11 ஜனவரி, 2011

'சரண் அடைந்தோருக்கு என்ன நடந்தது?'


நல்லிணக்க ஆணைக்குழு-மன்னார்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அமர்வை நடத்தியபோது பெரும் எண்ணிக்கையானவர்கள் தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மடு பிரதேசத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஅர்வில் சுமார் நாற்பது பேர் வரை சாட்சியமளித்தனர். ஏனையோர் படிவங்களின் ஊடாகத் தமது மனக்குமுறல்களை எழுதிக் கொடுத்தனர்.

காணாமல் போனவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பலர் இந்த அமர்வின்போது ஆணைக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தடுப்பு முகாம்களாக உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள முன்னாள் விடுதலைப் போராளிகள் அல்லது அத்தகையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.



ராயப்பு மிரோனியா
இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த ஜோன் என்ற தனது கணவருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு இந்த அமர்வுக்கு வந்திருந்த அவரது மனைவி ராயப்பு மிரோனியா கேட்டுக்கொண்டார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நாட்டின் தலைநகரம் உட்பட பல்வேறு இடங்களில் அமர்வுகளை நடத்தி விசாரணைகளை மேற்கொண்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்த அமர்வுடன் வடமாகாணத்திற்கான அமர்வுகளைப் பூர்த்தி செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் அதன் விசாரணைகள் நடைபெறும் என்றும் விசாரணை முடிவில் அதன் அறிக்கைகளும் சிபாரிசுகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...