16 ஏப்ரல், 2010

இளந்தம்பதியரை ஏமாற்றிய இருவர் விளக்கமறியலில் : மட்டக்களப்பில் சம்பவம்



மட்டக்களப்பு மாநகரில் இரவு வேளை, இளம் தம்பதியரைத் தாம் விமானப்படை புலனாய்வுத் துறையினர் எனக் கூறி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநாகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு உப்புக்கராச்சி பகுதியில் இரவு 7.30 மணியளவில் சைக்கிளுடன் நடந்து சென்ற இளம் தம்பதியரை, மற்றொரு சைக்கிளில் வந்த குறித்த இரு மாநகர சபை ஊழியர்களும் இடைமறித்துள்ளனர். தாம் விமானப்படை வீரர்களென்றும் சோதனை செய்ய வேண்டுமென்றும் இவர்களைப் பயமுறுத்தி மட்டக்களப்பு நகரின் திருப்பெருந்துறை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகம் கொண்ட தம்பதியர் தப்பியோடி வந்து அருகிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துப் பொலிஸார் ஒருவரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிபதி வீ. ராமக்கமலன் முன்னிலையில் ஆஜர் செய்தனர். குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற்ம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இரு தினங்களின் பின்னர் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி இரண்டாவது சந்தேக நபரை ஆளடையாள அணி வகுப்புக்குட்படுத்துமாறு நீதிபதி ராமக்கமலன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குப் பணித்துள்ளார்.

இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மஞ்சந்தொடுவாய், வீச்சுக்கல்முனை பகுதிகளை சேர்ந்த தற்காலிக மாநகர சபை தொழிலாளர்கள் எனப் பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றம் செல்வதைத் தடுக்க அரசு முயற்சி : ஜ.தே.மு.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு செல்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக ஜனநாயக தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னாள் இராணுவத் தளபதிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. எனினும் அவரை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. இதுவரை அரசாங்கமோ அல்லது இராணுவமோ இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.

எனவேதான், ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இராணுவத் தளபதிக்கும், நாடாளுமன்றச் செயலாளருக்கும் இன்று (16.04.2010) கடிதம் அனுப்பியுள்ளோம்.

இராணுவ நீதிமன்றில் மேற்கொள்ளப்படும் இராண்டாவது விசாரணைகளுக்குத் தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர். மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய மீதான விசாரணைகளின் போது போலி சாட்சியம் வழங்கிய இவரை அப்பதவியில் நியமிக்க முடியாது" என்றார்.

"ஏப்ரல் 22ஆம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக 19ஆம் திகதி சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் அவரை நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்காத வகையில் தீர்ப்புகள் எதுவும் வழங்கக் கூடிய சாத்தியம் உள்ளதா?" என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அநுரகுமார திசாநாயக்க,

"நிச்சயமாக. அவ்வாறானதொரு திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு நாம் எப்போதும் இடம்கொடுக்கப் போவதில்லை" என்று கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் தாக்குதல் சம்பவம் : படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

நாவலப்பிட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆதரவாளர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் குழுவொன்று தாக்கியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத்தாக்குதல் சம்பவம் நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான பாதையில் கிறின்வூட் மற்றும் போஹில் தோட்டப்பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் முரளிநாதன் கருத்துத்தெரிவிக்கையில் :

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக எமது பிரசாரக்குழுவினர் கிறின்வூட் ,போஹில் தோட்டப்பகுதிகளுக்குச் சென்றபோது அங்கு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களான காமினிஹொட்டியாராச்சி மற்றும் மனோகணேசன் ஆகியோரின் குழுவினரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது தீடிரென வந்த குழுவொன்று எம்மைத்தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எமது வாகனமொன்று அடித்து நொருக்கப்பட்டதோடு எமது ஆதரவாளர்கள் இருவர் படுகாயத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். பாடுகாயமடைந்த எமது ஆதரவாளர்கள் இருவர் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தேர்தல் திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

பண்டிகைக் கால அசம்பாவிதங்களில் மூவர் பலி பலர் காயம்


தமிழ் - சிங்கள புத்தாண்டுப் பண்டிகை காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 750 பேர் காயமடைந்துள்ளனர்.

மோதல் சம்பவங்கள், வாகனம் மற்றும் பட்டாசு வெடி விபத்துக்கள் என்பவை காரணமாக 750 பேர் காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துமுள்ளனர்.

காயமடைந்த 486 பேர் சிகிச்சை பெற வந்ததாகவும் அவர்களில் 196 பேர் வைத்தியசாலையில்; தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துச் சேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.

