6 ஜூலை, 2010

ஐநா அலுவலகம் முன்னாலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கலைப்பு

ஐ.நா அலுவலகம் முன்பாக, இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரைப் பொலிசார் பலவந்தமாகக் கலைத்து வருவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநா அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதேவேளை, ஐநா அலுவலகத்திலிருந்து பொலிஸாரின் பாதுகாப்புடன் உத்தியோகத்தர்கள் வெளியேறிச் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம் வாழைச்சேனையில் மீட்பு



வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

36 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ரி. சுவர்ணராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரணத்தில் சந்தேகமிருப்பதால் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவட்டுள்ளார்.

பொலிசார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பை தாம் துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், முதல்வர் கருணாநிதி அப்படி எதிர்க்கவில்லை எனவும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.

“தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980-களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு


ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.

அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.

போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்து, ஜெர்மனியில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு

இங்கிலாந்து, ஜெர்மனியில்    ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தனது அணுசக்தி கொள்கையில் ஈரான் பலமாக உள்ளது.

அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஈரான் மீது ஒருதலைபட்சமான சட்டத்தை இயற்றியுள்ளது. அதாவது ஈரானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிடம் இருந்து ஈரான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் அரசு விமானங்களும், தனியார் விமானங்களும் சென்று வருகின்றன.

இதனால் அங்கு வாழும் ஈரானியர்கள் தங்கள் நாட்டுக்கு சென்றுவர வசதியாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையாதலால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் ஈரானுக்கு வருகின்றனர். எனவே பெருமளவில் ஈரான் பயணிகள் விமானங்கள் விடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த விமானங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பிறகுதான் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஈரான் விமான பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு ஈரானுடன் வர்த்தக ரீதியான தொடர்பு வைத் துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார குற்றம் இழைத்து விட்டது.

அதன் விளைவை அந்நாடு விரைவில் சந்திக்கும் என ஈரானை சேர்ந்த எம்.பி. பெர்வேஷ் சோரோரி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்றைய ஐநா கூட்டத்தொடரில் எலிசபெத் மகாராணியார் உரை

பிரித்தானியவின் எலிசபெத் மகாராணியார் இன்று மாலை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். 50 வருடங்களின் பின்னர் ஐநா கூட்டத் தொடரில் இவர் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1957 ஆம் வருடம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் இவர் முதன்முறையாக உரையாற்றினார்.

இன்றைய கூட்டத் தொடரில் ஐ.நாவின் 16 தலைமை உறுப்பினர்கள் முன்னிலையில் இவர் உரையாற்றுகின்றார்.

எலிசபெத் மகாராணியார், இராச்சியம், பேர்பூடா, எந்திகுவா, அவுஸ்திரேலியா, பஹமஸ், பார்படொஸ், பிரேசில், கனடா, ஜமெய்க்கா, நியூசிலாந்து, பப்புவாநியூகினியா, செய்ன்ட்கிட்ஸ், நேவிஸ் சென்லுசியா, சென் வின்செண்ட், ஜெனடின்ஸ், சொலமன் தீவு மற்றும் துவாலு ஆகிய பிராந்தியங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. நிபுணர் குழு நியமனம்-ஜெனரல் சரத்பொன்சேகா

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே மூவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்ட த்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன.

இதில் தவறு இழைக்கப்படவில்லை என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அரசாங்கம் தவறிழைக்காவிடின் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு ஏன் பயப்பட வேண்டும். அதில் இருந்து ஏன் ஒளிந்திருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் மருமகன் சரணடைவார். மக்களுக்கு பின் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி. யினர் தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன. இதில் தவறு இழைக்கப்படவில்லை. அதற்கு நான் பொறுப்பு கூறுவேன். ஜனாதிபதி 2009 ஆம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. வின் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. தவறுகளை இழைத்திருக்காவிடின் ஒளிந்திருக்க ஏன் நீங்கள் முயலுகின்றீர்கள்.

நாட்டில் 30 வீதமானவரே 2000 டொலரை வருமானமாக பெறுகின்றனர். சம்பளத்தை பொறுத்தமட்டில் இராணுவ அதிகாரிகளே கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். சரியாக வேலை செய்தாலும் மரண அச்சுறுத்தல் அல்லது இடமாற்றம் வழங்கப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் பால் அச்சம் கொண்டுள்ளனர். சட்டத்தரணிகள் எழுந்து நிற்கின்றனர். சட்டத்தை பாதுகாக்கின்றனர். யுத்தத்திற்கு பின்னர் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இனங் காணவும் இல்லை.இராணுவ வீரர்கள் தமக்கு சுமையாக இருக்கின்றனர் என அரசாங்கம் கருதுகின்றது. தற்போது இராணுவத்தினர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் நலன்கள் பேணப்படுவதில்லை. அரசியல் தலையீட்டினால் பொலிஸ் சேவை இன்று சீர்குலைந்துள்ளது. அரசாங்கத்திற்கு சார்பானவர்களே வடக்கு கிழக்கில் சேவைக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கு சேவையில் இருப்பவர்கள் இரண்டாம் தரமாகவே கணிக்கப்படுகின்றனர்.

