21 ஜூன், 2011

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய குழுவினரே யாழ்ப் பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனின் தயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுக் கொன்று வீசியவர்களும் இத்தகைய குழுவினரேயாவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அப்பிரதேசத்தில் உருவாகப் போகும் ஜனநாயகச் சூழலை இல்லாதொழிப்பதே இத் தாக்குதலின் நோக்கமாகும். இதன் மூலம் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளுவதுமே சூத்திரதாரிகளின் நோக்கமாகும்.

இராணுவத்தில் உள்ள பிடிவாதமுடைய தமிழ் மக்களுக்கு எதிரான இரகசியக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். இக்குழுவினர் தான் பிரபாகரனின் தாயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவ்விடத்தில் வீசியவர்களுமாவர்.

இக்குழு அரசியல் ரீதியாக செயற்படுவதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுவாகும். எனவே இராணுவத்தில் இயங்கும் இந்த இரகசிய குழு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி கண்டுபிடித்து களைய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பயங்கரமான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். இக்குழுவினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இன்று ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் பிராந்திய மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எதுவும் செல்லுபடியாகாது. எமது நாட்டுக்குள்ளேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அதனை இரத்து செய்யும் அதிகாரம் உண்டு. சனல் 4இல் ஒளிபரப்பாகிய எமது இராணுவத்தினர் தொடர்பான வீடியோ நாடாவை கோரியுள்ளோம். அது தொடர்பில் ஆராய்ந்து இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பின் அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வெறுமனே ஆதாரங்கள் இன்றி திரைப்படத்தை காண்பிப்பது போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

செனல் 4 ஆவணப்படம் அரசியல் இலாபம் தேடும் சிலரால் தயாரிக்கப்பட்டது : பீரிஸ்

செனல்4 ஆவணப்படமானது ஜனாதிபதி மகிந்தவின் குரல் சர்வதேசத்தில் ஒலிக்காமல் தடைசெய்வதற்காக அரசியல் இலாபம் தேடும் சிலரால் போலித்தனமாக தயாரிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை எற்படுத்த பலர் முயற்சித்து வருகிறார்கள். செனல்4 காணொளியும் அந்த முயற்சிகளின் ஓர் அங்கமேயாகும்.

சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு கௌரவமான பெயர் உண்டு. அதனை இல்லாமல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைப் பணிப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு: ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் கைது

ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்களை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் அந்த ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்டானிலுள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களில் ஒன்றான கிளஸிக் குறூப் ஆடைத்தொழிற்சாலையில் இலங்கை பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் இந்நபர் இலங்கையரான அனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வல்லுறவுப் புகார்கள் குறித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்பின் அது தொடர்பான செய்திகள் உலகெங்கும் பல ஊடகங்களில் வெளியாகின.

அது தொடர்பாக புகார்கள் கிடைக்கவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் நலன்புரி அமைச்சு ஆரம்பத்தில் மறுத்திருந்த போதிலும் அண்மையில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவதற்காக இருவர் கொண்ட குழுவொன்றை ஜோர்தானுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது



இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் மத்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் மார்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டபோதும் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் மன்னார் கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பின் மீதான தாக்குதலுக்கு இந்திய வம்சாவளி மக்கள் கண்டனம்


யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் ஆயுததாரிகளால் குழப்பியடிக்கப்பட்டு கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதியான சூழல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் இடம்பெற்றுள்ள வேண்டத்தகாத கசப்பான, இவ்வாறான சம்பவம் அமைதி நிலையை சீர்குலைக்க வழிவகுத்துவிடும். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அரசியல் நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

அதேநேரம் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்காவிட்டால் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர வழிவகுத்து விடும். எந்தவொரு அரசியல்கட்சியும் தமது ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உரிமை உள்ளது. எனவே, ஜனநாயக செயற்பாடுகளை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

எனவே, இச்சம்வம் தொடர்பில் நீதியான நேர்மையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று அரச உயர்மட்டத்தினரை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் முத்தப்பன் செட்டியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதை தடுக்க முடியாது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் செல்வதைத் தடுக்க முடியாது. சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரச தலைவர்களுக்கு விதிவிலக்கு உண்டு என நீதி அமைச்சின் செயலாளர் சுஹதகம்லத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முப்பது மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கோரி வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அலரி மாளிகைக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டபோது அங்கு அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் நீதியமைச்சு இந்த அழைப்பாணையை ஏற்றுக் கொண்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் மாதம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியிலிருந்து இரும்புகளுடன் வந்த லொறி வவுனியாவில் சிக்கியது 10 பேர் கைது; 5 லொறிகளும் தடுத்து வைப்பு


வன்னிப் பிரதேசத்திலிருந்து பெருமளவு இரும்பு பொருட்களை ஏற்றி வந்த ஐந்து லொறிகளை வவுனியா பொலிஸார் நேற்று திங்கள் அதிகாலை கண்டு பிடித்து ள்ளனர். மக்கள் மீள்குடியேறிய கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியிலிருந்து இந்த இரும்பு பொருட்கள் தெற்கே கொண்டுவரப்பட்டபோது பொலிஸாரின் சோதனையின்போது வவுனியாவில் சிக்கியுள்ளது.

