9 மார்ச், 2010

'பினாமி'கள் பிடியில் பல கோடி ரூபாய் சொத்துகள் நித்யானந்த மடம் 'வெறிச்'
சேலம்:உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நித்யானந்தர் ஆஸ்ரம சொத்துக்கள், பினாமிகளின் பிடியில் சிக்கியுள்ளது. மக்களின் நன்கொடை பணம் சில புள்ளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியை அறிந்த, போலீஸ், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை தீவிர விசாரணையை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.


திருவண்ணாமலையை சேர்ந்த ராஜசேகரன் சிறு வயதில் ஆன்மிகத்தில் பற்று ஏற்பட்டு துறவு பூண்டார். கன்னியாகுமரி முதல் இமயம் வரை பல புண்ணிய தலங்களுக்கு சென்று ஆன்மிக பயிற்சி எடுத்து கொண்ட ராஜசேகரன், பின்னாளில் நித்யானந்தா என பெயர் சூட்டி கொண்டார். உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.தென் இந்தியாவில் ஆன்மிக சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தை நித்யானந்தா தன் பக்கம் ஈர்த்தார். இதன் விளைவாக கோடீஸ்வர தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை பாத்திரமாக நித்யானந்தா மாறினார். பெங்களூருவில் 70 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான ஆஸ்ரமத்தை நித்யானந்தா ஆரம்பித்து, பல மாவட்டங்களிலும் கிளைகளை ஆரம்பித்து சொத்துக்கு மேல் சொத்து குவித்து வந்துள்ளார்.ஆன்மிக பயிற்சியில் சேர விரும்புவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.


நித்யானந்தா கையை தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையை தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய் என வசூல் வேட்டை நடந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரிய சீடர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் கீழ் ஆஸ்ரமம் இயங்கி வந்தது. நடிகையுடனான சல்லாப பிரச்னை காரணமாக, தங்களது கழுத்துக்கு கத்தி வந்து விடும் என்ற அச்சத்தில் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த புள்ளிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


சொத்துக்களையும், பணத்தையும் ஆஸ்ரமத்துக்கு தானமாக கொடுத்த வி.ஐ.பி.,க்கள் நொந்து போயுள்ளனர். ஆஸ்ரமத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள், ஆஸ்ரமத்துக்கு வழங்கிய பல கோடி நன்கொடை சொத்துக்களை நித்யானந்தா முடக்கவில்லை.பிற்காலத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும் வேளையில், ஆஸ்ரம சொத்துக்கள் அனைத்தும் போலீஸாரால் முடக்கப்பட்டால், பணத்துக்கு வெளியே கையேந்தும் நிலையை தவிர்க்க "பினாமி'களின் வசம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.ஆஸ்ரமத்துக்கு பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய புள்ளிகள் வசம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளன. "பினாமி'களின் பெயரிலும் ஆஸ்ரம சொத்துக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.


சேலம் குகை பகுதியை சேர்ந்த, "டெக்ஸ்டைல்ஸ்' தொழில் அதிபர், நித்யானந்தாவின் முக்கிய "பினாமி'களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரை போல பல தொழிலதிபர்கள், ஆஸ்ரமத்தின் சொத்துக்களை, பல ஊர்களில், "பினாமி'கள் அடைகாத்து வருகின்றனர். மக்கள் செல்வாக்கு பெற்ற நித்யானந்தா, மக்களின் பணத்தை ஆஸ்ரமம் நடத்த பயன்படுத்தாமல், சொகுசு வாழ்க்கைக்கு, பளிங்கு பங்களா கட்டி ஆடம்பர வாழ்க்கையில் திளைத்து வந்துள்ளார்.ஏழை, எளிய மக்கள் நித்யானந்தாவை நெருங்கிவிட முடியாத அளவுக்கு நெருப்பு வளையம் அமைத்து, பணத்தை கொட்டும் முக்கிய புள்ளிகள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தரிசனம் தரும் நிலையே இருந்து வந்தது.


