27 அக்டோபர், 2010

தமிழக மீனவர்மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர்களை மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் வெட்டி வீசியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்களுக்கான கூட்டத்தில், கடற்படை கமாண்டர் அகர்வால், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள்" என உறுதியளித்தார்.

இதனிடையே மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் அதிகமான விசைப் படகுகள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று, நேற்று கரை திரும்பின. இதில் சில படகுகளில் சென்றவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், படகை சுற்றி வளைத்து, மீனவர்களை தாக்கினர். ஆல்பர்ட் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கென்னடி, பெரியதுரை என்பவரது விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்.

மீனவர்கள் கூறுகையில்,

"ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், "இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்?" எனக் கேட்டுத் தாக்கினர்.

பிற படகிலிருந்த வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்'' என்றனர்.

தமிழக மீனவர்களைத் தாம் தாக்கவில்லை என இலங்கைக் கடற்படை ஒருபுறம் கூறி வந்தாலும், மறுபுறம் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் இலங்கை 91ஆவது இடத்தில்

உலகில் ஊழல் குறைந்த 178 நாடுகளில் இலங்கைக்கு 91ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள பேர்லினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'ட்ரான்ஸ்பரன்ஸி' இன்டர்நெஷனல் அமைப்பு நடத்திய ஆய்வின் படி புள்ளிகள் வழங்கி இப்பட்டியலை வெளியிட்டுள்ளதாக அவ்வமைப்பின் இலங்கைப் கிளைத் தலைவர் ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அதன் வருடாந்த அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா 87ஆவது இடத்திலும் பாகிஸ்தான், மாலைத்தீவு என்பன 143ஆவது இடத்திலும் பூட்டான் 36ஆவது இடத்திலும் உள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் பூட்டான் ஊழல் குறைந்த நாடாக உள்ளது.

கடந்த வருடம் இலங்கை 3.1 புள்ளியைப் பெற்று 97ஆவது இடத்தில் இருந்தது. இம்முறை 3.2 புள்ளியைப் பெற்ற போதும் முன்தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் தினமும் 250க்கு மேற்பட்டோர் பக்கவாதத்தால் உயிரிழப்பு : டாக்டர் மஹிபால

இலங்கையில் தினமும் 250 மேற்பட்டோர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாகவும் தினமும் 55 பேர் இதனால் பீடிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பாலித்த மஹிபால தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் திகதி உலக பக்கவாத தினமாகும். இதனை முன்னிட்டு இன்று 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மஹிபால இக்கருத்தை தெரிவித்தார்.

மேலும் மூளைக்கான இரத்த விநியோகத்தில் தடை ஏற்படுவதன் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக மூளையின் பாதிக்கப்பட்ட பகுதி செயற்படமுடியாமல் போவதுடன் உடம்பின் எலும்புகளையும் செயலிழக்கச்செய்யும். புரிந்து கொள்ள, பேச, பார்க்க முடியாமல் போதல் ஆகியவையும் ஏற்படும்.

உலகில் அதிக மரணத்தினை ஏற்படுத்தும் முன்னணி காரணியாக பக்கவாதம் உள்ளதாகவும் மாரடைப்பே அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாக தற்போது விளங்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கமைய உலகில் 69 நிமிடங்களுக்கொருவர் பக்கவாத நோயில் இறப்பதாகவும் வருடாந்தம் இத்தொகை 5.7 மில்லியனாக உள்ளதெனவும் டாக்டர் லங்கா ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

நோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியுமெனவும் இதற்கென கொழும்பு வைத்தியசாலையில் சிறப்புப் பிரிவு உள்ளதாகவும் நரம்பியல் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார்.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தவிர்த்தல், புகைத்தலை தவிர்த்தல், நீரிழிவைக் கட்டுப்படுத்தல், உடல் நிறையைக் கட்டுப்படுத்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை மூலம் இதனைத் தடுக்கமுடியும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகாரத்துக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி ஒரு இலட்சம் பேரை திரட்டி கொழும்பில் போராட்டம்

சர்வாதிகாரிகளின் சூதாட்ட பூமியாக இலங்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு படுமோசமான அட க்குமுறைகள் மேலோங்கிய ஜனநாயக விரோத ஆட்சி தற்போதைய நடை முறையிலுள்ளது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது என்று சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் பேரணி தெரிவித்துள்ளது. காலத்தை வீணடிக்காது சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் பேதமின்றி செயற்பட முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று ஒரு இலட்சம் பேரை தலைநகருக்கு அழைத்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து போராட்டங்களை கைவிடப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறுகையில்,

