10 டிசம்பர், 2010

இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்ற விசாரணை வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய "சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட கானொளியின் நீட்டிப்பு கானொளி என குறிப்பிட்ட கானொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அக் கானொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைபுலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயின் ஒளிபரப்பப்பட்ட கானொளி சித்தரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் செயற்பாட்டாளர்களால் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டமல்ல: டலஸ்

லண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எந்த வகையிலும் தடையாகவோ பாதிப்பாகவோ அமையாது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருங்கிய மற்றும் சுமுகமான உறவுக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெஎக்ஷிருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது இல்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிடுகையில்: ஜனாதிபதிக்கு லண்டனில் தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அது தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டம் அல்ல. மாறாக புலிகளின் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையாகும்.

இந்நிலையில் அவ்வாறான செயற்பாடானது எந்த வகையிலும் ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எவ்விதமான பாதிப்பையோ தடையையோ ஏற்படுத்தாது.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கத்துக்கு தற்போது சிறந்த சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படும். வடக்கின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்த எதிர்பார்க்கின்றது.

அண்மையில் கூட சில தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியிருந்தார். அந்த வகையில் லண்டனில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை இங்குள்ள நெருங்கிய உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு தமிழர்களின் வரிப்பணத்தை பயன்படுத்தலாம்: மாவை
உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இலங்கையிலுள்ள ஆறு பல்கலைக்கழகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையாவும் தென்னிலங்கையை சேர்ந்தவையாகும் என்பதுடன் யாழ். பல்கலைக்கழக த்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யாழ்ப்பாண பல்லைக்கழகத்தில் விவசாயப் பீடத்தை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சிக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றாலும் வடக்கு கிழக்கில் விவசாயம், கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அங்கு பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகம் முக்கியமானது. வரலாற்று ரீதியில் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்த மக்கள் சமூகத்தை கொண்டது வடக்கு பிரதேசமாகும். அரசாங்கம் ஆறு பல்கலைக்கழகங்களை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நல்ல திட்டம் எனினும் அவையாவும் தென் பிரதேசத்திலேயே இருக்கின்றது.

கல்வியில் உயர்ந்த இடமாக வடக்கு கிழக்கு இருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகம் கால தாமத்தால் அமைக்கப்பட்டாலும் உலக தரத்திற்கான தரத்தை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவு செலவுதத் திட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தை உயர்த்துவதற்கான வார்த்தை இல்லை, பிரேரணை முன்வைக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை. அந்த பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு திட்டமிட்ட செயற்பாடு அவசியமானதாகும்.

யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியா உதவி செய்வதாக அமைச்சர் தெரிவிக்கின்றார். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் யாழ்ப்பாண மக்களும் தமிழ் மக்களும் வரிப்பணம் செலுத்துகின்றனர். அந்த பணத்தை யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்த பயன்படுத்த வேண்டும். பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி திமுறுகின்றனர். பட்டம் பெற்று நான்கு, ஐந்து ஆண்டுகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். சிலருக்கு துறைச்சார் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது அடிப்படைப் பிரச்சினையாகும்.

கல்வித் துறையில் முறையான வேலைத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் நிரந்தரமான திட்டக் குழுவை நியமித்து திட்டங்களை வகுக்க வேண்டும். அதன் மூலமே உலக மாற்றத்திற்கு ஏற்ப கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

பாடங்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறுகின்றது. அதற்கேற்ற வகையில் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது நல்ல செயற்பாடாகும் என்றாலும் அந்த பல்கலைக்கழகங்களில் புதிய புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மூன்று ஆண்டுகளுக்குள் வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். இல்லையெனில் ஏழை பட்டதாரி மாணவர்களை இனங்கண்டு மாதத்திற்கு சிறு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒரு இலட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி: கணித, விஞ்ஞானத்தில் யாழ்.மாணவர்கள் முதலிடம்

