18 மார்ச், 2010

வடக்கின் வசந்தத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு கையடக்கணனி!


வடக்கின் வசந்தத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு கையடக்கணனி! இது தேர்தல் சூதாட்டமா அல்லது மீள்கட்டுமானத்தின் படிமானமா!வடக்கின் வசந்தம் வேலை திட்டத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு மடி கணனிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் வடகிழக்கில் அபிவிருத்திகள், மீள்கட்டுமானங்கள், திறப்பு விழாக்கள் என தடபுடலாக நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. இவையெல்லாம் தேர்தலை குறியாக கொண்டுதான் வேகம் பெறுகின்றதா? உண்மையாகவே மக்களின் நலனை கொண்டுதான் இவை இடம்பெறுகின்றதா? தேர்தல் நெருங்கும்போது திகதியிடப்பட்ட காசோலைகளை வழங்குவதும் தேர்தலின் பின்னர் அவ் கசோலைகளில் பணம் இல்லாதுபோவதும் கடந்தகால நிகழ்வுகளாக இடம்பெற்றன.
ஆகவே அபிவிருத்திகள், திறப்பு விழாக்கள், நன்கொடைகள், உதவிகள் எமது மக்களுக்கு தேவையானவைதான் அவற்றை வழங்குவதும் நடைமுறைப்படுத்துவதும் வரவேற்க்க கூடியதுதான். இவையெல்லாம் தேர்தல் நெருங்கும்போது சூடுபிடிப்பதுதான் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தினால் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாத வடகிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் புத்துயீர் பெறுவது வரவேற்க்கப்பட வேண்டியதுதான் இது தேர்தலுடன் மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெற்கே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் போன்று வடக்கு அபிவிருத்தியும் செழிப்புற வேண்டும் அதுவே பாராளுமன்றிற்கு தெரிவு செய்யும் மக்களிற்கான நண்றியுணர்வாகும்.
யுhழ்ப்பாணத்தில் இருந்து
ஆர்.தர்மரட்ணம்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மேலுமொரு தொகுதியினர் மீள்குடியேற்றம்-

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மேலும் ஒருதொகுதியினர் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களையே இவ்வாறு மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் இவர்கள் நாளையதினம் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நலன்புரி நிலையங்களில் எஞ்சியுள்ள சிலரையும் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பாலம் மற்றும் நீரூற்றுப்பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு-

மன்னார் பெரு நிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதியபாலம் மற்றும் நீரூற்றுப் பாதை ஆகியவற்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றுமுற்பகல் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, ஜப்பானியத் தூதுவர் குனியோ டகாசி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஜப்பானிய அரசின் 2460மில்லியன் உதவியுடன் மன்னார் களப்பினை ஒட்டி இந்தப்பாலம் மற்றும் நீரூற்றுப்பாதை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தின்கீழ் இந்தப்பாலம் மற்றும் நீரூற்றுப் பாதை ஆகியன அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மன்னாரிலுள்ள சுமார் 41ஆயிரம்பேர் நன்மை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் சந்திப்பு-

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக்க சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ பி.சுமணசிறி தெரிவித்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் வாரத்தில் சிரேஸ்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது தேர்தல் கடமைகள் குறித்து அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீரபாண கிராமத்தில் உள்ள பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்ககைளை மேற்க்கொள்வதில்


மாத்தறை மாவட்டத்தின் தவளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிராமத்தில் உள்ள பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்ககைளை மேற்க்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இப்பிரதேசததில் 450 சிங்கள குடும்பங்களும் 100 தோட்டத் தொழில் புரியும் தமிழ் குடுப்பங்களும் வசித்துவருகின்றன.

இப்பிள்ளைகள் வீரபாண கணிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் பௌதீகவளங்கள் மற்றும் ஆசிரியப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. அத்தோடு இங்கு 50 தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள வீரபாண கணிஸ்ட வித்தியாலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒற்றுமையாக கல்விகற்று வருகிறார்கள். இருப்பினும் இப்பாடசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறையானது இவர்களது கல்வி முன்னேற்றத்தில் பல பிண்ணடைவுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஒரு ஆரோக்கியமான மாணவ சமூகம் உருவாகுவதற்க்கு பௌதீக வளங்கள் இன்றியமையாததொன்றாகும். எனவே இப்பாடசலையை அபிவிருத்தி செய்வதனுடாக தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஓரளவு அபிவிருத்தி அடையச் செய்ய முடியுமென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை கவனத்திலெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டேரிள் கடமையாகும்.
மேலும் இங்கே தொடர்க...

கோவாவுக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண் கற்பழித்து கொலை? ஓட்டல் அறைக்குள் பிணமாக கிடந்தார்




கோவாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை கடந்த ஆண்டு மந்திரி ஒருவரின் மகனும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொன்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று கோவா ஓட்டல் ஒன்றில் ரஷிய பெண் மர்மமாக இறந்து கிடந்தார். அவருடைய பெயர் எலனா (வயது 33). 2 நாட்களுக்கு முன்பு கோவா வந்த அவர் ஓட்டலில் தங்கினார்.அவருடைய அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

எனவே ஓட்டல் ஊழியர்கள் வேறு சாவியை கொண்டு திறந்து பார்த்தனர். அங்கு அவர் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிந்த பிறகே சாவு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தெரிய வரும்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கடத்திய இங்கிலாந்து சிறுவனை ரூ.80 லட்சம் கொடுத்து மீட்பு





இங்கிலாந்தை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷாகில்சயீத் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம் பகுதியில் தனது பாட்டி வீட்டிற்கு விடுமுறையை கழிக்க வந்திருந்தான்.

