3 ஜனவரி, 2011

மத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பம்


புதிய வருடத்தில் இன்று மத வழிபாடுகளுடன் ஜனாதிபதி செயலக வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல மதவழிபாடுகள் இடம்பெற்றதோடு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் கைது!




புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியைக்காட்டி இருவரை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டே புதிய ஹெல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் வெலிக்கடை பொலிஸார் இவரைத் தமது காவலில் வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து ஆராய்கின்றோம்: த.தே.கூ


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். அதுமட்டுமல்லாது கொழும்பிலும் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.

அரசாங்கம் எந்த வேளையில் தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலின் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து சபைகளிலும் கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்தும் சபைகளுக்கான மேயர், தலைவர், வேட்பாளர்கள் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து 4ஆம் திகதி கூடும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆராயப்படுமென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பவற்றின் உபகுழு இவ்வாரம் கூடவுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்





தீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியன ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இந்தவாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்;வினைத் தயாரிப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல்குழுவே இவ்வாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளது என்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் அதிக மழை பெய்யும் சாத்தியம் நாட்டில் 4 இலட்சம் பேர் பாதிப்பு: அம்பாந்தோட்டையிலும் வெள்ளம்


கிழக்கு ஊடாக வீசுகின்ற காற்றில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (3ம் திகதி) அதிக மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த அடைமழை காரணமாக ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 அயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 675 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களு க்கு தொடர்ந்தும் அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை அம்பாந்தோட்டையில் 100.6 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கூறினார்.

இதேவேளை இன்று பிற்பகலிலும், மாலையிலும் நாடெங்கிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யமுடியும். அதனால் இடி, மின்னல் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் கூறுகையில், இம்மழை காரணமாக மட்டு. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 474 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 86 ஆயிரத்து 359 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5166 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 341 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2248 குடும்பங்களைச் சேர்ந்த 7889 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1464 குடும்பங்களைச் சேர்ந்த 5841 பேரும் திருமலை மாவட்டத்தில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 1054 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக 1488 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 3962 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை இணைப்பாளர் சார்ஜண்ட் எம்.ஜி.ஏ. நந்தன கூறுகையில், சாமோதா கமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸாவெவ குளத்தின் அணை நேற்று முன்தினமிரவு திடீரென உடைப்பெடுத்தது.

இதன் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்தோடு 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் கேபிள் பரிமாற்ற திட்டம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன் முறையாக கடலுக்கு அடியில் மின் பரி மாற்றக் கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும் (பவர் கிரிட்) இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) இந்திய மின் தொகுப்புக் கழகம் இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்திய மின் தொகுப்புக் கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இது பற்றி கூறியதாவது; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ, நீளத்திற்கு மின் பரிமாற்றக் கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து மேற்கொள்ளும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கும், இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் இந்த கேபிள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும். தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலை மன்னார் வரை இந்த கேபிள்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்திற்கான இறுதித் தடத்தை மத்திய அரசு முடிவு செய்யும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறையை பின்பற்றி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மின் தொகுப்புக் கழகம் ஏற்கனவே இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பூட்டான் இடையேயான திட்டம் செயல் வடிவத்தில் உள்ளது. வங்கதேசம் இடையேயான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும், இலங்கை இடையேயான திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த திட்டம் குறித்து இ.மி.சபை தலைவர் வித்ய அமரபால கூறியதாவது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியில் மின்பரிமாற்ற கேபிள்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும். எந்த திகதியில் தொடங்கும் என்பதை திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதி கிடைத்ததும் அறிவிக்கப்படும்.இவ்வாறு வித்ய அமரபால கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிதாக 15 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அங்கீகாரம்


புதிதாக பதினைந்து அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கென 85 விண்ணப்பங்கள் கட்சிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றிலிருந்தே 15 புதிய அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்தது.

இவற்றைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் நடை பெறவுள்ளது. தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையில்; பிரதமர் தெரிவிப்பு






உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு நேற்று (2) காலை ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்:-

குறித்த திருத்தசட்டமூலம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அவை தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதமர், முறையான தேர்தலொன்றை நடாத்துவதற்கான அனைத்து சிறந்த தீர்மானங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைப்பார்கள் எனவும் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளன.

இருந்தபோதும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளவாறு இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

‘மனித நேயத்துடன் மக்கள் சேவை’ அரசின் வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்; ஜனாதிபதி செயலகத்தில் பிரதான வைபவம்






புது வருடத்தில் அரச நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ எனும் தொனிப் பொருளில் ஆற்ற வேண்டுமென பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வேலைத் திட்டம் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை 03ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், நாட்டுக்காக உயித் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

நிகழ்வின் இறுதியில் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பாக சகல அரசாங்க ஊழியர்களும் உறுதி மொழியொன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமென பொது நிருவாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபயக்கோன் அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு - பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பின





மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட பதுளை - கொழும்பு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டன. இதனால், சனிக்கிழமை “உடரட்ட மெனிக்கே" மற்றும் “பொடி மெனிக்கே" ஆகிய ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

எனினும், நேற்றுக் காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதுடன், காலை உடரட்ட மெனிக்கே ரயில் பதுளை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது
மேலும் இங்கே தொடர்க...

