14 ஜனவரி, 2011



திருவள்ளுவராண்டு 2042 .1. 1.சனிகிழமை தமிழ் புத்தாண்டு தை மாதம் முதலாம் நாள் தமிழரின் உழவரின் திருநாள் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் புதிய பாதையின் தை பொங்கல் வாழ்த்துக்கள்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போம் - ஜனாதிபதி




* யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டோர் விரைவில் சட்டத்தின் முன்

* இனங்களிடையே பகைமை ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு வாரங்களில் நடவடிக்கை!



முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது நாட்டில் அராஜகம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தையும் அதன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒழித்துக் கட்டி எங்கள் நாட்டில் மீண்டும் சமாதானத்தையும் அமைதியையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்திய எனது அரசாங்கம் எக்காரணங் கொண்டும் மீண்டும் அந்தப் படுபயங்கர கொலையாளியான பிரபாகரனின் இலட்சியக் கனவை நிவைவேற்றுவதற்கு எவராவது முயற்சிகளை எடுத்தால் அவற்றை கடுமையான முறையில் செயற்பட்டு ஒழித்துக் கட்டிவிடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை (13) ஊடகங்களின் உயர் அதிகாரிகளையும் பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசியபோது கூறினார்.

எமது தேசிய ஊடகங்களுக்கு நாட்டு மக்களிடையே இன ஒற்றுமையையும் நல்லுறவையும் பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அரசாங்கத்தை அரசியல் லாபம் தேடும் எண்ணத்துடன் வேண்டுமென்றே தப்பான முறையில் கண்டித்து எழுதுவதன் மூலம் இன்று மக்களிடையே வலுவடையும் ஒற்றுமைக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்கள் விரும்பினால் என்னையும் எனது அரசாங்கத்தையும் கண்டித்து எழுதலாம். ஆனால் அவர்கள் எழுப்பும் கண்டனக் குரல் இந்நாட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

எனவே, இது விடயத்தில் ஊடகங்கள் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்குக் கேள்வி ஒன்றை எழுப்பிய ஓர் ஊடகவியலாளர், நாட்டுப்பற்றற்ற முறையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்யும் சில ஊடகங்கள், இணையத்தளங்கள், குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகள் மீது, ‘உங்கள் அரசாங்கம் ஏன் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியாது’ என்றார்.

அதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி, அவ்விதம் செயற்படுவதற்கு எனது அரசாங்கத்திற்குச் சட்டபூர்வமான அதிகாரம் இருக்கின்ற போதிலும், நாம் அவ்விதம் செயற்பட்டால் இலங்கை அரசாங்கம், ஊடகச் சுதந்திரத்தை அழித்துவிட்டது என்றும், போர்க் குற்றச் செயல்களை இழைக்கின்றதென்றும் எங்கள் அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் சர்வதேச ஊடகங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி எங்களை மின்சாரக் கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று கூறினார்.

தமிழ்ப் பத்திரிகைகள் இனிமேலாவது எல். ரீ. ரீ. ஈ. அமைப்பின் கைப்பொம்மைகளான வெளிநாட்டு நாசகார சக்திகளை ஆதரிக்கும் கொள்கையைக் கைவிட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் மீண்டும் வகுப்புவாதத்தையும் இனங்களுக்கிடையே பகைமை உணர்வையும் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிராக நான் கடுமையாக நடந்துகொள்வேன்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்றும் அரசாங்கத்தினால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது இருக்கிறதென்றும் ஓர் அரச விரோத செயற்பாடு இப்போதும் நடந்து வருகிறது.

உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவிலும் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. சமீபத்தில் ஓர் அமெரிக்க செனட்டர் சுடப்பட்டார்.

இலண்டன் மாநகரிலும் இந்த வன்முறைகள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றிக் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் கொள்ளை, கொலை, ஆட்கடத்தல் போன்ற வன்முறைகள் இடம்பெறுகின்றன.

எனது அரசாங்கம் இப்போது பாதாள உலகக் கோஷ்டிகளையும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களையும் கைதுசெய்து இருப்பதனால் நாட்டில் இப்போது குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.

எல். ரீ. ரீ. ஈ. இயக்கமே எங்கள் நாட்டில் போதைவஸ்துக்களின் பயன்பாடு அதிகரிப்பதற்குப் பின்னணியில் இருந்து கோடானு கோடி ரூபாய்களை இலாபமாகத் திரட்டியது. அப்போது கைகட்டி மெளனம் சாதித்துக்கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயந்தானா? என்று நான் அவைகளைக் கேட்க விரும்புகிறேன்.

தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டபோது, அப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதென்றே எனக்குத் தெரியாது என்று பதில் அளித்த ஜனாதிபதி, ஊடகங்களே இத்தகைய பிரச்சினைகளைக் கிளப்பி அரசாங்கத்தின் மீது பழிபோட எத்தனிக்கின்றன என்றார்.

இப்போது ஊடகங்கள் அழகிய இளம் பெண்கள் குட்டைப் பாவாடைகளை (மினி ஸ்கேட்) அணியக் கூடாதென்ற சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் பதில் அளிக்கப் போவதில்லை என்றார்.

அதேபோன்று அரசாங்கத்திற்கு எதிராக எத்தனையோ போலி பிரசாரங்கள் இன்று சில தீய சக்திகளினால் நாடெங்கிலும் பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு நான் பயப்படப் போவதுமில்லை; பதில் அளிக்கப் போவதும் இல்லை என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்படுமா? என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மாத்திரமே வெள்ளத்தினால் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீர் வடிந்துசென்ற பின்னர் நாம் அதுபற்றிய நிலைமையை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகிறேன் என்றார்.

நாம் தேர்தலை நடத்தாமல் இருந்தால் எங்கள் நாட்டு மக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு நிச்சயம் ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு இல்லாமற் போய்விடும் என்றும் கூறினார்.

விகிதாசார முறையில் தேர்தல்களை நடத்தினால் ஒரே கட்சி வேட்பாளர்களுக்கு இடையிலேயே குத்து வெட்டும் இரத்தக் களரிகளும் இடம்பெறுன்றன. ஆகவே நான் கூடியவரையில் அடுத்து வரும் தேர்தல்களைத் தொகுதி வாரியாக நடத்த விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டணியுடன் அரசாங்கத் தலைவர்கள் சமீபத்தில் சந்தித்ததைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இத்தகைய சந்திப்புகள் நாட்டில் ஜனநாயகத்தையும் சகஜ நிலையையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமென்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை இப்போது பொலிஸார் அடையாளம் கண்டுள்ளார்கள். விரைவில் கைதுசெய்து அவர்களை சட்டபூர்வமாகத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாம் ஆயுதந்தாங்கி அரசாங்க படைகளுக்கு எதிராக யுத்தம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ.யினரைக் கைது செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்த பின்னர் அவர்களில் பெரும்பாலானோரை மிகக் குறுகிய காலத்தில் விடுவித்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, 1971 ஆம் ஆண்டில் சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களையும் கைது செய்து அன்றைய சுதந்திரக் கட்சி அரசாங்கம், அவர்களுக்கு மூன்றாண்டு காலம் புனர்வாழ்வு அளித்த பின்னர் மன்னிப்பளித்து விடுதலை செய்தது என்று சொன்னார்.

1989 ஆம் 1990 ஆம் ஆண்டுகளில் ஜே. வி. பி. கிளர்ச்சியின் போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அவ்விதம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ளவில்லை. அந்த ஐ. தே. க அரசாங்கம் அன்று குற்றமிழைத்த ஒரு சில சிங்கள இளைஞர்களையும் ஒரு பாவமும் அறியாத பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களையும் பொது இடங்களிலும் வீதிகளிலும் டயர்களை எரித்துத் தகனம் செய்தார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.

லீடர் பத்திரிகையின் பிரதிநிதி ஒருவர், தங்கள் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு இரண்டாண்டு காலம் கடந்துவிட்டபோதிலும் குற்றம் இழைத்தவர்களை இன்னும் கைது செய்யவில்லையே! என்று கேட்டார்.

அதற்கு ஜனாதிபதி அதுபற்றி உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் நான் அவர்களைப் பிடித்துத் தண்டிப்பேன், இந்தக் கொலையாளிகளைத் தண்டிப்பதற்கு எனது அரசாங்கத்திற்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்றும், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை விசாரணையும் இழுபறியிலேயே உள்ளது.

நாட்டில் இப்போது உணவுப் பண்டங்கள் மற்றும் பாவனைப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக இராணுவத்தினரையும் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சிவில் பணிகளில் ஈடுபடுத்தியபோது அதற்கும் சில ஊடகங்கள் என்னையும் எனது அரசாங்கத்தையும் கண்டித்து எழுதுகின்றன என்றார்.

மலிவு விலை கடைகளைக் (கிசீனீஹீலீசி ஷிகீச்ஙீஙூ) குத்தகைக்கு எடுப்பவர்கள் மற்றவர்களுக்குக் கூடிய வாடகைக்குக் கொடுப்பதனால், பொருள்களின் விலை அங்கு அதிகரித்து இருக்கிறதென்றும், தரகர்களும் இந்த விலை அதிகரிப்புக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதில் அளித்த ஜனாதிபதி இன்னும் இரண்டு வாரங்களில் வர்த்தக அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார்.

