29 ஜூன், 2010

கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்சார்ள்ஸ் அன்டனிதாஸ் .'

குமரன் பத்மநாதன்
விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி

இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார்.

கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.

இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார்.

'' அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சம்



மன்னார் முருங்கன் கற்கடந்தகுளம் மற்றும் மச்சைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுதங்களுடன் வந்த நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 06 பேர் கொண்ட குழுவினரே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்கடந்த குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும், பிச்சைக்குளம் பகுதியிலுள்ள 2 வீடுகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் முருங்கன் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படிக் கொள்ளைச் சம்பவங்களையிட்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மன்னாரில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், மக்கள் தமது பணம், நகைகள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொலிசார் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மன்னார் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு நிராகரிப்பு










இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மூன்றுபேரைக் கொண்ட நீதிபதிகள் குழு மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில் மனு விசாரணைக்கு வந்தவேளையில் கருத்துரைத்த நீதிபதிகள் குழுவின் தலைவர் சத்தியா ஹெட்டிகே,


மனுதாரரின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு காரணங்களைக் கொண்டிருக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஜெனரல் சரத்பொன்சேகாவினால் முதலாவது நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தது





சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளதாக கூறி பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த விலையைவிட சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணை விலை குறைவாகவே உள்ளது.

மார்ச், ஏப்ரலில் பீப்பாவுக்கு 85-ல் இருந்து 88 டாலர் வரை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணை விலை 78 டாலராக இருந்தது. இன்று ஒரு டாலர் குறைந்து 77 டாலருக்கு விற்றது.
மேலும் இங்கே தொடர்க...

நடு வானத்தில் பறந்தபோது சென்னை விமானத்தில் கோளாறு: கொச்சியில் அவசரமாக தரை இறங்கியது





கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டது. அதில் 42 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை பைலட் கண்டு பிடித்தார். இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விடும் ஆபத்து ஏற்பட்டது.

உடனே விமானத்தை கொச்சிக்கே திருப்பி விட முடிவு செய்தார். விமான நிலையத்துக்கு அவசர தகவல் அனுப்பினார். விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

எந்த பிரச்சினையும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. புறப்பட்ட 30-வது நிமிடத்தில் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கினார்கள். அவர்களில் 12 பேர் தனியார் விமானத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை செல்லும் பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு: 200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

தாய்லாந்து கடலில்    விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு:     200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இதில், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள் ளது. இந்த நிலையில் தற் போது தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் ஆஸ்திரேலியா நோக்கி செல்கிறது. அதில், 200 பேர் பயணம் செய்கின் றனர். இந்த தகவலை பயங்கர வாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் குணவர்தனா, சன்டே அப்சர்வர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

இக்கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம் பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா? என்ற சந் தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலி யாவுக்கு செல்கிறது. ஹரின் பனிச்-19 என்ற இக்கப்பல் தற்போது எம்.வி.சன் சீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இக்கப்பலின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆயுத கடத்தலில் மிக வும் அனுபவம் வாய்ந்தவர். இதில் 3000 பேர் வரை பயணம் செய்யலாம்.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பலவீன மான சட்டங்கள் உள்ளன. எனவே அகதிகள் என்று கூறி அங்கு தஞ்சம் அடைய விடுதலைப்புலிகள் செல் கின்றனர். இக்கப்பலில் விடு தலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

புதிய இராணுவப் பேச்சாளராக உபய மெதவல நியமனம்

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

அத்துடன் இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வழங்கியதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

புதிய இராணுவ பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் உபய மெதவல இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு வந்தார்.

இராணுவத்தின் கவச பிரிவைச் சேர்ந்த இவர் சிறந்த மொழியாற்றல் உடையவர்.

மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் இரண்டாவது தடவையாக இராணுவ பேச்சாளராக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தொழிற்பயிற்சியை முடித்த 58 முன்னாள் போராளி சிறுவர்களுக்குச் சான்றிதழ்

வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சியை முடித்துக் கொண்ட 58 முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

வைபவத்தில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சர்வோதய நிலைய புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிலைய வளவில் நாட்டி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பசுக்கள் வழங்கும் திட்டமும் சர்வோதய எஇயல வளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்தத் திட்டம் : நிர்மல் வர்மா

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்று இந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்திய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்திய கடற்படையினர் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோல இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் பயிற்சி பாடத்திட்டங்களை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பிலான பாடத்திட்டம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு துறைகத்திற்கும் டியுட் கொரீன் துறைமுகத்திற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரத்திற்கு இடையில் படகு சேவையை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது." இவ்வாறி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் இந்தியா - இலங்கை இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேபோன்று, இந்திய - இலங்கை கடற்படைத்துறைகளில் விசேடமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றவகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி. மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது



கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஆயுத கொள்வனவு மற்றும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் தற்போது அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவு காரணமாக மன்னிப்பு அளிக்கப்படுவாரா என்பது குறித்து இப்பொழுதே எதுவும் கூறிவிட முடியாதெனவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதம ஆயுத கொள்வனவாளராக இருந்த கேபி அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த பல தகவல்களை வெளியிட்டார் என்று அறிக்கைகள் தெரிவித்தன. தற்போது அமைச்சர் ரம்பக்வெல்ல அவர் பற்றி தெரிவிக்கையில் கேபி தெரிவித்த தகவல்கள் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதன் பின்னரே அவருக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெறும் அதேவேளை புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான சில வழிமுறைகளில் அவர் அரசாங்கத்திற்கு உதவிவருகிறார் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர், தற்போது இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிவருத்திப் பணிகளிலும் நல்லிணக்த்தை ஏற்படத்துவதற்கான முயற்சிகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கேபி உதவியளித்து வருகிறார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெருந்தொகையான புலம்பெயர் தமிழர்களும் உதாசீனம் செய்து வந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் 21 உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றுடன் கேபி கடந்த வாரம் வடபகுதிக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜேவிபியினர் இதனை கண்டித்து, ஜெனரல் சரத் பொன்சேகா பொதுநலவாய பாராளுமன்ற சங்க கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், மிகவும் பாரதூரமான குற்றச்செயல்கள் புரிந்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்மநாதன் எவ்வாறு வடபகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்கள்
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் 550 பேர் நேற்று மீள்குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 550 பேர் நேற்று (28) கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்றப்பட்டனர்.

மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ். பிரதேசங்களில் உள்ள உறவினர் வீடுகளில் தங்கியிருந்த இவர்கள் விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

மேற்படி 19 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளதோடு எஞ்சியவர்களே நேற்று மீள்குடியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் நாளை (30) இதே பகுதிகளில் மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூர் விமான நிலையங்களை மேம்படுத்த திட்டம்






உள்ளூர் விமான நிலையங்களைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் சிறப்பான விமான சேவைகளை மேற்கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், விமானத்துறை பிரதி அமைச்சர் தயாசிரி திசேரா கூறியுள்ளார்.

இத் திட்டத்தின் சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நடைமுறைக்க வரும்போது நாட்டுக்குள் உள்ளூர் விமான சேவையிலும் முன்னேற்றம் ஏற்படுமென்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை விமான நிலைய இரண்டாம் கட்ட பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையின் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டுச் செயற்பாடு பற்றி சம்பந்தனுடன் சிவாஜிலிங்கமும் சித்தார்த்தனும் பேச்சு





இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் மக்கள் விரும்பும் பொது நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இக்கட்சிகளின் சார்பாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை சந்தித்து இந்த அழைப்பினை விடுத் துள்ளனர்.

இச்சந்திப்பு சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சுமார் அரை மணித்தியாலம் இச்சந்திப்பு நீடித்ததாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியுமா என்பது தொடர்பாகவும் மக்கள் விரும்பும் வகையில் பொது நிலைப் பாட்டினை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்தும் தற்போது ஏழு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருகின்றன.

இக்கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஏனைய தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த முயற்சியாகவே நேற்று சம்பந்தன் எம்.பியை சந்தித்து அழைப்பு விடுத்திருப் பதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

சந்திப்பின் போது சம்பந்தன் எம்.பி. இது தொடர்பாக தன்னுடன் ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது கட்சியின் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸணுடன் உரையாடுவதாகவும் தெரிவித்ததாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மற்றைய இரண்டு கட்சிகளுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொறியியலாளர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை


வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அரச சேவை மற்றும் மாகாண அரச சேவைகளில் நிலவும் பொறியியலாளர்க ளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 271 பொறியியலாளர்களுக்கான நியமனங்கள் நாளை மறுதினம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அடுத்த வருடத்தில் ஏற்படும் வெற்றிட ங்களை நிரப்புவதற்காக தகுதியுடையோரி டமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள் ளதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 233 சிவில் பொறியியலாளர்களுக்கும் இயந்தி ரவியல் மின்சாரவியல் பொறியியலாளர்கள் 38 பேருக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்படுவதாக அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப் பட்டுள்ளது.

