தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களும் குறிப்பாக புலம் பெயர் விடுதலைப் புலிகளின் தலைமைகளும் மற்றும் பிற இயக்கத் தலைமைகளும் கூட இவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் தமது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றளவிற்கு அறிக்கைகள் மட்டும் விடுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள்; அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். இதன்மூலம் தமது அதிகாரங்களை பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் மட்டுமல்ல மேலும் மேலும் அவர்களிடம் பணம் கறப்பதற்கும் அதைப் பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காகவே இதுகால வரையான தமிழ் பேசும் மனிதர்களின் சமூக அரசியல் சுழல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்மைக் காலங்கள்வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் போராட்டம், வீரம், துணிவு, வெற்றி மற்றும் துரோகி….என்பன போன்று பல. இன்று துரோகி என்பது பரவலாகவும் மற்றும் சரணாகதி, சரணடைதல், சமாதானம் போன்ற சொற்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே துரோக அரசியல், சரணாகதி அரசியல், சரணடையும் அரசியல், சமாதான அரசியல் என்பவற்றின் பண்புகள் மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் நாம் அவற்றை விளங்கிக்கொண்டு முன்நோக்கி செயற்பட முடியும். மேலும்; இதுகாலவரை நாம் எவ்வாறன அரசியலை முன்னெடுத்தோம் என்றும் இனி எவ்வாறன அரசியலை முன்னெடுக்காலாம் எனவும் ஆராயவும் சிந்திக்கவும் முடியும்.
இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன்; தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆகவே இவ்வாறு இவர்கள் தமக்குள் பதவி அதிகாரம் மற்றும் முக்கியமாக பணத்திற்காக இழுபறிப்படுவதும் சண்டைபிடித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் இவர்களின் அடிப்படை அரசியல் தமிழ் பேசும் மனிதர்களின் தேசிய விடுதலைக்கான அரசியலை பெயரளவிலும் பிரச்சாரளவிலும் முதன்மையானதான கொண்டிருந்தார்கள். இவ்வாறன அரசியலைப்; பயன்படுத்தி தமிழ் பேசும் மனிதர்களிடம் பெருமளவான பணத்தை வசூலித்து பின் அவர்கள் மீதே அதிகாரத்தை பிரயோகித்தும் அடக்கியும் வந்தமையே புலித்தலைமையின் கடந்தகால அரசியல் வரலாறு. இன்று இவ்வாறு தமக்குள் பிளவுபட்டிருக்கும் புலிகள் குறிப்பாக புலம் பெயர் புலித் தலைமைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு பாதைகளில் அதாவது எதிர்எதிர் பாதைகளில் தமது குறுகிய நலன்களுக்காகவும் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். ஆகவே புலித் தலைமையின் கடந்தகால ;செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோடு நோக்குவதன் மூலம் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான செயற்பாடுகளிலிருந்து நாம் பாடங்கள் கற்பது பயனுள்ளதாகும். அதேவேளை புலம் பெயர் புலிகளின் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்;ச்சியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் முக்கியமானதாகும். ஏனனில் ஏற்கனவே பலவழிகளில் நசிந்துபோயிருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை தமது குறுகிய நலன்களுக்காக இவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தாமலிருப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்கள் உதவும். மேலும் கடந்தகால வரலாற்றை பக்கச் சார்பற்றவகையில்; கற்பதே, நாம் மேற்கொண்டு ஆரோக்கியமான சிந்தனைகள் செயற்பாடுகள் மூலம் முன்நோக்கிச் செல்வதற்கு உதவும்;.