இந்தத் தடவை நாம் ஒரு நெல் மணியையாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமலேயே அரிசி விலை ஏற்றத்திற்கு இடமளிக்காமல் அவதானமாக நடந்து கொண்டோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஊடகங்கள் சமீபத்தில் பிரதம நீதியரசரைத் தாம் கண்டித்துப் பேசியதனால் அவர் மனமுடைந்து பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என்ற வதந்திகளைப் பரப்பப்கூடிய செய்திகளை வெளியிட்டன என்று கூறிய ஜனாதிபதி, ‘நான் எனது இரண்டாவது தவணை பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தைப் பிரதம நீதியரசரின் முன்னிலையில் செய்துகொண்டதன் பின்னர் அந்த நல்ல மனிதரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும், இவ்விதம்தான் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளையும் வதந்திக ளையும் பரப்பி தூபமிடுகின்றன என்றும் ஜனாதிபதி அவர்கள் கண்டனம் தெரி வித்தார்.

உலக கிரிக்கெட் கிண்ணத்திற்கான போட்டிகள் நடைபெறும் இலங்கை மைதானங்களின் திருத்த வேலைகள் சீரற்ற காலநிலையின் காரணமாக சற்றுத் தாமதமானாலும், அந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என்று கூறினார்.

எரிச் சோல்ஹெய்ம் இலங்கை வருவதை நான் தடுக்கவில்லை. அவர் தாராளமாக இங்கு வந்துபோகலாம். அவரது இலட்சியக் கனவு நிறைவேறவில்லை என்பதையும் இன்று நாட்டில் யுத்தமின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் அனைத்து ஊடகங்களையும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். தயவுசெய்து நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உதவி செய்யுங்கள். தமிழ் மக்களின் வேதனை வடுக்களை சுகப்படுத்துங்கள். அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் பழிவாங்கும் எண்ணங்களுக்கும் தூபமிடாதீர்கள். இவ்விதம் தமிழ்ப் பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு உதவி செய்ய முன்வராவிட்டால், நாட்டில் இனங்களிடையேயான பகைமை உணர்வு நீங்காது என்று கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சமீபத்தில் என்னைச் சந்தித்தபோது, கிளிநொச்சியில் உள்ளவர்களுக்குத் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டபோது, நான் அங்குள்ள 27 ஆயிரம் பேருக்கு இலங்கை வங்கியின் மூலம் இரண்டரை பில்லியன் ரூபாவை இலகு கடனாக வழங்கினேன். அம்பாந்தோட்டையில்கூட நாங்கள் இவ்விதம் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

இந்திய அரசாங்கமும் சீன அரசாங்கமும் நாட்டின் வடபகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கை செய்வதற்கும் மீள் நிர்மாணம் செய்வதற்கும் எமக்கு கோடானு கோடி ரூபாய்களை இலகு கடனாக வழங்கி உதவி செய்கின்றன. இந்நாடுகளுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று சொன்னார்.

ராகுல்காந்தி தனது கைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளாரே என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி,

இந்தியா எங்களுக்கு எத்தனையோ வகையில் உதவி செய்திருக்கிறது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி செய்திருக்கிறது.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி செய்வதையும் வரவேற்போம்.

ஆனால், அது ஓர் இலங்கைத் தீர்வாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிவுறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லலாம். ஆனால், சுதந்திரக் கட்சியினர் நிச்சயம் செல்லமாட்டார்கள். எங்களுடன் இணைந்துகொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் இங்குள்ள வசதிகளையும் சலுகைகளையும் விட்டுவிட்டுச் செல்லமாட்டார்கள் என்று தமது ஆசனத்திலிருந்து எழுந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்கம் பலமிழந்ததாக அறிவிப்பு


இரு வாரங்களாக நீடித்த அடை மழை நேற்று முதல் குறைவடைய ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இரு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அடை மழைக் காலநிலையும் இன்று (14ம் திகதி) மாலையாவதற்குள் வழமையான நிலைக்குத் திரும்ப முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளி மண்டலத்தில் இலங்கைக்கு அருகில் கிழக்காக உருவாகி ஒரு வார காலமாக நீடித்த அமுக்க நிலை நேற்று முதல் பலவீனமடைய ஆரம்பித்துள்ளது. அதனால் இன்று மாலையாவதற்குள் காலநிலை சீரடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரு வாரங்களாக தொடராக அடைமழை பெய்து வந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் நேற்று மழை குறைவடைந்திருந்தது. வெள்ள நீரும் வடியத் தொடங்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களும் நேற்று முதல் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்லுவதற்கு ஆரம்பித்திருப்பதாக மாவட்ட மட்ட அதிகாரிகள் கூறினர். வானிலை அவதான நிலைய அதி காரி மேலும் கூறுகையில் அடைம ழைக் காலநிலை குறைவடைந்தா லும் கிழக்கு, வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும்.