நித்யானந்தாவை நம்பி ஆன்மிக வாழ்வை மேற்கொண்ட பல லட்சம் பக்தர்கள், நடிகை சல்லாப வீடியோ காட்சியால் நம்பிக்கை இழந்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் பணம், "பினாமி'கள் பிடியில் உள்ளது. இந்த சொத்துக்களை கையகப்படுத்த, போலீஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் ரகசிய விசாரணையை துவக்கி உள்ளனர்.நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்து ஊழியர்கள், வி.ஐ.பி.,க்கள் வெளியேறியதால், அங்கு அன்றாடம் நடக்கும் தினசரி பூஜைகள் நடத்த ஆளில்லாமல் வெறிச்சோடியுள்ளது. நித்யானந்தா ஆஸ்ரமத்தில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 மணிக்கு நித்யதியானம், 9 மணிக்கு நித்ய பூஜை, நைவேத்ய பூஜை, மதியம் ஒரு மணிக்கு உச்சி கால நைவேத்யபூஜை, இரவு 7 மணிக்கு குரு மூர்த்திக்கு மஹாமங்கள ஆரத்தி, 8 மணிக்கு நைவேத்ய பூஜை, இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை என தினசரி நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.


பிரச்னையில் ஆஸ்ரமவாசிகள் சிக்கியதால் பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வியாழன்தோறும், "குரு பூஜை' மஹா மங்கள ஆராத்தி செய்து அன்னதானம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.ஆஸ்ரமத்துக்கு செல்லும் ஆன்மிகவாதிகளும், சீடர்களும் வேறு மடங்களை நாடி சென்று யோக, தியானம் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நித்யானந்தா மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான ஆஸ்ரம சொத்துக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.


நித்யானந்தாவுக்கு எதிராக கூட்டு சதி?சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த லெனின் ஏற்கனவே காந்தப்படுக்கை மோசடியில் சிக்கியவர். அவர் மீது சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் லெனின், நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சாதாரண சீடராக சேர்ந்து, படிப்படியாக நம்பிக்கைக்குரிய சீடர்களின் ஒருவரானார். கடந்த 2006 முதல் ஆஸ்ரம பணிகளில் ஈடுபட்டு வந்த லெனின், நித்யானந்தாவின் அன்றாட வாழ்க்கை நடைமுறையை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். நித்யானந்தா மக்களிடம் காட்டிய ஆன்மிக முகத்தையும், ஆஸ்ரமத்தின், "பெட்ரூமில்' அவரது "காம' முகத்தையும் லெனின் நன்கு அறிந்து வைத்துள்ளார்.


நடிகை ரஞ்சிதாவை காட்டிலும் பேரழகிகள் நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சீடர்களாய் வலம் வந்துள்ளன். அந்த அழகிய பெண்களும் நித்யானந்தாவுக்கு, "சேவை'கள் செய்து வந்துள்ளனர். ஆனால், பிரபலமான பெண்ணுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பதை வெளிகாட்டினால் மட்டுமே மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ளார் லெனின். ரஞ்சிதா என்ற "பொறி' மூலம் நித்யானந்தா காமலீலையை வீடியோ படம் எடுத்து, "எலி' போல் நித்யானந்தாவை சிக்க வைத்துள்ளார் லெனின். கொலை மிரட்டலுக்கு பாதுகாப்பு கேட்டுள்ள லெனின், தன்னை மிரட்டியவர்கள் பற்றி வாய் திறக்கவில்லை.இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. திரைமறைவில் நித்யானந்தாவிடம் தொடர்ந்து நடந்து வரும் பல கோடி ரூபாய் பேரம், முடிவுக்கு வரும் போது நடிகையுடனான சல்லாப வீடியோ காட்சி "நாடகம்' முடிவுக்கு வரும், என்கின்றனர் நித்யானந்தாவின் விசுவாசிகள்.


மேலும் அவர்கள் கூறுகையில், "நித்யானந்தாவை சிக்கவைத்ததில், லெனின் கருவியாக்கப்பட்டள்ளார். அவருக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் தான் லெனின் உள்ளார். அவர்கள் பாதுகாப்பில் லெனின் உள்ளதால், அவரை போலீஸார் கூட சுலபமாக நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க நித்யானந்தாவுக்கு எதிராக நடந்த கூட்டு சதி. இந்த கூட்டு சதியில் உள்ளவர்கள் யார், யார் என்பதை விரைவில் வெளிச்சம் போட்டு காட்டுவோம். அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும்' என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதையல் பேர்வழிகளிடம் ஏமாறும் அப்பாவி கொழும்பு வாசிகள்!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்களுக்கு குறைவில்லை என்பார்கள். இதுவே இன்று ஏமாற்று வித்தைகள் நாடு முழுவதும் பல்கிப் பெருகக் காரணம் என்றால் கூட அது மிகையல்ல.

