இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முதலாவது அடியெடுப்பாக மாகாண சபையைக் கருதலாம். ஒற்றையாட்சியில் மத்திப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையிலிருந்து ஒற்றையாட்சியில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையை நோக்கிய மாற்றமே மாகாண சபை முறை.
தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்த வரையில் எந்தக் காலத்திலும் தேசிய இனப் பிரச்சினையே பிரதான பிரச்சினையாகப் பேசப்பட்டு வருகின்றது. பொருளாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள் எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லை என்பது இதன் அர்த்தமல்ல. நாட்டின் ஏனைய மக்களைப் போல இவர்களும் இப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுக் கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களின் தலைவர்களாக உரிமை கோருபவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமன்றி எப்போதும் இனப் பிரச்சினை பற்றியே பேசுகின்றார்கள். இப்போது தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிப் பேசுகின்ற போதிலும் அதுவும் இனப் பிரச்சினையின் தீர்வோடு சம்பந்தப் பட்டதே. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருந்தால், அல்லது தீர்வை நோக்கிய நகர்வாவது இடம் பெற்றிருந்தால் இன்றைய மீள்குடியேற் றப் பிரச்சினை தோன்றியிருக்காது.
தாங்களே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிமை கோருகின்றார்கள். தேர்தலில் மக்களால் தெரிவு செய் யப்படும் உறுப்பினர்களின் எண் ணிக்கையிலேயே பிரதிநிதித்துவ உரிமை தங்கியுள்ளது என்ற அடிப் படையிலேயே தாங்களே உண்மையான பிரதிநிதிகள் என்று இவர்கள் கூறு கின்றனர். இவர்களுடைய இந்த வரையறையின் அடிப்படையில் பிரச்சினையைப் பார்ப்போம்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலிருந்து முதலில் தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடுதலான பாராளுமன்ற உறுப்பி னர்களைப் பெற்றிருக்கின்றன. இவர் களுடைய வாதத்தின்படி, இந்த மூன்று கட்சிகளுமே கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள். ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்வோம்.
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் இனப் பிரச்சினையை மாத்திரமே இவர்கள் பேசுபொருளாக முன்வைத்தார்கள். இனப்பிரச்சி னையின் தீர்வுக்காக அயராது உழைப்போம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களின் வாக்குகளைப் பெற்றார்கள்.
அரசியலில் அரை நூற்றாண்டு சாதாரண காலமல்ல. முழுமையான நிவாரண த்தைப் பெற முடியாவிட்டாலும், பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்குக் கணிசமான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய காலம். இக்காலப் பகுதியில் இந்திய வம்சாவளி மக்களுக்கும் பிரச்சினை இருந்தது. அவர்கள் பிரசாவுரிமையும் வாக் குரிமையும் பறிக்கப்பட்டு நாடற் றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தனர். இப்போது அவர்களுக் குப் பிரசாவுரிமையும் கிடைத்திருக் கின்றது. வாக்குரிமையும் கிடைத் திருக்கின்றது. சமகாலத்தில் இனப் பிரச்சினைக்கு முகங்கொடுத்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. இருந்த நிலையிலும் பார்க்கக் கூடுதலான பாதிப்புகளுக்கே அவர்கள் உள்ளாகியிருக்கின்றனர்.
இக் காலப் பகுதியில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்தவர்கள் காலத்துக்குக் காலம் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஓரே அணியினர் என்பது வெளிப்படையானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி யில் எவ்வித முன்னேற்றமும் ஏற் படாததற்கு இத்தலைவர்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த அரை நூற்றாண்டு காலப் பகுதிக் குள் தமிழ் மக்கள் படிப்படியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாங்க முடியாத இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகினார்கள். இவற்றுக்கெல்லாம் அரசாங்கமே காரணம் என்று தமிழ்த் தலைவர்கள் கூறுகின்ற போதிலும் இத் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து இவர்கள் செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு அவலநிலை ஏற்பட்டிருக்காது.
பதின்மூன்றாவது திருத்தம்
இப்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக உள்ள தீர்வு பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபை. இது இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வல்ல என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. எனினும் இதை ஏற்பதால் இருந்த நிலையிலும் பார்க்கத் தமிழ் மக்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான சாத்தியம் இல்லை. தற்காலிகமாகவாவது சில அதிகாரங்கள் கிடைக்கின்றன. எனவே மாகாண சபைகளை ஏற்பதால் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை. அதே நேரம், மாகாண சபைகளை ஏற்பது இறுதித் தீர்வை முன்னெடுப்பதற்குத் தடையாகவும் அமையாது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முதலாவது அடியெடுப்பாக மாகாண சபையைக் கருதலாம். ஒற்றையாட்சியில் மத்திப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையிலிருந்து ஒற்றையாட்சியில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்ற நிலையை நோக்கிய மாற்றமே மாகாண சபை முறை. முழுமையான அதிகாரப் பகிர்வு தான் ஐக்கிய இலங்கையில் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக முடியும். எனவே, அதிகாரப் பகிர்வை நோக்கிய முதலாவது நகர்வு என்று மாகாண சபையைக் கூறலாம்.
