19 ஆகஸ்ட், 2010

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி : இந்திய ஒப்பந்தம் மேலும் நீடிப்பு

இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடிக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.

அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடிக்கவே இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா இதனைத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் பதவியைப் பறித்தமை குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல் : ஜயலத்

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கைகளினால் வழங்கிய ஜெனரல் பதவியை சரத் பொன்சேகாவிடமிருந்து பறித்தெடுத்திருப்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும் என்று ஐ. தே. க. எம். பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன குற்றஞ்சாட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

"முப்பது வருட கால பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் ஜெனரல் சரத் பொன்சேகா. இதனால் குண்டுத் தாக்குதலக்கும் உள்ளாகி செத்துப் பிழைத்த மனிதர்.

நாட்டுக்கு வழங்கிய சேவையை கௌரவித்து மகாசங்கத்தினர் உட்பட மதத் தலைவர்கள் பல பட்டங்களை வழங்கினார்கள்.

ஜனாதிபதியும் ஜெனரல் பதவி உட்பட பல்வேறு பதவியுயர்வுகளை வழங்கினார். இவ்வாறு வழங்கிய பதவிகளை ஜனாதிபதியே பறித்தெடுத்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தால் வழங்கிய தீர்ப்பை 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ளார்.

இது எந்த விதத்தில் நியாயமாகும். இன்று தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவராகவும் கொழும்பு மாவட்டத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகள் பறிக்கப்பட்டமை அநீதியான செயலாகும்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளார்.

எனவே ஐ. தே. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையுடன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்" என்றும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம். பி. தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்கு நாட்டின் பொருளாதார பின்னடைவே காரணம் : ஒஸ்டின்

நாட்டில் நிலவிய பொருளாதார பின்னடைவு அன்றைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு செல்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அந்த உடன்படிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அதற்கு செல்லவேண்டியேற்பட்டது. அக்காலப்பகுதியில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்தில் இருந்தது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கை வரைபின்போது பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். பல்வேறு சிக்கல்களை தரக்கூடிய சில விடயங்கள் அதில் காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே ஒஸ்டின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

. கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் பிற்பகல் 2.00 க்கு அமர்வு ஆரம்பமாகியது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஏனைய ஆறு உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர்.

ஒஸ்டின் பெர்னாண்டோ அங்கு மேலும் கூறியதாவது:

"வெற்றி மற்றும் தோல்வி என்ற இரண்டு விடயங்களை கருத்திற்கொண்டே நாம் போர் நிறுத்த உடன்படிக்கையை ஆராயவேண்டும். அவ்வாறான கண்ணோட்டத்தில் நாம் நோக்கவேண்டும். முக்கியமாக போர் நிறுத்த உடன்படிக்கையின் பல விதைப்புரைகள் சிக்கலுக்குள்ளவையாக இருந்தன.

மனித நேய விவகாரங்கள் மற்றும் இராணுவ ரீதியான விடயங்கள் என்பவற்றிலும் சிக்கல்கள் காணப்பட்டன. மேலும் நாட்டின் முஸ்லிம் மக்கள் தொடர்பில் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த விடயமும் முறையாக இடம்பெறவில்லை. அவர்கள் இரண்டாம் மட்டத்திலேயே கணிக்கப்பட்டனர். இந்த விடயம் ஒரு பிரச்சினையாக காணப்பட்டது.

மிகப்பெரிய பிரச்சினையாக நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒரு கட்சியிடமும் அரசாங்கத்தின் தலைமைத்துவம் மற்றுமொரு கட்சியிடமும் காணப்பட்டது. இந்த விடயமானது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பாரிய பிரச்சினையாகவும் சிக்கலாகவும் அமைந்தது. எனவே இவ்வாறான நிலைமைகள் வரும்போது செயற்படுவது தொடர்பில் ஏற்பாடுகள் எமது நாட்டின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்படவேண்டும்.

முக்கிய காரணியாக இரண்டு தரப்பினர் மத்தியிலும் அதிக சந்தேகம் காணப்பட்டது. புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் மத்தியிலும் இராணுவத்தினர் தொடர்பில் புலிகள் மத்தியிலும் கடும் சந்தேகம் நிலவியது. இந்த விடயமும் பாரிய பிரச்சினையாகவிருந்தது. அப்போது மேஜர் ஜெனரலாக பதவி வகித்த சரத் பொன்சேகா இது குறித்து பல தடவைகள் என்னுடன் கலந்துரையாடியுள்ளார்.



எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மேலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக போர் நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்தன. அது தீவிரமான எதிர்ப்பாகவும் இருந்தது. ஊடகங்களும் விமர்சனங்களை முன்வைத்தன. அதாவது சமாதானம் என்ற எண்ணக்கருவை அரசியல் நிகழ்ச்சி நிரல் தாண்டி சென்றது என்று கூறலாம்.

நாட்டில் அப்போது நிலவிய பொருளாதார பின்னடைவு அன்றைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு செல்வதற்கான முக்கிய காரணமாகும். உடன்படிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அதற்கு செல்லவேண்டியேற்பட்டது.

கருணா அம்மான் எனப்படுபவர் புலிகளிடம் இருந்து பிரிந்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம் என்று அந்தக் கட்சியின் சில எம்.பி. க்கள் கூறிவருகின்றனர். ஆனால் அவ்விடயம் தொடர்பில் வித்தியாசமான பார்வையே என்னிடம் உள்ளது. அதாவது கருணா அம்மான் ஏன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தார் என்ற உண்மையான காரணம் அவருக்கே தெரியும்.

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். வடக்கு கிழக்கு என்று இல்லை நாட்டின் எப்பகுதியாக இருப்பினும் நட்ட ஈடு வழங்கப்படவேண்டும்.

அதியுயர் பாதுகாப்பு விடயங்கள் என்று வரும்போது அதில் ஆராய்வதற்கு பல விடயங்கள் உள்ளன. அதாவது சில அம்சங்கள் குறித்து ஆராய முடியும். பலாலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது. அவை அங்கு கட்டாயம் தேவை.

ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று நாங்கள் ஆராய்ந்தோம். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. நிர்வாகம் மாறிவிட்டது. அனைத்து விடயங்களிலும் மாற்றங்கள் உள்ளன. எனவே தற்போதைய நிலைமை குறித்து கூற முடியாது.

இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. அவற்றை மேற்கொள்ள காலம் எடுக்கலாம். மேலும் அனைத்து மக்களினம் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவேண்டும். இந்த விடயத்தில் தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் என்பன மிகவும் முகிகயத்துவம் வாய்ந்ததாகும்.
மேலும் இங்கே தொடர்க...

கனேடிய அரசின் சொற்பதங்கள் குறித்து தமிழர் பேரவை ஆழ்ந்த கரிசனை

எம்.வி.சன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் தொடர்பான அவநம்பிக்கையான சொற்பதங்களை கனேடிய அரசாங்கம் அண்மைக்காலமாக வெளியிட்டு வருவது தொடர்பாக கனேடிய தமிழர் பேரவை ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கனேடிய பேரவை தெரிவித்திருப்பதாவது :

"மிகவும் முக்கியத் தேவையாக உள்ள விசாரணைகள் முடிவடைய முன்னரே எம்வி சன்சீ கப்பலில் பயணித்தவர்கள் குற்றவாளிகள் என்றோ குற்றமற்றவர்கள் என்றோ அரசாங்கம் ஊகிப்பது பொருத்தமற்றது.

பணம் பெற்று ஆட்களைக் கப்பலில் அனுப்பி விடுபவர்கள் தொடர்பாகவும் கனடாவின் குடிவரவுக் கொள்கைகள் தொடர்பாகவும் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை கனேடியத் தமிழர் பேரவை உணர்கிறது. இருப்பினும் தஇஙட மற்றும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் (இநஐந) வேறு தனிப்பட்ட, சுயமான விசாரணைகளை நடத்துவதைப் பாதிக்காத வகையில் இந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

கனேடிய எல்லைச் சேவைகள் முகவம், கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் மற்றும் றோயல் கனேடிய காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் வான்கூவர் தீவின் மேற்குக் கரையில் வந்திறங்கியுள்ள தமிழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் அவர்கள் தொடர்பான உண்மை நிலைகளை அறிந்து கொள்வதில் முக்கிய பங்கு உள்ளது.

எம்விசன் சீ தொடர்பான விசாரணைகள் முழுமையாக தஇஙட மற்றும் இநஐந ஆகியோரின் வரையெல்லைக்குள் உட்பட்டதனால் அவை அரசியல் மயப்படுத்தப்படத் தேவையில்லை.

கனேடியர்களாக, எங்களின் சட்ட ஒழுங்கு முறைகளில் உள்ள தனிமனித சுதந்திரத்தில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முதிர்ச்சியற்ற கருத்துக்களும் ஊகங்களும் கனடாவில் ஏற்கனவே உள்ள விசாரணை நடைமுறைகளை வலுவிழக்கச் செய்யும்.

