3 ஏப்ரல், 2010

5 மாவட்டங்களில் இடம்பெயர்ந்த 45, 692 பேர் வாக்களிக்கத் தகுதி


எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாட்டின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 45,692 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களே இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்படி கோரப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், விண்ணப்பித்த இடம்பெயர்ந்த மக்கள், வாக்களிப்பதற்காக விசேட வசதிகளைச் செய்து கொடுப்பதற்குத் தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சுமார் 96 விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டிப் பிரதேசம் இன்று மஹிந்தானந்த அலுத்தகமகேவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது


இம்முறைநாடாளுமன்றத்தேர்தலில்அரசாங்கம்விளையாட்டுவீரர்களையும்
நடிகர்களையும்

களம் இறக்கிமக்களுக்குவேடிக்கைகாட்டுகிறது.யுத்போதையைமக்களுக்குஊட்டி அரசியல்நடத்தியஆட்சியாளர்இன்றுகேளிக்கைநிகழ்வைமேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின்றனர்.



இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர், இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர்.

ஏகாதிபத்திய விரோத நடிப்புக்கள் இன்று மேடையேற்றப்படுகின்றன. தேசத்தின் பஞ்சாயத்து, குமார என வர்ணிக்கப்படும் விமல் வீரவன்சவின் ஆடையைக் களைந்தால், உள்ளே அமெரிக்க உள்ளாடை இருப்பதைக் காணலாம்.

தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த அரசாங்கம் சரணாகதி அரசியலுக்குச் சென்று விடும்.

இடதுசாரிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் நிலவியது. இன்று அது இல்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று இந்திய ஆதிக்க சக்திகளின் சதிக்குள் சிக்கிக் கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மீள முடியாதவாறு அதனுள் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் கூட்டமைப்பில் இன்று சிதைவு ஏற்பட்டிருக்கின்றது.

40 வருட காலமாகத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் எமக்கு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சகல தகுதியும் உண்டு" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பதியுதீனின் அலுவலகம்மீது தாக்குதல் : மன்னாரில் பதற்ற நிலை



மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அலுவலகம் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்தீன் மசூரின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மன்னாரில் அச்ச நிலை தோன்றியிருந்தது. உப்புக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் றிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது, பொலிசார் அவர்களைக் களைந்து போகுமாறு பணித்தனர்.

அச்சமயம் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் நூர்தீனின் ஆதரவாளர்கள் மன்னார் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர்களின் வாகனங்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கபொத(சா/த) பெறுபேறுகள் தேர்தலின் பின் வெளிவரும் : திணைக்களம் தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புக்குப் பின் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

பெறுபேறுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பெறுபேறுகள் தபாலிடப்பட்டதன் பின்னரே இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யபடும் என்றும் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கின்றன என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் 3 லட்சம் பேரும் பழைய பாடத் திட்டத்தின் பிரகாரம் மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அடங்கலாக இரண்டரை லட்சம் பேரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ததேகூ ஆயுதம் தங்கிய குழுவல்ல; ஜனநாயக அமைப்பு : அரியநேத்திரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதம் தாங்கிய குழுவாக செயற்படவில்லை. அது ஜனநாயக ரீதியில் செயற்படுகின்ற அரசியல் கூட்டமைப்பாகும். எம்மைத் தடை செய்வதாக அரசாங்கம் கூறுமானால் அதன் அர்த்தம் என்ன? எமது ஜனநாயக போராட்டத்தை நாம் கைவிட்டு விடுவோம் என்று எவரும் எண்ணக்கூடாது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் தமிழ் மக்களின் அலை திரண்டு கொண்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது சமூகத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் விடிவு, சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இருந்தும் அது தோல்வி கண்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் நாம் எமது சமூகத்தின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியில் அரசியல் கட்டமைப்பினூடாக போராடி வருகின்றோம்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதனால் எமது ஜனநாயக நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை. இவ்வாறான நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமாகப் பார்க்கக்கூடிய விடயமல்ல. பாரதூரமான விடயமாகும். அரசாங்கம் என்ற வகையில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருகின்ற அரசியல் சார்ந்த அமைப்பைத் தடை செய்வது எவ்வாறு சாத்தியமாகும்?

