12 ஜூலை, 2011

11 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்

பிரதேச அரசியல்வாதி ஒருவர் 11 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் கொபெஹிகனை என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது இளைய சகோதரனுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது, அப்பக்கமாக வருகை தந்த சந்தேக நபரான கொபெஹிகனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர், தனிமையில் இருந்த மேற்படி 11 வயதுடைய சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

தாய் வீட்டிற்குத் திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தவற்றைத் தாயாரிடம் எடுத்துக் கூறவே அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.

"இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

"கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.

ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை. இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவ வீரர்களால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது.

எனவே சட்டவிரோதமாக வெளியில் உள்ள இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். உள்நாட்டில் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவர்களை விரைவில் கைது செய்து இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ

நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம் எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது. நாங்கள் நியூஸிலாந்திற்குச் செல்ல வேண்டும்" என எழுதப்பட்ட பதாதைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர்.

"புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென" அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.

அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் வரவேற்கப்படவில்லையென்பதே எங்களது தகவல் என ஜோன் கீ குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...