நாளை (30) முதல் எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும். ஜுலை 3 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதோடு ஜுலை 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற உள்ளது. 9 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இன்று பாராளுமன்றம் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூட உள்ளதோடு ஏனைய தினங்களில் தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.30 வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. வரவு செலவுத் திட்ட யோசனையின் பிரசாரம் கூடுதலாக பாதுகாப்பு அமைச்சு செலவினத்திற்காக 20,221 கோடி 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரங்கேபண்டார எம்.பி. மீது தாக்குதல்: சாந்த அபேசேகரவுக்கும் சகாக்களுக்கும் நுகேகொடை நீதிமன்று அழைப்பாணை


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது ஆதரவாளர்கள் நால்வரும் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று அழைப்பாணை விடுத்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணையொன்றுக்கு தோற்ற வருகை தந்திருந்தபோது தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சிறிகொத்த மண்டபத்துக்குள் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் ரங்கே பண்டாரவின் மனைவியும் மகனும் ஏசி அச்சுறுத்தியதுடன் அவர்களை படமெடுத்ததாகவும் அச்சமயம் ரங்கே பண்டாரவின் மகன் இடுப்பில் கைத் துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகவும் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நுகேகொடை உதவி பொலிஸ் அதிகாரி நிஹால் மெண்டிஸ் தலைமையில் விரிவாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மேற்படி முறைப்பாடு, முறைப்பாட்டாளர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை மற்றும் நீதிமன்ற செயற்பா டுகளில் சாதகமான நிலையை ஏற்படுத்து வதற்காக செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடு என தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் ஊழியர்கள் மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞரணியின் புத்தளம் மாவட்ட தலைவர், பாராளுமன்ற உறுப் பினர்களின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் அந்த அனைத்து சாட்சியங்களின்படி முறைப்பாட்டாளர் கூறுவதை போன்ற ஒரு சம்பவம் இடம் பெறவில்லையென்றே தெரிய வருகிறது.

இதனால் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது சாட்சியாளர்கள் நால்வரும் பொய் முறைப்பாடு செய்தமை காரணமாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக மிரிஹான பொலிஸ் நிலையத்தின் அறிக்கையொன்றின் அடிப்படையிலேயே நுகேகொடை மாஜிஸ்திரேட் அழைப்பாணை பிறப் பித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி - இந்திய கடற்படைத் தளபதி நேற்று சந்திப்பு






இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்றுக் காலை அலரி மாளி கையில் இப்பேச்சுவார்த்தை இடம் பெற்றதுடன் காங்கேசன்துறை துறை முக புனரமைப்பு மற்றும் அதற்கான முன்னோடி ஆய்வுகளை இந்திய கடற்படையின் பங்களிப்புடன் மேற் கொள்வது சம்பந்தமாகவும் விரி வாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய கடற் துறைசார் மேம்பாடு தொடர்பான பல செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பில் இச் சந்திப்பின் போது கவனம் செலுத் தப்பட்டுள்ளதுடன் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை, தலைமன்னாருக்கும் ராமேஸ் வரத்துக்குமிடையிலான படகுச் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ள்ளது.

இலங்கை - இந்திய கடற் படைகளுக்கிடையிலான பயிற்சிகளின் முன்னேற்றம் குறித் தும் மாலுமிகள் மற்றும் அதிகாரி களுக்கான பயிற்சி வகுப்புகளை இரு நாடுகளுக்குமிடையில் ஆரம் பிப்பதற்கான வேலைத் திட்டம் சம்பந்தமாகவும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த இந்திய கடற்படைத் தளபதி; இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இரு நாடுகளு க்குமிடையிலான நட்புறவுகளை பலப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட் டார். இதன் மூலம் இலங்கை - இந்திய கடல் துறைசார் நடவடிக் கைகளில் எதிர்காலத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையின் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, இந்தியத் தூதுவர் அசோக் காந்த் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

வடக்குக்கு புதிதாக 250 வைத்தியர்கள்

தாதியர்கள் பற்றாக்குறையை நீக்கவும் புதிய நியமனம்
வட மாகாணத்தில் நிலவி வரும் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் 250 வைத்தியர்களும், 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இந்த புதிய நியமனங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த ஆளுநர், ஜுலை மாதத்தில் வைத்தியர்களும், ஆகஸ்ட் மாதத்தில் தாதிமார்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிதாக வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை உடனடியாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 34 வைத்தியர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 56 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 வைத்தியர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 250 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 77 தாதிமார்களும், வவுனியா மாவட்டத்திற்கு 62 தாதிமார்களும், மன்னார் மாவட்டத்திற்கு 48 தாதிமார்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 தாதிமார்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 40 தாதிமார்களும் என்ற அடிப்படையில் 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன வசதிகளைக் கொண்ட தற்காலிக வைத்தியசாலைகளை மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைய தற்காலிக வைத்திய சாலைகள், வைத்தியர்கள் தங்கும் அறைகள் மற்றும் உபகரணங்கள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இடம்பெயர்ந்த மக்களில் அனேகமானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

விசேடமாக பூநகரி, துணுக்காய், முசலி, நானாட்டான், மாந்தை போன்ற பகுதிகளுக்கு இந்த தற்காலிக வைத்திய சாலைகள் முதற்கட்டமாக மாற்றப்பட வுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...