30 ஜூலை, 2010

என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் - கேபி







இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் . இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.

ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி இது. பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?
அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.

அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.

மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.

நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.

புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?

வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.

இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.

இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).

எங்களது இமெயில் முகவரி- டுடூக்ச்ஃடூடீஙுக்ஷச்.ங்கூ/ சூசூசூ.டூடீஙுக்ஷச்.ங்கூ

மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?

நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.

ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.

இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.

அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?

பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.

போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.

இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.

எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.

மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.

அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?

1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.

டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.

நான் யாழ்ப்பாணம் மகாராஜா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.

யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.

(கேபி அளித்த இந்த ராணுவ முகாம் பேட்டி நாளை தொடரும்...)

கேபியை மன்னிக்க சட்டத்தில் இடமுண்டு-இலங்கை அரசு:

இதற்கிடையே, இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கேபி குறித்துக் கூறுகையில்,

எந்தவொரு குற்றவாளியையும் அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

வொய்ஸ் ஒப் ஏஸியா ஊடக நிறுவனம்மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்


இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்கின் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம் ஆகியவற்றின் செய்திப்பிரிவுமீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை புளொட் வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வாறாக ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடானது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே நாம் கருதுகிறோம். கடந்த காலங்களில் இவ்வாறான பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இத்தகைய மிலேட்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க நிறுவனத்திற்கும், பணிப்பாளர், ஊழியர்கள் ஆகியோருக்கும் ஆழ்ந்த கவலைகளைக் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் புளொட் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி 77,500 பவுண்ஸ் நஷ்டஈடு

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் ரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிக்கைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண் டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இந்த தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றி பெற்றால் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி வழக்கின் 20 சாட்சியாளர்களையும் ஆஜர்படுத்துமாறு மேல்நீதிமன்றம் உத்தரவு









முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதற்கான அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் அவர் பாராளுமன்றம் சென்று வருவதற்கு உரிய வசதிகளை செய்து கொண்டுக்குமாறும் மேல் நீதிமன்றம் இராணுவ அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் வெள்ளைக்கொடியுடன் வந்த சந்தர்ப்பத்தில் அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்றும் அதற்கான உத்தரவு பாதுகாப்பின் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைகக்கு செவ்வி வழங்கியிருந்தாக குற்றம் சாட்டி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர டபிள்யூ.எம். பீ.பி. வராவேவ மற்றும் சுல்பிகார் ரசீம் ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் நேற்று ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் அவதானித்த நீதிபதிகள் குழு, தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பிரகாரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராக்குமாறும் அதற்கான அழைப்பானையினை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா தரப்பில் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் குழு தெரிவித்தது.

இங்கு அரச தரப்பில் அஜரான பிரதி சட்டமா அதிபர் இந்த வழக்கிற்கு சாட்சிகளாக மூன்று இருவெட்டுக்கள் சமர்ப்பிக்க படவுள்ளதாகவும், தெரிவித்தார். பிரதிவாதியான ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் அஜரான சட்டத்தரணி சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்றிக்கா ஜேன்ஸுன் குறிப்புப் புத்தகம் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரை பாராளுமன்றம் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன் அவரது சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை நீதிமன்றம் விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ளுமாறும் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்





அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பத்திரிகை சங்கத்தில் நேற்று உரையாற்றியபோது, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு என்றுமில்லாத அளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும் தொகையானோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை, கடந்த வருடத்தில் புனர் நிர்மாண பணிகள் தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றம் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகியன பற்றி இரு அமைச்சர்களும் விளக்கி கூறினார்கள்.

ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு அதிபர் சுமிதக பூஜித தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரண்டு இலங்கை அமைச்சர்களும் வர்ததகம், முதலீடு தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் சாதகமான நிலைமைகளை ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு எடுத்து விளக்கினார்கள்.

இலங்கையின் புவியியல் அமைப்பு, இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனுமான பரஸ்பர வர்த்தக உடன்படிக்கைகள், இலங்கையின் சட்ட, அரசியல் யாப்பு பிரமாணங்களின் கீழ் ஏற்பட்டுள்ள வலுவான பாதுகாப்பு முதலீட்டு சபையினால் வழங்கப்படும் ஊக்குவிப்புக்கள், கிடைக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த உயர்தர மனித வளங்கள் ஆகிய அம்சங்களை இரு அமைச்சர்களும் எடுத்துக் கூறினர்.

இலங்கையில் பணியாற்றிவரும் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய அரங்கில் இரு அமைச்சர்களும் உரையாற்றினர். மிகவும் கஷ்டமான கால கட்டங்களில் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உதவி குறித்து அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

சொற்பொழிவுகளை அடுத்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது தன்னார்வ நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைசார்ந்த தீர்வுகள் காணப்பட்டன. சுமுக நிலையும் அமைதியும் தோன்றியுள்ளதை அடுத்து இலங்கையில் தங்கள் திட்டங்களை மேலும் விஸ்தரிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தரமாக வெளியேறியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பெப்ரல் அமைப்பு





யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டு முறையான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே பெவ்ரல் அமைப்பின் நோக்கமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் இடாப்பு பதிவு நடவடிக்கைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன. அனைவரும் ஆர்வத்துடன் வாக்காளர் பதிவில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படவேண்டும். அந்த வகையில் சரியான வாக்காளர் இடாப்பு உருவாக்கப்படவேண்டும் என்றே கூறுகின்றோம்.

கடந்தகாலங்களில் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிர்நதரமாக வெளியேறிவிட்டனர். வேறு மாவட்டங்களுக்கு ஒரு பகுதியினர் வந்து அங்கு வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனவே புதிய திருத்தம் அவசியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் நிரந்தரமாக அம்மாவட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஆனால் அந்த தகவலை உறுதிபடுத்த முடியவில்லை. மேலும் நிரந்தரமாக சென்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தகவல்கள் எங்கும் இல்லை. எனவே 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவின்போது இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டு புதிய இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஒரு ஆரோக்கியமான நிலைமையின் கீழ் புதிய இடாப்பு வரவேண்டும். மேலும் 2011 ஆம் ஆண்டில் சனத்தொகை மதிப்பீடு இடம்பெறவுள்ளதாக தெரிகின்றது. அந்த சந்தர்ப்பம் எமக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது:







உயர் நீதிமன்றம் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள்.

அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இதையடுத்து, வக்கில் கருப்பன் என்பவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் கூறி இருந்ததாவது:

ராஜீவ்காந்தி கொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை 1998ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு குறித்த குழு சிபாரிசு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், 1998ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி, புலனாய்வின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலை, விசாரணை நீதிமன்றில் புலனாய்வு துறை தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் நுதிமன்றிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் புலனாய்வு மறைத்ததால், நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இம்மனு, நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறி, நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அவர்கள் அனுமதி அளித்தனர்
மேலும் இங்கே தொடர்க...