இதுவரைகாலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதுபற்றி செய்திகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் அடிபட்டு வந்தன.
இப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்று ரணில் தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை சரத் பொன்சேகாவை பொது வேட்பளராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா,
எதிர்கட்சி பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி இருந்தும் சரத் போன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டால் தானும் ஆதரிப்பதாக ரணில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பதை ரணில் தட்டிக் கழிக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பை ஆதரிப்பதான ஒரு தோற்றத்தையும் ரணில் ஏற்படுத்தியுள்ளார்.
சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதென்றால் அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவேண்டும். இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அதை ஜனாதிபதி அங்கீகரிக்கவேண்டும். எனவே அவர் ஓய்வு பெறுவதை ஜனாதிபதியால் காலதாமதப்படுத்தவும் முடியும்.
இதன் அடிப்படையிலேயே எதிரணி வேட்பாளர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ரணில், சரத் பொன்சேகா தேர்தல் களமிறங்குவதற்கான தமது சம்மதத்தை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ளும் விதத்தில் படைத்துறைச் சேவையிலிருந்து வெளிவரவேண்டும் என்றும் தெரிவித்திருக்கலாம்.
சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக அறிவிக்க அவர் சில வாக்குறுதிகளை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் ரணில் தெரிவிக்கிறார். அவை:-
சரத் பொன்சேகா ஜனாதிபதியாகி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறவே ஒழிப்பதாக அறிவிக்கவேண்டும்.
ஜனாதிபதியானதும் காபந்து அரசை அமைத்து அதன் பிரதமராக தன்னை (ரணிலை) நியமிக்கவேண்டும்..
அவசரகாலச் சட்டத்தை நீக்கி 17வது திருத்தத்தை முழு அளவில் அமுல்படுத்தவேண்டும்.
குறுகிய காலத்துள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு முழு அதிகாரத்துடன் தோற்றுவிக்கப்படும் பாராளுமன்றம் அமைதி, சமாதானம், தீர்வு ஆகியவை எட்டப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்ற நிபந்தனைகளை ரணில் விதித்துள்ளார்.
எதிர்கட்சி கூட்டணியின் முக்கிய கோட்பாடு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என கூறுகின்றனர். 1978 ஆகஸ்ட் மாதம் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவந்தது. அந்த அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 17 வருடங்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை அனுபவித்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அதை ஒழிக்கவேண்டும்; என்ற பொது கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்கட்சிக் கூட்டணியை அமைத்துள்ளது. நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணியாக உள்ள இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் சரத் பொன்சேகாவிடம் உறுதிமொழி கேட்கிறார்.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா கூறும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.சொக்ஸி ஜனாதிபதி முறை தொடரவேண்டும் என்றும் அந்த பதவிக்கான அதிகாரங்களை மீள்பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதே உசிதமானது என்றும் தெரிவிக்கிறார். 1978ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதில் கே.என்.சொக்ஸிக்கும் முக்கிய பங்குண்டு.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பின்னர் ஏனைய பிரச்சினைகளை பாராளுமன்றம்தான் தீர்க்கவேண்டும். ஆனால் யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியலமைப்பில் மாற்றங் கொண்டு வரவேண்டும். அரசியலமைப்பின்படி ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தவர் பலம் வேண்டும்.
பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனேயே ஜே.ஆர். ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பில் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார். தொகுதிவாரியாக நடைபெறும் தேர்தலில் ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கலாம். இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையால் தனித்து எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. நடந்து முடிந்த எட்டு மாகாணசபை தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பலத்தையாவது பெறுமா என்பது சந்தேகமே.
தொகுதிவாரியான தேர்தல் முறையால்தான் 1970ல் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 1972ல் புதிய அரசியல் யாப்பின்மூலம் இலங்கை குடியரசானது.
1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது பெரும்பான்மை பெற்று எதிர்கட்சியானது. இந்த பெரும்பான்மை மூலமே 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் யாப்பை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவந்தது.
எனவே எதிர்கட்சி கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மாத்திரமே ரணில் தெரிவித்துள்ள நிபந்தனைகள் நிறைவேறமுடியும். இது சாத்தியமாகுமா? இதுவே சரத் பொன்சேகா முன் நிற்கும் கேள்வியாகும். மக்கள் முன் நிற்கும் கேள்வியும் இதுவேயாகும்