அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர்.
தற்போதைய மப்பும், மந்தாரத்து டன் கூடிய மழைக் காலநிலை இன்று (5ம் திகதி) நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய மழை பொலன்னறுவையில் 232.4 மில்லி மீற்றர்கள் பெய்துள்ளது. அத்தோடு திருகோணமலை, அரலகங்வில, கெளடுல்ல, வவுனியா, அநுராதபுரம், போவத்தென்ன, மட்டக்களப்பு, கட்டுகஸ் தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றில் 40 குளங்களின் வான்கதவுகளும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார். இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் கிழக்கு, வட மத்திய மாகாணங்கள் அடங்களாக நாட்டிலுள்ள 13 மாவட்டங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 553 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 42 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாக மூன்று தினங்களில் அறுவர் உயிரிழந்திருப்பதுடன் ஏழுபேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம் வெள்ளம், மண்சரிவு காரணமாக 37 ஆயிரத்து 675 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 39ஆயிரத்து 391 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 430 முகாம்களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
திருமலை மாவட்டம்
வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 405 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 175 பேர் 123 முகாம்களில் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 151 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5074 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 503 பேர் 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 940 பேர் 32 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 4113 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4042 குடும்பங்கள் 83 முகாம்களில் தங்கியுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை வெள்ளம் காரணமாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, கேகாலை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களும், மண்சரிவினால் நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வெள்ள நிலை காரணமாக கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பெரும்பாலான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தரைவழி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இவ்விரு மாகாணங்களிலும் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள கர்ப்பிணிகளையும், நோயாளர்களையும் விமானப் படையினர் ஹெலிகொப்டர்களி னதும், கடற் படையினர் படகுகளினதும் உதவியோடு மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்கள் கூறினர்.
(திறப்பனை தினகரன், ஹாலிஎல தினகரன், இறக்காமம் தினகரன், களுவாஞ்சிகுடி குறூப், அம்பாறை மத்திய குறூப், அம்பாறை சுழற்சி, ஒலுவில் விசேட, காரைதீவு குறூப், சாய்ந்தமருது குறூப், குச்சவெளி தினகரன், திருமலை மாவட்ட விசேட நிருபர்கள்)
மேலும் இங்கே தொடர்க...