9 பிப்ரவரி, 2011

சவூதியில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் உணவின்றி சிரமம்





சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகி பாலமொன்றின் கீழ் தஞ்சமடைந்து தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள 125 இலங்கையர்கள் உணவின்றி சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்கப் படுவதாகவும் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி வழக்கின் அரசாங்க தரப்பு சாட்சிகளின் விசாரணைகள் நிறைவடைந்தன

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் அரச தரப்பு சாட்சிகளின் விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் மற்றும் மீள் விசாரணைகள் யாவும் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் குழு ஒத்திவைத்தது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2010 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது.

மனுவின் எதிரியான சரத்பொன்சேகாவின் மீது மக்களிடையே குழப்பம் விளைவித்து மக்களை அச்சுறுத்தியமை, இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் , அரசாங்கத்திற்கு எதிராக வார்த்தையளவில் விரோதம் செய்தமை என்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வழக்கின் முதலாவது சாட்சியாக சண்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் பெற்றிகா ஜான்ஸ் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , 58 ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியாக கடமையாற்ற பிரகேடியர் சவேந்திர சில்வா, ஐ.நாவின் மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் சேனுக்க செனவிரத்ன, இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என 25 பேர் சாட்சியமளித்தனர்.

நேற்றைய சாட்சியம் நிறைவடைந்ததன் பின்னர் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார அரச தரப்பு சாட்சிகள் யாவும் இன்றுடன்(நேற்று) நிறைவடைந்து விட்டதாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனிடையே எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தேவையான தமது தரப்பு சாட்சிகளை தயார்படுத்துவதற்கு இடைவெளியொன்று தேவையென கோரிநின்றதை அடுத்த வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

4ஆயிரத்து500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையை வரையறுக்க முடியாது

புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 4ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையினை வரையறுக்க முடியாது. இதுவரையில் 55 சதவீதமான போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 375 முன்னாள் போராளிகளில் 212 பேர் சித்தியடைந்தும் 40 போராளிகள் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். விடுதலையாகும் முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பங்கள் சமூகத்தில் கிடைக்காமல் புனர்வாழ்வில் கூடிய பயனை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரிகேடியர் சுனந்த ரணசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்றத்தை முன்வைக்க திட்டம்



ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் திட்டங்களை தயாரித்து வருகின்றனர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலி உறுப்பினர்களில் பிரபல்யமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் டி.எம்.ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் உரையாற்றுகையில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாதகமான அறிக்கையொன்றை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு வரைவொன்றை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் புலம் பெயர் புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று வாழும் வாழ்க்கை முறையில் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது. புனர் வாழ்வளிக்கப்பட்டு வெளியேறிய புலி உறுப்பினர்களில் பலர் பிரபல்யமானவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமை தொடர்பான மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ள சர்வதேசத்திலுள்ள புலி உறுப்பினர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுவிற்சர்லாந்தில் ஆயுத விற்பனைகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் புலிகளின் உடைமைகள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது. பொலிஸார் கடந்த காலத்தில் நடத்திய சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன. மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் மக்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழங்கி வருகிறது.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டில் சொத்துக்களை பாதுகாக்கவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் அவசர காலச் சட்டம் அவசியமானதாகும். புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் இன்று எமது நாட்டுக்கு எதிராக சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஈரானில் தூக்கிலிடப்பட்ட நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்

ஈரானில் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படும் நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவரது பூதவுடல் வட மத்திய நகரான செம்னானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புதைக்கப்பட்டதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

சஹாரா பஹராமி(45) என்ற பெண்மணி போதைப் பொருள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இவரது கைதானது அந்நாட்டு ஜனாதிபதி அஹமட் நிஜாட்டிற்கு எதிரான போராட்டத்தினை அடுத்தே இடம்பெற்றமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவமானது நெதர்லாந்து மற்றும் ஈரானின் இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
பிப்ரவரி
9
விக்ருதி வருடம் - தை
26
2011-02-09
புதன்
ரபியுல் அவ்வல்
5

நல்ல நேரம் : 9.30 - 11.30 ராகு : 12.00 - 1.30 குளிகை : 10.30 - 12.00
எமகண்டம் : 7.30 - 9.00 கரணன் : 12.00 - 1.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 7.39
நட்சத்திரம் : அசுவினி அ.கா 5.14

யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை




அமைச்சர் மைத்திரிபால திட்டவட்டமாக அறிவிப்புஎக்காரணத்திற்காகவும் அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திப் போடாது. அதற்கான கோரிக்கை எதனையும் தேர்தல் ஆணையாளரிடம் முன்வைக்க வுமில்லையென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

எத்தகைய தடைகள் வந்தாலும் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் மற்றும் பிரசாரங்கள் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இயற்கை அனர்த்தங் களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள எதிர்க்கட்சி முனைவதானது அக்கட்சியின் வங்குரோத்து நிலையையே எடுத்துக்காட்டுகிறது. ஐ.தே.க. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடொன்று நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதெனக் கூறி ஐ.தே.க. எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த முன்வருமாறு கூறியுள்ளார்.