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. இந்நிலையில், அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறுமாக இருந்தால் அல்லது அவ்வாறு எண்ணத் தோன்றுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான குரலை நசுக்குவதற்கான நடவடிக்கையாகவே அது அமையும்.

அத்துடன், இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு என்று எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.

அரசாங்கம் என்னதான் கோஷமிட்டாலும் தமிழ் மக்களுக்கான குரலாக விளங்குகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை எவரும் கட்டுப்படுத்த முடியாது. அதனை நாம் கைவிடப் போவதுமில்லை.

காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்"என்றார்
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சரவையைக் குறைக்க தேர்தல் முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை : ரணில்





அமைச்சரவையை 35 ஆகக் குறைக்கப் போவதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் போலியானவை. மக்களை ஏமாற்றுவதற்கான யுக்தியே இது. அமைச்சரவையைக் குறைக்க வேண்டுமென்று உண்மையான நோக்கம் இருந்தால் தேர்தல் முடியும் வரை காத்திராது எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னராக அதனைச் செய்து காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஏப்ரல் 9ஆம் திகதி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது வேலைத் திட்டமே 17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவி, அதன் மூலம் மக்கள் விரும்புகின்ற ஜனநாயகம் நிறைந்த நல்லாட்சிக்கு வழிவகுப்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் கல்கிசையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவரும் முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தவறியுள்ளதுடன் விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு யுத்தத்தின் மேல் காரணம் கூறப்பட்டது. இருந்தும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் கூட இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

யுத்தத்திற்கு நிதி செலவிடப்பட வேண்டுமென்றாலும் செலவே இல்லாது செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை. அந்த வகையில் அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அதன் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுவதற்கும் ஜனாதிபதி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், பொலிஸ் துறை, தேர்தல்கள், அரச சேவை உள்ளிட்ட சகல துறைகளிலும் பாரிய குளறுபடிகள் இடம்பெற்று வருவதுடன் குறிப்பிட்ட துறைகளுக்குப் பாரிய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன.

இவ்வாறான காரணத்தால் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. பொலிஸார் தமது கடமையை செய்வதற்கு முடியாதிருக்கின்றனர். இவ்வாறு முழு நாட்டுக்கும் அழுத்தங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்து கொண்டு தான் மீண்டும் அதிகாரத்தைக் கேட்டு அதற்காக போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது இன்றைய அரசாங்கம். அதில் முதலாவதே அமைச்சரவையை 35 ஆகக் குறைக்கப் போவதான வாக்குறுதியாகும்.

இது அரசாங்கத்தினால் கூடுமானதல்ல. அவ்வாறு குறைப்பதனால் அதனை 5ஆம் திகதிக்கு முன்பே செய்து காட்ட வேண்டும். இது நான் ஜனாதிபதிக்கு விடுக்கின்ற சவாலாகும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை





யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மூன்றாம் ஆண்டு மாணவன் இன்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பூநகரிப் பகுதியைச் சேர்ந்த பா.கருணாநிதி என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

மேற்படி நபர் மனநலம் குன்றி இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார்.

இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட இருந்த இம் மாணவன் நாச்சிமார் கோயிலடியில் உள்ள தனது அறையில் வைத்து தற்கொலை செய்துள்தாக தெரிவிக்கப்படுகின்றுது
மேலும் இங்கே தொடர்க...

ஆளும் கட்சியினருக்கிடையே மோதல்-



ஆளும் கட்சியினருக்கிடையே மோதல்- வேட்பாளர் ஒருவர் விளக்கமறியலில்
புத்தள மாவட்டத்தின் பிரதியமைச்சரின் மகனை, ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் புத்தள மாவட்ட வேட்பாளர் சனத் நிஷாந்த பெரேரா துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதனை தெடர்ந்து புத்தளம் மாவட்ட மஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த வேட்பாளரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்மாறு உத்தரவு பிரப்பித்துள்ளது.