தாய் நாட்டிற்கு பங்கம் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை. முன்னர் பெற்றுக் கொண்ட ஆயுதங்களுக்கான கடனையே அரசாங்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. நாட்டில் சட்டம் பாதுகாக்க வேண்டும் சட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கீழே இருக்கின்றது. அவர் முட்டாள்தனமான செயலையும் செய்வார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்படுமானால் எனது மருமகன் பொலிஸில் சரணடைவார். அவர் வயதுக்கு வந்தவர். அவரை சரணடையுமாறு நான் கூற வேண்டியதில்லை.அரசியல்வாதிகள் சட்டத்திற்குள் தலையீடுகளை செய்யக் கூடாது. பஞ்சாயுதகாரனும் பந்தம் பிடிப்பவர்களும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். மிரானில் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பியது யார்? என்பதை கண்டறிய வேண்டும். உள்நாட்டு முரண்பாடு சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வயது வரை நான் சேவையில் இருந்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் ஓய்வு பெற்றேன். வெளிநாட்டுக்கு செல்லும் இராணுவ வீரனுக்கு 200 டொலர்களே வழங்கப்படும். எனினும் ஜனாதிபதியின் மகனுக்கு 5000 டொலர்கள் வழங்கப்பட்டது எவ்வாறு? அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலேயே சி.ஐ.டி. யினர் ஈடுபட்டனர். எனினும் இன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பின்னாலும் சபாநாயகர் பின்னாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பின்னாலும் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பந்தம் பிடிப்பதற்கு அன்று ஒருவரே இருந்தார் இன்று அப்பணியை பலரும் செய்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கான விசா தடையை நீக்க வேண்டும்:சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் சட்டவிரோத அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என நியூயோர்க்கைத் தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் இலேன் பேர்சன் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக அந்த நாடுகள் தற்போதும் எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு துன்பத்தை விளைவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வீசா தடைக்காலப்பகுதி எதிர்வரும் 8ம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான புதிய பிரதமராக ஜுலியா கில்லார்ட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குறிய நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக இலேன் பேர்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிககளுக்கு எதிரான தடையை நீக்குவதன் மூலம் மனித உரிமைகளை பேணும் சிறந்த நாடு அவுஸ்திரேலியா என்பதை அவர் வெளிப்படுத்துவார் என நம்புவதாகவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

நாடுகடந்த அரசை ஒழிக்க அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்:ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாம் வரவேற்கின்றோம். அந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்குச் செல்வதற்கு முன்னதான பேச்சாக மட்டும் அமைந்து விடக் கூடாது. நாடு கடந்த அரசாங்கத்தை இல்லாதொழிக்க அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பேச்சில் அடிப்படை இணக்கப்பாடு எட்டப்படுமாயின் நாமும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதுடன், இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்குள் ளேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் கீழ் 62 வீதமான செலவிற்கான அமைச்சுக்களும் நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. அப்படியாயின் இங்கிருக்கின்ற அமைச்சர்கள் தகுதியானவர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு தகுதி இல்லையா?

நிதியமைச்சில் நிதி, நிதிச் சலுகை மற்றும் திட்டம் தேவை இவையெல்லாம் இருக்கின்றதா? ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசர்களும் காரியாலயங்களும் ஏராளம். அமைச்சர்களுக்கு அமைச்சுகளுக்கு பொறுப்பு கூற முடியாதா? ஆலோசகர்களை இரவில் முக்கிய ஹோட்டல்களில் கண்டுகொள்ளலாம். 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரை கொண்டு வருவதாக அறிவித்தனர். எனினும் அதற்கென ஓர் அமைச்சு இல்லை.

??? நாடுகளின் தகுதியானவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு தகுதியான சுற்றுலாத்துறை அமைச்சுக்கு தகுதியானவர் இல்லையா? அப்படியாயின் சரத் அமுனுகமவை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமியுங்கள்.