லொறிகளில் பயணம் செய்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவருகிறது. அனுமதியின்றி இரும்பு பொருட்கள் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொது மக்களினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டு வந்த வாகனங்களுடைய உதிரி பாகங்கள் இவையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. லொறியிலிருந்து இரும்புகள் இறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறதென பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கனிமொழியின் பிணைமனுவை உச்சநீதிமன்றிலும் நிராகரிப்பு




2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் பிணை மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றின் விசேட நீதிபதி கள் குழாமொன்று நேற்று திங்கட்கிழமை இம்மனுவை நிராகரித்தது. அதனால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் இப் போதைக்கு சிறையிலிருந்து வெளிவருவது கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும் வழக்கை விசாரிக்கும் நீதி மன்றில் புதிய பிணை மனுவை தாக்கல் செய்வதற்கு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபா பணம் தொலைத் தொடர்பு அமைப்பொன்றினால் வழங்கப்பட்டமை குறித்த விசாரணைக்காக சி.பி.ஐ. பொலி ஸார் கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான கனிமொழியையும் கைது செய்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியில் கிடைத்த இலாபத்திற்கான லஞ்சமாக மேற்படி 200 கோடி ரூபா கலைஞர் ரிவிக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழலில் பிரதான சந்தேக நபரான தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதை தடுக்க பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு தேர்தல் ஆணையாளர்

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல்கள் திணைக்களத்துடன் இணைந்ததாக பொலிஸ் முறைப்பாட்டு பிரிவொன்று நேற்று முதல் செயற்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்த பொலிஸ் முறைப்பாட்டு பிரிவானது சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கீழ் செயற்படுமென அவர் மேலும் கூறினார்.

இதன்படி ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மற்றும் பிரதேசங்களில் இடம்பெறும் அரசியல் வன்முறை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கு பதிலாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் திணைக்களத்தில் இயங்கும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்க முடியும்.

இது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்தினால் உடனடியாக வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். அத்துடன் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இந்த பொலிஸ் முறைப்பாட்டு பிரிவானது தேர்தல் நிறைவு பெறும் வரை செயற்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மக்களுக்கு வரப்பிரசாதம்: வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம்





யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும், வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் உதவும் முகமாக அரசாங்கம் வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

வடபகுதியில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கொழும்பிற்கு வந்து பலநாட்கள் தங்கியிருந்து பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் இத்திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது.

இது பற்றி தினகரனுக்கு தகவல் தெரிவித்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா, வடபகுதி மக்கள் இங்கு சகல தேவையான ஆவணங்களின் பிரதிகளுடன் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை 2500ரூபா கட்டணத்துடன் செலுத்திவிட்டால் அதனை 6 வேலை நாட்களுக்குள் பரிசீலனை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் புது கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவார்கள் என்று கூறினார்.

இதனால் வடபகுதி மக்கள் ஒரு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அங்கிருந்து கொழும்புக்கு மூன்று நான்கு பேராக வந்து 10ஆயிரத்திற்கும் கூடுதலான பணத்தை செலவு செய்து கொழும்பில் தங்கியிருப்பதற்கும் தக்க வசதியின்றி கடவுச்சீட்டை பெற்று திரும்பும் அவர்களுக்கு இந்த வவுனியாவில் ஆரம்பிக்கப்படும் இந்த பிராந்திய காரியாலயம் ஒரு வரப்பிரசாதமாக அமையுமென்றும் கூறினார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களமே அரசாங்கத்தின் பொதுச் சேவை வழங்கும் திணைக்களங்களில் ஆகக்கூடுதலான வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் திணைக்களமென்று சுட்டிக்காட்டிய சூலானந்த பெரேரா, தமது திணைக்களத்தை விட, வரி அறவிடும் அரச திணைக்களமான சுங்கத் திணைக்களம் கூடுதலான வருமானத்தை அரசுக்கு ஈட்டிக் கொடுப்பதாகவும் சொன்னார்.

எனினும், சேவை வழங்கும் திணைக்களமான குடிவரவு குடியகல்வு திணைக்களம் மாதமொன்றுக்கு 300 மில்லியன் ரூபாவை அரசுக்கு வருமானமாக பெற்றுக் கொடுக்கிறது என்றும் கூறினார். நாளொன்றுக்கு சராசரியாக 3000 கடவுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களை விட ஒரு நாள் சேவையின் கீழ் 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரட்டிப்பு வீசா வழங்கும் முறை; ஒன்லைன் மூலம் வீசா வழங்கும் புதிய செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் போது அதன் மூலம் மாதமொன்றுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் 200 கோடி ரூபாவை வருமானமாக பெற முடியுமென்று அவர் மேலும் தெரிவித்தார். இப்போது குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் எவ்வித காலதாமதமும் இருப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...