யார் யாரை ஏமாற்றுகின்றார்கள்?

இத்தனை நாளும் மலையகப் பகுதிகளில் உள்ளவர்கள்தான் அங்குள்ள ஏமாற்றுப் பேர்வழிகளால் ஏமாற்றுப்பட்டு வந்தார்கள். ஆனால் இன்றோ அந்நிலை தலைகீழாக மாறி, மலையக நபர்களிடம் கொழும்பு வாழ் அப்பாவிகள் ஏமாறுகின்றார்கள் என்றால் நம்ப முடிகின்றதா?

இது எப்படி?

மலையகத்தின் பலாங்கொடைப் பகுதிகளில் உள்ள குக் கிராமங்களிலிருந்து ஒரு கும்பல் கொழும்பிலுள்ள வர்த்தக நிறுவனங்களைச் சுற்றி வட்டமடிக்கின்றன... கையில் சிறு அளவு தங்கத் துண்டுகளை விற்க வந்ததாகக் காட்டி, அவற்றை விற்றுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளும் இந்தக் கும்பல், வார்த்தை ஜாலங்களால், நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதையலிலிருந்து எடுத்த தங்கக்கட்டிகள் இருப்பதாகவும் அவற்றைத் தாம் குறைந்த விலைக்கு வாங்கித் தரலாம் என்றும் இந்தக் கும்பல் கூறுகின்றது.

இவர்களின் கூற்றை அப்படியே நம்பிவிடும் கொழும்பிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தமது இயலாத நிலைமை காரணமாக இத்தகைய வஞ்சகக் கூட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள். பிறகென்ன...? பண நஷ்டம்... ஏமாற்றம்... வாழ்க்கையில் விரக்திதான்.

கடந்தவாரம் இப்படியான ஒரு நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

ஒரு வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த இருவரிடம் 6 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டார். பணத்தை இழந்து, பித்துப் பிடித்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, இது போன்ற ஏமாற்று வித்தைகளில் சிக்கிக் கொண்ட பலர், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து, இது பற்றி வெளியே சொல்லக் கூட முடியாமல் பரிதவித்து நிற்கின்றார்கள்.

இத்தகைய ஏமாற்று லீலைகள் எவ்வாறு அரங்கேறுகின்றன? இவற்றுக்குப் பின்னணியில் நிற்பவர்கள் யார்? நிச்சயமாக அவர்கள் 'பலம்' வாய்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தப் 'புதையல்' சமாச்சாரங்கள் அநேகமாக பலாங்கொடைப் பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. அப்படியானால் சட்டவிரோதமாக எடுக்கப்படும் இத்தகைய புதையல்கள் தான் அப்பாவி மக்களை ஏமாற்றி ஏப்பம் விடுகின்றனவா?

இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமா?

புலனாய்வுப் பிரிவினரின் கண்களுக்கு 'புதையல்' புலப்படாததன் மர்மம் தான் என்ன?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா? செயற்படுவார்களா?
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா 3 நாட்களில் பெங்களூருக்கு வருகிறார் தியான பீட ஊழியர் பேட்டிசெக்ஸ் புகாரில் சிக்கிய நித்யானந்தா சாமியார் இன்னும் 2, 3 நாட்களில் பெங்களூர் வருகிறார் என்றும், அவரை பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் உண்மையல்ல என்றும் பிடதி நித்யானந்தா தியான பீடம் தெரிவித்து இருக்கிறது.

ஆபாச வீடியோ காட்சிகள்

இது குறித்து பெங்களூர் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், மூத்த சாமியுமான ஸ்ரீநித்ய சச்சிதானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூர் பிடதியில் இயங்கி வரும் நித்யானந்தா தியான பீடத்தை பற்றியும், நித்யானந்த சாமிகள் பற்றியும் பல புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த புகார்கள் ஆபாச வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்து உள்ளது.

