6 நவம்பர், 2010

மன்னாரில் 6 தினங்களுக்கு மின் தடை : சபை அறிவிப்பு

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதி உயர் மின் கோபுரங்களில் திருத்த வேலைகள் நடைபெறுவதால், எதிர்வரும் 06 தினங்களுக்கு மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 9,11,13,18,24,27 ஆகிய 06 தினங்களில் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை மின் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

எனினும் மன்னாரில் ஒவ்வொரு மாதமும் ஒரு காரணத்தைக் கூறி மின்தடை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் பயங்கர காற்று : கடல் கொந்தழிப்பு

கிழக்கு மாகாணத்தில் நேற்று முதல் கடுமையான கடல் கொந்தளிப்பான நிலை காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச்செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் என மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. இன்று பிற்பகல் காத்தான்குடி உட்பட பல கரையோர பகுதிகளில் கடல் அலைகள் வழமையான இடத்தை விட முன்னோக்கி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

கடலுக்குச் செல்ல வேண்டாமென மீனவர்களை வானிலை அவதான நிலையம் அறிவுறுத்துகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள்

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் எதிர்வரும் வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாகாத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமர்வுகளின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல முக்கியதர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் சாட்சிங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பேராதனை பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் திங்களன்று மீளத்திறப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மீளத் திறக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"காலவரையரையின்றி மூடப்பட்ட 4 பீடங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படும். கலை, விவசாயம், பொறியியல் மற்றும் விஞ்ஞான ஆகிய 4 பீடங்களும் உயர்கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய நாளை மறுநாள் திங்கட்கிழமை மீளத்திறக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வானில் பறக்கும் இரு புராதன விமானங்கள்

இலங்கையின் மிகவும் புரதான இரு விமானங்கள் மக்கள் பார்வைக்காக இன்று வானில் பறக்கின்றன என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

விமானப்படை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிகவும் புராதன விமானங்களான 'டய்கர் மொத்' மற்றும் 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படைக்குச் சொந்தமான 'சிப் மன்க்" ஆகியனவே ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பறக்கின்றன.

மக்களின் பார்வைக்காக 11.00 மணி வரை விமானங்கள் இரண்டும் பறக்கவுள்ளன.

'சிப் மன்க்' விமானம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு ராஜகீய விமானப் படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்


லண்டன்: தண்ணீரில் மூழ்கினாலும், இடிபாடுகளில் சிக்கினாலும் பாதிக்காத மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, "ட்ரேட்ஸ்மேன்' நிறுவனம், தண்ணீருக்குள் இருந்து பேசினாலும் பாதிக்காத மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கிக்கொண்டே இந்த போனில் பேச முடியும்.
ஒரு வாகனத்தின் பின்புறம் கட்டப்பட்டு, 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மொபைல் போன் இழுத்து செல்லப்பட்டது. அதன் பின், இரண்டு டன் கான்கிரீட் குப்பைகள் இந்த மொபைல் போன் மீது கொட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கு பிறகும் இந்த மொபைல் போன் பாதிக்கப்படவில்லை. தண்ணீராலும், விபத்துகளாலும் பாதிக்கப் படாத இந்த போனுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இந்நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், "கடந்த இரண்டு நாட்களில், 50 ஆயி ரம் போன்கள் விற்று தீர்ந்து விட்டன. இந்த போனுக்காக ஏற்கனவே நான்காயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கியூபாவில் விமான விபத்து: 68 பேர் பலிஹவானா: கியூபாவில் நடந்த விமான விபத்தில், 68 பேர் பலியாகியுள்ளனர். கியூபா நாட்டுக்குச் சொந்தமான விமானம் ஒன்று சாண்டியாகோ நகரிலிருந்து தலைநகர் ஹவானாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 28 வெளிநாட்டினர், 7 விமான ஊழிர்கள் உள்பட 68 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் சில நிமிடங்களில் நடுவழியில் கட்டுப்பட்டை இழுந்து நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். போலீசாரும், மீட்புப் படையினரும், மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், அமெரிக்க எண்ணை நிறுவனத்தில் பணிபுரியும் 19 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, தனியார் வாடகை விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில், இருந்த இரண்டு இன்ஜின்களில் ஒன்று பழுதானது. இதனால், உடனடியாக தரையிறக்க முயன்றபோது, அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 19 தொழிலாளர்கள், 2 விமான ஊழியர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டினர் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு: மூன்று பேர் ஸ்தலத்தில் பலி


மினுவாங்கொடை, மானம்மன பகுதி ஹோட்டல் ஒன்றில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவர் ஹோட்டல் முகாமையாளரையும் அவரின் இரு நண்பர்களையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுடப்பட்ட மூவரும் ஸ்தலத்திலே இறந்துள்ளனர்.