பி.பி. ஜயசுந்தர 4 அமைச்சுக்களுக்கு செயலாளராக இருக்கின்றார். ஒன்பது அமைச்சுகளும் 63 வீதமான நிதியை கையாளும் நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமைச்சரவை இல்லை அமைச்சரவையின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. நகரங்களை கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தேவையா? அப்படியாயின் அமைச்சர்கள் திருடர்கள் என நினைக்கின்றார்களோ என்பதை நீங்களே கண்டறியவேண்டும். பொது நலவாய பாராளுமன்ற சங்கத்தின் கூட்டத்திற்கு இருவரின் பெயரை நாம் குறிப்பிட்டோம். சரத் பொன்சேகாவை அங்கு அனுப்புவதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

பாராளுமன்றத்தின் அனுமதி மட்டுமன்றி நீதிமன்றத்தின் அனுமதியும் தேவை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இங்கு நடைபெற்ற குழுக்கூட்டத்தில் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. "ஹராரே' பிரகடனத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். கஞ்சா தொடர்பில் பிரகடனத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2005 முதல் 2008 வரையிலும் கணக்காய்வாளர் அதிபதியின் கணக்காய்வு அறிக்கை இன்று வரையிலும் முன் வைக்கப்படவில்லை. ஆராய்வுக் குழுவொன்று பாராளுமன்றத்தில் இல்லை.

அரசியலமைப்பு மக்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். அது குடும்ப அரசியலமைப்பாக இருக்கக் கூடாது என்பதுடன் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் தினேஸ்குணவர்தனவின் குழுக்களின் அறிக்கையில் 90 வீதத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம்



இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் பாரிய அவலங்களைச் சந்திப்பதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பெண்கள், யுவதிகள் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தினால் நிதி

வடக்கு, கிழக்கில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்க நிதிக்கு புறம்பாக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தொகுதியில் நேற்று (05) நடைபெற்ற இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் பங்குபற்றியபோதே பிரதமர் தி.மு. ஜயரட்ன இவ்வாறு கூறினார்.

புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக் கான அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வணக்கத் தலங் களையும் சீராக பராமரிக்கும் வேலைத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அறி முகப்படுத்த தான் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் நிலவும் பிரச்சினைகளுடன் இஸ்லாமிய பள்ளவாசல்களில் ஒலிபெருக் கிகளின் பாவனை தொடர்பாக நிலையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் களின் போது தமது கணவர்மாரை இழந்த முஸ்லிம் விதாவைகளுக்காக பாது காப்பு திட்டமொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் செயற்குழுவின் அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறான திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தில் நிலவும் சமூக பிரச்சினைகள் பலவற்றை குறைக்க முடியமென்றும் பிரதமர் மேலும் கூறினார்.

இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பாக செயற்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே. டி.எஸ். குணவர்தன, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க காலத்தில் தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை






சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் தனியார் மயப்படுத்தியவைகளை அரசு தற்போது மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியவில்லை என்றும், கடந்த ஐந்து வருட காலத்திற்குள் எந்த ஒரு அரச நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்தவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்துள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறிவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக் களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிடுகையில் :-

2002 ஆம் ஆண்டு ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக் கப்பட்ட இரண்டு வரவு - செலவுத் திட்டமானது அரசாங்க நிறுவ னங்களை தனியார் மயப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது. இலங்கையின் பொருளாதாரம் தொடர் பாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன முன்வைத்த நிபந்தனை களுக்கு எதுவும் செல்லாது 2002ல் ஐ. தே. க. ஏற்றுக்கொண்டது. ஆனால் தற் போதைய அரசாங்கம் அந்த நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதமாக செயற் படுகிறது.

ஆனால், ஐ.தே.க. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத் தியதுடன் அரச வங்கிகள் மற்றும் பல் வேறு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவும் திட்டமிட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவைகள் எமது எதிரிகள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. எமது பொருளாதார கட்டமைப்பு பாதிக்காத வகையில் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அமையுமானால் நிதியை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றார்.

அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதே எதிர்க் கட்சி களின் தற்போதைய தேவையாக உள்ளது. எதிர்க் கட்சியின் புதிய உறுப்பினர்கள் தொடக்கம் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரை இதனை ஒரு முக்கிய விடயமாக காண்பிக்க முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தியை கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் காணக் கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன உலகின் 215 நாடுகளில் நிதி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையும் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் நிதியை பெற்றுக்கொள்ளும் உரிமை எமக்கும் உண்டு.