இந்த செய்திகள் வெளிவந்த பிறகு அடுத்த நாள் எங்களது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

கொலை அல்ல

பிடதி ஆசிரமத்தில் கனடா நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது. அந்த கனடா பக்தர் கொலை செய்யப்படவில்லை. இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது.

கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி கனடா நாட்டை சேர்ந்த மெல்வின் பொய்ட் டையமன்ட் என்பவர் மாடியில் இருந்து திடீர் என்று தவறி கீழே விழுந்தார். அதில் அவர் காயம் அடைந்து இறந்தார். இது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தோம். இந்த தகவலை அவர்கள் சந்தேகம் இன்றி ஏற்றுக்கொண்டனர்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கீழே விழுந்ததால் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டதால் அவரது உடலை இந்தியாவிலேயே தகனம்செய்தோம். அவரது சாம்பலை குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்தோம். இதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை உள்பட எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

திருச்சி வாலிபர்

அதே போல் திருச்சியை சேர்ந்த சுரேந்தர் இங்கு தான் இருக்கிறார். அவர் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மீட்டு கொடுக்கும்படியும் அவரது பெற்றோர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

சுரேந்தரே அவரது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார். "எவ்வித வற்புறுத்தலினாலும், தியான பீடத்தில் இறங்கவில்லை. என்னுடைய முழு சுய உணர்வோடும், விருப்பத்தினாலும் தான் முழுமையாக இங்கு இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். தியான பீடத்துக்கு எதிராக கொடுத்து உள்ள அனைத்து புகார்களையும் வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' எனறு சுரேந்தர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

சர்ஜரி ஆபரேஷன்

நித்யானந்தா சாமிகள் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அந்த காட்சிகள் நவீன கருவியால் "சர்ஜரி ஆபரேஷன்'' செய்யப்பட்டு காட்சிகள் புகுத்தப்பட்டு உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை லெனின் என்பவர் செய்து உள்ளார்.

அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். அவருக்கு இதுபோன்ற நவீன உத்திகளை கையாள தெரியாது. அவருக்கு பின்னால் இருந்த சில சக்திகள் சாமிக்கு எதிராக இந்த செயலை செய்து உள்ளனர். இதை எங்களது பக்தர்கள் நம்புவார்கள்.

கும்பமேளாவில் சாமியார்

லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். வீடியோ காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட அடுத்த நாளே சாமிகள் இங்கு வந்திருப்பார். ஆனால் இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அவர் இங்கு வரவில்லை.

தற்போது அவர் கும்பமேளாவில் கலந்து கொண்டு இருக்கிறார். அதை முடித்து கொண்டு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் இங்கு வர இருக்கிறார். அப்போது அவர் உங்களை சந்திப்பார். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

நடிகை ரஞ்சிதா பக்தர்

நடிகை ரஞ்சிதா கடந்த 7 மாதங்களாக ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார். மற்ற பக்தர்களை போல் அவரும் ஒரு பக்தராக தான் வந்து சென்றார். நாட்டில் ஒருவர் மீது யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். ஆனால் அந்த புகார்கள் அனைத்தும் உண்மை ஆகாது.

எங்கள் மீதான புகார்கள் குறித்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க நாங்கள் சட்ட ரீதியாக அணுக முடிவு செய்து இருக்கிறோம். சட்ட ரீதியான விசாரணைக்கு முழு ஆதரவு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சாமிகள் பற்றி ஊடகங்களில் வரும் ïக செய்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னால் ïகிக்கவும் முடியாது.

முழுமையான பாதுகாப்பு

இதுவரையில் எங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது பற்றி தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரமத்தில் நாங்கள் தொடர்ந்து எங்களது வழக்கமான பணிகளை செய்து வருகிறோம். போலீசார் எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா ஒரு ஆன்மிக குருவாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது 3-வது வயதில் இருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கினார். அவர் தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார். அவரது வழியில், நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.

பிடதி ஆசிரமம் உள்ள நிலத்துக்கு 100 சதவீதம் சட்ட ரீதியாக பட்டா உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு நித்யா சச்சிதானந்தா கூறினார்.