"வாகன விபத்துக்களுக்குள்ளாகிய 160 பேரும் கத்தி குத்துக்கு இலக்காகிய 58 பேரும் விளையாட்டின்போது காயமடைந்த 29 பேரும் சிகிச்சை பெற வந்தனர். பட்டாசு வெடி விபத்து காரணமாக ஒருவரே சிகிச்சை பெற வந்தார்.

புத்தாண்டு காலப் பகுதியில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கைகலப்பு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு தெற்கில்.....

அதேவேளை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில்,

"புத்தாண்டு காலப்பகுதியில் 264 பேர் சிகிச்சை பெற வந்தனர். இவர்களில் 61 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

வீதி விபத்து காரணமாக 43 பேரும், கைகலப்பு காரணமாக 21 பேரும், வீட்டு வன்முறை காரணமாக 37 பேரும், பட்டாசு வெடி விபத்து காரணமாக 3 பேரும் சிகிச்சை பெற வந்தனர்" என்றார்.

மாத்தளையில்.....

மாத்தளை வைத்தியசாலையில் காயங்கள் காரணமாக இதுவரை 35 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுள் பெண்கள் ஏழு பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை, மகவல, ரத்தோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவர்கள் எனத்
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி




ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து தீப் பிழம்புகளை கக்கி வருவதோடு, அதிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு ஐரோப்பிய பகுதியில் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் காட்விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம், அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. மேலும் புகை துகள்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1989-ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்தபோது அவ்வழியாக சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது.

சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

இந்த எரிமலையை சுற்றி 3 லட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு அவர்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாதையை விட்டு விலகியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்







ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2ட்வது ஏவுதளத்தில் இருந்து மஞ்சள் நிறப் புகையைக் கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாயும் ஜி
ஸ்ரீஹரிகோட்டா, ஏப்.15: இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

"ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு தினங்களில் கண்டறியப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மற்றும் ஜிசாட்ட்4 செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.420 கோடியாகும். இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170 கோடியாகும்.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த எடை 416 டன்னாகும்.

சுமார் 2,000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியில் 18 ஆண்டு கடும் உழைப்பில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய ராக்கெட் ஓராண்டுக்குள் ஏவப்படும்' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2ட்வது ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்ட்4 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.ட்டி3 ராக்கெட் 29 மணி நேர கவுன்டவுனுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் மஞ்சள் நிறப் புகையை கக்கி கொண்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்விக்கப்பட்ட "கிரையோஜனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ட்டி3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை உலக நாடுகள் பலவும் கவனித்து வந்தன.

ஏறத்தாழ 1022 விநாடிகளில் ராக்கெட் 36,000 கிலோ மீட்டர் கடந்து, ஜிசாட்ட்4 செயற்கைக்கோளை புவி வட்ட சுற்றுப் பாதையில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்பட இருந்தது.

ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் முதல் நிலையை (திட எரிபொருள்) தாண்டியது. அடுத்து இரண்டாவது நிலையையும் (திரவ எரிபொருள்) தாண்டி ராக்கெட் விண்ணில் சென்று கொண்டிருந்தது.

ஒவ்வொரு நிலையையும் ராக்கெட் தாண்டிச் செல்ல, சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.

சில நொடிகளில் 2ட்வது நிலையைத் தாண்டி, குளிர்விக்கப்பட்ட கிரையோஜெனிக் நிலையை ராக்கெட் எட்டியது. கிரையோஜெனிக் நிலைக்குச் சென்றதும் குலுங்கிய ராக்கெட் எதிர்பார்த்த பாதையிலிருந்து விலகியது.

அடுத்த விநாடியே, கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட்டின் சிக்னலைப் பெற பலவாறு முயன்று தோல்வியுற்றனர்.

சற்று நேரத்தில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்த ஜி.எஸ்.எல்.வி. டிட்3 ராக்கெட், கடலில் விழுந்தது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றியடையாததால் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகளில் பலர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர். கட்டுப்பாட்டு அறையே சோகமயமாக மாறியது.

ஓராண்டுக்குள் அடுத்த ராக்கெட்: பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசியது:

ஜி.எஸ்.எல்.வி.ட்டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையையும் தாண்டி சென்றது.

விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து 293 விநாடிகள் சீராகப் பயணித்த ராக்கெட், மூன்றாம் நிலைக்குச் (கிரையோஜெனிக்) சென்றது. அப்போது ராக்கெட் சிறிது குலுங்கி, அதன் பாதையிலிருந்து விலகிச் சென்று கடலில் விழுந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டையும் அது இழந்தது.