இலங்கையில் என்றும் இல்லாதவாறு வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 6.2 மில்லியன் டொலராக உள்ளது. அத்துடன் பண வீக்கம் முதற் தடவையாக ஒற்றை இலக்கத்தில் காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் தனிநபரின் தலா வருமானம் 1958 முதல் 2004 வரை 68 டொலராக காணப்பட்டது. 2004இல் 1052 ஆக அதிகரித்தது. கடந்த நான்கு வருடத்திற்குள் 2053 ஆக அதிகரித்துள்ளது. இது நூறு வீத அதிகரிப்பை காண்பிக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொரு ளாதார துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ரஞ்சித் பண்டாவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கந்துகொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தைக்கு அப்பால் செல்ல எவருக்கும் தடை இல்லை சபையில் அமைச்சர் பெசில் தெரிவிப்பு





ஓமந்தைக்கு அப்பால் எவரும் செல்ல முடியும் அதற்கு எவ்வித தடையுமில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை நிறுவன வாகனங்கள் உட்பட சகல வாகனங்க ளும் தடையின்றி செல்ல முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தமதுரையின் போது முன்வைத்த கூற்றொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம் யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷணுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார்.

அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவில் 6-வது வாழும் புத்தராக திபெத் சிறுவன் தேர்வு






சீனாவில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து அவனை புத்தரின் மறு அவதாரமாக நினைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் 5-வது வாழும் புத்தராக மதித்து வணங்கப்பட்டு வந்தான்.

தற்போது அவனுக்கு 20 வயதாகிறது. எனவே, புதிதாக ஒரு சிறுவனை வாழும் புத்தராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக பல ஆண்டுகளாக தெய்வீக அம்சம் பொருந்திய சிறுவனை சீன அரசும், புத்த மத மூத்த குருக்களும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தற்போது 6-வது வாழும் புத்தராக 4வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறான். அவனது பெயர் லோசாங் தோஜ். சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத்தை சேர்ந்தவன்.

அங்குள்ள ஷானன் மாகாணத்தில் லகன்ஷ் கவுண்டி என்ற இடத்தில் கேசாங் வாங்கு- பேமா லகாஸ் தம்பதியின் மகன். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி பிறந்தான்.

நேற்று இவன் திபெத் தலைநகர் லாசாவில் ஜோக்காங் என்ற இடத்தில் உள்ள புத்தர் கோவிலில் வைத்து முறைப்படி தேர்வு செய்யப்பட்டான். தலாய்லாமாவுக்கு பிறகு சீன அரசால் நியமிக்கப்பட்டுள்ள இவனை 11-வது பஞ்சன் லாமாவும் சீன அரசின் அதிகாரிகளும் தேர்ந்தெடுத்தனர்.

முன்னதாக வாழும் புத்தருக்கான தேர்வு போட்டியில் லோசாங் தோஜூம் மற்றொரு சிறுவனும் இருந்தனர். இவர்கள் இருவரது பெயரும் பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு பெரிய தாழியில் போடப்பட்டு மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி: கோத்தபய ராஜபட்ச






விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர், அப்ரூவராக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெறவும், புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளை அழிக்கவும் முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.

"சர்வதேச அளவில் மூன்று அமைப்புகள், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச தமிழ் கூட்டமைப்பும், ருத்ரகுமார், நெடியவன் ஆகிய இரண்டு தனிநபர்களும் புலிகளின் பிரதிநிதிகளாக இன்னமும் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் விவகாரத்தில் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்க இலங்கை அரசு கடைமைப்பட்டிருக்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.

பத்மநாதனின் அழைப்பின்பேரில், வெளிநாடுவாழ் தமிழர் தலைவர்கள் அண்மையில் கொழும்பு வந்துள்ளனர்.

அவர்களிடம் பேசிய பத்மநாதன், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அங்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல், பத்மநாதனின் தொடர்புகள் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைப் பெற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக "சண்டே அப்சர்வர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி சட்டத்தரணி டெஸ்மன்ட் பெர்னாண்டோ காலமானார்

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி டெஸ்மன்ட் பெர்னாண்டோ இன்று மாலை காலமானார்.

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டெஸ்மன்ட் 1974 ஆம் ஆண்டில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது செயலாளராக தெரிவானதோடு இச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சட்டத்தணிகள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

வடக்கு ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின என்றும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் கலவரமடைந்து, பின்னர் பூமியதிர்வு என அறிந்ததும் பீதி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறி அவர்கள் தெருக்களில் ஓடினர். சிறிது நேரத்துக்கு பிறகு பயத்துடன் வீடு திரும்பினர்.

இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கி.மீட்டர் தூரத்தில் 24 கி.மீட்டர் பூமிக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகில் பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி எச்சரிக்கை விடுவதும் வாடிக்கையானவை.

எனவே நிலநடுக்கத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜி.ஸ்.பி சலுகை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை - கெஹெலிய ரம்புக்வெல

ஜி.ஸ்.பி வரிச்சலுகை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கான வரிச் சலுகை நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது தொடர்பாக நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கான மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...