பேட்டியின்போது, சாமிகள் நித்ய ஞனானந்தா, நித்ய பிரமானந்தா மற்றும் பிரம்மாச்சாரினிகள் உடன் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்சில் கண்ணீர் விடும் மேரிமாதா படம்


பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.

அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது.

தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து செல்கின்றனர்.

இச் சம்பவம் பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பா கண்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் சுலோகம் ஏந்திப் போராட்டம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

"பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக 'கமகே' அரசியலை உடனடியாக தடுத்து நிறுத்தி நீதியும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள்" என சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது.

கண்டி மாவட்டத்தில் அராஜகமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அங்கு அவர் தெரிவித்தார்.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கண்டி மாவட்ட வேட்பாளரான மஹிந்தானந்த அளுத் கமகேவின் தேர்தல் பிரசார நிலையமாக நாவடிப்பிட்டி பொலிஸ்நிலையம் இயங்குவதாக மனோ கணேசன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது என வேட்பாளர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.கி
மேலும் இங்கே தொடர்க...

வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டைதேர்தல்கள் செயலகம் விநியோகிக்கும் விசேட அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கெண்ணும் நிலையங்களுக்கோ செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனச் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பிரத்தியேகமான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. மாவட்ட தேர்தல் அத்தியட்சகரூடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதனைப் பெற்றுக்கொள்ளாத வேட்பாளர்கள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வர முயற்சிக்கக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க கடுமையான உத்திரவினைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பபட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு

விடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள் குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது.இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்

"அவர் விடுதலை புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம்.எனினும் அவர் விடுதலை புலி உறுப்பினர் அல்லர்" எனத் தெரிவித்தார்.

மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைகளுக்குக் கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது இரு பிள்ளைகள், தாய், மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல் மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நைஜீரிய மதக்கலவரத்தில் 500 பேர் பலி : 95 பேர் கைது
நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆபிரிக்காவில் உள்ளது நைஜீரியா. இங்கு பெருந்தொகையான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அடிக்கடி கலவரம் வெடிப்பது வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்தில் 550 பேர் பலியானார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்த 2 பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நகர் அருகே உள்ள கிராமங்களில் இந்த மோதல் சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தன. ராட்சாட் மற்றும் ஜோட் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த ஒரு தரப்பினர்,வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அவர்கள் பெரோன் இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையே தீ வைத்தனர். இந்த தாக்குதலை புலானி இனக்குழுவினர் நடத்தினார்கள். அவர்கள் 3கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர்.

பழிக்குப் பழி

இது தொடர்பாக ஜோஸ் நகரின் புலானி இனக்குழுவைச் சேர்ந்த சுப் அல்காலி கூறுகையில்,

"இரு வாரங்களுக்கு முன் எங்கள் இனத்தினர் மீது எதிர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக தான் இந்தத் தாக்குதல் நடந்தது" என்றார்.

தாக்குதல் நடந்த போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் என்றும் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கூட கலவரப்பகுதியில் காணவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

500 பேர் பலி

இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பலர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்தக் கலவரத்தில் 100 பேர் பலியானதாக தான் முதல் கட்டத் தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 500 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று கூறப்படுகிறது.

நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் கலவரத்தை ஒடுக்கும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்


யாழ்ப்பாணத்தில் புதிதாக துணைத் தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்.

ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் 3 நாள் இலங்கை பயணத்தை முடித்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்.

அதிபர் ராஜபக்சேவுடன் நிருபமா நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:-

இந்திய தூதரகம்

இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. மேலும் கண்டியில் ஒரு துணைத் தூதரகமும் உள்ளது. வடக்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா கூறினார்.

மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா உறுதுணையாக இருக்கும். இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் நிருபமா ராவ் உறுதி அளித்தார்.