வீட்டில் இருந்த அவன் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டான். எனவே அவனை மீட்டு தரும்படி இங்கிலாந்து தூதரகம் பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து இண்டர்போல் போலீஸ் உதவி நாடப்பட்டது. இந்த நிலையில் 13 நாட்களுக்கு பிறகு சிறுவன் ஷாகில் சயீத் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.

அவன் எப்படி மீட்கப்பட்டான் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவன் பிணைத்தொகையாக ரூ.80 லட்சம் கொடுத்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை ஸ்பெயின் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட 3-வது நாளில் இருந்து அவனது குடும்பத்தாரிடம் மர்ம நபர்கள் டெலிபோனில் பேசி பிணைத்தொகை கேட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அச்சிறுவனின் தந்தை பணத்துடன் மான்செஸ்டருக்கு பயணம் செய்தார். பின்னர் பாரீ சுக்கு சென்றார். அங்கு கடத்தல்காரர்களிடம் நடுரோட்டில் வைத்து பணம் கொடுத்தார்.

உடனே பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போலீசார் கடத்தல்காரர்களை விரட்டி சென்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டு எல்லையில் வைத்து கடத்தல்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கடத்தப்பட்ட சிறுவன் ஷாகில் சயீத் விடுவிக்கப்பட்டான்.
மேலும் இங்கே தொடர்க...

தெகிவளையில் இருநாள் இராஜ யோக தியானக் கருத்தரங்கு



இருநாள் இராஜ யோக தியானக் கருத்தரங்கு எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெகிவளை, 55 பீற்றர்ஸ் லேனில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜ யோக தியான நிலையத்தில் நடைபெறும்.

ஆங்கில மொழியில் மாத்திரமே நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புபவர்கள் இன்று 18ஆம் திகதி உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 30க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மதிய போசனமும், மென்பானமும் வழங்கப்படும்.

இராஜ யோக தியானம் என்பது மன வலிமையையும், வளங்களையும் கட்டியெழுப்பப் பயன்படுத்தும் தியானமுறையாகும். இத் தியானம் மன அமைதியையும், ஆரோக்கிய வாழ்வையும், தெளிவான புத்தியையும், மன ஒருமைப்பாட்டையும், சந்தோஷத்தையும், ஆன்மீக சக்திகளையும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் உருவாக்குவதற்கு உதவுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆதிக்கம் நிறைந்த நாடாகும் இந்தியா: அமெரிக்கா கணிப்பு





'இந்தியப் பெருங்கடலின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது மற்றும் கவுரவமிக்க ராணுவ பாரம்பரியம் ஆகியவற்றால், இந்தியா, அடுத்த 25 ஆண்டுகளில், தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் நிறைந்த நாடாக திகழும்' என, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கூட்டுப் படை, நாடுகளின் எதிர்கால ராணுவ செயல்பாடு மற்றும் அவர்களின் தொழில்நுட்ப பாணி குறித்து, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவத்தின் தரம், வரும் காலங்களில் மேம்படுத்தப்படும். இந்தியப் பெருங்கடலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருப்பது மற்றும் மதிப்பு மிக்க ராணுவ பாரம்பரியத்தால், அந்நாடு, அடுத்த 25 ஆண்டுகளில், தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ஆதிக்கம் நிறைந்த நாடாக திகழும்.இந்தியாவின் வளம் அடுத்த 20 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரிக்கலாம்.

எனினும், அந்நாட்டு மக்கள் தொகையில் அதிகளவு, வரும் 2030ம் ஆண்டு வறுமையிலேயே இருப்பர். இதனால், ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான பிரச்னைகள் அதிகரிக்கும்.இப்பிரச்னை நாட்டில் காணப்படும் மதங்கள் மற்றும் இனத்தில் பிரிவினையை உண்டாக்கி, அதனால், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

ரஷ்யா மற்றும் இந்தியா இருநாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். எனினும், ஜனநாயகத்திற்கு சாதகமற்ற பாணிகளை கடைபிடிப்பது மற்றும் அழிந்து வரும் உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைக்க, தீவிர முதலீடு செய்யாதது ஆகியவற்றால், ரஷ்யாவின் வளர்ச்சி வலுவற்றதாக இருக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2012 இல் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆவது ஆண்டு நிறைவு





எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆந் திகதி டைட்டானிக் கப்பல் மூழ்கி 100ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.

இதனை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் படத்தை 3டி படமாக மாற்றித் தருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கமரூன். உலகம் முழுக்க இதே தினத்தில் டைட்டானிக் 3டி வெளியாகிறது.