குறித்த வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளை பெற்று கொள்ளவே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்னறது.

இம் மாதம் 8 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை, நுவரெலியா போன்ற பல மாவட்டங்களில் இவ்வாறான போட்டி நிலைகள் தொடர்கின்றமை குறிப்பிடதக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்


புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (புளொட் தலைவரின் பேட்டி)

(நாங்கள் இனி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எப்பொழுதும் நான் தயாராக இருக்கிறேன்..!: புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன் தீபச்செல்வன் நடத்திய உரையாடல்…) தம்பி இப்படி ஏன் செய்தான்? என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் (டகஞபஉ) அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக் குறிப்படும் சித்தார்த்தனை வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்…..
தீபச்செல்வன் : தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 இன் பின்னர் அதற்கான பல அவசயங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றினைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?

புளொட் தலைவர் சித்தார்த்தன் : மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17க்கு முன்னர், மே 17இற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேணடி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துள்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன்.

இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைதான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்த்தை கொடுத்து இறுதிவரை சரத்பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.

சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தோம்.

தீபச்செல்வன்: இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செறய்படுவீர்களா?

புளொட் தலைவர் சித்தார்த்தன்.. தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபாமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாமான தீர்வை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.

தீபச்செல்வன் : அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது?

புளொட் தலைவர் சித்தார்த்தன்.. நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.

ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது போல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்தோம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார்.

இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.

இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால் தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.

தீபச்செல்வன் : இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?

புளொட் தலைவர் சித்தார்த்தன்… 1990ஆம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 இல் முள்ளி வாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலத்தியே இருந்தோம். கொழும்பிலும் மலை நாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.

வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தன் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நூங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள்.

நாங்கள் அழிவுதான் போராட்டம் என்று பார்க்கவில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துதான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லா விட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிகிக்கிறோம் என நினைக்கிறோம்.

அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைச்சு செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைச்சு அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

தீபச்செல்வன் : இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?

புளொட் தலைவர் சித்தார்த்தன்… அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயக் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்ததிருக்கிறேன். முக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உன்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரபரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தீபச்செல்வன் : வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

புளொட் தலைவர் சித்தார்த்தன்… வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

தீபச்செல்வன் : விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள் கையளிக்கலாம் அல்லவா? கிழக்கில் யுத்த்தின் பின்னர் உருவாகிய நிலமைகளைப்போல வடக்கில் ஏற்படால் தவிகீக்க இது உதவலாம். ஆதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் நீங்கள் வலியுறுத்தலாம் அல்லவா?

புளொட் தலைவர் சித்தார்த்தன்…. நீங்கள் சொல்லுவதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இப்பொழுது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் யாரும் திரிவதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் இப்பொழுது வெளியில் எந்த ஆயுதங்களுடனும் செல்வதில்லை. காவல்துறையினர் இங்கு பாதுகாப்பில் பணி புரிகிறார்கள். அவர்களைத் தவிர எனக்கு எந்த ஆயுதப் பாதுகாப்பும் இல்லை. ஏனென்னறால் ஆயுதச் சூழலற்ற ஜனநாயகச் சூழலே எங்களுக்கு தேவைப்படுகின்றது. அதை நான் வலியுறுத்துகிறேன்.

தீபச்செல்வன்: தேர்தல் பிரசாரங்களின் பொழுது உங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் சில தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என உங்கள் வேட்பாளர்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. எதற்காக அப்படி சொல்லுகிறீர்கள்?

புளொட் தலைவர் சித்தார்த்தன்.. தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியால் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகித்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்….
நேர்காணல் : தீபச்செல்வன்
மேலும் இங்கே தொடர்க...

