NERDO, President Mr.S.Thavarathinam
அன்புடையீர்,
போருக்குப் பிந்திய மீள் கட்டுமானம் மற்றும் போரினால் பாதிப்புற்றவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.
ஒவ்வொரு தேசமும் தனிச் சிறப்பு வாய்ந்த துன்பச் சூழல்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் இன்றைய துயரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அனைத்துத் தமிழர்களினதும் துணையுடனே கையாள முடியும். இது மனிதாபிமான நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி என்பதுடன், சுயகௌரவம், சகோதரத்துவம், நீதியான சமாதானம், வறுமை ஒழிப்பு என்பவற்றையும் இலக்காகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
உங்களுடைய உதவி இந்த விடயத்தில் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. உங்களுடைய நேரடிப் பங்களிப்புடன், அறிவுசார், பொருளாதார மற்றும் திட்ட ஆலோசனைகளையும் உங்களிடம் நாம் வேண்டி நிற்கிறோம். உங்களுடைய அனுபவங்களுடன் இந்த உயர்ந்த இலக்கை அடைய நாம் விரும்புகிறோம்.
கருத்திட்டங்களை அமைப்பதில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அடைவுகளை கண்காணிப்பதிலும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் உங்களுக்குத் துணை நிற்போம். கணக்கு விபரங்களை கிரமமாக உங்களுக்கு அறியத்தருவதுடன், கணக்காய்வுகளையும் நாம் மேற்கொள்வோம். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான திட்டங்களை தெரிவசெய்யும் சுதந்திரம் உங்களுக்க உண்டு. திட்டம் அமுலாக்கப்படும் இடத்துக்கு நீங்கள் நேரில் செல்ல முடியும் என்பதுடன், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிவதுடன், விரும்பினால் நீங்களே அதனை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் வெளிப்படைத்தன்மை பிரதான கொள்கையாக இங்கு கடைப்பிடிக்கப்படும்.
எங்களுடைய மக்கள் மிகவும் மனிதநேயமற்ற ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மிகுந்த சிரமங்களில் மத்தியில், பலரது உயிர்களையும், அவயவங்களையும் காவு கொடுத்து நிற்கின்றனர். உள நெருக்கீடுகளினாலும், வெளியில் சொல்ல முடியாத துயரங்களினாலும் அவர்களது வாழ்வு முடமாகிப்போயுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் துயரங்களிலிருந்து நாம் மீண்டெழுந்து, சமத்துவமான, பாதுகாப்பான, சுயகௌரவத்துடன் கூடிய, சமாதானமான ஒரு வாழ்வை நோக்கி நாம் முன்னோக்கிச் சென்றாகவேண்டும்.
எங்களுடைய மக்களுடைய தேவைகள் வரையறையற்றவை. அனாதை இல்லங்களிலிருந்து முதியோர் இல்லங்கள் வரையிலும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், நிவாரணப் பணிகளிலிருந்து புனர்வாழ்வுத் தேவைகளை நோக்கி அவர்களது வாழ்வை நகர்த்துவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு வகிபாகம் உண்டு.
எங்களுடைய வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். எமது இளம் சமுதாயம் பல தசாப்தங்களாக தமது கல்வியை இழந்து நிற்கிறது. ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து உயர் கல்வி வரையிலும், தொழிற்கல்வியிலிருந்து தொழில்நுட்பப் பயிற்சி வரையிலும் அவசரமாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
திறன்மிக்க, கல்வியறிவுடைய பணியாளர்கள் இன்மையால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறைசார் கல்வியும், பயிற்சியும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னோக்கி நகர்த்த முடியாது. சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் தொழில்முறைசார் கல்வியைப் பெறவேண்டியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமூக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரது வாழ்விலும் இயல்புத்தன்மையைக் கொண்டுவர முடியும்.
இதுதான் எமது பிரதான இலக்கு.
ஏராளமான விதவைகளுக்கும், அங்கவீனர்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. வன்னி மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிலேயே ஏழைகளாக்கப்பட்டுள்ளதுடன், பலர் வேறிடங்களுக்குச் சென்றுமுள்ளனர். பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இவர்களுக்கு ஏதாவது செயல்பூர்வமான உதவிகள் கிடைத்தாலொழிய, இவர்கள் ஒரு நிரந்தர வெறுமைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
இவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதையுமே இப்போது கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பினால், இவர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நாம்தான். எம்மால் இவர்களுக்கு உதவ முடியாவிட்டால், வேறு எவர்தான் உதவுவர்?