அதேநேரம் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் அடிக்கடி கொந்தளிப்பதாகக் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மணித்தியாலயத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 மீற்றர் வரை வேகத்தில் காற்று வீச முடியும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் கடும் குளிர்:கொழும்பு வெப்பநிலை 18.8 ச் வி

நாட்டில் நிலவிவரும் குளிரு டன் கூடிய காலநிலை காரண மாக கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்து குளிர்காலநிலை நிலவி வருகிறது.

கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை 18.8 செல்சியசாகக் குறைவடைந்துள்ளது. 61 வருடங்களின் பின்னர் கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை மிகவும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வரெலியா மாவட்டத்தின் வெப்பநிலை 7.9 செல்சியசாகவும் குறைவடைந்துள்ளது. அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வெப்பநிலையும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் குளிர்காலநிலை தொடரும் என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையின் மழை வீழ்ச்சி அண்மை நாட்களில் 100 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள கொழும்பு வானிலை அவதானிப்பு மையம், எந்தவொரு மோசமான காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

உலகளவில் எதிர்கொள்ளப்படும் ‘லாநினா’ விளைவை இலங்கையும் எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அண்மைய நாட்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மோசமான மழைவீழ்ச்சி காணப்படுவதாகவும், கடல் நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஆவியாகும் நீர் வானில் கடுமையான மேக மூட்டங்களை உருவாக்கி மோசமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதே பொதுவாக ‘லாநினா’ விளைவு என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மேலைத்தேய நாடுகள் பலவற்றில் மோச மான காலநிலை நிலவுகிறது. இதன் பாதிப்பே இலங்கையின் மோசமான மழை வீழ்ச்சி என்றும் வானிலை அவதானிப்பு மையம் கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் ஆளுமைக்கு பாக். ஜனாதிபதி சர்தாரி பாராட்டு


பாகிஸ்தானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை அவரது மாளிகையில் சந்தித்துள்ளது.

இதன் போது 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசாங்கத்தை மனப்பூர்வமாக பாராட்டுவதாகவும் உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை. முழுமையாக அடக்கியது பெரும் சாதனையென்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பாராட்டுகளை தெரிவித்தார்.

யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலும் இலங்கை அரசு சிறப்பாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள் எழுப்பி பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடைய செய்திருப்பது பெரும் சாதனையென்று பாராட்டிய பாகிஸ்தான் ஜனாதிபதி, ஒரு நேர்மையான, நெறியான தேசத்தலைவரின் சிறந்த ஆளுமை மூலமே இதனை சாதிக்க முடியுமென மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் கல்வியறிவில் ஆசிய நாடுகளிலேயே முன்னணியில் திகழ்கின்றார் கள் என தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி, தம் மக்களின் கல்விப் பசியை போக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தங்களது திறமை மிக்க கணித ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் குறைந்த பட்சம் 1000 இலங்கை கணித ஆசிரியர்களின் சேவை பாகிஸ்தானுக்கு அவசியமாக தேவைப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சில வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்ட இலங்கையணி 1996ம் ஆண்டில் வெற்றியீட்டியதும் இலங்கை சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் முதல் 3ம் நிலைகளில் இருப்பது பாராட்டப்பட கூடியது எனவும் கூறினார். தான் பல வருடங்களாக இலங்கை அணியின் பகிரங்க ஆதரவாளராகவும் இருப்பதாக தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.