17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் உத்தேச திருத்தத்தில் 18ஆவது திருத்தங்களின் ஊடாக சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விட்டது. எனவே நாட்டை சர்வாதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா நாட்டில் என்றுமே இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக ஜனநாயக ரீதியில் சுவரொட்டிகள் கூட ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டினால் சூழல் மாசடைவதாகவும் அரசாங்கத்தின் சுவரொட்டிகளுக்கு சூழல் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. கூடுதலான சிறைக் கூடங்களையும் புலனாய்வு பிரிவுகளையும் அமைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

மங்களசமரவீர எம்.பி

இங்கு உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. கூறுகையில்,

ஜனநாயகத்தின் மரண வீடு கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றது. 18ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டது. பொது மக்களை ஏமாற்றி தலைகளின் எண்ணிக்கையினை பாராளுமன்றத்தில் அதிகரித்துக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்க பயணத்தை உடன் நிறுத்த வேண்டும்.

இதற்கு பாரிய எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராட வேண்டும். மிக விரைவில் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நிதியுதவி குறைவடைந்துள்ளமையால் நிவாரண உணவு விநியோகம் பாதிப்பு

உலக உணவுத் திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவி குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நிதி உதவி பாதிப்பினால் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50 வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது.

இதனால் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.உலக உணவுத் திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற போஷாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என்றும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் உறவினர் நண்பர்களுடன் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கின்றது. அந்த மக்கள் மத்தியில் உணவுத் திட்டத்தினக்ஷில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது தெரியவந்திருக்கின்றது. இந்த சிக்கல்களை சமாளிப்பதற்காகத் தமது தங்க ஆபரணங்களை விற்பது போன்ற பல்வேறு உபாயங்களை அவர்கள் கையாண்டு வருவதாகவும் உலக உணவுத் திட்டம் தனது ஆய்வின் அடிப்படையில் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற 25 ஆயிரம் பேருக்கும் உறவினர் நண்பர்களது வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மீள் குடியேறியுள்ள குடும்பங்களுக்குமான நிவரண உணவுப் பொருட்களையும் வடக்கு கிழக்கு மகாணங்களில் உள்ள 3 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிமார் மற்றும் கைக் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் உரிய போசாக்கு உணவுப் பொருட்களையும் உலக உணவுத் திட்டமே வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி:ஐ.தே.க

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிழையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிர்வாக சீர்குலைவினால் ரெலிகொம் நிறுவன வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

டெலிகொம் நிறுவனம் 8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கியது. ஆனால் இன்று இவ் வருமானம் 1.4 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. அன்று இதன் 35 சதவிகித பங்குகளை ஜப்பானிய நிறுவனமான என்.ரி.ரி. கொள்வனவு செய்திருந்ததோடு அவர்கள் நியமித்த நிர்வாக அதிகாரிகளுக்கு அவர்களே சம்பளத்தையும் வழங்கினார்கள்.

இவ் பங்குகள் இன்று மலேஷியாவின் ஜீ.பி.எச்., மெக்ஸீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சேவை விஸ்தரிப்புச் செய்வதற்காக கிறேட்யங் என்ற வெளிநாட்டவர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருடமொன்றுக்கு இவ் அதிகாரிக்கு இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை மெக்ஸீஸ் நிறுவனம் வழங்கவில்லை. டெலிகொம் நிறுவனமே வழங்குகிறது. இந்த நிர்வாக அதிகாரி சக உத்தியோகத்தர்களுடனோ நிர்வாக சபையினருடனோ கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.

ஏசியன் டெலிகொம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளால் டெலிகொம் நிறுவனம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளது. டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காக ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தை நியமித்துள்ளனர்.

இதற்காக 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. டெலிகொம் நிறுவனத்தில் மேலதிகமாகவுள்ள 2000 ஊழியர்களை வெளியேற்றினால் லாபமீட்ட முடியுமென அந் நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ளது. இப் பரிந்துரையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் ஊழியர்கள் தொழில் இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். நிறுவனத்தின் வீழ்ச்சியை ஈடு செய்வதற்காக 2 ரூபா நிலையான வரி அறவிடப்படுகிறது.