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய “துரோக அரசியல்” என்பது தொடர்பான நாம் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலங்களில் குறிப்பாக புலிகளின் தனிச்சையான ஆதிக்கமிருந்தபோது இச் சொல்லும் அதனடிப்படையிலான செயற்பாடும் மிகப் பிரபல்யமாகவும் இருந்தது. இதற்கு முன்பு பாராளுமன்ற அரசியலிலும் இச் சொல் பயன்படுத்தப்பட்டபோதும் ஆயுதப்போராட்டத்தின்போதுதான் “துரோக அரசியல் செய்பவர்கள்” என்பவர்கள் கொலைசெய்யப்பட்டு அழிக்கப்படுமளவிற்கு வளர்ந்து ஒரு அரசியல் செயற்பாடாக கட்டமைக்கப்ட்டது. தனி நபர் நலன்களுக்காக, தமது பதவிகளைக் காப்பதற்காக, தனிப்பட்ட குரோதங்களுக்காக, கருத்துமுரண்பாடுகளுக்காக என பல உள்மனக்; காரணங்களுக்காக அரசியல் என்ற முகமுடி அணிந்து அரசியல் காரணங்கள் பல கூறி துரோகி என்ற பட்டமளித்து பல மனித உயிர்களை ஒவ்வொரும் இயக்கங்களும் கொலை செய்தன.. இதன் தாக்கத்தால் பயத்தால் பல மனிதர்கள் தாம் துரோகி பட்டம் பெறக்கூடாது என்பதற்காகவே ஆதரவாளராக செயற்பட்டனர் அல்லது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்தனர். இவ்வாறுதான்; தமிழ் பேசும் சமூகத்தில் “துரோகி” என கட்டமைக்கப்பட்ட சொல்லினால் ஏற்பட்ட மிகமோசமான எதிர்விளைவுகள் ஆரம்பமாகின. அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு சார்பாகவோ ஆதரவாகவோ இல்லாது சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் சார்ந்து அல்லது இடதுசாரி கட்சிகள் சார்ந்து செயற்படுகின்றவர்களுக்கு இயக்கங்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின் போராட்டமானது புலிகளின் தலைமையால்;; ஏதேச்சதிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது புலிகளுக்கு எதிரானவர்கள் அதாவது புலிகளைப் போலவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடியதாக கூறிய பிற தமிழ் இயக்கங்கள்; உட்பட அனைவரும் “துரோகி” என முத்திரை குத்தப்பட்டு கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் குண்டுகள் வைத்தும் அழிக்கப்பட்டனர். அதாவது தமிழ் பேசும் மனிதர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது புரிந்துணர்வினடிப்படையில் பல்வேறு தளங்களில் வழிகளில் முனைப்புடன் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடன் செயற்பட்ட பலர் புலிகளின் அரசியலை ஏற்கவில்லை அல்லது உடன்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே “துரோகி”யாக முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கே இந்த நிலைமை எனின் புலிகளை விமர்சித்தவர்களது நிலை தொடர்பாக நாம் புரிந்துகொள்ளலாம். இதன் விளைவாக, “துரோக அரசியல்” செய்பவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை என்பது தமிழ் பேசும் மனிதர்களின் சமூகத்திலிருந்த கொஞ்சநஞ்ச ஐனநாயக விழுமியங்களையும் இறுதியாக குழித்தோண்டி புதைத்தது. அதாவது புலிகளின் அரசியலுக்கு மாற்றான அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிற ;இயக்கங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இவர்களது அதிகார அடாவடித்தனம்; புலிகளின் சதாரண அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மனிதர்களுக்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் நடாத்தப்பட்டது. இதனால் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக நடைபெறவேண்டிய ஆரோக்கியமான போராட்டத்தில், கனவு கண்ட புதிய சமுதாயத்தில் இருக்கவேண்டிய சகல ஐனநாயக விழுமியங்களும் பன்முகத் தன்மைகளும் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என்பவற்றால் இல்லாது செய்யப்பட்டது. இதற்காக பொறுப்பு ஏற்கவேண்டியது சமூகப் பிரக்ஞை கொண்டு ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.
புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. ஏனனில் தன்னுயிரைக் காப்பாற்ற சரணடைய முயன்றுள்ளார். ஆல்லது சயனைட் அருந்தாது தப்பிக்க முனைந்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் புலிகளால் கட்டமைக்கப்பட்ட பிரகாரனின் விம்பம் இறுதிநேரத்தில் உடைபட்டது என்பது மட்டும் உண்மையானது என்பதை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான “அரசியல் துரோகி” களுக்கு தண்டனை என்ன?
பொது மனிதர்களுக்கு எதிராகவும் ஐனநாயக மறுப்பு கொண்ட அரசியல் செயற்பாடுகளிலும் ஒருவர் ஈடுபடுவாரானால் அவருக்கான அதிகபட்ச தண்டனை என்பது நிச்சயமாக மரண தண்டனையாக இருக்கக் கூடாது.. மரண தண்டனை என்பது அகராதியிலிருந்தே எடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது உறுதியாக நிலைப்பாடு ஆகும். ஏனனில் எனது செயற்பாடு பேச்சு எழுத்து என்பவற்கு மாறான அல்லது எதிரான ஒரு மனிதரின் செயற்பாட்டுக்காக பேச்சுக்காக எழுத்திற்காக அவரது உயிரை எடுப்பது என்பது ஐனநாயக விரோதம் மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான செயற்பாடாகும். ஒருவருக்கான தண்டனை என்பது அவரை ஆரோக்கியமான வழிகளில் நேர்மறை மனிதப் பண்புகளுடன் மாற்றுவதற்கான வழிவகையாக இருக்கவேண்டுமேயொழிய அவரையே அழிப்பதாக இருக்கக்கூடாது. ஏனனில் காலோட்டத்தில் ஒருவர் மீது குத்தப்படும் எதிர்மறை முத்திரை என்பது நேர்மறை முத்திரையாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமான மாற்றமா என்பது சிந்தனைக்கு உரியதாக இருக்கலாம். ஏனனில் ஒருவர் தனது எல்கை;குட்பட்ட அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே தான் எதிர்நோக்கும் சூழலைப் புரிந்துகொள்வதுடன் அதனடிப்படையில் செயற்;படுவார்.
உதாரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் சிலர் அல்லது பலர் முன்பு பல்வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள். அந்த இயக்கங்கள் புலிகளினால் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டபேர்து இவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. காலமாற்றத்தின் பின் இவர்கள் புலிகளுடன், அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் மீது; நம்பிக்கை வைத்து, அல்லது வேறு வழி ஒன்றுமில்லை என அதில் இணைந்து, அல்லது அவர்களது அரசியலுக்குள் சரணாகதி அடைந்து, அல்லது மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் என பல காரணங்களுக்காக புலிகளின் அரசியலை பின்நாட்களில் முன்னெடுத்தனர் அல்லது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு புலிகளால்; துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் பிற்காலங்களில் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் என புலிகளின் தலைடுமையால் அலங்கரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் நடைபெற்றதுண்டு. அதேவேளை மிகச் சிறந்த போரளிகள் என் புலிகளால் பொது மனிதர்களால் போற்றப்பட்ட பலர்; துரோகிகள் என குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆகவே காலம் ஒருவரை பலவாறு மாற்றுகின்றது. புலித்தலைமையை அன்று போற்றிய அரசியல்வாதிகள்; பலர், புலிகளின் ஆதிக்கம் இல்லாத இன்றைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் மீண்டும் அரசியல் சரணாகதி அடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.