இது அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளக் கூடிய தருணமல்ல. எதிர்க்கட்சியினர் தமது இத்தகைய தீர்மானத்தைக் கைவிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி அதன் பதினேழு வருட ஆட்சிக் காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்தது.

அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் ஜூலை வேலை நிறுத்தம் ஏற்பட்டு ஒரு லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். எமது ஆதரவாளர்கள் 11,000 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஆயிரக் கணக்கானோரின் மீது தாக்குதல் நடத்தி கை, கால்களையும் முட மாக்கினர். 64 பேர் பலியானதுடன் எட்டு பாலியல் வல்லுறவுகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தகையவர்களே இன்று ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் எனக் கூறுகின்றனர். மக்களை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரட்டுகின்றனர். மக்கள் எதையும் மறந்து விட மாட்டார்கள். இந்த தேர்தல் முடிவின் போது ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வீழ்ச்சியையே சந்திக்கும்.

ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய ஆட்சியில் எதிர்க்கட்சிக் காரர்களின் கூரைக்கு ஒரு கல்லை எறிந்த சம்பவம் கூட இடம்பெற வில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஒரு தலைவர் இல்லை. யார் தலைவர் என்ற போட்டி உள்ளது. ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதா என நாம் மக்களிடம் கேட்கவிரும்புகிறோம். இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வரப் போவ தில்லை என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை சுதந்திர தினத்தை நிராகரித்தனர். பெப்ரவரி 4ம் திகதி ஜனாதிபதியின் பிறந்த நாளோ அல்லது அரசாங்கத்தின் ஏதாவது நிகழ்வோ அல்ல. இந்த நாட்டை பிரித்தானியர்களிடமிருந்து மீட்ட வரலா ற்றுப் புகழ் மிக்க தினமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய செயற் பாடானது தேச பிதாவான டி.எஸ்.சேனநாய க்காவிற்கு செய்யும் அகெளரவமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த போகத்தில் இலவச நெல், பசளை







தொடர்மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த போகத்தின் போது நெல் மற்றும் பசளையை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிக் கடன்பெற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் அந்தக் கடனை மீளக் கொடுக்கும் காலத்தை நீடித்துத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளில் தேவைப்படு பவர்களுக்கு ஆறு மாதகாலத்திற்கு நிவாரண உணவுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு அவர்களது விவசாய நிலங்களை பதப்படுத்துவதற்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

சியம்பாலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஹகொல்ல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிவுலேஆர குளத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கும் பணியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் 2011 தேசிய கண்காட்சியை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, அமைச்சர்களான சுமேதா ஜி. ஜயசேன, ஜகத் புஷ்பகுமார, எஸ். எம். சந்திரசேன உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- மக்களை மேம்படுத்தி கிராமத்தை மேம்படுத்தல், கிராமத்தை மேம்படுத்தி நகரத்தை மேம்படுத்துல் நகரத்தை மேம்படுத்தி நாட்டை மேம்படுத்தல் என்பதே ஜனாதிபதியின் பிரதான இலக்காகும் அந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தேவையான உச்சக்கட்ட வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும்.

வெல்லஸ்ஸ பகுதியிலுள்ள எந்த ஒரு நிலப்பரப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

அரசாங்கம் ஏதாவது ஒரு பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருவது வழக்கமாகும் என தெரிவித்த அமைச்சர் அதற்கு எவரும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ள நிவாரண கொடுப்பனவு இன்று முதல் இரட்டிப்பு



வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள், சமைத்த உணவுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் இன்று முதல் இரட்டிப்பாக்கப்பட்டு ள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான புதிய சுற்றுநிருபம் நேற்று சகல மாவட்ட செயலாளர் களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை இரட்டிப்பாக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்த பணிப்புரைக்கமைய புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக 3 தினங்களுக்கு வழங்கப்படும் சமைத்த உணவுக்கான 100 ரூபா மற்றும் 80 ரூபா ஒருநாள் கொடுப்பனவை 200 ரூபாவாக அதிகரிக்கவும் தொடர்ந்தும் ஒரு வாரத்துக்கு சமைத்த உணவை வழங்குமாறும் புதிய சுற்றுநிருபம் சுட்டிக்காட்டுகிறது. சமைத்த உணவுக்காக ஒருவருக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்காக 80 ரூபாவுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.