கமெரா துல்லியமான படப்பிடிப்பு 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன






வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய 200ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் சி.சி.ரி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட சகல வாகன உரிமையாளர்களுக்கும் தண்டப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க விஜயதிலக்க தெரிவித்தார்.

அவ்வாறு தண்டப் பணத்தை கட்டுவதற்கு தவறுபவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி.சி.ரி.வி.) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாக கண்காணிக்கும் பணிகள் டிசம்பர் 29ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புக்களும், வாகன நெரிசல்களை தவிர்த்தல் மற்றும் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். சகல நடவடிக்கைகளையும் மிகவும் துல்லியமாக படம்பிடிக்கும் சி.சி.ரி.வி. கெமராக்கள் மூலம் பெறப்படும் காட்சிகள் நீதிமன்ற சாட்சிகளாகப் பயன்படுத்தப்படும் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்தக் கெமராக்களின் ஊடான கண்காணிப்பு மூலம் விசேடமாக விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை துல்லியமாக அவதானிப்புடன் கவனிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முன்னணி அமைக்க முயற்சி






தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப் பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப் பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோல எதிர்வரும் உள்ளூரா ட்சி சபைத் தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணி யொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தினகரனுக்குத் தெரிவி த்தார்.

இது விடயம் தொடர்பில் ஏற்கனவே மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பில் தமது விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளன.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை உருவாக்குவதே எமது முயற்சி என்றார் சிவாஜிலிங்கம்.

அதேநேரம், இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் இணைந்து உருவாக்கியிருக்கும் உப குழு எதிர்வரும் வாரம் கூடவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை

கொலை, கொள்ளை, கடத்தலை தடுக்க தீவிரம்:
அச்சம் தேவையில்லை - யாழ். பிரதி பொலிஸ் மாஅதிபர்



யாழ். குடா நாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

விஷேடமாக முப்படையினருடன் இணைந்து செயலாற்றவென விஷேட பொலிஸ் குழுக்கள் மூன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரசேகர தெரிவித்தார்.

இந்த விஷேட பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக புலனாய்வுத் துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், இவற்றை முற்றாக கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது பயங்கரவாத செயல்கள் அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர் குடாநாட்டிலுள்ள மக்கள் பீதியடைய தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் ஊடாக பல்வேறு கோணங்களில் சிறந்த முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் நிச்சயமாக சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை உரிய முறையில் கட்டுப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப் படையுடன் பொலிஸாரும் விஷேட கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அவர்களது நலனை கருத்திற்கொண்டும் தேவையேற்படும் பிரதேசங்களில் அவ்வப்போது வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், வீதி ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் அவதானிக்கவென தனியான குழுவொன்றும் சேவையில் ஈடுபடும்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் ஆலோசனைக் கமைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன ரென்றார்.

அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சில அரசியல்வாதிகள் பாரிய சம்பவங்களாக காண்பிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அவர்களால் கூறப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்



தலைவர் த.சித்தார்த்தன்- தமிழ்க்கட்சிகள் ஒரேகுரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே புளொட் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேர் கண்டவர் பி.வீரசிங்கம்

கேள்வி : எதிரும் புதிருமாக இருந்த தமிழ்க்கட்சிகள் தற்போது ஒன்றுகூடியுள்ளன. இது வரவேற்கத்தக்க விடயம். எனினும் கட்சித் தலைவர்கள் மத்தியில் தம்மைப் பற்றித் தாமே பெருமை கொள்ளும் ஈகோ மனப்பான்மை இன்னமும் இருப்பது போலத் தெரிகிறதே?

பதில் : தமிழ் அரங்கிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படக்கூடியதொரு நிலையை தோற்றுவித்துள்ளது. ஒரேவிதமான கொள்கைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் தற்போது ஓன்று சேர்ந்திருக்கின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. அரசியலில் மாத்திரமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட அந்த ஈகோ இருக்கிறது. தமிழ்க்கட்சிகளுடனான கலந்துரையாடலில் என்னால் ஒரு விடயத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. எல்லாக் கட்சித்தலைவர்களும் ஒரளவுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பேசினார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டும் என்பதை உணர்ந்து பேசப்பட்டன. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் பிரதிபலிப்பாக இரு தரப்பிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்து பேசி வருகிறோம். ஜனவரி முதல்வாரத்தில் மீண்டும் ஒன்றுகூடி ஆராயவிருக்கிறோம். உடனடியாகவே ஓரிரு வாரங்களில் பேசி முடிவெடுக்கக்கூடிய விடயங்கள் அல்ல. எனவே ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து பேசப்படும் என நான் நம்புகின்றேன்.