இவ் பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக் குழுவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தனது துணை வியார் சந்திரா மாலினியுடன் சென்றிருந்தார். இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர் விஜயகலா மகேஸ்வரன், கமலா ரணதுங்க ஆகியோருடன் பாராளுமன் றத்தின் பிரதிச் செயலாளர் தம்மிக்கா கித்துள்கொட ஆகியோரும் சென்றிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்கள் 275 ஆக அதிகரித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165494 பேர் இடம்பெயர்ந்து 275 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின் றன. 57419 குடும்பங்களைச் சேர்ந்த 213711 பேர் இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதுவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 145131 குடும்பங்களைச் சேர்ந்த 541688 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வவுணதீவு, பட்டிப்பளை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, செங்கலடி, ஏறாவூர், கிரான், போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 45 வீடுகள் முழுமையாகவும் 115 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம். சி. அன்சார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவிகளின் அண்டிய பகுதிகளில் வசிப்போர் மற்றும் குளங்களை அண்டியுள்ளவர்களும் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆரையம்பதி வாவியோரம் உள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்திலும், காங்கேயனோடை கிராம மக்கள் இடம்பெயர்ந்து பாலமுனை அஸ்ரப் வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

அதே இப்பிரதேசத்தில் உள்ள குபா பள்ளிவாயலின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவியோரம் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயமுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரம் பேர் தஞ்சம்; நிவாரணப் பணிகள் துரிதம்; ரூ. 213 மில்லியன் நிதி ஒதுக்கீடு


கிழக்கு மாகாணம் உட்பட 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோர் தொகை 10 இலட் சத்து 81, 819 ஆக உயர்ந்துள்ளது. இதில் 83, 722 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 25, 348 பேர் 591 முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதோடு இன்று மேலும் 75 மில்லியன் ரூபா அனுப்ப உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் முதலாவது விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வழமைக்கு மாறான அசாதாரண நிலையினாலே இவ்வளவு மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது சுனாமி அனர்த்தத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் ஏற்பட்ட மோசமான அனர்த்தமாகும்.

வெள்ளத்தினால் 2, 87, 871 குடும்பங் களைச் சேர்ந்த 10, 81, 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தோர் தொகை 23 ஆக அதிகரித்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். நாம் மேற்கொண்ட ஒத்திகைகள், அறிவூட்டல்கள் காரணமாக உயிர்ச்சேதங்கள் குறைக்க முடிந்துள்ளது. அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூட உயிர்ச்சேதம் குறைவாகவே இடம்பெற்றுள்ளன.

வெள்ளப் பெருக்கினால் 2, 680 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 15, 274 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. வெள்ளம் வடிவதோடு சேதமடைந்த வீடுகளின் தொகை இரட்டிப்பாகும்.

வெள்ளத்தினால் வயல் நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கணிக்க முடியாதுள்ளது.

இந்த பாரிய சேதத்துக்கு முகம் கொடுக்கக்கூடிய சக்தி எமது அரசாங்கத்திற்கு இருக்கிறது. இத்தகைய அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தெளிவான திட்டம் உள்ளதாலே இதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உரிய பணிப்புரை களை வழங்கினோம். சுற்று நிருப ங்களுக்கு மட்டுப்படாது பாதிக்கப் பட்ட மக்களுக்காக சகல நடவடிக் கைகளும் எடுக்கப்படுகிறது. இதற் கான சகல வழிகாட்டல்கள் மற் றும் பணிப்புரைகளையும் ஜனா திபதி வழங்கி வருகிறார். தினமும் இரு தடவையாவது அவர் என் னுடன் தொடர்புகொண்டு உரிய பணிப்புரைகளை வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையி ன்றி நிவாரணம் வழங்க நிதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் கேட்டவுடனே நிதி அனுப்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒருவரையும் கூட பட்டினி போடக்கூடாது என்பது ஜனாதிபதியின் கண்டிப் பான உத்தரவாகும்.

கொழும்பில் இருந்து மேலதிக பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு அனுப்பப் படுகிறது. பால்மா, படுக்கை விரிப்பு, துவாய் என்பனவும் வழங்கப்படுகிறது. போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் வழங்கி வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக பல நாட்டுத் தலைவர்கள் ஜனாதி பதியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இந்தியாவில் இரு ந்து இரு விமானங்களில் தலை யணை, பிளங்கட், உலர் உணவு உட்பட பல பொருட்கள் இன்று வந்தடைய உள்ளன. அவை உட னடியாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வர்த்தகர்கள் போன்றோரும் உதவ முன் வந்துள்ளனர். பழுதடையாத உணவுகள், தலையணை, படுக்கை விரிப்பு என்பனவற்றை வழங்குமாறு கோருகிறோம். சிலர் நிதி திரட்டுவ தாக அறிகிறோம். யாருக்கும் நிதி வழங்காதீர்கள். மேலும் பல நாடுகளின் உதவிகளைப் பெற பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நிர்மாணிக்கவும் வீட்டுத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். சுயதொழில் முயற்சிகளை தொடரவும் உதவ உள்ளோம். வீடுகளை அமைக்கவும் நிவாரணம் வழங்கவும் மாத்திரம் 6000 மில்லியன் வரை செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...