இதேபோன்று உலர் உணவுக்காக இன்று முதல் 2 பேர் உள்ள குடும்பத்திற்கு 500 ரூபாவும், 3 முதல் 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 750 ரூபாவும் அதற்கு மேற்பட்டோரைகொண்ட குடும்பத்துக்கு 1000 ரூபாவை கொடுப்பனவாக வழங்குவது என்றும் புதிய சுற்றுநிருபம் சுட்டிக்காட் டுகிறது.

மேலும் வெள்ள நிலை முற்றாக நீங்கிய பின்னரும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினமொன்றுக்கு 500 ரூபா வீதம் பொது வேலைகளில் ஈடுபடுவர்களுக்கு வழங்குவது எனவும் முடிவுசெய்யப்பட்டு ள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெடுப்புவதற்காக இவர்களது உதவியை பெறும் அதேவேளை மாதாந்தம் 8000 ரூபா ஒருவருக்கு கிடைக்கும் விதத்தில் கொடுப்பனவை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எம். ஏ. சுமந்திரன் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணைக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மரக்கறி விலையேற்றத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் கொழும்பில் நேற்று ஆரம்பம்





மரக்கறி வகைக ளின் விலையேற் றத்தைக் கட்டுப் படுத்தவும், அவற்றை நியாய விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவுமென அரசாங்கம் விசேட வேலைத் திட்டமொன்றை நேற்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த விசேடவேலைத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட வேலைத் திட்டம் கமநல சேவைகள், வனவில ங்குகள் அமைச்சின் உடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு ள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட் டத்தில் பத்து நிலையங்களில் மரக்கறி வகைகளை உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்வனவு செய்து நியாயவிலையில் சந்தைப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கம நல திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அலுவலகங்கள் ஊடாக மரக்கறி வகைகளை உற்பத்தியாளர்களிடமி ருந்து நேரடியாகக் கொள்வனவு செய்து இந்த அலுவலகங்கள் ஊடாகச் சந்தைப்படு த்தும் என்று கமநல சேவைகள் மற்றும் வன விலங்கியல் துறை அமைச்சர் எஸ். எம். சந்திரசேன கூறினார். கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அலுவல கங்கள் 556 நாடெங்கிலும் உள்ளன.

இவற்றின் ஊடாக மரக்கறி வகைகள், பழவகைகள், அரிசி, தேங்காய் மற்றும் தானியப் பொருட்கள் என்பனவும் கொள்வனவு செய்யப்பட்டு நியாயவிலையில் சந்தைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேன கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு பாடசாலைகள் நாளை முதல் வழமைக்கு






கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மூன்று தினங்கள் மூடப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை (10) வியாழக்கிழமை முதல் வழமை போல் இயங்கும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.. நிஸாம் தெரிவித்தார். மாகாணத்தில் 50 வீதமான பாடசாலைகள் வெள்ளத்தால் இயங்க முடியாத நிலை நிலவியது.

மழைக்கால நிலை தொடருகிறது, இந்நிலையில் தொடர்ந்து பாடசாலைகளை மூடுவதென்பது மாணவரின் கல்வியைப் பாதிக்கும் என்று கூறிய அவர் பாடசாலைகளை நாளை மீண்டும் திறக்க ஏற்பாடாகியுள்ளது என்றார்.

கடந்த மூன்று தினங்களும்மகாஓயா, தெஹியத்தக்கண்டிய ஆகிய வலயங்கள் தவிர்ந்த ஏனைய 14 கல்வி வலயங்கள் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் (செவ்வாய்) அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை வலயப் பாடசாலைகள் மீண்டும் நேற்றிலிருந்து இயங்க ஆரம்பித்துள்ளன.

நாளை இயங்க முடியாத பாடசாலைகள் இருப்பின் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அது பற்றித் தீர்மானிக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ள அனர்த்தம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தேவையான நிவாரண உதவி



பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 மாதகாலத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கவும் சேதமடைந்த வீடுகள், குளங்கள், வீதிகள், பாடசாலைகள் என்பவற்றைத் திருத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ, கஷ்டத்தில் பங்குகொள்ளவோ, முன்வராத எதிர்க்கட்சிகள் கொழும்பிலிருந்து அரசின் மீது குற்றஞ்சாட்டி வருவதாகவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியதாவது:-

நாட்டில் 2/3 பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய, மத்திய, கிழக்கு மாகாணங்கள் வெள்ளம், மண் சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு தேவையான நிவாரணங்கள் வழங்கி வருகிறது. ஹெலிகொப்டர், படகுகள் மூலம் உணவு, மருந்துவகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. முப்படை, பொலிஸார், மருத்துவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அர்ப்பணிப்புடன் உதவிகளை வழங்கி வருகின்றனர். பல வீதிகளில் இன்னும் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளன.