ஆகவே ஒருவரை துரோகி என்பது சர்வதிகாரமாகவும் சமூகத்திலிருக்கின்ற ஐனநாயக பண்புகளை வழிகளையும் முடுவதாகவுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவர்களது ஐனநாயக உரிமைகளை பறிக்காதவரை மறுக்காதவரை தான் விரும்பும் அரசியலை தனது வழிகளில் செய்வதற்கான தார்மீக உரிமை இருக்கின்றது. இதை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். இங்கு துரோகம் எனப்படுவது சார்பு நிலையானது மட்டுமே. இதில் யார் சரி பிழை என்பதை எதிர்கால வரலாறு மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே ஒருவரது அரசியலை துரோக அரசியல் என முத்திரை குத்துவதைக் கைவிட்டு அவரவர் பாதையில் அடக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்கான தமது பங்களிப்பு, பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். மேலும் மனித நலன்களுக்கா செயற்பட விரும்புகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் யார் அடக்கப்பட்ட மனிதார்களின் சார்பாக, அவர்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்கா உழைக்கின்றார்கள் என்பதே. இதைப் புரிந்துகொள்ளாதவரை, “துரோக, சரணகதி, சரணடைதல், சமாதான” அரசியல் என்ற பல முத்திரைகளை பிறர் மீது குத்தி குறுகிய பார்வையையும் செயற்பாட்டையுமே நாம் கொண்டிருக்க முடியும். ஒருவர் தனது சிந்தனை மற்றும் தான் செய்யும் செயற்பாடு என்பவை அடக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் சமூக அபிலாசைகளை உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற பிரக்ஞை இருக்கும் பொழுது மட்டுமே அவர் அம் மனிதர்கள் சார்ந்து தனது அரசியலை தான் விரும்பிய வழிகளில் முன்னெடுக்கின்றார் எனலாம். இவ்வாறன பிரக்ஞையில்லாதவர் தனது அற்ப சொற்க நல்ன்களுக்காக சரணாகதி அரசியலையே முன்னெடுப்பார். இருப்பினும் என்ன அரசியலை முன்னெடுப்பது என்பது ஒருவரது தெரிவு. ஆதைப் பற்றி நாம் நமது அரசியலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை மட்டுமே நமக்குள்ளது.; நமக்கு எதிரான அரசியல் செய்கின்றார் என்பதற்காக அவர்களது உரிமைகளை மறுப்பதோ அடக்குவதோ அழிப்பதோ அல்லது மரண தண்டணை விதிப்பதோ நமத உரிமையல்ல. இது நாம் கனவு காணும் சமூகத்திற்கு எதிரான, ஐனநாயகத்திற்கு எதிரான, தனிமனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். ஆகவே “துரோக அரசியல்” என்ற சொல்லுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
சரணாகதி அரசியல் என்பது தமது சொந்தப் புத்தியிலும் பலத்தில் நிற்காது, தாம் அல்லது அடக்கப்பட்ட மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கும்; அவற்றுக்குத் தேவையான முடிவுகள் தீர்வுகள் என்பன தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் முழுமையாக விட்டுவிடுவதுடன் தம்மையும் அவர்களிடம் முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கூறுவதை எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாது ஏற்பதும் என்பதாகக் கூறலாம். உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அதனது தலைவர்களும் தமது அதிகாரங்களிலும் பதவிகளிலும் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஏனனில் இவர்களது அரசியல் செயற்பாடுகள் தமிழ் பேசும் மனிதர்களது அரசியல் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் முன்வைப்பதாகவோ அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பாதாகவோ தெரியவில்லை. ஏனனில் யார் ஆட்சியிலில் அல்லது அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களிடம் ஒவ்வொருமுறையும் அவர்கள் முன்வைக்கும் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும் தாம் சரணாகதி அடைவதுதான் இவர்களது பிரதான அரசியலாக என்றும் இருந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களது அரசியலை ஒவ்வொருமுறையும்; குழிதோண்டிப் புதைப்பதாகவே இவர்கள் வரலாறு இருக்கின்றது. இதில் இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. ஒன்று இலங்கையில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, இந்திய ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதாரணமாக அன்றிலிருந்து இன்றுவரையான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டணி வரையிலான கட்சிகளின் அரசியலும்;; அதன் தலைமைகளினதும் அரசியல் போக்கும் மரபும் இவ்வறானதாகவே உள்ளது. இரண்டாவது போக்கு இலங்கையில் ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதராணமாக தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிரானவர்களது கட்சிகளின் கூட்டணி அரசியல் இந்த வகைக்குள் அடங்கும். இந்த வகைக்குள் முன்னாள் புலிகளின் தளபதிகள் இருப்பதுதான் இன்றைய முரண்நகை. இந்த முன்னால் புலிகளின் தளபதிகள், இன்று பேசும் அரசியலை கேட்டால் இவர்களா புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் என ஆச்சரியப்படவைக்கின்றது. அந்தளவிற்கு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளார்கள். இவர்களது பழைய மொழியில் இதுதான் “துரோக அரசியல்”. இவ்வாறு இவர்களது அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் புலிகள் இயக்கத்தில் இருந்த அரசியல் இன்மையா அல்லது ஒவ்வொரு தனிபர்களிடம் இருந்த அவர்களது சொந்த அரசியல் அறிவின் பற்றாக்குறையும் சாதிய பிரதேச வர்க்க நிலைப்பாடுமா என்பது நம் சிந்தனைக்குரிய விடயம்.
