27 ஆகஸ்ட், 2009

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்-

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு மாங்குளம் தெரிவுசெய்யப்பட்டு அதற்கென 900மில்லியன் ரூபா அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ளது. வடக்கில் ஓரளவு பாதிக்கப்பட்ட மற்றும் முழுஅளவிலும் பாதிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணப் பணிகளுக்கென 625மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கே உருவாகவுள்ள வடமாகாண சபையின் தலைமைச்செயலகம் மாங்குளத்தில் அமையவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா.அமைப்பினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கத் தீர்மானம்-

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிவழங்கத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புச் செயலகத்திற்கு பிரித்தானியா நிதியுதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானியா 75ஆயிரம் ஸ்ரேர்லின் பவுண்களை வழங்கவுள்ளது. அத்துடன் மனிதாபிமானப் கடமைகளை மேற்கொள்வோர்க்குத் தேவையான தகவல்களை வழங்கும் பணிகளுக்கும் பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குத் தேவையான புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ள பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

'இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ''சானல் 4'' நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களிலிருந்து பல மதகுருமார்கள் குடும்பத்துடன் விடுவிப்பு




இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்த இந்து கிறிஸ்தவ மத குருக்களும், அவர்களது குடும்பத்தினருமாக 116 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக முகாம்களில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதற்கான வைபவம் வவுனியா இராணுவ தலைமையகத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளருமாகிய பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. விடுவிக்கப்பட்டவர்கள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். கத்தோலிக்க மதகுருக்கள் ஐந்து பேர் மன்னார் ஆயரிடம் கையளிக்கப்பட்ட அதேவேளை, இந்து குருமார்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.



முகாம்களில் இருந்து விடுதலையாகிய பலரும் இந்த விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். ஆயினும் இன்று விடுதலையாகாமல் பலர் திரும்பவும் முகாம்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மேலும் இங்கே தொடர்க...