நாட்டிலுள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்குகிறது. டெலிகொம் இவ்வாறான போட்டிச் சந்தையில் எதனையும் செய்யாமல் இருக்கின்றது.எனவே தேசிய தொலைத் தொடர்பு சேவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் அதிவேக ரயில் நேற்று அறிமுகம் உலகின் அதிவேக ரயிலை சீனா நேற்று அறிமுகம் செய்தது.



இதஏ 380 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலானது இதற்கு முன்னைய அதிவேக ரயிலான இதஏ2 ரயிலின் வேகத்தினை முறியடித்துள்ளது.

சீனாவின் இருமுக்கிய வர்த்தக நகரங்களான ஷங்காய் மற்றும் ஹாங்சூ நகரங்களையே மேற்படி அதிகவேக ரயில் சேவை இணைக்கின்றது.

இவ்விரு நகரங்களுக்குமிடையிலான சுமார் 200 கிலோமீற்றர் தூரத்தினை இவ் ரயிலானது 45 நிமிடங்களில் அடைகின்றது.

இதன் சராசரி வேகம் மணித்தியாலத்திற்கு 350 கிலோ மீற்றர்களாகும்.

இதன் உச்ச வேகம் மணித்தியாலத்திற்கு 420 கிலோ மீற்றர்களாகும். எனினும் இதன் உச்ச வேகத்தில் இது பயணிக்காதெனவும் சராசரி வேகத்திலேயே பயணிக்குமெனவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் தயாரிப்பாகும்.

எனினும் சீனாவானது மணித்தியாலத்திற்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ரயிலினை உருவாக்க உத்தேசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை; இரு வாரங்களில் 7098 பேர் கைது 7927 கிலோ போதைப்பொருள் மீட்பு






நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட் களையே பொலிஸார் கைப்பற்றியு ள்ளனர்.

ஆயிரக்கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் விசேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கஞ்சாவுடன் தொடர்புடைய 4413 சம்பவங்கள், ஹெரோயி னுடன் தொடர்புடைய 1858 சம்பவங்கள், பாபுலுடன் தொடர்புடைய 305 சம்பவங்கள், போதை தரும் லேகியங்களுடன் தொடர்புடைய 413 சம்பவங்கள், அபினுடன் தொடர்புடைய 3 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு

அமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் கீழ் விசேட நடவடிக்கை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இந்த நடவடிக்கைகள் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் இதற்கான விசேட வேலைத் திட்டங்களை தீட்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 36 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அகூஸணுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அகூஸணுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக் கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்ட லின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதே சத்திற்கு வந்து உங்களது கஷ்டங்க ளையும் குறைகளையும் கேட்டறி கின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவ ட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்க ளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பவளப்பாறைகளை முறையாக பேண இலங்கை அரசு நடவடிக்கை ஜப்பான் கூட்டத்தில் அஸ்வர் எம்.பி.

இலங்கையில் பவளப் பாறைகளை முறையாக பேணு வதற்கு உகந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பவளப்பாறைகள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைபற்றி ஆராயும் கூட்டம் ஜப்பானின் நாகோயா நகரில் உள்ள நாகோயா மேரியட் அஸோஸியா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்திரமான மீன்பிடி கைத்தொழி லையும், நீர்வள முகாமைத்துவத்தையும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பவளப் பாறை முகாமைத்துவமும் இதில் அடங்குகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான மஹி ந்த சிந்தனை என்ற தனது கொள்கை பிரகடனத்தில் ஸ்திரமான பவளப் பாறை மற்றும் நாளைய கடல் வாழ் முகாமைத்துவம் தொடர்பான வழிமுறைகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள தாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ் வர் விளக்கிக் கூறினார்.

அந்தத் தேர்தலில் ஜனாதிபதி 60 சதவீத அமோக வாக்குகளுடன் வெற்றியீட்டினார். இதில் பெரும் பாலான வாக்குகள் கரையோர மக்களிடம் இருந்து கிடைத்தவையா கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் மீன்பிடித்துறை அமைச்ச ராக இருந்தபோது கடல்சார் பல் கலைக்கழகமொன்றை ஸ்தாபித்தது பற்றியும் பல்கலைக்கழக மட்டத்தில் கடல் நிபுணத்துவ பட்டப் படிப் பினை வழங்கும் ஒரேநாடு இல ங்கை என்பது பற்றியும் பாராளு மன்ற உறுப்பினர் அஸ்வர் அங்கு குறிப்பிட்டார்.

