30 அக்டோபர், 2010

போலி ஆவணங்களுடன் இலங்கை செல்ல முயன்றவர் சென்னையில் கைது

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை செல்ல முயன்றவர் மற்றும் அவருக்கு உதவிய முகவர் ஆகியோரை சென்னை பொலிசார் கைது செய்தனர். இவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சிவிதரன்(29). கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு வந்தார். விசா காலம் முடிந்தும், அவர் சென்னையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் இலங்கை செல்ல சென்னை விமானம் நிலையம் சென்றார்.

அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது, காலக்கெடு முடிந்து, 'ஓவர் ஸ்டே' முறையில் சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், அவரிடம் விசாரித்ததில் சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற முகவர் தான் போலி ஆவணங்கள் தயார் செய்து இலங்கை செல்ல உதவினார் எனக் கூறினார்.

இதையடுத்து, வழியனுப்ப விமான நிலையத்தில் காத்திருந்த ஜெயக்குமாரை, விமான நிலையப் பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கு புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹிட்லரின் ஆட்சியையே இலங்கை அரசு இன்று கடைப்பிடிக்கின்றது : மங்கள

சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு லட்சம் பேரைத் திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"1933ஆம் ஆண்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் ஹிட்லர் அரச அதிகாரங்களைக் கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதியோடு அதற்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன்றும் நாடளாவிய ரீதியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவுகூருவதுடன் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெடுப்போம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டன் - டுபாய் விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பிரித்தானியா மற்றும் டுபாய் விமான நிலையங்களில் நேற்று வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு சரக்கு விமானங்களிலேயே இவ்வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யேமன் நாட்டிலிருந்தே இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.

அமெரிக்க சிக்காகோ நகருக்குச் செல்லும் இவ்விரு விமானங்களும் பிரித்தானியா மற்றும் டுபாயிலும் தரை இறங்கியுள்ளன.

பிரித்தானிய புலனாய்வு சேவையான எம்.ஐ6 இற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவை இரண்டும் அச்சிடும் உபகரணத்தில் (பிரிண்டர்) உபயோகிக்கப்படும் ' பிரிண்டர் காட்ரிஜ் ' இல் வைத்து பொதி செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவிலுள்ள யூத மத வழிபாட்டுத்தலங்களை குறி வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அல்-கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தேர்தல்: ஆட்சேப மனு நிராகரிப்பு


2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

மேற்படி மனு பிரதம நீதியரசர் அசோக த சில்வா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிராணி ஏ. பண்டாரநாயக்க, கே. ஸ்ரீபவன், பி.ஏ. தயாரத்ன, எஸ்.ஐ. இமாம் ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு எதுவும் இன்றி மனுவை நிராகரிப்பதாக அறிவித்தது.

29 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை பிரதம நீதியரசர் அசோக த சில்வா திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஐந்து பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மனுதாரர் முன்வைத்துள்ள நிவாரணங்கள் சட்டபூர்வமற்றவை. அவற்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது. மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் மனுவொன்று பூர்த்தி செய்ய வேண்டிய சட்ட தேவைகளை இந்த மனு நிறைவு செய்யவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை ஆகிய பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

தனக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவு வாக்குகள் கிடைக்காமல் போனதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. மனுதாரர் குறிப்பிடுவது போல தேர்தலில் முறைகேடு நடைபெற்றால் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்.

ஆனால் தேர்தலை ரத்து செய்யுமாறு மனுதாரர் கோரவில்லை. கோராத நிவாரணமொன்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜனாதிபதி அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டிருந்தார்.

ஆனால் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினருடன் கூட்டம் நடத்த முடியும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டதாக கூறப்பட்ட போதும் தனக்கு ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களின் அல்லது கட்சிகளின் பெயர்களை முன்வைக்க

அவர் தவறிவிட்டதாகவும் அதில் கூறப் பட்டது. இதனடிப்படையில் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி யீட்டினார். சரத் பொன்சேகா 40.15 வீத வாக்குகளையும் பெற்றார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முறை கேடாக நடைபெற்றதாக கூறி சரத் பொன் சேகா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் ஜனாதிபதி வேட்பாளர் களான மஹிந்த ராஜபக்ஷ, போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் ஆணையாளர், சரத் கோங்கஹகே, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இர ண்டாவது தடவையாகவும் நியமிக்கப் படுவதை ரத்துச் செய்து தன்னை முறை யாகத் தெரிவான ஜனாதிபதி என அறி விக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடங்களான பிரதி வாதிகள் பூர்வாங்க ஆட்சேபனை முன் வைத்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக கடந்த திங்கட் கிழமை எழுத்து மூல ஆட்சேபனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ். விஜேசிங்க ஆட்சேபனையை முன்வைத்தார்.

சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனு சட்டவிரோதமானது எனவும் இதனை விசாரணைக்கு எடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்குமாறும் ஜனாதிபதியின் ஆட்சேபனையில் குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முறைகேடானது என்று மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள போதும் லஞ்சம் பெறல், அச்சுறுத்தல், போன்றவற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

தேர்தல் ஆணையாளர் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் பிரசாத் டெப் ஆஜரானதோடு ஏனைய பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். எல். குணசேகர ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் சில்வா காமினி மாரப்பன ஆகியோர் ஆஜரானார்கள்
மேலும் இங்கே தொடர்க...