மேலும் 2008-ம் ஆண்டு மீன் பிடிப்பது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புனரமைப்பு பணிகள்

மன்னார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருக்கேதேஸ்வரம் கோவிலை புதுப்பிக்கும் பணிகளில் இந்தியா ஈடுபடும் என்றும் தெரிவித்தார். அதற்கான பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மகாபலிபுரம் சிற்ப கல்லூரியைச் சேர்ந்தவர்கள் விரைவில் அனுப்பப்படுவார்கள். மேலும், இலங்கையின் தலடா மலிகாவா என்ற இடத்தில் பன்னாட்டு புத்த மிïசியம் அமைப்பதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருவதாகவும் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் கூறினார்.

அப்போது, புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்து ராஜபக்சே தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இலங்கை முகாம்களில் இன்னும் 70 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஏராளமானோர் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் ராஜபக்சே கூறினார்.

இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எந்த விசாரணைக்கும் ஐ.நாவுக்கோ சர்வதேசத்துக்கோ இடமளியோம்:சம்பிக
இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளமைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அவரே எடுக்கவேண்டும் என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை அமைப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா. சாசனத்தை மீறிவிட்டார் என்றும் அவர் சொன்னார்.

அங்கத்துவ நாடு ஒன்றின் உள்விவகாரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு ஆலோசனை கூறுவதற்காக ஆலோசனை குழு ஒன்றை நியமிப்பது ஐ.நாவை ஸ்தாபித்தவர்கள் தற்போதைய நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு செயல் அல்ல என்றும் கூறிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியபோது இலங்கை எந்தவொரு சர்வதேச அல்லது உள்ளூர் சட்டத்தையும் மீறாதபடியால் இத்தகைய ஆலோசனை குழுவொன்றை அமைப்பது குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்கமாட்டோம். அவ்வாறு இடமளிக்க முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் இந்த போக்கை நாங்கள் கடைப்பிடித்தோம். அதாவது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையாக எம்மிடம் வினவினால் நாங்கள் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம். மனித உரிமைகள் அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் விசாரணைகளுக்கு இடமில்லை.

எனவே இவ்வாறான சர்வதேச சதித்திட்டங்களுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை எமது நாட்டின் இறைமையை மீறும் வகையிலும் நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை களங்கப்படுத்தும் ரீதியிலும் சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

எமது நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதற்கு முன்னர் பலஸ்தீனின் காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து இஸ்ரேல் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறான ஆலோசனை குழுவை நியமித்திருந்தார்.

ஆனால் இன்று சில நாடுகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருகின்றன. ஈராக்கில் இதுவரை ஆறரை இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர். எனவே இந்த நாடுகளில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு காரணமான நாடுகள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஏன் ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமிக்கவில்லை?

எனினும் ஐ.நா. செயலாளருடனான தொலைபேசி உரையாடலின்போது விசேட நிபுணர் குழு விவகாரத்துக்கு எமது ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். இவ்வாறானதொரு தலைவர் எமக்கு கிடைத்துள்ளமை தொடர்பில் பெருமையடைகின்றோம். தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஆட்சியில் இருந்திருந்தால் ஐ.நா. வின் .இந்த விடயம் தொடர்பில் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இலங்கை தொடர்பில் விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகளின் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இலங்கை குறித்த விசாரணையை நடத்துமாறு கோருகின்றன. ஆனால் எந்தவொரு விசாரணைக்கும் இடமளிக்கமாட்டோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் வெளியிட்ட வெள்ளைக்கொடி சம்பந்தப்பட்ட விடயமே இவ்வாறான முயற்சிகளுக்கு காரணமாகும்.

மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தில் கடந்த வருடம் மறைபெறுமானத்தை அடைந்தன. ஆனால் எந்தவொரு ஆசிய நாடும் மறை பெறுமானத்துக்கு கடந்த வருடம் செல்லவில்லை. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் அபார வளர்ச்சியை பெற்றுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் குழுவை ஜனாதிபதி அல்லது இராணுவ தளபதி நியமிப்பார்ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் 22 பேர், ஆறு பொலிஸார் மற்றும் சிவிலியன்கள் ஆறுபேர் அடங்கலாக 35 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கை முற்றாக நிறைவு பெற்ற நிலையில் அது தொடர்பான அறிக்கை இராணுவ தளபதியிடம் கடந்த வார இறுதியில் கையளிக்கப்பட்டது.