மக்களுக்கு உதவி வழங்குவதற்காக 6 மாதகால உலர் உணவு வழங்கவும், உடைந்த வீடுகளை திருத்தவும், குளங்கள் திருத்தவும், வீதிகளை புனரமைக்கவும் பாடசாலைகளை மீளமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயிர்ச்செய்கைகள் சேதமடைந்திருப்பதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க துரித உணவு பாதுகாப்புத்திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலை சீரடையாததால் இந்தப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ. தே. க. என்ன செய்துள்ளது. ஒரு ஐ. தே. க. தலைவராவது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டார்களா? இல்லை.

கொழும்பில் இருந்து ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ. தே. க. முன்வர வேண்டும்.

வெள்ள நிவாரணம் வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. நாடு அனர்த்தத்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அரசு தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றிவருகிறது. முழு உலகமும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளன. எமது நாட்டில் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தினால் சேதமடைந் ததால் உணவு, மரக்கறி விலைகள் உயர்வடைந்தன. ஆனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள்: 99 வீதமானோர் புனர்வாழ்வு பெற்று குடும்பத்தினருடன் இணைவு








பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த புலிகளின் பெண் உறுப்பினர்களில் 99 சதவீதமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்ப தாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகளில் தொடர் புடைய 34 மகளிர் மட்டுமே தொடர்ந்தும் புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகளில் தொடர்புபட்ட 11 ஆயிரத்து 309 பேர் பாதுகாப்பு படை யினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு வடக்கிலுள்ள புனர் வாழ்வு நிலையங்களின் புனருத்தாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதில் 55 சதவீதத்தினர் அல்லது 5809 பேர் இது வரை புனருத்தாரணப்படுத்தப்பட்டு சமூகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு புலிகளின் 99 வீதமான பெண் உறுப் பினர்களும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர்களும், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் 45 வயதை தாண்டிய மற்றும் ஊனமுற்று நோயுற்ற நிலையில் உள்ளவர்களும் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தப்பட்டு ள்ளனர். புனர்வாழ்வு முகாம்களில் 4500 பேர் இருப்பதாகவும் அதில் 100 பேர் புனருத்தாரணபடுத்தப்பட்டு விரைவில் சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது இருப்பது 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமேயாவர். இவர்களுக்கு தொழிற் பயிற்சி வாழங்கவும், புதிய கடன் முறையொன்றின் கீழ் சுயவேலை வாய்ப்புடன் சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

புனருத்தாரண அதிகார சபையில் பயிற்சி பெற்ற பின் சமூகத்தில் சேர்க்கப்படும் போது விசேட கடன் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அது பத்து வருட காலத்தில் 4 சதவீத வட்டியில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். முதலாவது வருடத்தில் மட்டும் கடன் தொகையில் வட்டியை மட்டும் செலுத்துவது போதுமானதாகும்.

புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் சிறுவர்களில் 375 பேர் கடந்த உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். இதில் 212 பேர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகவும் அதில் 40 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் இருவர் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி பின் விபரம் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு சமூகத்தில் சேர்க்கப்படுவோரின் பெயர், விலாசம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன் கிராம சேவையாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸ் மூலம் அந்த செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

காலி - மாத்தறை அதிவேக ரயில் சேவை திங்களன்று ஆரம்பம்






காலி- மாத்தறைக்கு இடையிலான அதிவேக ரயில் சேவை எதிர்வரும் திங்களன்று (14) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்றுத் தெரிவித்தது.

இந்திய கடனுதவியுடன் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் காலி- மாத்தறை இடையிலான ரயில் பாதை மீளமைக்கப்பட்டுள்ளது.

அதிவேக ரயில்சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் மாத்தறை ரயில் நிலையத்தில் நடைபெறும். விழாவில் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளும் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, பிரதி அமைச்சர் ரோஹண திசாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் அதிதிகள் 14ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காலியில் இருந்து மாத்தறைக்கு ரயிலில் பயணம் செய்ய உள்ளதாக ரயில்வே திட்ட அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். 15-20 நிமி டங்களில் காலியில் இருந்து மாத்தறைக்கு பயணம் செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...