இதில் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை.

கிரையோஜெனிக் தோல்வி குறித்து 2, 3 நாள்களில் ஆய்வு செய்யப்படும். ஓராண்டுக்குள் மீண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் செலுத்தப்படும். மீண்டும் சாதிப்போம் என்ற நம்பிக்கை இஸ்ரோவிடம் உள்ளது.

மிகவும் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளோம். இத்தொழில்நுட்பத்தில் நாம் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு உள்ளது.

செப்டம்பரில் ஜி.எஸ்.எல்.வி.: வரும் செப்டம்பரில் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட உள்ளது என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய டீசல் களஞ்சியம் கண்டுபிடிப்பு; 25,000 லீட்டர் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய டீசல் களஞ்சியம் ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்தக் களஞ்சிய தொகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்தும் இடையிலான லீற்றர் டீசல்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற் கொண்டுள்ளனர். இதன் போதே பெருந் தொகையான டீசலை கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, 12.7 மி.மீ. ரக 2250 ரவைகள் மற்றும் மோட்டார் குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். டீசல் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் இராணு வமும், பொலிஸாரும் தொடர்ந்து பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் கருமபீடம்






எதிர்வரும் 22ம் திகதி கூட வுள்ள 7வது பாராளுமன்ற த்தின் முதலாவது அமர்வுக் கான ஏற்பாடுகள் நிறை வடைந்துள்ளதாகவும் இன்று (16) முதல் 18 ஆம் திகதி வரை எம்.பிக்களின் தகவ ல்களை திரட்டுவதற்கான விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பாராளுமன்ற செய லாளர் நாயகம் தம்மிக தச நாயக்க நேற்று தெரிவித்தார்.

இம்முறை கூடுதலான புதுமுகங்கள் பாராளுமன்ற த்துக்கு தெரிவாகியுள்ளதால் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து தகவல் கருமபீடத் தினூடாக அறிவூட்டப்படவு ள்ளதோடு அவர்களது தகவல் களும் திரட்டப்படவுள்ளன.

பாராளுமன்றத்தின் முத லாவது அமர்வையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டு வரு வதோடு ஏனைய ஒழுங்கு களும் துரிதமாக இடம் பெற்று வருவதாக தம்மிக தசநாயக்க மேலும் கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொட ர்பாக பாராளுமன்ற செயலா ளர் தலைமையில் நேற்று (15) விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.

7 ஆவது பாராளுமன் றத்தின் முதலாவது அமர்வு 22ம் திகதி காலை 8.45 மணிக்கு இடம்பெறவுள்ளது. முதலாவது நிகழ்வாக சபா நாயகர் தெரிவு இடம் பெறும். அடுத்து சகல எம்.பி. க்களினதும் பதவி ஏற்பும் அதன் பின்னர் பிரதி சபா நாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகளும் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து 7 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என்றும் அவர் மேலும் கூறி னார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்ற செயற்பாடு இன்று முதல் துரிதகதியில் இன்று முல்லைத்தீவில் 1200 பேர்; 18ந் திகதி மேலும் 1300 பேர்


வவுனியா நிவாரணக் கிராமங்களில் எஞ்சியுள்ளவர்களை மீளக்குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இன்று (16) முல்லைத்தீவு நகரில் 1200 பேரும் எதிர்வரும் 18ம் திகதி 1300 பேரும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதேவேளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தவர்களையும் எதிர்வரும் 20ம், 22 ஆம் திகதிகளில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த திட்டமிட்டி ருப்பதாகவும் இதற்கமைய அவர்களது தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு நகரிலுள்ள முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, வண்ணான்குளம், உன்னாப்பிளவு, கரச்சிக்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீள்குடியேற்றும் பணிகள் இன்று முதல் மீண்டும் துரிதப்படுத்தப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரிலுள்ள மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, அவை மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை எதிர்வரும் 20, 22 ஆம் திகதிகளில் முல்லைத்தீவின் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவிலிருந்து இன்று முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய கொடுப்பனவு, உலர் உணவுகள் ஆகியவை வழங்கப்பட்ட பின்னர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

நிலக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கும் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கமநெகும வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளை கட்டுவத ற்கு பல தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வவுனியா நிவாரணக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக இன்னமும் 80 ஆயிரத்து 669 பேர் இருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவர்களனைவரையும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...