எம்வி சன்சீ கப்பலில் கனேடிய சட்டங்களுக்கு எதிராகச் செயற்படும் நபர்கள் இருப்பின் சட்ட ஒழுங்கு அமுலாக்கலில் ஈடுபடுபவர்களுக்கு அதை விசாரணை செய்வதற்குரிய வலுவும் வழிமுறைகளும் உள்ளன.

இப்படியான விசாரணைகள் மூலமாக மட்டுமே, ஏற்கனவே பல இன்னல்களுக்கு உட்பட்டு வந்திருக்கும் இந்த அகதிகளுக்கு ஒரு நியாயமான சட்ட வழிமுறையை ஏற்படுத்துவதோடு அனைத்து கனேடியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயற்பட முடியும்.

கனேடியத் தமிழர்களே இந்தக் கப்பலில் வந்தவர்களின் பயணத்துக்கு நிதி உதவியை வழங்கியிருந்ததாக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

முழுமையான விசாரணைகள் இன்றி ஊகங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் கூறும் இத்தகைய கருத்துக்களினால் கனேடியர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் தேவையற்ற பதட்டமும் ஏற்படுகின்றன.

இத்தகைய கருத்துக்களினால் தங்களுடைய வாழ்வையும் உறவுகளையும் இங்கு கட்டியெழுப்பி வரும் கனேடியத் தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சி, எமது கனேடிய தேசத்தின் பல்கலாசாரமும் அரவணைப்பும் நிறைந்த சமூகத்தின் தன்மையை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது.

இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயங்களை அணுகும்போது அரசாங்கம் இன்னமும் மதிப்பீட்டுடன் நடந்து கொள்ள் வேண்டும்."

இவ்வாறு கனேடியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தலைமைகளுடனான ஒப்பந்தங்களை எதிர்த்ததாலேயே தீர்வு சாத்தியமாகாமல் போனது

நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் எம்.பி. மங்கள முனசிங்கதமிழ்த் தலைமைகள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்ததாலேயே தீர்வு எதுவும் சாத்தியமாகாமல் போனதென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக் கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மங்கள முனசிங்க தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையொன்றுக்கு ஆளுங்கட்சி தீர்வொன்றை காண முற்பட்டால், அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்ற அரசியல் போக்கின் காரண மாகவே நாட்டின் இனப்பிரச்சி னைக்குத் தீர்வொன்று எட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மங்கள முனசிங்க குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகள் யாவை என்று சுட்டிக்காட்டிய முனசிங்க, 1956 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் என்ற ஒரு சட்டத்தின் காரணமாகத் தமிழ் மக்களின் எதிர்காலம், பொருளா தாரம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் சிதைவடைந்ததாகவும் குறிப்பிட் டார்.

ஆணைக் குழுவின் விசாரணை அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றபோது சாட்சியமளித்தார் மங்கள முனசிங்க. “தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் அஹிம்சை வழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சில சிங்கள பெளத்த செயற்பாட்டாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர், அப்போதையப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையொன்றைச் செய்தார். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே. ஆர். ஜயவர்தன கண்டிக்குப் பாத யாத்திரை சென்றார். பின்னர் டட்லி சேனநாயக்கா ஆட்சிக்கு வந்ததும் தந்தை செல்வநாயகத்துடன் உடன்படிக்கை செய்தார். அதனை நடைமுறைப்படுத்தவிடாமல் மற்றைய தரப்பினர் எதிர்த்தார்கள்.

இவ்வாறான எதிர்ப்பு அரசியல்தான் நாட்டின் பிரச்சினையைப் பூதாகரமாக்கியது. இதனால், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த நல்ல தீர்வும் சாத்தியமாகவில்லை” என்று குறிப்பிட்ட அவர், 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடை ந்தமை தொடர்பான தமது கருத்தையும் தெரிவித்தார்.

“ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும், அவற்றில் இணக்கம் காணப்பட்ட ஒரு சிறிய விடயம்கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. புலிகளின் உளவுப் பிரிவினர் சகல இடங்களுக்கும் செல்ல முடிந்தது. அதனால் பின்னர் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடிந்தது. போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுவதைத் தடுத்து நிறுத்த எந்த வழிவகையும் இருக்கவில்லை.

வெறுமனே மீறல் சம்பவங்களைக் கண்காணிக்க மாத்திரமே உடன்படிக்கையில் ஏற்பாடுகள் குறிக்கப்பட்டி ருந்தன. நோர்வே அனுசரணையாளர்களுக்கு தேசத்துக்கும் தேசத்துக்குமிடையிலான பிரச்சினையைத் தீர்த்து வைக்கவே முடியும். அவர்களுக்கு ஓர் இன முரண் பாட்டைத் தீர்க்கும் ஆழ்ந்த அறிவும் அநுபவமும் கிடையாது” என்றார்.