பவளப்பாறை முக்கோண செயற் பாடு மற்றும் கடலில் பாதுகாக் கப்பட்ட பிரதேசங்கள் ஆகியவை தொடர்பாக எதிர்காலத்தில் இடம் பெறும் சர்வதேச கருத்தரங்குகளில் இலங்கையை சேர்த்துக்கொள்வது முக்கியமானது என்பதை அவர் இக் கூட்டத்தில் வலியுறுத்திக்கூறினார்.

அத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட உலகளாவிய சட்டமன்ற உறுப் பினர்களுக்கு மஹிந்த சிந்தனை கொள் கைப் பிரகடனத்தின் ஆங்கில பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு; 300 பேர் இன்று பயணம்



இஸ்ரேலில் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ள முதலாவது இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது.

இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார்.

பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

முதற் தடவையாகவே இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாத வர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பின்தங்கிய கிராமங்களுக்கு துரித மின் வழங்கும் விசேட திட்டம்



பின்தங்கிய கிராமங்களுக்கு துரிதமாக மின்சார வசதி செய்து கொடுக்கவென விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள சகலருக்கும் மின்வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் வெளிநாடுகளின் கடனுதவிகளுடன் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தின் படி 2012 ல் சகலருக்கும் மின்சார வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ‘கிராம சக்தி’ திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

மின் கம்பங்கள் மூலம் மின்சார வசதி அளிக்க முடியாத சிறிய கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு தகுந்த வழி வகைகளினூடாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி, சிறு மின் திட்டங்கள், காற்று மூலமான மின் திட்டம், எரிவாயு தொழில்நுட்பம் போன்ற முறைகளினூடாக இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு ள்ளதோடு வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியது
மேலும் இங்கே தொடர்க...

மத்தல விமான நிலைய பணிகள் துரிதம்: 2012 இல் முதல் விமானம் தரையிறக்கம்; 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி


மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார்.

மத்தல சர்வதேச விமான நிலைய பணிகள் குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்ற பிரதிஅமைச்சர் மேலும் கூறியதாவது, விமான நிலையப் பணிகள் எதிர்பார்த்ததை விட துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையப் பணிகள் இரட்டிப் பாகியுள்ளன. இந்த நிலையில் மத்தல விமான நிலைய பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு 6 வழிகளை கொண்ட அதிவேகப் பாதை நிர்மா ணிக்கப்படுகிறது. சுற்றுச் சுழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைக்கப்படுவதோடு யானைகள் மற்றும் விலங்குகளை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் இப்பகுதியி லேயே வசதிகள் அளிக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையமும் துறைமுகமும் அமைக்கப்படுகி ன்றன. இவை குறித்து விமர்சித்து எதிர்க் கட்சிகளுக்கு இங்கு வந்து உண்மை நிலையை நேரில் பார்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். தேவையானவர் களுக்கு துறைமுகத்தில் இறங்கிக் குளிக்கவோ நீந்தவோ முடியும் என்றார். விமான மற்றும் விமான நிலைய சேவை நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய கூறியதாவது;

ஓடுபாதையின் 65 வீதமான பணிகள் 2011 நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும். 10 விமானங்கள் நிறுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. 5000 கொள்கலன்களுக்கு வசதி அளிக்கக் கூடியதாக களஞ்சிய வசதிகள் செய்யப்பட உள்ளதோடு 300 வாகனங்கள் நிறுத்த தரிப்பிட வசதி அளிக்கப்படும்.

விமான நிலையம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் 1500 பேர் நேரடி தொழில் வாய்ப்பு பெற உள்ளதோடு 50 ஆயிரம் பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பு பெறுவர். நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படும் இந்த விமான நிலையத்தின் மூலம் தினமும் 3200 பயணிகள் பயனடைவர். வருடத்துக்கு 10 இலட்சம் விமானப் பயணிகள் இதனை பயன்படுத்துவர். அமைச்சின் செயலாளர் ரஞ்சித் த சில்வா இதனூடாக பல நாட்டு விமான ங்கள் இதனைப் பயன்படுத்த உள்ளதோடு புதிதாக விமானங்களைக் கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நமீதாவைக் கடத்திய ரசிகர்

நமீதாவைக் கடத்திய ரசிகர் கைது தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.

அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.

அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.

அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.

நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.

இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு 'செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை 'மீட்க' திருச்சிக்கு விரைந்தார்கள்.

நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.

பிதா மகன் ஸ்டைலில்...

பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.

நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...