வடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்-அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார்.
தமிழ்ப் போராளிகளுடனான போரில் கற்ற பாடங்கள் குறித்து சமரசத்துக்கான கமிஷனிடம் தகவல்களைத் தெரிவித்தபோது இதை அவர் வலியுறுத்தினார்.
"விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் அவர்கள் மீண்டும் புதிய வடிவிலோ, பெயரிலோ மீண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை மறுக்க முடியாது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வது மிக எளிதாக இருந்ததில்லை.
கடல்பரப்பில் அவர்கள் மிகுந்த சாகசக்காரர்களாக இருந்தார்கள். கடல் பரப்பையும் அதில் மீன்பிடிக்க வரும் ஆயிரக்கணக்கான படகுகளையும் கண்காணிப்பது எந்த நாட்டு கடற்படைக்கும் சவாலான வேலை.
வடக்கு இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள், இந்தியாவின் (தமிழ்நாட்டு) மீனவர்களோடு எளிதில் தொடர்பு கொண்டுவிடுவார்கள். அவர்களுடைய பேச்சும் பரிமாற்றமும் கடலில் மீன்பிடித்தலோடு இருக்கும்வரை நமக்கு ஆபத்து இல்லை. ஆனால் கடந்தகால அனுபவங்களை நாம் மறக்கக்கூடாது.
விடுதலைப் புலிகள் தங்களுக்கு வேண்டிய எரிபொருள், உணவு தானியங்கள், மருந்து - மாத்திரைகள், ஆயுதம் தயாரிப்பதற்கான கருவிகள், வெடிமருந்துகள், வெளிநாடுகளில் ஆயுதத் தரகர்களிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடல் வழியாகத்தான் கடத்தி வந்தார்கள். எனவே கடல் போரில் அவர்களை வெல்வது மிகுந்த சவாலாக இருந்தது.
2002-2004 காலத்தில் இலங்கை ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட காலத்தில்கூட விடுதலைப் புலிகள் இந்தக் கடல் வழியைத் தங்களுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதை நிறுத்தவே இல்லை. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது அவசியம் என்று கருதுகிறேன்.
2003 பிப்ரவரி 6-ம் தேதி இந்திய நாட்டுப் படகு ஒன்று இலங்கையின் கடல் பரப்பில் வந்து கொண்டிருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய விரும்பினோம். விடுதலைப் புலிகளுக்காகத்தான் அதில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுகின்றன என்பதையும் ஊகித்துவிட்டோம். அப்போது இலங்கை கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு நபர் ஒருவரை இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவரையே அந்த இந்தியப் படகில் ஏறி என்னஇருக்கிறது என்று பார்க்குமாறு கூறினோம். அப்போது அவர் அதில் ஏறி ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனே அந்தப் படகில் இருந்தவர்கள் அவரை மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர். நாங்கள் அவரை உயிருடன் காப்பாற்றினோம் என்றாலும், எந்தவித தடயமும் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்க அந்தப் படகையே வெடி வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.
இப்போது வாரந்தோறும் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் வருகின்றன. அவை அங்கே இருப்பதை விடுதலைப் புலிகளோ அவர்களுடைய புதிய அவதாரமோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.
2007 டிசம்பர் 26-ம் தேதி 14 பேருடன் இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு கண்காணிப்புப் படகு கடல் பரப்பில் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு கடல்புலி படையைச் சேர்ந்த தற்கொலைப் படை வீரர் அந்தப் படகின் அடியில் வந்து தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி அந்தப் படகையே வெடிக்கவைத்து தகர்த்தார். படகில் இருந்த 14 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
அதனால்தான் இப்போது இந்தியக் கடல் எல்லையை வெகு கவனமாகத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அப்படியும் சட்டவிரோதமான காரியங்கள் எங்கள் கண்ணிலும் சிக்காமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் இனி எதிர்காலத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் அவர்களைக் கண்காணிப்பதும் பிடிப்பதும் பெரிய சவாலாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார் சமரசிங்கே.
மேலும் இங்கே தொடர்க...