“ஆணைக்குழு முன் சாட்சியமளித்த சிலர், இது ஓர் இன முரண்பாடு அல்லவென்றும், பயங்கரவாதப் பிரச்சினையென்றும் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு இனப்பிரச்சினை என்பீர்கள்?” என்று ஆணைக் குழுவின் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முனசிங்க, “பயங்கரவாதம் ஏற்பட்டது பின்னர்தான். பயங்கரவாதத்தை நாங்கள்தான் (பெரும்பான்மையினர்) உருவாக்கினோம்.

அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தோம். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றது ஓர் இன வன்முறை அல்ல. அது ஓர் அரசியல் சார்ந்த வன்முறை. அதற்குப் பின்னர்தான் தமது பிரச்சினையைத் தீர்க்க வன்முறைதான் வழியென்று தமிழ் இளைஞர்கள் எண்ணினார்கள்” என்றதுடன், வடக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றார்.

“வடக்கில் தமிழர்களின் கடைகளை இராணுவத்தினர் நடத்துவதாகக் கூறுகிறார்கள். இதனை நிவர்த்திக்க வேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாட்டில் அனைவரும் சமாதானத்தையே விரும்புகின்றனர்.

அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாட் டுக்கு ஒத்துழைக்க புலம்பெயர் தமிழர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பளை முதல் கே.கே.எஸ். வரை ரயில் பாதையில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற உத்தரவு



பளை தொடக்கம் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் பாதையில் அத்து மீறிக் குடியேறியவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கிராம சேவையாளர்கள் முலம் கட்டளையிட்டுள்ளார்.

இதுபோன்ற கட்டளை கடந்த வருடமும் விடப்பட்டது நேயர்கள் அறிந்ததே. சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தம்மிடம் இருந்த பணம் முழுவைதையும் சிறிய வீடுகளைக் கட்டுவதில் செலவு செய்துவிட்டதாகவும் தாங்கள் போய் குடியேற காணியில்லை என்றும் சொல்லுகின்றனர். தமக்கு நட்டஈடு அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் வாதிக்கின்றனர்.

யாழ். தேவி காங்கேசன்துறை வரை வரவேண்டும் என்றால் யாராவது ஒரு பகுதி விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமா கும்.
மேலும் இங்கே தொடர்க...

சுற்றுலா பயணிகள் வருகை 48.5 வீதம் அதிகரிப்பு: இலங்கையில் 14,800 ஹோட்டல் அறைகள்; 40,000 ஆக அதிகரிக்க விசேட திட்டம்

30 வருட யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாமென்ற அறிவுறுத்தல்களை வாபஸ்பெற்றுள்ளன. தற்பொழுது எந்த நாடும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பதில்லையென பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 2009 உடன் ஒப்பிடுகையில் 2010 மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 48.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது : தற்பொழுது இலங்கையில் 14,800 ஹோட்டல் அறைகளே உள்ளன. 2016 ஆம் ஆண்டாகும் போது இதனை 40 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம். இதற்காக இலங்கை சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 418 அறைகள் கொண்டதாக இவை அமைக்கப்படும்.

இது தவிர பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தில் 1000 அறைகள் கொண்ட 13 ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. கல்லடியில் 350 அறைகள் கொண்ட இரு ஹோட்டல்களும் பெந்தொட்டையில் 250 அறைகள் கொண்ட ஹோட்டலொன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இலங்கை பற்றி சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்யவும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சி. என். என். மற்றும் பி. பீ. சி. தொலைக்காட்சிகளினூடாக பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலா முகவர்களுடன் இணைந்து மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இலங்கை தூதரகங்களுடன் இணைந்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அந்த நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் ஹோட்டல் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணங்களின் தொகையும் அதிகரித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரச அதிபர்கள், பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருநாள் மாநாடு


வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுக்கு விளக்கமளிக்கும் இரு நாள் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 6,7ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதுடன், நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கான மாநாடாகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டுள் ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். செப்டம்பர் 6ம் திகதி நாடளாவிய மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும், மறுநாள் 7ம் திகதி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களுக்கான மாநாடாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

இம்மாநாடு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கட்டடத்தில் இடம்பெறுவதுடன், யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கின் அரச நிர்வாகக் குறைபாடுகள், மீள்குடியேற்றப் பிரதேசங்களின் குறைநிறைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு வீழ்ச்சி


யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 649 இல் இருந்து 30 ஆகக் குறைந்துள்ளது. ஜுலை மாத இறுதியில் கணக்கில் எடுக்கப்பட்ட டெங்கு நோயாளர் நிலைப்பாட்டில் யாழ். மாவட்டம் நான்காவது இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. சுகாதார அதிகாரிகளினதும் பொதுமக்களினதும் அக்கறை காரணமாகவே டெங்கு நோயாளர் எண்ணிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரனின் தகவலின்படி இம்மாதம் 13 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டு ள்ளனர். அத்துடன் அடுத்த சில தினங்களில் இது மேலும் குறையும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வருட முதல் இரு மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட் டனர். 1600 டெங்கு சந்தேக நபர்களில் 1100 பேருக்கு மேல் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக இனங்காணப்பட்டனர் என்றும் அவர் கூறினார். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் யாழ்ப்பாணம், கரவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய சுகா தார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலேயே அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட னர்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் கைவிட்டுச் சென்றுள்ள காணிகளும் வீடுகளும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களாக மாறியுள்ளன. டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு இது இடைஞ்சலாக உள்ளதாக டாக்டர் கேதீஸ்வரன் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

போதைப்பொருள் பாவனை, கடத்தல் தொடர்பாக 23,300 வழக்குகள் ரூ.850 இலட்சம் தண்டப்பணம் அறவீடு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்


போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் ஜுலை மாதம் வரையில் 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்குகள் மூலம் 850 இலட்சம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டிருப்ப தாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதற்கு இங்குள்ளவர்களின் உதவி, ஒத்துழைப்பும் உள்ளன. அதனால் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளிலும், சீனாவிலும் இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

போதையூட்டும் ஒளடதங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் அவற்றின் பாவனையில் தங்கியுள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பது தொடர்பான கட்டளையின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்ட விரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக 2009ம் ஆண்டில் 45 ஆயிரத்து 935 தேடுதல்கள் நடாத்தப்பட்டன.

இவற்றில் 45 ஆயிரத்து 738 குற்றச் செயல்கள் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இச்செயலில் ஈடுபட்ட 730 ஆண்களும், 73 பெண்களும் கைது செய்யப்ப ட்டனர்.

இவர்களில் 641 பேர் ஹெரோய்ன் தொடர்பான குற்றச் செயல்களிலும் 160 பேர் கஞ்சா தொடர்பான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள்.

வருடத்திற்கு ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 161 லீட்டர் மதுசாரம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இவற்றில் பெரும் பகுதி சட்ட விரோத மது உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றது.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையும் சட்ட விரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, கடத்தல் தொடர்பாக 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டு இவற்றின் மூலம் 850 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளன.

இக்காலப் பகுதியில் கெனபஸ் 12 ஆயிரத்து 335 கிலோ கிராம், ஹெரோய்ன் 95 கிலோ கிராம், டேபைன் 25 கிலோ கிராம், ஹகூஸ் 9 கிலோ கிராம், கொக்கைன் 3 கிலோ கிராம் என்றபடி போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளன. இச்செயலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

சகல பல்கலைகளிலும் ஆங்கிலம் போதனாமொழி அடுத்த ஆண்டு முதல் நடைமுறை


அடுத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளில் 99 சதவீதமானவற்றின் போதனா மொழி ஆங்கிலமாக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் இந்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் துரிதமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் இற்றை வரையும் இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த 78 நிறுவனங்கள் முதலீட்டு சபையின் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 26 நிறுவ னங்கள் தான் தற்போது இயங்குகின்றன.

ஏனையவை இற்றை வரையும் செயற்பட வில்லை. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கற்கை நெறிகளை நடாத்தி பட்டம், டிப்ளோமா, சான்றிதழ்களை வழங்குகின் றன.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங் களை ஆரம்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அவற்றில் கற்கும் மாணவர்களில் 20 சதவீதமானோர் இலவசமாக கல்வி கற்கக் கூடிய வகையில் புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கப்படும். இங்கு தனியார் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் 99 சதவீதமான கற்கை நெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும். அதனால் ஆங்கில மொழியறிவு போதியளவு தேவைப்படும் அதற்காக பட்டதாரி மாணவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நடாத்தப்படும். அத்தோடு ஆங்கில மொழியில் விரிவுரைகளை நடாத்த முடியாதுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இந்தியாவின் உதவியோடு ஆங்கில மொழியறிவு பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கென ஆங்கில மொழி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என்றார்
மேலும் இங்கே தொடர்க...