து தப்பித்து சட்டவிரோதமான முறையில் மேற்குலக நாடுகளுக்குச் செல்ல தமிழ் அகதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகதிகள் தொடர்பான தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரி கலைவண்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அகதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றாலும் இந்திய அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விசேட கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை தெற்காசியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது: இந்தியா

மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை தெற்காசிய பிராந்திய வலய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றதென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளை விடவும் இலங்கை முன்னணி வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

23ஆவது தொழிசார் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக அபிவிருத்திக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் துரித கதியில் அபிவிருத்தி இலக்குகளை எட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்கீளா.

எதிர்வரும் காலங்களில் இந்த பயணக் கட்டுப்பாடும் தளர்த்தப்படுமட் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

‘என்னை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கம்’ ஜனாதிபதி


“நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது.” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி, நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றோம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவும் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவும் ஐக்கியமாகவும் வாழக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந் துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றோம். இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியும்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றோர் உரிய பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை, கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றோர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

6540 பேருக்கு நவம்பரில் ஆசிரிய நியமனம்


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு கட்டங் கட்டமாக முன்னெடுத்து வருகின்றதென அமைச்சின் செயலாளர் சுனில் எச். சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டிடன் அனைத்து பகுதிகளிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நவம்பர் மாத இறுதிக்குள் இந்நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 06ம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் கல்வியியற் கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கும் ஆங்கிலப் பட்டதாரிகள் 540 பேருக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 10 ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடி ரத்து


வட மாகாணத்தில் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியலாளர்களுடன் ஆராயும் மீளாய்வுக் கூட்டம் அண்மையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சரிவரச் செய்யத் தவறிய மற்றும் வழங்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை செய்யத் தவறிய பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்த அனுமதிப் பத்திரமே இரத்துச்செய்யப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாதியர் சேவை யாப்பை நடைமுறைப்படுத்தல்: மருத்துவ அதிகாரிகள் எதிர்ப்பு நகைச்சுவை என்கிறது தாதியர் சங்கம்

தாதியர் சேவையின் யாப்பினை நடைமுறைப் படுத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பது நகைச்சுவையாக இருப்பதாக அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாதியர் சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவிகளின் உத்தியோகபூர்வ பெயர் மாற்றம் ஏற்படுவதால் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று கூறுவது வேடிக்கையான கூற்று என்று எண்ண வைக்கிறது என்று அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் தலைவர் முருதட்டுவே ஆனந்த தேரர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1980கள் வரை தாதியர் சேவையில் இருந்து உயர்ந்த பதவி பிரதான தாதி அதிகாரி என்று இருந்தது. 1980 களில் அது ‘தாதிப் பணிப்பாளர்கள்’ என மாறியது. இவ்வாறு பெயர் மாறியதால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறமுடியுமா.’

இந்நிலையில் ‘விசேட தர தாதி அதிகாரி’ எனும் பதவி ‘தாதி அதிகாரி’ என்று மாறியதால் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறுவது தேநீர் கோப்பையில் முதலையைக் காண்பதைப் போல் உள்ளது என்று கூறுவது போல் இருக்கிறது.

இந்த பொறுப்பில்லாத எதிர்ப்பானது நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திய சாலைகளில் அனைத்து மருத்துவர்களினதும் எதிர்ப்பு அல்ல என்று அவ்வாறான மருத்துவர்களுடன் நட்பு ரீதியில் சேவையாற்றும் தாதியர் கூறுகின்றனர்.

பதவிப் பெயர் மாற்றப் பட்டதால் பொறுப்புகளில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற பொறுப்பான சங்கமொன்று சகோதர சேவையின் பிரச்சினையை மாறுபட்ட கோணத்தில் பார்க்குமாயின் அது நாட்டின் நோயாளர் சமூகத்துக்கு மோசமான நிலையை ஏற்படுத்துவதாகவே அமைகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பேக்கரி உரிமையாளர் இன்று தீர்மானம்


பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கம் இன்று தீர்மானிக்குமென சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன கூறினார்.

கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனமான பிரிமா, மா கிலோவொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்தி ருப்ப தையடுத்து பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை களையும் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பேக்கரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மா இறக்குமதி செய்யும் செரண்டிப் நிறுவனமும் விரைவில் மா கிலோ வொன் றுக்கான விலையினை அதிகரிக்கு மென எதிர்பார்ப்பதாக கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு கோதுமைக்கு மானியம் வழங்கப்படாது

கோதுமை மாவுக்கு மானியங்களையும் நாம் வழங்கப்போவதில்லை. உள்நாட்டு விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, பாண் விலையதிகரிப்புக் குறித்து பொதுமக்கள் கலக்கமடையத் தேவையில்லை. அதற்கு பதிலாக அரிசி உற்பத்திப் பொருட்களின் பாவனையினை அதிகரிக்கவேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிமா நிறுவன விநியோகஸ் தர்கள் கோதுமை மா கிலோ வொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்திருப்பது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்ட வாறு பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை தொட்டுச் சென்ற குள்ளமும் உயரமும்


உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்தனர். மலேஷியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாட்டுக்குச் செல் லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர்.

உலகில் உயரமான மனிதரான ஹக் நவாஸ் 7 அடி 8 அங்குலம் உயரமானவர். அவருக்கு 2 சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர்.

இவரது சகோதர சகோதரிகள் அனைவரும் சாதாரண உயரமுடையவர்கள். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பஹபூரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், காலை உணவாக 16 ரொட்டிகள் 12 முட்டைகள் 4 லீட்டர் பாலையும் பகல் மற்றும் இரவு உணவாக 15 ரொட்டிகள் 3 கிலோ, மாட்டி றைச்சி அல்லது கோழி இறைச்சியையும் உண்பதாக கூறுகிறார்.

அத்துடன் மணித்தியாலத்துக்கு ஒருமுறை முன்பு பசியெடுப்பதன் காரணமாக சிற்றுண்டிகளை உண்பதாகவும் கூறுகிறார்.

24 வயதுடைய பிரமச்சாரியான இவர், 6 அடிக்கு மேற்பட்ட எந்தவொரு நாட்டையும் சேர்ந்த யுவதியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை உலகின் குள்ளமான மனிதரான அலி சமானின் உயரம் வெறுமனே 39 அங்குலம் மாத்திரமே (3 அடி 3 அங்குலம்).

48 வயதான இவர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இவரது மனைவியின் உயரம் 5 அடியாகும்.

இவருக்கு 16, 11 மற்றும் 6 வயதுடைய மூன்று மகள்மார் உள்ளனர். மூத்த மகளின் உயரம் 34 அங்குலம் ஆகும்.

பாகிஸ்தானிய தொலைக்காட்சியில் நடிகராகவும் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவராகவும் இவர் பணி புரிகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 500 கிராமங்கள் அபிவிருத்தி; ரூ. 200 கோடியில் வேலைத் திட்டம்

வட மாகாணத்திலுள்ள 500 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கென 200 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடு க்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கென 200 கோடி ரூபாவை உலக வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது என்றார்.

இத்திட்டத்திற்கென வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவுகள் மற்றும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் அண்மையில் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர் இதற்கான அனுமதி அடுத்த வாரம் கிடைக்கப் பெறவுள்ளது என்றும் அந்த அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் இம்மாத இறுதியில் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 500 கிராமங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேற்படி 200 கோடி ரூபா நிதியைப் பயன்படுத்தி அந்தந்த கிராமங்களிலுள்ள காணிகள் சுத்திகரிக்கப்படவுள்ளதுடன், வீதிகள், குளங்கள், சமூக நிலையங்கள், மருந்தகம் மற்றும் நூலகம் போன்ற வைகள் அபிவிருத்தி செய்யப்படவுள் ளன.

அந்தந்த கிராமங்களின் வாழும் மக்களின் பூரண பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு பல்வேறு அமைச்சுக்கள் அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க அதிபர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

‘நெல்சிப்’ வேலைத் திட்டத்தின் மூலம் ஐநூறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடைய உள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு உந்து சக்தியாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்கென அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடெங்கும் அடைமழை:வெள்ளம்; இருவர் உயிரிழப்பு ஆறுகள் பெருக்கெடுப்பு மண்சரிவு அச்சம் மக்கள் வெளியேற்றம்

நாடெங்கிலும் நேற்றும் பரவலாக மழை பெய்துள்ளது. ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக குக்குலே கங்கையில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