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 381 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இருந்தபோதும், வெட்டுப் புள்ளி அடிப்படையில் சுமார் 22 ஆயிரம் மாணவர்களுக்கே தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இப் பரீட்சைக்கு தமிழ் மொழிமூலத்தில் தோற்றிய மாணவர்களுள் கணிதப் பிரிவில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுருநாதனும் உயரிரியல் விஞ்ஞான மாணவர்களுள் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், கலைப்பிரிவில் நீர்கொழும்பு நியுஸ்டெட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அமீருல் ஹம்சா பாத்திமா சஸ்னாவும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

இப்பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் தோற்றிய மாணவர்களுள் தமிழ் பேசும் மாணவர்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள் வருமளவுக்கு சித்தியடையவில்லை என்பதும், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 2 இலட்சத்து 30ஆயிரத்து 237 மாணவர்களுள் 23ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 3 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

2010ஆம் ஆண்டுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ. . உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களுள் உயிரியல் பிரிவில் தோற்ற 21,459 பேரும் கணிதப் பிரிவில் தோற்றியவர்களுள் 12,606 பேரும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுள் 35,571 பேரும் கலைப் பிரிவில் 72,745 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் பாடசாலைகளினூடாக தோற்றிய 120,256 மாணவர்களும் 22,125 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் தகுதியை 1 இலட்சத்து 42 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ள போதிலும் பல்லைக்கழக வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் அடிப்படையில் நோக்கினால் சுமார் 22 ஆயிரம் பேரே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பினை பெறும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 4,384 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுளனர். அதாவது விஞ்ஞானப்பிரிவில் 367 பேரும் ,கணிதப்பிரிவில் 404 பேரும் வர்த்தகப் பிரிவில் 1,576 பேரும் கலைப்பிரிவில் 2,037 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் 23,420 மாணவர்கள் 3 பாடங்களில் எஸ் சித்தியையேனும் பெறத் தவறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அதிக மாணவர்களை உள்வாங்க தனியார் பல்கலைக்கழகங்கள் *வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் உயர்கல்விக்காக காத்திருப்பு *26 பல்கலைக்கழகங்களுடன் பேச்சு


*யாழ். பல்கலை நுண்கலை பிரிவை பீடமாக்க நடவடிக்கைபல்கலைக்கழக வாய்ப்பின்றி இருக்கும் மாணவர்களைக் கூடுதலாக உள்வாங்கும் வகையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம், வெளிநாடுகளில் உள்ள புத்திஜீவிகளைத் திருப்பியழைக்கவும் இங்கிருந்து இனிமேல் யாரும் சென்று விடாதிருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்நாட்டு செலாவணியைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்தப் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர் கல்வி அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டுக் குழு நிலை விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் திசாநாயக்க, யாழ். இராமநாதன் நுண்கலை பிரிவை நுண்கலைப் பீடமாக்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் அல்லது அரச சார்பற்ற பல்கலைக்கழகம் வெறுமனே பணத்தை மட்டும் மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் உயர் கல்வி கேட்டு அழுது புலம்புகிறார்கள். ஆகவே, 20% புலமைப் பரிசில் வழங்க வேண்டும். இலவசக் கல்வியை விஸ்தரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகம் வந்தால் அரச பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்படுமென சிலர் கூறுகிறார்கள். அப்படியாயின் நாம் அதற்கான சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். இதற்கென அடுத்த மாதம் இரண்டு நாள் செயலமர்வொன்றை நடத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் இதில் கலந்து கொள்ளுமாறு ஜே. வி. பி. உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே, 57 தனியார் பல்கலைக்கழகங் கள் இங்கு இயங்கி பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டங் களை வழங்குகின்றன. அது பற்றி எல்லாம் யாரும் கதைக்கிறார்களில்லை. எமது பல்கலைக்கழகங்களின் நிலைமை மோசமானதால், எமது விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இவ்வாறு சென்றவர்கள்தான் இங்கு வரவிருக்கிறார்கள். இப்படி 26 பல்கலைக்கழகங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

வெளிநாடுகளில் அதிக பணம் செலவழித்துப் பயில்கிறார்கள். நாம் சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கினால் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வருவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தலைவரை அவமதித்ததன் மூலம் பிரிட்டனின் இரட்டை வேடம் அம்பலம்பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவமதிக் கப்பட்டமை உச்ச ஜனநாயக சுதந்திரம், பேச்சுரிமை எனக் கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பை ஏற்று நாட்டின் தலைவராக சென்ற ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டார் எனக் கூறி இந்த விவகாரத்திலிருந்து பிரிட்டன் நழுவிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத் தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் பிரிட்டன் விஜயம் தொடர்பாக செய்தியாளர்கள் இங்கு கேட்ட கேள்விகளுக்கு பதில ளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உச்ச ஜனநாயக சுதந்திரம் உள்ளது எனக்கூறும் பிரிட்டன் உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கம் புலிகள் என்பதை அறிந்தும், அது தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதை அறிந்தும் அதற்கு இடமளித்துள்ளது.