ஈரானை வழிக்கு கொண்டுவர சீனாவுடன் ஒபாமா ஆலோசனை







'ஈரான் தொடர்பான, அணுசக்தி தயாரிப்பு விஷயத்தில் ஈரான் மேற்கொள்ளும் சாதகமற்ற போக்கு குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அவசரமாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவிடம் தொலைபேசியில் பேசினார்.ஈரானின் அணுசக்தி திட்டத்தில், அணு ஆயுத தயாரிப்பு இருக்கிறது என்று கூறி, அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் கொண்டு வரும் என்ற கருத்து எழுந்த நிலையில், இப்பிரச்னை குறித்து பேசுவதற்காக இத்துறையில் பொறுப்பு வகிக்கும் ஈரானின் சயீது ஜலீலி, பீஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் இரவு அவர், போன் மூலம் சீன அதிபரிடம் பேசினார்.அப்போது, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள அணுஆயுத பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த ஒபாமா,'அணுஆயுத பரவலை தடுப்பது மற்றும், அணுஆயுத பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பது குறித்து, உங்கள் கருத்தை தெரிவிக்க நல்ல வாய்ப்பு' என்றார்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை:அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவிடம் பேசினார். அப்போது இரண்டு பேரும், ஈரான், ஜி-20 மற்றும் நடைபெற உள்ள அணுசக்தி பாதுகாப்பு மாநாடு ஆகியவை குறித்து விவாதித்தனர்.மேலும், இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் வளர்ச்சியடைவதன், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து, பொது விவகாரங்கள் துறை துணை அமைச்சர் பி.ஜே.கிரவுளி கூறுகையில்,' கடந்த காலங்களில், ஈரான் தொடர்பான ஒவ்வொரு தடைகளிலும், சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என, சீனா தெரிவித்துள்ளது. தற்போது எந்த தீர்வுக்கும், அடிபணிய மறுக்கும் ஈரான் மீது, நாங்கள் எடுக்கும் நடவடிக்கை, சரியானது என்பதை சீனா உணர்ந்திருக்கும்' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அல்-குவைதாவுக்கு ஆதரவு:டாக்சி டிரைவர் சிக்கினார்





சிகாகோ:அமெரிக்காவில் கைதான, பாகிஸ்தான் வம்சாவளி டாக்சி டிரைவர் மீது அல்-குவைதா அமைப்புக்கு ஆதரவு மற்றும் நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரில், ராஜா லாராசிப் கான் என்ற டாக்சி டிரைவரை கடந்த வாரம், அந்நாட்டின் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.பாக்., வம்சாவளியைச் சேர்ந்த இந்த டிரைவர், ஹூஜி பயங்கரவாத அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரிக்கு நெருக்கமானவர் என, விசாரணையில் தெரிந்தது.'சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு போதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்' என, விசாரணையில் லாராசிப் கான் கூறினான்.

இந்நிலையில், அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் லாராசிப் கான் உதவி அளித்ததாக, அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வரும் 7ம் தேதி சிகாகோ கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைக்கு லாராசிப் கான் ஆஜர்படுத்தப்படுகிறான். அப்போது அவனுக்கு எதிராக பல ஆதாரங்களை அரசு தரப்பினர் சமர்ப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொலித்தீன் கொடிகள் 17,000 கிலோ, கட்அவுட் 3600 நேற்றுவரை அகற்றல் 4ம், 5ம் திகதிகளில் பொலிஸ் நடவடிக்கை தீவிரமாகும்


தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வேட்பாளர்கள், ஆதரவாளர்களினால் போடப்பட்ட வர்ண பொலித்தீன் கொடிகள் இன்றுவரை சுமார் 16,754 கிலோ மற்றும் 3603 கட்அவுட்டுகள், 824 பெனர்கள் பெருந்தொகையான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் போடப்படும் வர்ண பொலித்தீன் கொடிகள், பெனர்கள் கட்அவுட்கள் போஸ்டர்கள் அகற்றும் வேலைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் இவற்றை அகற்றிக் கொண்டு செல்லும் போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீண்டும் அதே போன்ற போஸ்டர்களையும், பெனர்களையும், கட்அவுட்டுகளையும் வைக்கின்றனர்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் இவை தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், நாளை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் திகதி நள்ளிரவு வரையில் கட்டவுட், பெனர், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையை மிக கடுமையாக பொலிஸார் கடைப்பிடிப்பார்கள் என்பதுடன் ரோந்து சேவையின் போது பொலிஸார் கண்காணிப்பு நடவடிக் கைகளையும் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

1365 பேர் ஒப்படைப்பு: பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்


புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு பெண்கள் விடுதி மற்றும் பம்பைமடு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலுமே இவ் விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இயங்கவுள்ள இக் கருமபீடங்களுக்கென தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்வரெனவும் அவர் கூறினார்.

குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தமது தேவைகளை இலகுவாக்கும் வகையில் கையேடுகள் அடங்கப்பெற்ற கோப்பும் அவர்கள் முழுமையான புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய பிரஜைகளைப் போல் வாழ தகுதி பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வழங்கப்படும் கோப்பில் மருத்துவர்களால் பரித்துரைக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை முறைகள், கலந்தாலோசிக்கப்பட வேண்டிய வைத்திய நிபுணர்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்கள் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஐ.ம.சு.முவிலுள்ள கட்சிகள் ஏகதீர்மானம்

2010 பொதுத் தேர்தல் முடிவடைந்த வுடன் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறையை மாற்றும் நடவ டிக்கைக்கு முன்னுரிமை வழங்கப் படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தீர்மானமும் செய்து கொண்டுள்ளன.

விருப்பு வாக்குகள் முறையிலான விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நட த்தப்படும் இறுதியான தேர்தல் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

நாட்டிற்கு பெரும் கேடாக இருக்கின்ற இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றித் தாருங்கள் என்றும் மக்கள் உங்களிடம் கேட்கின்றனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறையில் நிச்சயமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருப்பார். அவர் அந்த தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடியவராக, பொறுப்பு கூற வேண்டியவராக இருப்பார். குறிப்பாக அவர் கண் ணாடி வீட்டிற்குள் இருப்பவர் போன்று இருக்க வேண்டியவராக இருப்பார்.

எமது நாட்டிற்கு ஒரு தொல்லை யாக இருந்த பயங்கரவாத ஒழிக் கப்பட்டு விட்டது. அதே போன்று மிகப் பயங்கர விளைவுகளை தந்து கொண்டிருக்கும் விகிதாசார தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார்.

தேர்தல் மறுசீரமைப்புக்காக நியமி க்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு க்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதற்கட்ட மாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதை உறுதி செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல்வாதியின் மதிப்பை இனி எண்ணிப் பார்க்கலாம்

உயிருள்ள போதே சிலையாக வைக்கப்பட்டு தினந்தோறும் ரூபா நோட்டு மாலையினால் அர்ச்சிக்கப்படும் பாக்கியம் ஒரு அரசியல்வாதிக்கு கிடைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிதான் அந்த பாக்கியசாலி. இந்த பாக்கியத்தை பெற்ற மாயாவதி அண்மைக்காலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாகவும் மாறியிருக்கிறார்.

முதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் இவருக்கு சிலை வைத்தார்கள். இந்த சிலைகள் அகற்றப்படவேண்டும் என எதிர்க் கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தன. வழக்குகளும் போடப்பட்டன. ஆனால் ஒரு சிலையாவது அகற்றப்பட்டதாக தெரியவில்லை. வைத்த சிலைகள் வைத்த இடத்திலேயே இருந்தன.

அடுத்து வந்தது மாயாவதியின் பிறந்த நாள்.