35 சாட்சியங்கள்

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இராணுவ தரப்பைச் சேர்ந்த 22 பேர், பொலிஸ் தரப்பிலிருந்து 7பேர் மற்றும் 6 சிவிலியன்களிடமிருந்தும் இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியங்கள் கடந்த 22 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்காக இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா நியமிக்கப்பட்டிருந்ததுடன் அவர் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள்

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களின் பிரகாரம் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

அதற்கான நடவடிக்கைகளில் இராணுவ சட்டப் பிரிவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும். அதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும்.

இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் குழு

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றசாட்டுக்களை விசாரிப்பதற்காக இராணுவ நீதிமன்றமொன்று நிறுவப்படும். அதில் சுமார் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று காணப்படும். இவர்களில் இராணுவ மற்றும் விமானப் படை யைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்குவர். அல்லது இராணுவ தரப்பைச் சேர்ந்த உயரதிகாரிகள் மாத்திரம் உள்ளடங்குவர்.

இருப்பினும் அக்குழுவினை நியமிக்கும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கே உண்டு. அதனால் குறித்த நீதிபதிகள் குழுவினை ஜனாதிபதியே நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இல்லாவிடின் அவரின் ஆலோசனையின் பிரகாரம் அக்குழுவினை இராணுவ தளபதி நியமிப்பார். அந்தவகையில் நீதிபதிகள் குழுவில் யார் அங்கம் வகிப்பார்கள் என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

ஊடகவியலாளர் அனுமதி

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையானது சிவில் நீதிமன்றத்தில் நடைபெறுவதைப் போன்றான பகிரங்கமான வழக்கு விசாரணையல்ல.

அதனால் அவருக்கு எதிரான விசாரணைகளை நேரடியாகப் பார்வையிட்டு செய்திகளை அறிக்கையிடும் வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்தால் அதற்கானதொரு சந்தர்ப்பத்தினை வழங்க வாய்ப்புண்டு.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் எம்.பி.க்கள் அமெரிக்காவில் முழு உடற்பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து நாடு திரும்பினார்கள்


பாகிஸ்தான் எம்.பி.க்கள் குழு ஒன்று 15 நாள் பயணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்கா சென்றது. அவர்கள் டல்லஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களுக்கு முழுஉடற் பரிசோதனை நடத்தப்பட இருந்தது. இதை அறிந்ததும் எம்.பி.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க நாட்டு சட்டப்படி, பாகிஸ்தான் உள்பட 14 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கூடுதல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதோடு முழு உடல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும்.

முழு உடல் பரிசோதனைக்கு பாகிஸ்தான் எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர். இது ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிப்பதாக உள்ளது என்று எடுத்து கூறினார்கள். இதற்கு விமானநிலைய அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த எம்.பி.க்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

70 வயது பாட்டியை உயிருடன் புதைத்த பேராசைக்காரர்கள்


சீனாவில் பொருளாதார முன்னேற்றம் காரணமாக காலி இடங்களில் எல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. பழைய வீடுகளை எல்லாம் இடித்து விட்டு அங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி, விற்று காசு பார்ப்பதில் ரியல் எஸ்டேட்காரர்கள் தீவிரமாகி இருக்கிறார்கள். இப்படி அடுக்குமாடி கட்டி காசு பார்த்த இவர்கள் அடுத்தவர்களின் சொத்துக்களையும் அபகரித்து அடுக்குமாடி கட்ட தயங்குவதில்லை. சீனாவில் ஹூபே மாநிலத்தில் வசிப்பவர் 70 வயது பாட்டி வாங்க் கிïயன். இவர் வசித்த பழைய வீட்டையும் புல்டோசர் வைத்து இடித்து விட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒருவர் முனைந்தார்.

அவர் தொழிலாளர்களை வைத்து வீட்டை இடிக்க முற்பட்டபோது அதை பாட்டி தடுத்தார். அவரை ஒரு தொழிலாளி தடியால் அடித்து உதைத்து அருகில் பள்ளத்தில் தள்ளினார். பிறகு அந்த பள்ளத்தில் மண்ணை அள்ளிப்போட்டு அவரை உயிருடன் புதைத்தார்.