கம்பஹாவைச் சேர்ந்த வீரசேகர சமீர (வயது 33), அகரவிட்டயைச் சேர்ந்த தமிந்த கிரியல்ல (வயது 39), கம்பஹா அஸ்கிரியவைச் சேர்ந்த ஆனந்த ஹெட்டியாரச்சி (வயது 41) ஆகியோரே இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. தனிப்பட்ட குரோதம் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டிருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சந்தேக நபர்களை தேடி இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டம்: 173 தனியார் நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்து


சிறிய நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 173 தனியார் நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நீர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக பல தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அமைச்சர் இவர்களில் தமது அனுமதி பத்திரங்களை வியாபாரத்தை நோக்கமாகக் கருதித் தவறாகப் பயன்படுத்த முயற்சித்த 173 பேரின் அனுமதிகளே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேபோன்று தமக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை வியாபாரமாக்கி தவறாகப் பயன்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்விநியோகம் மாகாண அமைச்சர் சுபைர் ஆரம்பித்து வைத்தார்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீள்குடியேறியுள்ள மட்டக்களப்பு - உறுகாமம் பிரதேசத்திற்கு மின்சார விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட் டுள்ளது.

கிழக்கின் உதயம் வேலைத் திட்ட த்திற்கு இணைவாக ஏனைய உட் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் மின்விநியோகத் திட்ட த்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மாகாண அமைச்சு இதற் கான நிதியினை வழங்கியுள்ளது.

ஏறாவூர் பற்று செயலகப் பிரிவின் ஏ-5 வீதிக்கு சமீபமாகவுள்ள உறுகாமம் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற னர்.

விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் நன்னீர் மீன்பிடி என்பன இம்மக்களின் வாழ் வாதாரத் தொழிலாகும்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலையில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் துரிதம்திருகோணமலை மாவட்டத்தின் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் தற் போது துரிதமாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே யினால் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக ‘நாரா’ நிறுவனத்தின் அனுசரணை யுடன் 7500 மீன் குஞ்சுகள் விடப் பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கல்மெட்டியாவ குளம், இத்திக் குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய குளங்களில் இந் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கி ன்றது.

இலங்கையை கடற்தொழில் துறையை மாத்திரமின்றி நன்னீர் மீன்பிடித் துறையிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டி ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற நாமும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போரினால் சேதமடைந்த ஆலயங்கள் அரசாங்கத்தினால் புனரமைக்கப்படும் பிரதமர்

நாட்டை துண்டாடி கூறுபோடுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இன, மத, மொழி பேதமின்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு மஹிந்த சிந்தனை மூலம் உழைக்க வேண்டுமென பிரதமர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிலையத்தில் இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், இந்து மத குருமார் ஆகியோருடனான சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பிரதமர், குற்றங்கள் புரியாத மனித குலத்தை உருவாக்க சமயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்து மதத்திற்கும் எங்களது பெளத்த மதத்திற்கும் கலாசார ரீதியான, பண்பாட்டு ரீதியிலான பல்வேறு தொடர்புகள், இணக்கப்பாடுகள் உள்ளன.

சிங்கள மக்களின் திருமணத்தில் நடைபெறும் சடங்கு, சம்பிரதாயம் போன்றே இந்து மதத்திலும் இடம் பெறுகின்றன. இவ்வாறு பல விடயங்களை குறிப்பிட முடியும். நாட்டில் 25,000க்கு மேற்பட்ட வணக்கத்தலங்கள் உள்ளன. இவை அனைத்தையும் பராமரிக்க வேண்டும்.