ஆனால் இந்திய இலங்கை அரசாங்கங்கள் தமக்குள் முரண்பாடுகள் இருந்தபோதும் தமக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒரு ஆழமான உறவை;; வைத்துள்ளார்கள். இதனால்தான் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கும் நல்ன்களுக்கும் ஏற்ப பயன்படுத்தும் அரசியலாக தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முன்வு இருந்து இப்டூ;பாழுது வரை இருக்கின்றது. இது தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமானது. மறுபுறம் இவர்களது மொழியில் பார்த்தால், சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களின் அரசியலின் அடிப்படையில், அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலின் அடிப்படையில், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் முன்னெடுத்த முன்னெடுக்கின்ற அரசியல் என்பது அடக்கப்பட்ட பொது மனிதர்களுக்கு எதிரான “துரோக, சரணாகதி அரசியல்” என்றால் மிகையல்ல. இதற்காக இவர்களுக்கு துரோகி பட்டம் அளித்து மரண தண்டடை அளிப்பதல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலை முன்னெடுப்பவர்களின் பொறுப்பு. மாறாக இவர்களது பொறுப்பான பணியானது, அடக்கப்பட்ட மனிதர்களிடம் இவ்வாறான சுய நல பிழைப்பு அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அடக்கப்பட்ட பொதுமனிதர்கள் இவ்வாறான அரசியல்வாதிகளைக் புரிந்துகொண்டு புறக்கணிக்குமளவிற்கு பிரக்ஞை கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் செயற்படவேண்டும்.
இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்ததைவிட யுத்த காலத்தில் அதாவது புலிகள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் புலிகளின் தலைமையிடம் சரணாகதி அடைந்தவர்கள் தான் மேற்குறிப்பிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் தமது; அரசியல் உரிமைகளைப் வெறவேண்டுமாயின் இவ்வாறான சரணாகதி அரசியலுக்கு முதலில் முற்றுபுள்ளி வைக்கவேண்டியது அவசரமான அவசியமான செயற்படாகும். அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கான, அவர்களின் நல்வாழ்வுக்கா, சமூக மாற்றத்திற்கான அரசியலை, தமக்கிருக்கும் ஜனநாயக வழிகளில் உறுதியுடனும் வெளிப்படையாகவும் முன்வைத்து பல்வேறு வழிகளில் செயற்படுவதனுடாக தமது நோக்கத்தை பிரக்ஞையுள்ள அரசியற் செயற்பாட்டாளர்கள் அடையலாம். இதுமட்டுமல்ல இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமது ஐனநாயக எல்லைகளை மேலும் பரந்தளவில் விரிவாக்கிக்; கொண்டு முன்னே செல்லலாம். இன்றைய சுழலில் இவ்வாறன செயற்பாடுகளை இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல
தொடரும்
நம்பிக்கையுடன்
நட்புடன்
மீராபாரதி