11 ஆஸ்கர் விருதுகள் மற்றும் 1.8 பில்லியன் வசூல் என உலக அளவில் பல சாதனைகள் படைத்த படம் டைட்டானிக். இதனை ஜேம்ஸ் கமரூனே தயாரித்து இயக்கினார். 1997ஆம் ஆண்டு டிகேப்ரியோ கேன் வின்ஸ்லெட் நடித்து வெளியான இந்தப் படம் ஆசிய நாடுகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது.

இதுகுறித்து கமரூன் கூறுகையில்,

"முப்பரிமாணத்தில் டைட்டானிக் படத்தை மாற்றும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன். அதனுடன் அசல் டைட்டானிக் கப்பல் கடலுக்குள் சிதைந்த நிலையில் இருக்கும் காட்சிகளும் இடம்பெறும். ஆனால் 'அவதார்' அளவுக்கு தத்ரூபமான 3டி பதிப்பு இந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை" என்றார்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி இந்தக் கப்பல் அட்லாண்டிக் கடலில் 2,223 பயணிகளுடன் மூழ்கியது. அதில் 1,517 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய அந்தக் கப்பலை, கடலுக்குள் நேரில் போய் ஆய்வு செய்து ஓர் அற்புதமான காதல் கதையுடன் தத்ரூபமாக தந்திருந்தார் கமரூன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம்-


அமைச்சர் மைத்திரிபால
தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானமாணித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுவது மட்டும் தேர்தலில் இடம் பெறும் விடயம் அல்ல என தெரிவித்த அவர் தேர்தல் முறைமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐனநாயக தேசிய கூட்டமைப்பினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிக்கோள் எதுவும் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியும் , மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாக இனைந்து வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இரண்டாக பிரித்து இரண்டு கட்சிகளும் நேற்று வெளியிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடைய கொள்கை பிரகடனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கொள்கைகளை ஒத்ததாகவே காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். எதிர் வரும் பொது தேர்தலில் அரசாங்கம் 6 இலடசத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் 3500 ரூபா சம்பளம் வழங்கப்படும்;-ரணில்




ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் சம்பள அதிகரிப்பை முதல் கட்டமாக 3500 ரூபா வழங்கப்படும் என்பதனை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் இந்த வருடம் உலக பொருளாதாரத்திற்கு என்ன நடைபெறும் என்பதனை கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக எவ்வித சலுகைகளையும் மக்களுக்கு வழங்க வேண்டாம் என நான் யாருக்கும் கூறவில்லை எனவும் அரச ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 3500 ரூபா சம்பள உயர்வினை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் 12 மாதங்கள் செல்வதற்கு முன்னர் அடுத்தகட்ட சம்பள உயர்வினை வழங்குவதாகவும் ,சம்பள நிர்ணயசபை ஒன்றின் ஊடாக தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வினை நிச்சயமாக பெற்று கொடுப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மும்பைத் தாக்குதல் : சிக்காகோ நீதிமன்றில் ஹெட்லி மீது இன்று விசாரணை






பாகிஸ்தானைச் சேர்ந்த, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற டேவிட் ஹெட்லி (49) மீது மும்பைத் தாக்குதல், டென்மார்க் பத்திரிகை அலுவலகத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சிக்காகோ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் இவர் அமெரிக்க உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இவர் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி எனத் தெரிய வந்தது. மும்பை தாக்குதல் மற்றும் டென்மார்க் பத்திரிகை அலுவலகக் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் மீது அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (18ஆந் திகதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அப்போது ஹெட்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவருக்காக வக்கீல் ஜான்தீப் ஆஜராகிறார். ஹெட்லி மீது ஏற்கனவே 12 குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், இவர்மீது மும்பைத் தாக்குதல், டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல போன்ற குற்றச்சாட்டுகளை மட்டும் நாளை நீதிமன்றில் ஒப்புக் கொண்டு இவர் மன்னிப்புக் கோருவார் என ஜான்தீப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 12 வழக்குகளின் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால் ஹெட்லிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் ராண்டல் சாம் போர்ன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

2வது இராணுவ நீதிமன்றத்தில் பொன்சேகா நேற்று ஆஜர்




விசாரணை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் சகிதம் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் முன் நேற்று ஆஜரானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற இரண்டாவது நீதிமன்றம் அதன் அமர்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது.

சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்தபோது மேற்கொண்ட இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறிய சம்பவம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இந்த இரண்டாவது நீதிமன்றம் நியமிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்றம் தொடர்பாக இராணுவத் தலைமையகம் மேலும் தகவல் தருகையில்:-

நேற்றைய நீதிமன்றம் கூடியபோது ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த இராணு நீதிமன்றத்தின் நியமனம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

ஒரு இராணுவ நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் சம காலத்தில் இன்னொரு இராணுவ நீதிமன்றத்தில் உறுப்பினர்களாகவும் பணி புரியலாமென இராணுவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும், எதிர்த் தரப்பு சட்டத்தரணிகள் வித்தியாசமான வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்பதைக் கருத்திற்கொண்டு இந்த நீதிமன்றத்தை நியமித்த அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதென நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்ததையடுத்து விசாரணை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது நீதிமன்றின் அமர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...