கொரிய மொழிப் பரீட்சை இன்று; குறுந்தகவல் மூலம் மோசடி முயற்சி ஒரு சிம்காட்டின் விலை ரூ. 25,000க்கு மேல்

தென்கொரிய வேலைவாய்ப்புக்காக இன்றும் நாளையும் நடத்தப்படும் எழுத்து மூலமான பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு இரகசியமாக குறுந்தகவல் அனுப்புவதற்காக 25,000 ரூபாவுக்கும் அதிக தொகையில் பெருந்தொகையான சிம்கார்ட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இம்முறை சுமார் 700 பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இன்றும் நாளையும் கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் 493 பரீட்சை மண்டபங்களில் 29,300 பேர் கொரிய பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

493 மண்டபங்களிலும் 493 பொலிஸார் கடமையில் ஈடுபடுவர். உள்நுழைவாயிலில் 15 பேர் வீதம் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். பரீட்சை மண்டபத்துக்குள் செல்லும் பரீட்சார்த்தி முழுமையான சோதனைக்குட்படுத்தப்படுவார். கையடக்க தொலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.

காலை 8.30 மணி முதல் 11.45 மணிவரை நடைபெறும் இப்பரீட்சையின் போது கடமையிலீடுபட்டிருக்கும் பொலிஸாரும் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸாரும் காலை 7.30க்கே

பரீட்சை நிலையங்களுக்கு கட மைக்கு வருவர். பரீட்சையின் போது மோசடி யிலீடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாருக்கு பணியகம் பரிசுகளையும் வழங்கும் என பணியகத்தின் தலைவர் தெரி வித்தார்.

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப் புக்காக ஆட்களை அனுப்பும் நாடு களில் 2004 ஆம் ஆண்டு இலங்கை 13 ஆவது இடத்தில் இருந்தது.

இப்போது மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த இடத்திலிருந்து முதலாவது இட த்தை அடைவதே எமது இலக்கு.

மோசடியற்ற விதத்தில் வேலை வாய்ப் புக்காக ஆட்களை அனுப் பும் போது, எமக்கு முதல் இட த்தை வெகுவிரைவில் எட்ட முடி யும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஷானாவின் கருணை மனு விவகாரம்: சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய் திருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிகரட்,மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள் ளன. அதன்படி விற்பனை செய்யப் படுகின்ற அனைத்து வகை சாராயத் தினதும் விலைகள் அதிகரிக்கப்பட் டுள்ளன.

சாராயத்தின் விலைகள் 15 முதல் 20 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஒரு போத்தல் பியரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அனைத்து வகை யான சிகரட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட்டின் விலைகள் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு; ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்


ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் யானைப் பாதுகாப்புக்கு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நேற்று மு.ப. 11.00 மணியளவில் அஷ்ரப் நகரில் யானை வேலி அமைக்கப்படும் இடத்தில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான அஷ்ரப் நகர் மக்கள் கலந்து கொண்டனர். எனி னும், பொலிஸ் பாதுகாப்புடன் யானை வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஹைகோப் ஆயுத ஊழல்: இரண்டாவது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹைகோப் நிறுவன ஆயுத ஊழல் வழக்கில் 2வது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் ஹை கோப் நிறுவ னத்தின் ஊடாக ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக கூறி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டாம் பிரதிவாதியாகிய ஹைகோப் நிறுவன பணிப்பாளர் வெலிங்டன் டீ ஹோட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

தமது குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாகிய தனுன இன்னும் தலைமறைவாகியுள்ளார். சரத் பொன்சேகா இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர சரத் பொன்சேகாவின் உதவியாளராக செயற்பட்ட சேனக சில்வாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சேனக டி சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்.

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப் புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர்.

இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதி ர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி-

தமிழர்களின் வரலாற்று சான்றுடைய திருகோணமலையின் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தினை பௌத்த பிரதேசமாக காட்டும் முனைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன்படி தனது தாயாரின் ஈமக்கிரியைக்காக இராவணனால் உருவான கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் புதிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணிக்கவென நிலம் ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தில் சிறிய பௌத்த விகாரையொன்று தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதேசசபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்டக்கூடாது என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. தற்போது பிரதேச சபையிடமிருந்தே கன்னியா பறிபோய் விட்டது. திருகோணமலை அரசஅதிபர் கன்னியாவுக்கு விஜயம் செய்து அங்கு பணிபுரியும் பிரதேச சபை ஊழியர்களின் சேவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதுடன், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கன்னியா சம்பந்தமான வரலாற்றைக் கூறும் விளம்பர பலகையையும் அகற்றி தனது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியானது பிரதேசசபைக்கு சொந்தமானது அல்ல. அது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது. பிரதேச சபையினர் உண்மைக்கு புறம்பான வரலாறு எழுதிய பதாதைகளை அங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இதனால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதில் எழுதியிருந்த வரலாறு உண்மைக்கு புறம்பானதல்ல. அதில் கன்னியா வெந்நீர் ஊற்று இராவணனால் என்ன காரணத்துக்காக உருவாக்கப்பட்டது என்றே தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...