18 நவம்பர், 2010

ஜனாதிபதி பதவியேற்பை முன்னிட்டு 100 முன்னாள் போராளிகள் விடுதலை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 100 பேர் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை மற்றும் புனர்வார்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ் குமார் தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியா கலாசார மண்டபத்தில் வைத்து மாலை 3 மணியளவில் இவர்கள் தமது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலநறுவை - சேனபுர தடுப்பு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களே விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்க மேல் நீதிமன்றம் உத்தரவு



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உடற்பயிற்சி இயந்திரம் வழங்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பொன்சேகா சுகயீனம் காரணமாக நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை என பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரனி தெரவித்துள்ளார். மேலும் பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்க வேண்டும் எனவும் அவர் சிறை வைக்கப்பட்டுள்ள கூண்டின் கூரைப் பகுதியை மீள் திருத்தம் செய்யும் படியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து பொன்சேகாவுக்கு உடற்பயிற்சி இயந்திரம் வழங்குமாறும், கூரையை திருத்துமாறும் நீதவான் சிறைச்சலை ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பிய பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை 3 மாதங்களில் ஆரம்பம் : அமைச்சர் வாசன்


தூத்துக்குடி முதல் கொழும்பு வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பமாகும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கப்பல்துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் உள்ள மொத்தம் 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்பரப்பில் 13 பெரிய துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்குப் பயணிகள் போக்குவரத்து குறித்து 2002ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இது தொடங்கப்படும். இதற்கான இறுதி கட்ட பேச்சு, இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் நடந்து வருகிறது.

சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் நீதிமன்றில் நடந்து வருகிறது. தமிழக மக்களின் கனவு திட்டமான, இத்திட்டத்துக்கு சாதகமான முடிவு நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தமிழகத்துக்கான பல்வேறு முன்னேற்றங்கள் கிடைக்கும்" என்றார்.ச்
மேலும் இங்கே தொடர்க...

புதிய அமைச்சரவையின் போது அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை மாற்றத்துக்கான இறுதி ஏற்பாடுகளில் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களும் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ள நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது காணப்படுகின்ற அமைச்சுப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் அதன்படி தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கண்டி, பதுளை, காலி, குருணாகல், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு புதிய அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் அரசியமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டபோது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசிய கட்சியின் சில எம்.பி. க்களுக்கு அமைச்சுப் பதவியும் பிரதி அமைச்சுப் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை காலமும் பிரதி அமைச்சர் பதவியை வகித்தவருகின்ற சிலருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை சுப நேரத்தில் புதிய அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.

ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அரசாங்கத்தில் பிரதிமைச்சர்களாக பதவி வகிக்கும் சரத் அமுனுகம ரஞ்சித் சியம்பளாபிட்டிய ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என நம்பகரமாக தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஷபக்ஷவுக்கு இளைஞர் விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சு ஒன்று வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கிய எம்.பி. க்களான பிரபா கணேசன் எம். திகாம்பரம் ஆகியோருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இதுவரை அதற்கான சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.

அமைச்சுப் பதவி விடயத்தில் ஆளும் கட்சியில் புதிதாக நியமனம் பெற்ற எம்.பி. க்களும் தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் சிலரும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிகின்றது. அமைச்சுப் பதவிகளை உரிய முறையில் செயற்படுத்தாக சில அமைச்சர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படவுள்ளன. இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரதமர் பதவியில் மாற்றம் இருக்காது என்றும் பிரதமராக டி.எம். ஜயரட்ணவே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பின்போது டி.எம். ஜயரட்ண பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். அத்துடன் தற்போதைய அமைச்சரவையும் அன்றைய தினமே பதவியேற்றிருந்தது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி பதவியேற்பின் பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பது வழமையாகும் என்று தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ( தற்போதைய ஜனாதிபதி செயலகம்) நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை வேளையில் புதிய அமைச்சரவை பதவியேற்பும் பிற்பகல் வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

லண்டனில் தீ விபத்து: இலங்கை இளைஞர் பலி

லண்டனில் உள்ள மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கை இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாய்தமருதுவைச் சேர்ந்த 30 வயதுடைய அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்ஸான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தம்புள்ளையில் துப்பாக்கியுடன் மாணவர் கைது



இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கியுடன் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை - கலேவல்ல பொலிஸார் 16 வயதான இம்மாணவரைக் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் துப்பாக்கியை 4,500 ரூபாவுக்கு விற்கவிருந்த வேளை, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் அம்மாணவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை: ரணில்



இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை என்று எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை சென்ற போது ஊடகவியலாளர்கிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சொந்த விடயமாக சென்னை வந்துள்ளேன். இன்று ஒரு நாள் இங்கு தங்குகிறேன். அப்போது, சிலரை சந்தித்து பேச உள்ளேன்.

கேள்வி : இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி எந்த அளவுக்கு நடை பெறுகின்றது?

அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. நேற்று கூட நானும், இலங்கை தமிழ் எம்பி சம்பந்தமும் இது சம்பந்தமாக கலந்து பேசினோம்.

அடுத்த வாரம் மீண்டும் பேசுகிறோம். அதன் பின்பு இலங்கை பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம். இலங்கையில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. கேள்வி : ஜனாதிபதியின் செயல்பாடுகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஜனாதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த பிரச்னை என்றாலும் தன்னுடைய ஆதரவாளர்களை மட்டுமே கலந்து பேசுகிறார். நாட்டின் பொதுப் பிரச்னைகளில் எதிர்கட்சிகளை கலந்து பேச வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆனால், ஜனாதிபதி அந்த மரபுகளை மீறி செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளாகிய எங்களை மதிப்பது இல்லை. எந்த தகவலையும் சொல்வதும் இல்லை. இவ்வாறு ரனில் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும் நிகழ்வு


அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர்களான தயாசிரி திசேரா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினம் ஆகையால் வடக்கிலிருந்து வருகை தரும் மக்கள் மாகம்புர துறைமுக வளாகத்தில் ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த் துக்களையும் வடக்கினை மீட்டு தந்தமை க்காக நன்றியினையும் தெரிவிக்க வுள்ளனர்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமி டக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள்





பதவியேற்பு நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஒழுங்குகளை அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

ஜனாதிபதியின் பிறந்த நாளை யொட்டி இன்று (18) மாகம்புர (அம்பாந்தோட்டை) துறைமுகத்தில் முதலாவது கப்பல் நங்கூரமிடும் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறுகிறது. இன்றைய தினம் நாட்டு அபிவிருத்தியைப் பொன்னெழுத்துக்களால் பதியப்படும் ஒரு நாளாகுமென அரசியல் தலைவர்கள் பலர் அபிப்பிராயம் வெளி யிட்டுள்ளனர்.

நாளை 19 ஆம் திகதி இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணிக்குள்ள சுபவேளையில் ஜனாதிபதி பதவி ஏற்பதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி காலி முகத்திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது. முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதை மற்றும் போர்த்தளபாட பேரணியும் நடைபெறும்.

இந்த விழாவையொட்டி கொழும்பு கோட்டைக்கான பொதுப் போக்குவரத்து நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடை செய்யப்படுமெனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பின் சில பகுதிகளிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி தேசத்துக்கு நிழல்தரும் 11 இலட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மரம் நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்தில் ‘சுதந்திரம்’ எனும் தொனிப் பொருளிலான கலாசார கண்காட்சி பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நேற்று (17) ஆரம்பமானது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நான்கு நாட்களுக்குக் கண்காட்சி நடை பெறும். இந்தக் கண்காட்சியின் விசேட அம்சமாக ஏழாயிரம் கிலோ அரசியில் பிரமாண்டமான பாற்சோறு தயாரிக்கப்படுகின்றது. 65 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய இந்தப் பாற்சோற்றை உலக சாதனைக்காக 500 பேர் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் இந்தக் கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொள்வர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை 19ஆம் திகதி காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு கோட்டை, முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரை வீதிகள் மூடப்படவுள்ளன.