பிறந்த நாளை கொண்டாடுபவருக்கு ரோஜா மாலை அணிவிப்பதுதான் வழக்கம். ஆனால் மாயாவதிக்கு அணிவிக்கப்பட்டதோ ரூபா மாலை 2 1/2 கோடி ரூபா நோட்டுக்களை தாங்கிய நோட்டு மூடையே மாலையாகியது. இதற்கும் பலத்த எதிர்ப்பு இம்முறை பாராளுமன்றத்திலும் ஒலித்தது. இந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை புகைகிறது.

இந்த நிலையில் இப்போது ஒரு புதுச் செய்தி.

மாயாவதிக்கு கோயில் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ள நத்புருவா என்ற கிராமத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது. கட்டுபவர் மாயாவதியின் தீவிர பக்தர். சட்டப் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். அவர் ஒரு வக்கீல். பெயர் கங்கையாலால். கோயிலில் மாயாவதியின் ஆள் உயர சிலை வைக்கப்பட்டு தினமும் புத்தம் புதிய ரூபா நோட்டுக்களினாலான மாலை அணிவிக்கப்படும் என்று கங்கையாலால் கூறியுள்ளார்.

மாயாவதியின் மதிப்பை இனிமேல் எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மற்றைய மாநிலங்களில் இன்னுமொரு தேவிக்கு சிலை வைக்கப்பட்டு நோட்டு மாலை அணிவிக்கப்பட்டால் யாருக்கு அதிக மதிப்புள்ள ரூபா நோட்டு மாலை என்று பிரச்சினை எழாமல் இருக்கும் வரை எல்லாம் சரிதான்
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை பலப்படுத்துவோம் - அமைச்சர் பேரியல்


தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணி ப்புடன் பணியாற்றும் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் ஆட்சியை பலப்படுத்தும் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை திகாமடுல்ல மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலினூடாக வழங்க வேண்டும்.

வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் இவ்வாறு பேசுகையில் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். சனூஸ் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரை யாற்றினார். இக்கூட்டத்தில் வேட்பாளர் ஏ. எம். எம். நெளஷாட், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அபுல் கலாம், ஹிபத்துல் கரீம், நவாஸ் செளபி ஆகியோரும் உரையாற்றினர்

அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் மேலும் கூறியதாவது :-

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மறைந்த தலைவர் அஷ்ரபிடம் கேட்ட கேள்வியொன்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது என்பதை எவரும் மறந்திருக்க முடியாது.

வடக்கு கிழக்கு இணைப்பின் போது முஸ்லிம்கள் குறித்து சட்டத்தரணி பதவி வகித்த மர்ஹும் அஷ்ரஃப் ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கேட்ட கேள்வி அவரை வியப்படையச் செய்ததுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. முஸ்லிம்கள் குறித்து கேள்வியெழுப்புவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருக்கும் போது உனக்கென்ன தேவை எனக் கேட்டார். இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு நிலையங்கள்: பயிற்சியளிக்கப்படுவோருக்கென இரு பாடசாலைகள் அமைக்க தீர்மானம்






புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள க. பொ. த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றாதவர்களுக்கென பிரத்தியேகமாக இரண்டு பாடசாலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணை யாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மேற்படி, பரீட்சைகளுக்கு தோற்றாத புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதில் வயது ஒரு தடையாக இருப்பதனாலேயே இவர்களுக்கென பிரத்தியேகமாக இரண்டு பாடசாலைகளை நிறுவ தீர்மானிக் கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் கல்வியமைச்சுடன் இணைந்து இப்பாடசாலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆண்கள் பெண்களுக்கென வேறுவேறாக அமைக்கப்படும் பாடசாலை களில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள க. பொ. த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றாதவர்களுக்கென விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்னர் பரீட்சைகள் நடத்தப்படுமெனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதற்கென கொழும்பில் உயர் பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட சித்திபெற்ற மாணவர்களை தமது விடு முறைக் காலத்தில் இந்த பாடசாலைகளுக்கு அழைத்து வந்து மேலதிக பயிற்சி வகுப்புக்களை நடத்த திட்டமிட்டிருப்பதா கவும் அவர் கூறினார். மேலும் இது தனித்து பாடசாலையாக மட்டுமன்றி, மாணவர்களின் பெற்றோர் வந்து செல்லக்கூடிய வகையில் ஒரு விடுதி போன்றே நடத்தப்படவிருப் பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும்



மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும். அந்த சபையினூடாக சகல தேவைகளும் நிறைவேற்றப்படுவதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரம் மேம்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் நான் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இத்தேர்தலில் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் செயற்பட உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் நீண்ட காலம் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் நானறிவேன்.

முப்பது வருடகால பயங்கரவாதம் இப்போது முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச மக்கள் இப்போது சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழக் கூடிய சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இந்த நாட்டில் நாமெல்லோரும் சகோதரர்களாக வாழ வேண்டும். அற்ப அரசியல் இலாபம் பெறும் நோக்கிலான இனவாத அரசியல் இனியும் வேண்டாம்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேசத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றார்கள். அதனால் தான் மக்கள் இடம்பெயர நேர்ந்தது. இது எமது தாய் நாடு. இங்கு நாமெல்லோரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் வாழ வேண்டும். நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம் எனக் கூறி இனவாத அரசியலில் அற்ப இலாபம் பெறும் நோக்கில் இனியும் தொடர வேண்டாம்.

இந்த நாட்டில் வாழும் சகலரையும் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது. அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும். அந்த சபையில் உங்கள் பிரதேச பிரதிநிதிகள் தான் அங்கம் வகிப்பார்கள். இந்த சபை ஊடாக உங்களது சகல தேவைகளும் நிறைவேற்றப்படும். இதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரம் மென்மேலும் மேம்படும்.

வன்னி பிரதேசத்தில் விவசாயம் செய்யவென சகலருக்கும் நவீன தொழில்நுட்ப வசதியை நாம் பெற்றுக் கொடுப்போம். நவீன முறைப்படி விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான வசதி வெகுவிரைவில் கிடைக்கும். சகல பட்டதாரிகளுக்கும், படித்த இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்கப்படும். நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களை எப்போதும் பாதுகாப்பேன்.

உங்களது பிரதேசத்திற்கு வெகு விரைவில் நீர்ப்பாசன வசதி பெற்றுத் தருவோம். புதிய வீடமைப்பு வசதிகள் உட்பட சகல வசதி, வாய்ப்புக்களையும் நாம் வழங்குவோம்.

புனர்வாழ்வு பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல இன்று தயாராக உள்ளார்கள். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 164 இளைஞர், யுவதிகள் தங்களது பெற்றோரிடம் இணையவுள்ளார்கள். புனர்வாழ்வு பெற்ற 148 பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கைகளை மேற்கொள்ளத் தயார்படுத்தப்பட்டிருக்கி ன்றார்கள். கைதடி தங்குமிடங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மடு பிரதேசத்தில் கணனி பயிற்சிக்கூடம் திறக்கப்பட்டிருக்கின்றது.

நான் ஒரு போதும் பொய் வாக்குறுதி அளிப்பவன் அல்லன். நான் சொல்லுவதை செய்பவன். செய்பவற்றையே சொல்லுபவன். ஐ. தே. கவினர் என்ன செய்தார்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் புலிகள் செய்ததையும் அறிவர். பிழையான வழியில் சென்ற புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்த சிலருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். சிலர் புலிகளின் கொள்கையை செயற்படுத்தத் தயாராகின்றார்கள்.

இன்று போல் சுதந்திரமாக வாழ வேண்டுமா? இது விடயமாக நீங்கள் நன்கு யோசியுங்கள். உங்களது பிரதேசத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்யவென எம்மோடு ஒன்றிணையுங்கள். எமது அரசு திறமையானவர்களுக்கு முக்கிய இடமளிக்கின்றது. இதன் பின்னர் இந்த நாட்டில் இனவாத அரசியல் வேண்டாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் சகலரும் சகோதரர்கள் போன்று ஐ. ம. சு. முன்னணியின் கீழ் இருக்கின்றோம்.