ஜனாதிபதி ஒரு நாட்டின் தலைவராகச் சென்றார். அத்துடன் இலங்கை பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடு. இவ்வாறான ஒரு நாட்டின் தலைவராக, அதுவும் ‘பேச்சு சுதந்திரம் பற்றி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சென்றார்.

அவரை அழைக்கப்பட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார். இதனால் எமக்கல்ல, அவர்களுக்கே அவமானம். வீட்டுக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவர் வரும்போது வீட்டுக்கதவை பூட்டி வீட்டில் யாரும் இல்லை என்று கூறினர். வந்தவருக்கு அவமானமா? அழைத்தவர்க ளுக்கே அவமானம். இதற்கு ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பொறுப்பு கூறவேண்டும்.

உச்ச ஜனநாயக நாடாக இருக்கும் பிரிட்டன் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கும் இடமளிக்க வேண்டிய நிலையில் உள்ளது தானே? என செய்தியாளர் கேட்டபோது,

அப்படியானால் பிரிட்டன் அல்- கொய்தாவுக்கு அனுமதி வழங்குமா? என கேட்டார்
மேலும் இங்கே தொடர்க...

வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய அமைச்சரவை உப குழு


வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்ட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய இவ்வுபகுழு, வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி பணிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் பலன்கள், எவ்வகையான நிவாரணங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்பது பற்றியும் ஆராய்ந்து பரிந்துரை செய்யும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த உயர்மட்ட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் சமயத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் 22,000 பேர் பாதிப்பு; 1000 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தில் நாநூறுக்கும் மேல் கால்நடைகள் உயிரிழப்புஅடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 5628 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

இம் மழை காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் நானூறு கால் நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார்.

ஜனாதிபதி செயலணியின் அங்கீ காரத்தோடு மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவு, நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; அடைமழையினால் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 2327 குடும்பங்களைச் சேர்ந்த 8010 பேரும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 2612 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 789 பேரும், பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 689 குடும்பங் களைச் சேர்ந்த 2786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 764 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், நுளம்பு வலைகள், சவர்க்காரம், குழந்தைகளுக்கான உடுதுணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

அடைமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை சம்பா ரூ. 70; நாடு ரூ. 60
அரசாங்கம் நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை கொண்டு வந்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார்.

இதன்படி, கல் மணல் அகற்றப்பட்ட மற்றும் சுத்தம் செய்யப்பட்ட சம்பா (கீறி சம்பா மற்றும் சீரக சம்பா தவிர்ந்த) ஒரு கிலோ அரிசியின் உச்ச சில்லறை விலை 70 ரூபாவாகும், நாட்டரிசி, சிவப்பு பச்சரிசி மற்றும் வெள்ளை பச்சரிசி என்பவற்றிகான உச்ச சில்லறை விலை 60 ரூபாவாகும்.

அரிசிக்கான விலை அதிகரிக்குமானால் 24 மணித்தியாலங்களுக்குள் அரிசிக்கு கட்டப்பாட்டு விலை கொண்டுவரப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 06ம் திகதி கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதியளித்திருந்தார் இதன் பிரகாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப் பட்டுள்ளது.

முன்பு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது தனது தனி முடிவல்ல என்றும், அது உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் கட்டுப்பாட்டு கமிட்டியின் ஏகோபித்த முடிவு என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

பண்டிகைக் காலங்களில் முறையற்ற விதத்தில் முறைகேடாக விலைகளை அதிகரித்து இலாபமீட்டி நுகர்வோரை கஷ்டத்திற்கு உள்ளாக்குவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...