காலி வீதியூடாக கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்கள் டிக்மன் வீதியூடாக சென்று ஹெவ்லோக் வீதி வழியாக கொழும்பு நகரை அடைய முடியும். இலகு ரக வாகனங்கள் கொள்ளுபிட்டி சந்தி வரை வந்து தர்மபால வீதி வழியாக கொழும்பு நகரை அடையமுடியும். மாற்று வழிகளை சாரதிகளுக்கு சுட்டிக்காண்பிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடு படுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படவுள்ள வீதிகள் வருமாறு,

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதி, கோட்டை ரயில் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியும், ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியும்,

புறக்கோட்டை விமலதர்ம பிரதர்ஸ் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் முதல் பெஸ்டியன் வீதி, சதாம் வீதி, லோட்டஸ் வீதி, பிரிஸ்டல் வீதி, யோர்க் வீதி, லோட்டஸ் வீதியுடன் வங்கி வீதி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி,

கொம்பனித்தெரு முதல் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மாக்கான் மாக்கார் வீதி வழியாக காலிமுகத்திடல் நோக்கிச் செல்லும் வீதி,

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை நவம் மாவத்தை வீதி,

ஹோர்டன் சுற்றுவட்டம் முதல் பொதுநூலக சுற்றுவட்டம் வரையிலான வீதி,

எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை வீதி தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மாவத்தை முதல் கொழும்பு மாநகர சபை வரையிலான வீதிகள் என்பன நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்து ள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொலநறுவையில் புனர்வாழ்வு பெற்ற 100 பேர் விடுதலை


ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 100 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

பொலநறுவை- சேனபுர முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலையில் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தினகரனுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு மேலும் 100 கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நீதி, சட்ட மறுசீரமைப்புக்குச் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அச்சமின்றி முதலீடு செய்யலாம் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்


யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இந்திய அரசின் உதவியுடனும் இலங்கை அரசின் உதவியுடனும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் 176 மில்லியன் இந்தியன் ரூபாய் உதவி மற்றும் இலங்கை அரசின் 25 மில்லியன் ரூபாய் உதவி இதற்காக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்யவுள்ள முதலீட்டாளர்களுக்கான அபிவிருத்தி கூட்டமும் காணி பகிர்வுக் கூட்டமும் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சின் யாழ். காரியாலயத்தில் இடம் பெற்றது.

கைத்தொழில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி அறிமுகவுரை நிகழ்த்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்:- அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் முதலீட்டாளர்கள் எவ்வித பயமும் கொள்ளதேவையில்லை.

அதற்கான வள ஒதுக்கீட்டையும், நம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படுத்தி தரப்படும்.

இன்றும் ஒரு மாத கால முடிவில் வேலைகளை ஆரம்பிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை வழங்கப்படும்.

இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய – இலங்கை அரசு கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தாம் மேற்கொள்ளவுள்ள உற்பத்தி தொடர்பாக முன்மொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் ஆரம்பிக்கும் முயற்சியாளர்களுக்கு 30 வருட குத்தகை தரப்படும்.

அத்துடன் இலகு கடன் வசதி செய்து தரப்படும் என்றார்.

மேற்படி நிகழ்வில் பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி, லலித் வீரகுமார, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வட மாகாண பணிப்பாளர் எஸ். சிவகங்காதரன், பணிப்பாளர், அமைச்சின் ஊடக பணிப்பாளர் இப்னூ அசுமத் மற்றும் கைத்தொழில் முதலீட் டாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் பல்வேறுபட்ட விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முற்பகல் யாழ் நகரிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் மாவட்ட இணைப்பாளர் கலாநிதி வீ. தங்கராஜா தலைமையில் இடம்பெற்ற பிறந்த தின கொண்டாட்டத்தில் சம்பிரதாய முறைப்படி பிறந்தநாள் கேக் வெட்டப் பட்டது. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ். ஆஸ்பத்திரி வீதி புனித மரியாள் தேவாலயம், யாழ். நகர் ‘ நாகவிகாரை மற்றும் யாழ். நகரில் உள்ள பள்ளிவாசல் என்பவற்றில் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மேலும், கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோருக்கும் கைதடிப் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கும் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், கரவெட்டி, குருநகர் பிரதேசங்களில் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

யாழ். நகரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வுகளில் பங்குகொண்டோருக்கு ஜனாதிபதியின் உருவப் படங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...