எமது நாட்டு
க்கு எதிரானதாக அமைந்துள்ள தருஸ்மன் அறிக்கையை இந்தியாவின் உதவியோடு நிராகரிக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அவ்வாறு இந்தியாவைக் கோரும் எண்ணமும் இல்லை. இந்தியா ஊடாக நிராகரிக்க முற்பட்டால் அது எமது நாட்டுக்கு பாதகமாகவே அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மே மாதம் 25 ஆம் திகதி ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசாங்கத்தின் இந்தியாவுடனான கூட்டு அறிக்கை தொடர்பில் அனுர குமார திசாநாயக்க எம்.பி. யினால் கேட்கப்பட்ட கேள்விகளும் கூறப்பட்ட காரணங்களும் மற்றும் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் எந்த வகையிலும் அடிப்படையற்றவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் இந்தியாவுக்கு சென்றதும் அங்கு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதும் எமது நாட்டின் தேவைகள் கருதியதாகும். இதற்காக இந்தியா எமக்கு அழைப்பு விடுக்கவில்லை.
அங்கு மேற்கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் காங்கேசன்துறைக்கும் ரயில் பாதையமைக்கும் திட்டம் குறித்து உள்வாங்கப்பட்டுள்ளது. மாறாக காங்கேசன்துறை துறைமுகத்தினதும் பலாலி விமான நிலையத்தினதும் நடவடிக்கைகளை இந்தியாவுக்கு தாரைவார்ககும் அளவில் எதுவும் கூறப்படவில்லை. இவ்வாறு அனுரகுமார எம்.பி. யினால் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதானது இங்கு ஏதோ பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுவதாகவே அமைந்திருக்கின்றது.
மேலும் இந்த ரயி“ல பாதை அமைக்கும் விடயம் சம்பந்தமாக இரு தரப்பிலிருந்தும் விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே உடன்பாடு ஒன்றுக்கு வர வேண்டும் என்பது அந்த கூட்டு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.
அதேபோல சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் இங்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்து. அது முற்றிலும் தவறானதாகும். அதாவது இலங்கை இந்திய அரசுகளின் மேற்படி கூட்டு அறிக்கையானது எந்தவித பாதகத்தையும் கொண்டிருக்கவில்லை. எனனே இது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துகள் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையாகும். இது இவ்வாறிருக்க தருஸ்மன் அறிக்கை தொடர்பாக இந்தியாவின் உதவியை நாடுவதற்காகவே இந்தியா சென்றிருப்பதாகவும் இங்கு கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் தருஸ்மன் அறிக்கை விவகாரத்தை இந்தியாவின் உதவியோடு நிராகரிப்பதற்கான நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அது எமது நாட்டுக்கும் நல்லதல்ல. இது விடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்மட்டத்துடன் மட்டுமல்ல, வேறு பல நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.
இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச அளவிலான தேடல்கள் வேண்டுமென சர்வதேசத்தின் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும் இந்தியாவிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. இந்நிலையில் தருஸ்மன் அறிக்கையை இந்தியாவூடாக நிராகரிக்க முற்படும் பட்சத்தில் அது எமது நாட்டுக்கு பாதகமாக அமைந்துவிடும்.
22 அணிசேரா நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் நாம் இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய உயர்மட்டத்துடனான பேச்சுக்கள்,சந்திப்புக்கள் மிகவும் பெறுமதிமிக்கவையாக அமைந்தன.
இது ஒருபுறமிருக்க இந்த தருஸ்மன் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையானது அறிக்கை அல்ல. அது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும் என்பதை நாம் முன்னரே கூறியிருந்தோம்.
அனுர குமார திசாநாயக்க எம்.பி. யின் கேள்வியின் பிரகாரம் நாம் இந்தியாவின் நோக்கத்திற்காக அங்கு செல்லவில்லை. மாறாக எமது தேவைக்காகவே சென்றோம். அவ்வாறு சென்றமைக்கான பெறுபேறுகள் திருப்திகரமானவையாகும்.
எனவே தவறான அர்த்தங்களைக் கற்பிக்கும் வகையில் அனுர குமார எம்.பி. யினால் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை இந்த பாராளுமன்றத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.