வடக்கு கிழக்குட்பட நாட்டில் யுத்தத்தினால் சேதமடைந்த இந்து ஆலயங்கள் மற்றும் ஏனைய மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆத்மீக விருத்தியை நாம் ஏற்படுத்திக் கொள்வதுடன் அனைத்து மதங்களையும் புரிந்து நடந்து கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

கடந்த 30 வருடகால பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாடு சிறந்த சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இன்று இந்த நாட்டின் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி காணத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின்படி நெடுஞ்சாலை அபிவிருத்தி மற்றும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரம் நீர்ப்பாசனம், விவசாயம் என பல்வேறு துறைகளும் இன்று அபிவிருத்தி காணத் தொடங்கியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிதுள்ளது. சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் அத்தனை நிதியும், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியும் இன்று வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருகின்றன.

வெளிநாட்டவர்கள் அச்சமில்லாமல் இலங்கையின் வட கிழக்கிலும் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நாம் அபிவிருத்தி அடைவது போலவே ஆத்மீக ரீதியாகவும் நல்ல மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் மிகவும் கூடுதலான நன்மையினை வடக்கு கிழக்கு மக்கள் அடைந்துள்ளனர்.

ஏ-9 பாதை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்குக்கான போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று நமது நாடு செழிப்பான ஒரு நாடாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதை மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 158 முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் தமிழ் போராளிகள் 158 பேர் நேற்றுக் காலை தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டு, பெற்றோர்கள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பம்பைமடு, பூந்தோட்டம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், நெளுக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து இவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த இடங்களில் உள்ள புனர் வாழ்வு நிலையங்களுக்கு பொறுப் பாக இருந்த பாதுகாப்புப் படையி னர் இவர்களை உரியவர்களிடம் ஒப் படைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்
விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.

அவை முறையே சுக்கிரவார (ஐப்பசி வெள்ளி) விரதம், கார்த்திகை (கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதல் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரங்களில் அனுட்டிக்கும்) விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிந்த விரதம் கந்த சஷ்டி விரதமேயாகும். இன்று 6ஆம் திகதி கந்த சஷ்டி விரதம் ஆரம்ப மாகுவதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விரதம் அனுஷ் டிக்கப்படுகிறது.

விரதமாவது, மனதை ஐம்புலன்களின் எண்ணப்படி செல்லாது கட்டுப்படுத்தி, உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மட்டுப்படுத்தி, மனம், வாக்கு, காயம் எனும் முக்காரணங்களாலும் இறைவனை வழிபடுதலாகும்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலிய ஜனாதிபதி இல்லத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்
சமாதானம், அமைதி என்பவற்றின் உன்னத பண்புகளை நன்குணர்ந்து இன்றைய நாளைவிடவும் நாளைய தினத்திலே உலகை பிரகாசிக்கச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எனும் தொனிப்பொருளில் இருள் அகன்று ஒளிவீசும் தித்திக்கும் தீபாவளி திருநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் கொண்டாடப்பட்டது.

இந்த திருநாளை கொண்டாடுவதற்காக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். பெற்றோரை இழந்த, பல்வேறு காரணங்களினால் அநாதரவான நிலையில் காணப்படுகின்ற மற்றும் விசேட தேவைகளையுடைய சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கிய ஜனாதிபதி, அண்மையில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற கனிஷ்ட ஒலிம்பியாட் கணிதத் துறைசார்ந்த போட்டியில் முதலிடம் பெற்ற ஹட்டன், ஹைலண்ட் கல்லூரி மாணவன் ஏ. தீஷாந்தனுக்கு மடிக் கணனி ஒன் றையும் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; தீபாவளி என்பது தீய அசுரனிடமிருந்து மீட்சிபெற்று ஒளிமயமான காலத்தினை ஆரம்பிப்பதற்கு காலடி எடுத்துவைத்த நாளாகும். இன்று எமது நாடும் ஒளிமயமானதொரு நாடாக மாறியுள்ளது. தீயன அகற்றி, சிறந்த நட்புமிக்க, ஒருவருக்கொருவர் பரஸ்பர

புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய சமூகமொன்றினை நாம் உருவாக்குதல் வேண்டும். எனவே அதற்காக இந்த உத்தம திருநாளில் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

இன்று எமது நாட்டிலே எவருக்கும் விரும்பியவாறு பயமின்றி எந்தவொரு இடத்திற்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாம் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியானதொரு நாட்டை கட்டியெழுப்பியுள்ளோம்.