தகவல் அறிந்து அவரது உறவினர்கள் வந்து மண்ணை தோண்டி அவரை மீட்டபோது அவர் இறந்து போய் இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் சிங்கள ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது.
வெற்றிச்சின்னம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியது.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது. இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தை குறிக்கும் வகையிலும், இந்த வெற்றிச்சின்னம் அமைக்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அனாதையாக 35 ஆயிரம் வாகனங்கள்

இதற்கிடையே, போர் முடிவடைந்து ஓராண்டு ஆகியும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பகுதிகள், இன்னும் அலங்கோலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வெள்ளிமுள்ளிவாய்க்கால், நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களும், 25 ஆயிரம் சைக்கிள்களும் அனாதையாக கிடக்கின்றன. இவை விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் சொந்தமானவை ஆகும்.

மேலும், தமிழர்கள் வசித்து வந்த குடிசை வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் இடிந்து கிடக்கின்றன. ராணுவம் பயன்படுத்திய குண்டு துளைக்காத லாரிகள், ஜீப்கள் ஆகியவையும் போரின்போது தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

வெறிச்சோடிய பகுதிகள்

போரில் தகர்க்கப்பட்ட டெலிவிஷன் கோபுரத்தை ராணுவத்தினர் மறுபடியும் எழுப்பி உள்ளனர். இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமத்தளம் ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதிகள், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க்கிடக்கின்றன.

அதே சமயத்தில், முல்லைத்தீவு கடல் பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இலங்கை மந்திரி மில்ராய் பெர்னாண்டோ அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும்


புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்!
புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகியன எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இணைந்து போட்டியிடுகின்றன. வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்தில் இக்கட்சிகள் இரண்டும் போட்டியிடுகின்றன. தலைமை வேட்பாளராக புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தனும் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), வண. பிதா பிரான்ஸிஸ் ரஞ்சித் ரூஸ்வெல்ட் அவர்கள், பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்), கந்தையா ஞானதாஸ் (சிவம்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பாலச்சந்திரன், திருமதி சுப்பிரமணியம் வரோனிகா (இந்திரா), வயிரமுத்து திருவருட்செல்வம், துரைச்சாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு) ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வருமாறு,
இலக்கம் - 1 கந்தையா ஞானதாஸ் (சிவம்)
இலக்கம் - 2 கந்தையா சிவநேசன் (பவன்)
இலக்கம் - 3 துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு)
இலக்கம் - 4 தருமலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 5 பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்)
இலக்கம் - 6 பிரான்ஸிஸ் றஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்)
இலக்கம் - 7 வயிரமுத்து திருவருட்செல்வன் (மூர்த்தி)
இலக்கம் - 8 வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (முன்னாள் பா.உ (வன்னி)
இலக்கம் - 9 சுப்பிரமணியம் வரோனிக்கா (இந்திரா)
மேலும் இங்கே தொடர்க...

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு-


சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான மதிப்புக்குரிய திரு.கோட்டேபாய், மற்றும் இந்து மதகுருவான சூரிச் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய குருவான திரு.சர்மா எனும் திரு.சரகணபவானந்த குருக்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் அமைப்புக்களின் சார்பில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர். குத்துவிளக்கேற்றல் மற்றும் தேசியகீதத்துடன் ஆரம்பமான மேற்படி கலை நிகழ்வின் போது கண்டிய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள கலை நிகழ்ச்சிகளும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் சிங்கள பாடல்களையும் பாடியமையும் இடம்பெற்றன. சுவிஸ் வரலாற்றில் முதன் முறையாக தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து மேற்படி கலை நிகழ்ச்சியினை நடத்தியமையும், பெருமளவு தமிழ், சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயாகும். மேற்படி கலை நிகழ்வுக்கு பிரபல வர்த்தகர்கள் பலரும் அனுசரணை வழங்கியிருந்தனர். கடந்த மே18 புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தற்போது வர்த்தகர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை அனைவருமே எந்தவித பயபீதியுமின்றி, அச்சுறுத்திலின்றி மனமுவந்து இவ்வாறான நிகழ்வொன்றில் நிம்மதியாக பங்கு கொண்டிருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும். (தகவல் மற்றும் புகைப்பட உதவி


மேலும் இங்கே தொடர்க...