மக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, ஜனாதிபதி தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைத்தால் அதனை தான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். ஜனாதிபதி மாத்திரமல்ல இந்திய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினர் இதனையே வலியுறுத்துகின்றனர்.

எனவே திம்பு மாநாட்டின்பின் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் இப்போது ஒன்றுகூடியிருக்கின்றன. திம்பு மாநாட்டின்போது அதுவொரு கோட்பாடாக இருந்தது. அதனை பிரேரணைகளாக முன்வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்தக் காலம் போய்விட்டது. இதற்கு அரசாங்கமும் சிங்கள சமூகமும் என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாக்கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்கும் என்றால் நன்றாக இருக்கும். அந்த நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்கின்றன.

கேள்வி : எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தப்படும்மென நம்புகிறீர்கள்?

பதில் : இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனினும் ஒரு கூட்டான செயற்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் நிலைமைகளையும் கட்சிகள் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகிறது.

கேள்வி : ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. ,ந்நிலையில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதில் அவர்கள் சொல்லும்போது மொழிகள் வித்தியாசப்பட்டிருக்கலாமேயொழிய அடிப்படையில் வடகிழக்குக்கு சரியான அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்பட வேண்டுமென்பதை தெளிவாக கூறியிருக்கின்றன. இது தொடர்பில் வேறுபாடுகளை என்னால் பார்க்கமுடியாமல் இருக்கிறது. கட்சிகளைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புக்களுடன் போராடி வந்த கட்சிகள்தான் இருக்கின்றன. சில வேளைகளில் பாதைகள் மாறியிருக்கலாம். புலிகள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க யோசித்திருக்கலாம். ஆயுதப்போராட்டம் இனி சரிவராது பேசித் தீர்க்கலாம் ஜனநாயக ரீதியில் செயற்படுவது என கட்சிகள் யோசித்திருக்கலாம். புலிகளைத் தவிர ஏனைய அமைப்புக்கள் எல்லாமே 87ற்கு பின் ஈழக்கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைக் காணலாம் என்ற முடிவுக்கு வந்தன. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல ஈகோ தான் பிரச்சினையாக இதுவரைகாலமும் இருந்தது. அதையும் களைந்து ஒரு ஒற்றுமைப்பாட்டை காண்போமாக இருந்தால் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும். இதில் கலந்துகொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலம் தொட்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த அழிவுக்கு அனைவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு புலிகளை மட்டும் குறைகூறிவிட்டு ஒதுங்கிவிட முடியாது. உயிரோடு இருக்கும் நாங்களாவது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும் அந்த நம்பிக்கை எமக்கிருக்கிறது. இதனை எல்லாக் கட்சிகளுமாகச் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கின்றன.

கேள்வி : தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைக்கு ஆரம்பகாலத் தமிழ்த் தலைவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

புதில் : அதனை நான் அப்படிப் பார்க்கவில்லை. அப்போதைய தலைவர்கள் எவரும் தங்களது சுய லாபங்களுக்காக இளைஞர்களைத் தூண்டி விட்டனர் எனக்கூறுவது தவறு. அப்போதிருந்த சூழ்நிலையில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியாக இருந்திருக்கும். அவர்களைப் பொறுத்தவரையில் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுத்த வேளையில் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் அதனை இராணுவ ரீதியாக நசுக்க முற்பட்டன. இளைஞர்களைத் தூண்டி விட்டதன் தாக்கம் அப்போதைய தலைவர்கள் மத்தியில் இருந்திருக்கலாமே தவிர ஒருபோதும் நேரடியாக ஈடுபடவில்லை என்றே கூறவேண்டும். சாத்வீகப் போராட்டங்கள் வெற்றியளிக்கவில்லை, தொடர்ந்து அழிவையே பார்க்கிறோம் என்ற காரணத்தினால்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தவறு எனக்கூறமுடியாது. கடைசிக்காலங்களில் இயக்கங்களிடையே ஏற்பட்ட போட்டிகள், அத்துடன் புலிகள் தாங்கள்தான் தமிழ் மக்களை காக்க வந்த இரட்சகர்கள் எனக்கூறி ஏனைய இயங்கங்களைப் பலவீனப்படுத்தினர். தாங்கள்தான் ஒரேயொரு இயக்கம் என்றனர். புலிகள் அழிக்கப்பட்ட உடன் தமிழ் மக்களின் போராட்டம் முழுவதும் அழிக்கப்பட்டதான ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதற்கும் போராட்ட ஆரம்பத்திற்கு எதுவித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அது எமது தவறு. இதற்காக நாங்கள் அப்போதைய தலைவர்களைக் குறைகூறுவதில் பலனில்லை. அவர்கள் அன்று இருந்த நிலைமைக்கேற்றவாறு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