தவறான வழியில் செல்லாதீர்கள், பொய்ப் பிரசாரங்களை நம்பாதீர்கள் வெற்றிலைச் சின்னத்தை மறந்துவிடாதீர்கள் என்றார்கள். அமைச்சர்கள் ரிஷாட் பதியுத்தீன், முன்னாள் எம்.பிக்களான சிவநாதன் கிஷோர், எஸ். கனகரெட்னம், பி. சுமதிபால, மெளலவி மீராசாஹிபு மஃரூப், சட்டத்தரணி உனைஸ் பாரூக், என். கீத்தாஞ்சலி, உபுல் பாலசூரிய, மைக்கல் ஜோசப் பீரிஸ் ஆகியோரும் உரையாற் றினார்கள்.

இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியு மான ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வெற்று வாக்கு பெட்டிகளுக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி

வெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் போது அதன் உட்பகுதியில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு கட்சிகள்/ சுயேச்சைகளுக்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வெற்று வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் போது, கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின்

தேர்தல் முகவர்கள் தாங்கள் விரும்பிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை உட்பகுதியில் ஒட்ட முடியும்.

வாக்குப் பெட்டிகளில் மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கூறினார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் முகவர்கள் இதனைப் பரிசோதித்து அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கொலை அச்சுறுத்தல்; ஆயுதம் வைத்திருந்தமை ஐ. தே. மு. வேட்பாளர் கிதெலபிட்டிய கைது


பெண் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் ஆயுதம் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சுசில் கிதெலபிட்டிய நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெலிக்கடை பொலிஸார் நேற்று மேற் கொண்ட சுற்றி வளைப்புக்கமையவே ஐ.தே.மு வேட்பாளரும் அவரது வேன் சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் அவரது வாகனத்திலிருந்த 7.62 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது:- மிரிஹானை பொலிஸ் நிலையம் வந்த பெண் ஒருவர் தனக்கும் ஐ. தே மு. வேட்பாளரான சுசில் கிதெலபிட்டயவுக்குமிடையில் தொடர்பு இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தனக்கு அசீட் வீசி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை தன்னைத் தவிர அவருக்கு மேலும் 20 பெண்களுடன் தொடர்பு இருந்து வருவதா கவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து 7.62 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த வான் சாரதி கடற்படையிலிருந்து தப்பியோடியவர் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை பலப்படுத்துவோம் - அமைச்சர் பேரியல்

தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணி ப்புடன் பணியாற்றும் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் ஆட்சியை பலப்படுத்தும் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை திகாமடுல்ல மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலினூடாக வழங்க வேண்டும்.

வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் இவ்வாறு பேசுகையில் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். சனூஸ் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரை யாற்றினார். இக்கூட்டத்தில் வேட்பாளர் ஏ. எம். எம். நெளஷாட், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அபுல் கலாம், ஹிபத்துல் கரீம், நவாஸ் செளபி ஆகியோரும் உரையாற்றினர்

அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் மேலும் கூறியதாவது :-

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மறைந்த தலைவர் அஷ்ரபிடம் கேட்ட கேள்வியொன்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது என்பதை எவரும் மறந்திருக்க முடியாது.

வடக்கு கிழக்கு இணைப்பின் போது முஸ்லிம்கள் குறித்து சட்டத்தரணி பதவி வகித்த மர்ஹும் அஷ்ரஃப் ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கேட்ட கேள்வி அவரை வியப்படையச் செய்ததுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. முஸ்லிம்கள் குறித்து கேள்வியெழுப்புவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருக்கும் போது உனக்கென்ன தேவை எனக் கேட்டார். இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது.
மேலும் இங்கே தொடர்க...