இன்று முதல் பெய்யும் மழையின் அளவு குறைவடைய முடியுமென எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி பொலன்னறுவையில் 117.9 மி.மீ. மதுகமவில் 108.3 மி.மீ. மன்னாரில் 66.4 மி.மீ என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மொனறாகலை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார். அதேநேரம், குருநாகல், அலவ்வ பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மதிலொன்று வீடொன்றில் சரிந்து விழுந்ததால் மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம் மழை காரணமாக சில கங்கைகள் பெருக்கெடுக்கும் கட்டத்தை அடைந்துள்ளதா கவும், மலைய கப் பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத் தல்களும் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதபுரம், இராஜங்கனை குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வழியும் கட்டத்தை அடைந்துள்ளதால் அதன் இரு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

மண்சரிவு அச்சுறுத்தல்

மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உடுவல, கந்தேமட கிராமங்களில் வசித்து வந்த 75 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் தற்போதைய மழைக் காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாராங்கற்கள் உருண்டு விழும் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளனர். அதனால் இக் குடும்ப ங்கள் தற்காலிகமாக நேற்று வெளியேற்ற ப்பட்டு குருலவெல கனிஷ்ட வித்தியால யத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டி ருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளர் ஐ. ஏ. கே. ரணவீர கூறினார். மண்சரிவு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் இப்பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பதால் பாடசாலை இன்று முதல் இரு நாட்களுக்குத் தற்காலிக மூடப்படும். இதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்குறிப்பிட்டார்.

இம்மக்களுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகள் மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம். எமது பணிகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஒத்துழைப்பு நல்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ரத்தொட்டை மற்றும் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு மற்றும் பாராங்கற்கள் உருண்டு விழுந்ததால் ஏழு வீடுகள் பகுதியாகச் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களனி கங்கை பெருக்கெடுப்பு 80 குடும்பங்கள் பாதிப்பு

கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் அஜித் நிஷாந்த குறிப்பிடுகையில், தற்போதைய மழை காரணமாக களனி கங்கை சில பிரதேசங்களில் பெருக்கெடுத்துள்ளது. இதனால் களனி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மேவெல்ல கிராமத்தில் 80 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சில வீடுகளுக்குள் மூன்றடி உயரத்திற்கு நீர் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அலவ்வயில் மதில் விழுந்து மூவர் காயம்

இதேவேளை குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் டப்ளியு, எம். எஸ். பி. வன்னிநாயக்கா கூறுகையில், அலவ்வ பிரதேசத்தில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக போவல என்ற கிராமத்திலுள்ள வீடொன்றின் மீது மதிலொன்று நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்ததால் மூவர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேநேரம் தெதுறு ஓயாவுடன் இணைகின்ற தோரயாய கால்வாய் கடந்த முதலாம் திகதி நள்ளிரவு பெருக்கெடுத்தது. இதனால் தோரயாய கிராமத்தில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டனர்.

மாவத்தகம பிரதேச பிரிவிலுள்ள பண்டாரகல, கெட்டிபொல, மெட்டி பொக்க கிராமங்களிலும் இம்மழை காரணமாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச மகாநாடு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டு கிளைகளின் ஏற்பாட்டில் ஜேர்மனியில் இரண்டுநாள் மகாநாடு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவருடம் அக்டோபர் மாதம் 30ம், 31ம் திகதிகளில் ஜேர்மனியில் உள்ள ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் அமெரிக்கா, ஜரோப்பிய, நாடுகளின் அமைப்பாளர்களும், உயர்மட்ட உறுப்பினர்களும் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். மகாநாட்டில் விவாதிக்கபடவுள்ள பிரதான விடயங்கள்:

* யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மீள்குடியேற்றப்பட்ட மக்களிற்கான உடனடி உதவிதேவைகள்
* அரச பாதுகாப்பில் இருக்கும் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள்.
* மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்
* தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான வேலை திட்டத்தை முன்னெடுத்தல்
* தமிழ் மக்களின் பிரதேசங்கள், கலாச்சாரம், தனித்துவம் என்பனவற்றினை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தினை ஏற்படுத்தும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை பெற்று கொள்வதற்கான போராட்டத்தினை ஜனநாயக வழியில் முன்னெடுத்தல்
* கட்சி தோழர்களின் புனர்வாழ்விற்கு உதவுதல்

என பல்வேறு செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, எதிர்கால திட்டங்களை புத்துணர்வுடன் முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களை கலந்து கொள்ளுமாறும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி - Democratic People's Liberation Front
மகாநாட்டின் ஊடக ஏற்பாட்டு குழு சார்பாக - எஸ்.ஜெகநாதன்(ஜேர்மனி)00 49-713130722

ஈமெயில்: ploteint@gmail.com
மேலும் இங்கே தொடர்க...