விடுதலைப் புலிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் 87ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று இந்நாட்டில் தனிநாடு என்ற கோரிக்கை சாத்தியமற்றதொரு விடயம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இந்தியாவின் அல்லது ஏதாவதொரு நாட்டின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியொரு நாட்டை உருவாக்கியிருக்க முடியாது. அதனை சரியாக உணர்ந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அடைய முடியாத இலக்குக்காக அநியாயமாக எமது மக்களைப் பலியாக்கிவிட்டார்கள்.

எம்மைப் பொறுத்த வரையில் இதனை நாங்கள் 1987ல் நன்றாக உணர்ந்து கொண்டோம். போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் நலிவடைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். அக்காலப்பகுதியில் தனிப்பட்ட நன்மைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

வவுனியாவில் நாங்கள் மிகப் பாரியளவில் வேலைகளை முன்னெடுத்துச் சென்றோம். அரசாங்கத்தின் பங்காளிகளாக இல்லாமல் அவர்களின் உதவியை பெற்றுக்கொண்டு மக்களுக்காக சேவையாற்றினோம். ஆனால் எமக்கு துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், ஐந்தாம் படை என்ற பெயர்களெல்லாம் சூட்டினார்கள். இறுதியில் இன்று நாம் என்ன நிலையில் இருக்கின்றோம். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தால் ஈழம் அமைக்க முடியாது. நாட்டில் பாரிய அழிவு ஒன்றை உருவாக்கும் என்பதை உணர்ந்துதான் இந்த மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அக்காலப்பகுதியில் இதனை மக்களும் கூட உணர்ந்து கொள்ளவில்லை. கட்சிகளும் உணர்ந்து கொள்ளவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அன்று செய்ததை அன்று சொன்னதைத்தான் இன்றும் என்றும் சொல்வோம் செய்வோம். மக்களின் மறுவாழ்வு மக்களின் அடிப்படை உரிமைகள் இரண்டு விடயங்களிலும் எப்போதும் பின்வாங்கியதில்லை பின்வாங்கப்போவதுமில்லை.

கேள்வி : கடந்த மூன்று தசாப்தகால கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு இட்டுச் செல்லக்கூடாது என்ற எண்ணம் தமிழ்க்கட்சிகள் மத்தியில் இருக்கிறதா?

பதில் : நிச்சயமாக! தமிழ்க்கட்சிகள் மத்தியில் குறிப்பாக ஆயுதம் தாங்கிய தமிழ் அமைப்புக்கள் மத்தியில் கடந்த காலங்களில் மிகவும் கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. இதற்கு எவரையும் குற்றும் கூறுவதில் எதுவித அர்த்தமும் இல்லை. இதையெல்லாம் மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக வர முடியாது. அது சாத்தியப்படாவிட்டாலும் கூட ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். ஒரே குரலில் பேசக்கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகள்தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?

பதில் : தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ_டன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. புளொட் என்ற வகையில் நாங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ_டன் நல்ல உறவுகள் இருக்கின்றன. அது மாத்திரமல்ல அஷ்ரப் காலத்திலிருந்த அந்த உறவை இன்றும் தற்போதைய தலைவர் ஹக்கீமுடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்க்கட்சிகளுடன் ஏற்படும் உடன்பாடுகள் எல்லாம் எட்ட வேண்டிய விடயங்கள்தான். ஏனெனில் வடகிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கின்றபோது முஸ்லிம்களின் பயங்கள் அபிலாஷைகளுக்கு ஒரு முடிவு காணாவிட்டால் நிச்சயமாக அதுவொரு நிரந்தரமானதும் முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகளுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். அனைத்து தரப்பினருடனும் பேசி ஒரு சரியான தீர்வை வடக்கு கிழக்குக்கு முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை அவர்களின் பயத்தை நீக்கக்கூடியதொரு தீர்வை அணுக வேண்டும். அதைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். நன்றி.
தோழர் சுந்தரம் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினம்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்;தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர்.சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் இன்று முற்பகல் 9.00மணியளவில் நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்த பிரபாகரனால் கோழைத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு


இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 1981ல் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின், 1991 மற்றும் 2001லும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போர் காரணமாக மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 18ல் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால், இந்தாண்டில் முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்நாட்டு புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர்





இணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா நேற்று நடைபெற்ற போது எடுத்த படம். பக்தர்கள் புடைசூழ தேர் வீதி உலாவரும் காட்சி.
மேலும் இங்கே தொடர்க...