14 பிப்ரவரி, 2011

உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க வெல்லும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். இதனால் அரசு வெள்ள அனர்த்தத்தை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்கிறது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி வெற்றிபெறும் மன்றங்களின் தலைவர், உப தலைவர் பதவிகளுக்கு உரியவர்களை விருப்பு வாக்குகளை மட்டும் கவனத்தில் கொள்ளாது, பல தகைமைகளைக் கவனத்திற்கொண்டு தெரிவு செய்யும். இதில் முக்கியமாக கட்சியின் வெற்றிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு எதிரான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டில் இந்தியாவும் தமிழ்க் கூட்டமைப்பும்

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சாட்சியங்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச உதவிகள் இடைநிறுத்தப்படலாம் என்று தேச ப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைக்கு முகம் கொடுக்க ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் எமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாட்டை துண்டாடும் அந்நிய சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில்,

மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கையை துண்டாடும் முயற்சியில் ஈடுபடுகின்றது. தற்போது இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் இந்தியாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் போது இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.

இதற்கு அமைவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெற்கின் அரசியல்வாதிகளையும் மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து தனி நாட்டிற்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு மெருகூட்டும் வகையில் இந்தியா மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது.

எனவே இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் ஜெனிவாவில் முன்னெடுக்க உள்ள நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தப்பியோடிய இராணுவத்தினரில் இதுவரை 4ஆயிரத்து 630 பேர் கைது


இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் இதுவரையில் 4ஆயிரத்து 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12 அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவப்பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார்.

தப்பியோடிய இராணுவ வீரர்களில் 4ஆயிரத்து 816 பேர் இதுவரையில் சரணடைந்துள்ளதுடன் அவர்களில் 11 அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கும் அவர் தப்பியோடியவர்களுக்கான சரணடையும் காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இராணுவ வீரர்களை சரணடையுமாறு நாம் அறிவித்திருந்தோம், அத்தோடு அதற்கான காலக்கெடுவும் விடுத்திருந்தோம். அதனடிப்படையிலேயே பெருந்தொகையினர் சரணடைந்துள்ளார்கள்.

இவ்வாறு சரணடைவதற்காக கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. எனவே இதுவரையிலும் சரணடையாமல் உள்ள தப்பியோடியவர்களையும் கைது செய்யவுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடும்

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடப் போகின்றது. பொதுமக்கள் உயிர் வாழ முடியாது. தமது பிள்ளைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். இதனால் நாட்டில் சாதாரண சூழல் பாதிப்படைந்து எகிப்தை தாண்டிய கிளர்ச்சி சூழல் ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.

எனவே ஏற்படப் போகும் அச்சுறுத்தலான நிலைக்கு அரசாங்கத்தின் முறைகேடான நிர்வாகமும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுமே பிரதான காரணமாக அமையும் என்றும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது பாரிய சுமைகளை சுமத்தி துரோகத்தனமாக செயற்படுகின்றது. எவ்விதமான நேர்மையும் அற்ற வகையிலான ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. நாட்டில் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. மக்கள் உயிர் வாழ முடியாத நிலையில் உள்ளனர்.

மந்த போசனம் மற்றும் போதியளவு உணவு பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களும் தீவிரமடைந்து வருகின்றன. இதனை சற்றும் சிந்திக்காது அரசாங்கம் அதி சொகுசு வாகனத்தை சாதாரண பஸ்களுக்கு விதிக்கப்படும் வரியில் இறக்குமதி செய்கின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதோடு அதற்கான வரி குறைப்புகளிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளை பாதுகாத்து இலங்கையை பௌத்த இராச்சியமாக மாற்றப் போவதாக கூறிய அரசாங்கம் இறுதியில் நாட்டை சூதாட்ட பூமியாகவும் பட்டினியின் இருப்பிடமுமாகவே மாற்றியுள்ளது. மஹிந்த சிந்தனை பெயரளவிலே உள்ளது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வாழ வேண்டிய பிள்ளைகளையும் வாழ வைக்க முடியாது பட்டினியில் அவர்கள் மரணிக்க வேண்டுமென்றால் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

