இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.
இன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார்.
இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் புல்மோட்டையிலும், வவுனியாவில் மெனிக்பாம் முகாமிலும் 50ஆயிரம் நோயாளிகளுக்கு இந்திய வைத்தியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையளித்தனர். இவ்விரு இடங்களிலும் இந்திய அரசாங்கம் நடத்திய தற்காலிக நடமாடும் ஆஸ்பத்திரிகளில் 3,000 நோயாளிகளுக்கு பாரிய மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் செய்யப்பட்டன.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் 20ஆயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய 4 இலட்சம் சீமெந்து மூடைகள் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக வழங்கப்பட்டன. இதற்கென இந்திய அரசாங்கம் 1.75மில்லியன் டொலர்களை செலவிட்டது.
இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் சென்று மீள்குடியேறுவதற்கும் தங்கள் வயல்களில் விவசாயம் செய்வதற்கும் கண்ணி வெடி ஆபத்துக்களில் இருந்து அவர்களை முற்றாக பாதுகாக்கும் எண்ணத்துடன் 2009ம் ஆண்டில் தரைக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 7 வெவ்வேறு இந்திய கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை ஈடுபடுத்தியது.
இந்தக் குழுக்களுக்கு உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களில் சில குழுக்கள் ஒவ்வொன்றாக தங்கள் கைகளாலே அகற்றும் ஆபத்தான பணியை மேற்கொண்டார்கள். இதற்கென இந்திய அரசாங்கம் 10மில்லியன் டொலர்களை செலவிட்டது.
வடபகுதியில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக இந்திய அரசாங்கம் 500 நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும் அவற்றிற்கு தேவையான இயந்திர உபகரணங்களையும் 2010ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கியது. இதற்கு இந்திய அரசாங்கம் 6மில்லியன் டொலர்களை செலவிட்டது.
இந்திய அரசாங்கம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5,500 கிலோகிராம் பயறுவிதைகளையும் 4,300கிலோகிராம் உழுந்து விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. கிழக்கிலங்கையின் வாகரையில் இடம்பெயர்ந்த மீனவர்களுக்காக இந்திய அரசாங்கம் பலநாட்கள் ஆழ்கடலில் இருந்து மீன்பிடிக்க வசதிகளுடனான டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளையும், மீன்பிடிப்பதற்கான வலைகள் மீனை கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான குளிர் அறைகளையும், குளிர்சாதன வசதி கொண்ட லொறிகளையும் வழங்கியது. இதற்கென ஒரு மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.
2010ம் ஆண்டு மார்ச் 13முதல் ஏப்ரல் 8ம் திகதி வரையில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 19 செயற்கை கை, கால்களை பொருத்தும் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்ற 1,400 பேருக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தினார்கள். இவ்வாண்டில் இது போன்று இன்னுமொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாவனைக்காக பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது. முதல் கட்டமாக 17மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இவை பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் வைத்திய சேவைகளை மேற்கொள்வதற்கும் அங்கு பயன்படுத்தப் படும்.
சிறிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் வடபகுதியில் உள்ள 80 பாடசாலைகளின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மன்னாரிலுள்ள மீனவர்களுக்கு 170 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கு, அச்சுவேலி கைத்தொழில் தொழிற்சாலையிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதி ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளது.
வடபகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் மலையகப் பிரதேசங்களிலும் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 முதல் 400மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று முன்மாதிரி திட்டமான 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
டபகுதியின் ஒரே ஒரு வணிகத் துறைமுகமான காங்கேசன்துறை துறை முகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பலாலி விமான நிலையத்தின் விமான இறங்கு தரையின் திருத்தப் பணிகளும் இப்போது இந்தியாவினால் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் திட்ட கொள்கை விளக்கத்துடன் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாமென்று தூதரகத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...