பெங்களூரை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுக்க தியான பீடங்கள் நடத்தி வந்த நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நித்யானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்த காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 21-ந்தேதி நித்யானந்தாவை கைது செய்தனர்.
நித்யானந்தாவை தற்போது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் இதுவரை முக்கிய தகவல்கள் எதையும் நித்யானந்தா வெளியிடவில்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கர்நாடக போலீசார், நடிகை ரஞ்சிதாவை தேடிவருவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் ரஞ்சிதா கேரளாவில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் பெங்களூர் வந்து போலீசாரிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கப்போவதாகவும் நேற்று ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.
தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். படுக்கை அறை காட்சிகள் வெளியாகி கடந்த 2 மாதமாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் பரவிய போதும் ரஞ்சிதா மவுனமாக இருந்து வந்தார். தற்போது அவர் டெல்லி வக்கீல்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நித்யானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல. எனவே இனியும் அந்த காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ரஞ்சிதா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சிதாவின் வக்கீல் பிரசாந்த் மென்டிரட்டா கூறியதாவது:-
எனது கட்சிக்காரர் நடிகை ரஞ்சிதா எல்லாரும் நினைப்பது போல நித்யானந்தா சாமியாரின் தீவிர பக்தை அல்ல. பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்யவும் இல்லை. ஆனால் மன அமைதிக்காக நித்யானந்தா சாமியாரை சந்தித்துள்ளார்.
நித்யானந்தா பீடத்தில் போடப்படும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ரஞ்சிதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் எந்த உண்மையும் இல்லை. அது தவறான தகவல்.
அதுபோல நித்யானந்தாவுடன், அந்த டேப் பில் இருப்பது ரஞ்சிதாவே அல்ல. அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் முழுவதும் எடிட் செய்து காட்சிகளை ஒன்று சேர்த்துள்ளனர். கோர்ட்டில் இந்த வழக்கு நிற்காது.
ரஞ்சிதாவுக்கு எதிராக திட்டமிட்டு மிகப்பெரிய சதியை அரங்கேற்றி உள்ளனர். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்வரை போராட அவர் முடிவு செய்துள்ளார்.கடந்த 2 மாதமாக நிலவும் இந்த சர்ச்சையால் ரஞ்சிதாவின் வாழ்க்கையே பாழாகிவிட்டது. அவரது நற்பெயர் தேவை இல்லாமல் கெட்டுள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டு, வருவாய் இழப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான நித்யானந்தாவின் சீடர் லெனின் மீது ரஞ்சிதா மான நஷ்ட வழக்கு தொடர உள்ளார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நித்யானந்தா படுக்கை அறைக்காட்சிகளை இரண்டு இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. உள்நோக்கத்துடன் அவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வீடியோ காட்சிகளை வரும் 2-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்குள் அகற்றி விட வேண்டும். கூகுள் மற்றும் யூடியூப் இணையத் தளங்களுக்கு ரஞ்சிதா நோட்டீசு அனுப்பி உள்ளார். 2-ந்தேதிக்கு பிறகும் அந்த காட்சிகள் இருந்தால் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் அந்த 2 இணையத் தளங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
இந்த எச்சரிக்கையை 2 இணையத்தளங்களுக்கும் பேக்ஸ் மற்றும் கூரியர் மூலம் ரஞ்சிதா அனுப்பி உள்ளார்.
இவ்வாறு ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த் கூறினார்.
நடிகை ரஞ்சிதா தற்போது எங்கு இருக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வக்கீல் பிரசாந்த் கூறுகையில், ரஞ்சிதா, அவர் குடும்பத்தினருடன் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கிறார் என்றார். எந்த மாநிலத்தில் இருக்கிறார் என்று கேட்டபோது வேறு எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.