2 டிசம்பர், 2009


02.12.2009 தாயகக்குரல்30

ஜனாதிபதி தேர்தல் எப்போது என்ற கேள்விக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் இப்போது உத்தியோக பூர்வமான விடை கிடைத்துவிட்டது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2010 ஜனவரி 26ம் திகதி நடைபெறும் எனவும் எதிர்வரும் டிசெம்பர் 17ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும்; எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றோர் 140 லட்சத்து 88ஆயிரத்து 500 ஆகும்.

ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மகாநாட்டைக் கூட்டி அறிவித்ததுடன் பொது வேட்பாளர் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

நவ சமசமாஜக் கட்சின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ணவும் களத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினை தொடர்பாக இவரிடம் இருந்து அதிக வாக்குறுதிகளை எதிர்பார்க்கலாம்.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடிக்கத் தொடங்கியது. பயங்கரவாதத்தை தோற்கடித்தமை, கடந்த நான்கு வருடங்களில் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி திட்டங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சரத் பொசேகா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளோர் சிலர் எதிர்த்து செயற்குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தெரிவித்த இனவாதக் கருத்துக்களை எடுத்துக்கூறியே வெளிநடப்பு செய்துள்ளார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக்க பண்டாரநாயக்கா ஆகியோரும் சரத் பொன்சேகாவின் நியமனம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த கண்டி மாநகர சபை பிரதி மேயர், மற்றும் தெகிவளை கல்கிசை மாநகர மேயர் ஆகியோரும் சரத் பொசேகாவை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

சரத் பொசேகாவை ஆதரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மத்திய குழு தீர்மானித்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தோன்றியுள்ளதாக தெரியவருகிறது. திருமதி பிரியங்கா கொத்தலாவல கட்சியின் மத்திய குழுவி;ல் இருந்து ராஜினாமா செய்துள்ளதுடன் கட்சியின் அண்மைக்கால அரசியல் தீர்மானங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மகாநாட்டில்; கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்து ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் தனது பொருளாதாரக் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சின் பொருளாதாரக் கொள்கையே என்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அதிகமான தீர்வை கொண்டுவருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைக் கெண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக இரு பிரதான வேட்பாளர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். இப்போது நடைமுறைக்கு உடனடிச் சாத்தியமாக இருப்பது 13வது அரசியலமைப்பு திருத்தமே. 13வது அரசியலமைப்பு திருத்ததிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்கொண்ட தீர்வை இன்றைய நிலையில் தமிழ் மக்கள் நிராகரிக்ககூடாது.

சரத் பொன்சேகா ஒரு தனிமனிதராகவே கணிக்கப்படவேண்டும். இவர் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை இவரால் நடைமுறைப்படுத்த முடியுமா என்ற கேள்வி ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஜனாதிபதியாக வந்ததும் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தற்போதைய தேர்தல் முறையில் எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனித்து பெறமுடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு தேவை. அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர எதிர்கட்சிகளின் ஆதரவு தேவை. பொதுசன ஐக்கிய முன்னணி அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு யோசனையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அதன் நகல்களை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எரித்து எதிப்பு தெரிவித்ததாலேயே அந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே எடுக்கமுடியாமல் போனது. எனவே எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி ஜனாதிபதி முறையை ஜனநாயக முறையில் ஒழிப்பது என்பது சாத்தியமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வருகிறது. சரத் பொன்சேகாவை ஜே.வி.பி தங்களுடைய வேட்பாளர் என அறிவிக்கிறது. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஜே.வி.பி. ஆதரிக்குமா?
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார் எதிர்கட்சிக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக தெளிவான நிலைப்பாடு எதுவும் இல்லை. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினை தொடர்பாக எந்த தீர்வையும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கவில்லை. கட்சிக்குள்ளும் ஒத்தகருத்து இல்லை. ஜே.வி.பி. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என சூளுரைத்து வருகிறது. இந்த நிலையில் 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வுக்கு ஜே.வி.பி ஒத்துவரும் என தான் நம்புவதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

இவர் தனிப்பட்டமுறையில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக கடந்த காலங்களில் திகழவில்லை. யுத்தம் முடிந்தவுடனேயே இராணுவத் தளபதியாக இருந்து இவர் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அப்போது சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அவரது சொந்தக்கருத்தே என்று அரசாங்கம் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை யாரை ஆதரிக்கவேண்டும் என்பது இனப்பிரச்சினை தொடர்பாக வேட்பாளர்களது நிலைப்பாடு என்ன? அதை அவர்களால் நிறைவேற்றமுடியுமா என்பதை ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டும்.

இந்த இரு வேட்பாளர்களும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரே வாக்குறுதியை அளித்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை ஏற்கனவே நியமித்ததுடன் 13வது அரசியலமைப்பு திருத்ததிலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை வழங்குவதாக தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார்.

தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் இல்லாதவிடத்து ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என தமிழ் மக்கள் தீர்மானிப்பதில் சிரமமிருக்காது.


ஐ.தே.க விசேட கூட்டத்தில் சரத் பொன்சேகா முதன்முறையாக பங்கேற்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் முதன்முறையாக முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார்.

இக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டதையடுத்து ஐ.தே.கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் முதன்முறையாக அவர் உரையாற்றவுள்ளார்.


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் - த.தே.கூ


பாதிக்கப்பட்ட மக்களுடைய அசையும் அசையா சொத்துக்களுக்களின் பெறுமதியினை அரசாங்கம் அவர்களுக்கு மீள் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது உடைமைகள்,கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்தும்போது சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு



மாவட்டம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால், தேராவில் ஆகிய பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதலின்போது, பல வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் லொக்கு குமாரகே தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் ஜனக மகிந்த, புஸ்பித, பொலிஸ் சார்ஜன்ட் அமித்த, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கங்கநாத், ரணதுங்க, கமல்சிறி, அல்விஸ் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினராலேயே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினெட்டு பிளாஸ்டிக் கேன்களில் நேர்த்தியாக அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 50 லிற்றர் அசிட், 20 கிலோ நிறையுடைய சி4 வெடி மருந்து, 69 மிதிவெடிகள், அவற்றுக்கான பியுஸ்கள் 40, 175 டெட்டனேட்டர்கள், 13 கிளேமோர் வெடிகுண்டுகள், 1231 தோட்டாக்கள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ள பொலிசாரை வன்னிப்பிரதேசத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே பாராட்டியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன! கைப்பற்றப்பட்ட புலிகளின் கப்பல்கள் மூன்று அடுத்த சில நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளது!


புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.

தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.

இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நன்றி நெருப்பு

மேலும் இங்கே தொடர்க...