யூதர்களுக்கு இடம்பெற்றது போன்று பாழ்பாணத்தில் மக்களுக்கு எதிரான பதிவுகள்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக ஹிட்லர் பயன்படுத்திய அராஜக நடவடிக்கையை போன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் சீருடை தரித்தவர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நல்லூர், கோப்பாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களின் தகவல்களை திரட்டுவதற்காக படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு குடும்பம், குடும்பமாக புகைப்படங்களும் எடுக்கப்படுகிறது. அதற்காக 100 ரூபா அந்த மக்களிடமே அறவிடப்படுகின்றது. அன்று ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக அடையாளச் சின்னம் ஹிட்லரால் வழங்கப்பட்டது. அதேபோன்று இன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக அம் மக்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெக்கின்றது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரதேச செயலாளருக்கு இது தொடர்பில் எதுவுமே தெரியாது. பாதுகாப்பு அமைச்சின் மூலம் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

பருத்தித்துறையில் எமது கட்சியில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டிற்கு அண்மையில் சீருடை தரித்தவர்கள் சென்று குடும்ப விவரங்களையும் தகவல்களையும் பெற்றுள்ளனர். இவ்வாறு இரண்டாம் முறையும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள வேட்பாளர் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இம் மக்கள் முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே சீருடையாட்களை கண்டால் அச்சமடைகிறார்கள். இன்னும் அவர்கள் மத்தியில் யுத்த பயம் காணப்படுகிறது.

அதேபோன்று வவுனியாவில் போட்டியிடம் வேட்பாளரது வீட்டுக்கு சென்ற இரகசியப் பொலிஸார் அவரது தகவல்களை சேகரித்துள்ளனர். வேட்பாளர்களின் தகவல்கள் தேவையென்றக்ஷில் தேர்தல்கள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சீருடை தரித்தவர்களையும் இரகசியப் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கம் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கின்றது. தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்பிரதேசத்திலுள்ள வேட்பாளர்களுடனான சந்திப்பின்போது கூட்டங்களில் உரையாற்றும்போது ஜனாதிபதியை விமர்சிக்கக் கூடாதென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். அச் சுற்றறிக்கையை காண்பிக்குமாறு வேட்பாளர்கள் கோரிய போது காண்பிப்பதற்கு மறுத்துள்ளார். அது மட்டுமல்லாது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கொண்டுள்ளனர். ஆயுதங்களும் பகிரங்கமாக தேர்தல் களத்தில் தலைதூக்கியுள்ளது.

இதுவொரு பயங்கரமான சூழ்நிலையாகும். தேர்தல்களம் ஆயுதக் களமாக மாறியுள்ளது. மறுபுறம் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் பதிவு செய்வது புகைப்படமெடுப்பதன் மூலம் ஹிட்லரைப் போன்று அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடருமானால் அம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் செல்வோம். இன்று எகிப்து, டியூனிசியா போன்ற நாடுகளில் சர்வாதிகாரத்திறகு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் இன்று சர்வாதிகாரம் அராஜகம் தலைதூக்கி வருகிறது. இதனை தொடர முடியாது மக்களின் எதிர்ப்புக்கள் ஒரு நாள் வெளியே வரும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை: கருஜயசூரிய

இந்நாட்டில் அண்மை காலமாக கொலை செய்யப்பட்ட அல்லது தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு எதுவித உத்தரவாதமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர்,

இந் நாட்டில் அண்மை காலமாக 12 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் 31 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். இவை எதற்கும் இதுவரை சரியான விசாரணை நடத்தவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்படவில்லை.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெரும்;. அனைத்து சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம அரசு ஒன்று உருவாக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமாக 5100 வேட்பாளர்;களை இம் முறை நிறுத்திவுள்ளோம்.

தற்போதைய ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்கள் நாளுக்கு நாள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திரும்புகின்றனர். எமக்கு கிடைக்கும் இரகசிய அறிக்கைகள் இதனை தெளிவாக்கியுள்ளன. நாட்டின் அநியாயங்கள் கூடி விட்டன. வெள்ளை வான் கலாசாரம் ஒன்று உருவாகிவுள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் வெள்ளை வான்கள் பின் தொடர்கின்றன. நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சரத் பொன்சேக்கா சிறையில் வைத்துத் துன்புறுத்தப்படுகின்றார். நீதிமன்றம் விடுத்துள்ள தீர்ப்பின் படி அவருக்கு அளிக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட அளிக்கப்படவில்லை.

எகிப்திலும் இடம் பெற்றது இவ்வாறான ஒன்றாகும். ஹோஸ்னி முபாரக்கும் தனது பிரதிவாதியை சிறையில் அடைத்தார். ஆனால் மக்கள் ஒன்று திரண்டு இன்று அவரை பதவியை துறக்கச் செய்துள்ளனர். இலங்கையிலும் இவ்வாறான நிலை உருவாகாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...