எனவே நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மிகவும் பயன்வாய்ந்த முறையில் வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

இந்த நாட்டின் இளம் பராயத்தினருக்கு மிகவும் சுதந்திரமாக, மகிழ்ச்சியுடன் வாழக்கூடியதொரு நாட்டினை நாம் உருவாக்கிக்கொடுத்தல் வேண்டும். அதேபோன்று அவர்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நாம் வாய்ப்பளித்தல் வேண்டும். எதிர்வரும் பொதுநலவாய போட்டிகளிலே திறமைகாட்டக்கூடியவாறு இந்த குழந்தைகளை தயார்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு கால்நடை அபிவிருத்தி கிராமிய சமூகமேம்பாட்டு துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சீ. பீ. ரத்னாயக்க, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ. பீ. ஜீ. குமாரசிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நுவரெலியா நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடச் சென்றார்.

இதன்போது, நுவரெலியா நகரினை அழகுபடுத்தும் வகையில் நீண்டகாலமாக இருந்துவந்த நுவரெலியா நகருக்கென தனித்துவமிக்க பாரிய சைப்பிரஸ் மரங்கள் வெட்டப்பட்டுள்ளமை பற்றி தமது கவலையை தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி அவை வெட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிடவும் மறக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் சைப்பிரஸ் மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்ததுடன் அதன் பிரகாரம் அந்த மரங்களை வெட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நுவரெலிய நகர மக்களை சந்தித்து சிநேகபூர்வமான முறையில் அவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, நுவரெலியா குதிரைப் பந்தய மைதானத்தையும் பார்வையிட் டார்.
மேலும் இங்கே தொடர்க...

வங்க கடலில் தாழமுக்கம் இலங்கையை நோக்கி நகர்கிறது 'ஜல்' சூறாவளி


திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீட்டருக்கு அப்பால் வங்காள விரிகுடா வின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணி ப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

இச்சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.

இச்சூறாவளி குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திருமலையிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த 3ம் திகதி இத்தாழமுக்கம் உருவானது. இது நேற்று முதல் சூறாவளியாக மாறி நகர ஆரம்பித்திருக்கிறது. இச் சூறாவளிக்கு ‘ஜல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இச்சூறாவளி மணித்தியாலத்திற்கு 15 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர்களாக உள்ளது.

இச்சூறாவளி இன்று 6ம் திகதி இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதாவது, திருமலையிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்குள் இச் சூறாவளி வந்து சேரும். அச்சமயம் இச்சூறாவளி தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் இன்று ஊடகங்களில் வளிமண்டலத் திணைக்களத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இச் சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்டியபடி கடலில் பயணம் செய்யும் என்பதால் அதன் தாக்கத்தை அப்பகுதி மக்களால் அதிகம் உணரக் கூடியதாக இருக்கும். அப்பிரதேசங்களில் இடி,மின்னலுடன் தொடர் மழை வீழ்ச்சி காணப்படும். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும்.

இச்சூறாவளி காரணமாக அதிகரித்த காற்று, இடி, மின்னல் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இச்சூறாவளி காரணமாகவே கடல் கொந்தளிப்பாக உள்ளது. அதனால் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இச் சூறாவளியின் விளைவாகவே காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சூறாவளி நாளை பிற்பகல் அளவில் தான் இலங்கைக்கு அப்பால் நகர்ந்து செல்லும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

11 தமிழக மீனவர்கள் நவ.8இல் விடுவிப்பு: இலங்கை

ராமேஸ்வரம், நவ.5: தங்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீன்வர்கள் 11 பேரை நவ.8ஆம் தேதி திங்கள் கிழமையன்று விடுவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 11 தமிழக மீன்வர்களை வரும் நவ.8 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கவிருப்பதாக இன்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது என்று மண்டபம் கடலோர காவல்படை அதிகாரி டி.எஸ்.சைனி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த மீன்வர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், இலங்கையிலுள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கடந்த நவ.3ஆம் தேதி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சிமடம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர், கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடல் எல்லையில் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாயாரைப் பார்க்க பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு

:

பிரபாகரனின் சகோதர சகோதரிகளை இலங்கைக்குள் வரவிடுமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திவயின சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இலங்கை இணைய தளங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததால், இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களுடன் இவர்கள் சந்திக்க உள்ளனர் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களுக்கு அனுமதி வழங்குவதை நிராகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக்கூட முடியாது என வினோதினி தெரிவித்திருந்ததாகவும் திவயின சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...