இதைவிட மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட விடயங்களை மாகாண சபை கையாள முடியும். இவ்விடயங்கள் மாகாணத்தில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. இது மக்களுக்கு அனுகூலமான நிலை.
தமிழ்த் தலைவர்கள் மாகாண சபையை நிராகரிக்கின்றார்கள். இன்று நிராகரிக்கின்ற தலைவர்களில் சிலர் மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரவேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மாகாண சபையை வரவேற்றவர்களில் ஒருவர். புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்த போது அதை வன்மையாக எதிர்த்தவர்களுள் இவரும் ஒருவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழிவந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாத போதிலும், அத் தேர்தலில் தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாண சபையை அப்போது நிராகரிக்கவில்லை என்பதே இதன் அர்த்தம்.
இப்போது இத் தலைவர்கள் மாகாண சபையை நிராகரிப்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்கள்.
1. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுவிட்டன.
2. பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள முக்கியமான சில அதிகாரங்கள் இப்போது மாகாண சபைக்கு இல்லை.
3. அரைகுறைத் தீர்வுகளை ஏற்ற முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண சபை செயற்பட முடியாத நிலை ஏற்பட்ட பின் அம் மாகாண சபையைச் செயற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தலைவர்கள் முன்முயற்சி எடுத்து அம் மாகாண சபைக்கு உயிரூட்டியிருந்தால், இரண்டு மாகாணங்களும் இணைந்திருப்ப தைச் சிங்கள அரசு வழிச் சமூகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை தோன்றுவதைத் தவிர்க்க முடிந்திருக்கும்.
பதின்மூன்றாவது திருத்தத்தின் முக்கியமான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை என்று வெளியே இருந்துகொண்டு கூறுவதிலும் பார்க்க மாகாண சபையை ஏற்றுச் செயற்படுத்திக்கொண்டு அந்த அதிகாரங்களைப் பெறுவதற்கு முயற்சிப்பது தான் ஆக்கபூர்வமானது.
அரைகுறைத் தீர்வை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு சரியானதல்ல. உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சியைத் தொடர்வது தான் சரியான அணுகுமுறை. ஒன்றுமே இல்லாத நிலையிலும் பார்க்க ஏதாவது கிடைப்பது மேலானதே.
அடுத்து என்ன?
ஒரு தீர்வை நிராகரிப்பது அதனிலும் கூடுதலான தீர்வை அடைவதற்காக இருக்க வேண்டுமேயொழிய அந்தகாரத்துக்குச் செல்வதாக அமையக் கூடாது.
இப்போது மாகாண சபையை நிராகரிக்கும் தலைவர்கள் அதனிலும் மேலான தீர்வுக்கான தங்கள் திட்டத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தீர்வொன்றைத் தயாரித்திருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். அது எத்தகைய தீர்வு என்பது மக்களுக்குத் தெரியாது.
மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு அவசியமான தேவைதான். அத்தகைய தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நியாயமானதே. அதுமட்டும் தீர்வைக் கொண்டு வருவதற்குப் போதுமானதல்ல.
தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகவய உணர்வுகள் மாத்திரம் போதாது. புறவயச் சூழ்நிலையும் சாதகமானதாக இருத்தல் வேண்டும். இன்றைய நிலையில் புறவயச் சூழ்நிலை சாதகமானதாக இல்லை. தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினையாகப் பார்க்கும் நிலை இன்று நிலவுகின்றது என்ற உண்மையிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. தமிழ்த் தலைமை தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டப் பாதையிலே சில காலம் பயணித்ததன் விளைவு இது.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் படி, பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடனேயே கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வொன்றை நடைமுறைப்படுத்த முடியும். அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு தமிழ்த் தலைவர்களுக்கும் உண்டு.
மாகாண சபையை ஏற்பதும், அதேநேரம், ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர் வையே தமிழ் மக்கள் நாடி நிற்கின் றார்கள் என்ற அபிப்பிராயத்தைச் சிங்கள மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதும் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான வழிகள். மேலான தீர்வுக்காக அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தை இதற்குச் சமகாலத்தில் இடம்பெற முடியும்.
இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கிய அரசியல் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டி ருக்காது தேசிய ரீதியாக வியாபிக்க வேண்டியதன் அவசியத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...