16 நவம்பர், 2009

20 வருடங்களின் பின் யாழ்-மன்னார் பஸ் சேவை ஆரம்பம்


யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிகப்பட்டிருப்பதாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான அதிகாரி தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து நாளாந்தம் காலை 6 மணிக்கு மன்னாரி அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்று இச்சேவையில் ஈடுபடும்.மன்னாரில் இருந்து புறப்படும் பஸ் வவுனியா சென்று சோதனை நடவடிக்கைகளின் பின் ஏ 9 வீதியூடாக நேரடியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிக்கும் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையின் 3 பிரதிகளை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 20 வருடங்களின் பின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 வீதியூடான நேரடி போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக இன்று ஓய்வு

கூட்டுப்படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.

எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஓய்வுபெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் பொன்சேகா கடந்த 12ஆம் திகதி கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தார்.

அவரது கடிதத்தை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து ஜெரனரல் சரத் பொன்சேகா உத்தியோக பூர்வமாக தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதனையடுத்துக் கருத்து தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா,

" இராணுவத் தளபதியாகவும், கூட்டு படைகளின் பிரதானியாகவும் நான் ஆற்றிய சேவைகள் திருப்திகரமாகவே இருந்தன. இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நல்லாசிகள். இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
மத்திய வங்கி குண்டு வெடிப்பு சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது-

1996ம் ஆண்டு கொழும்பில் மத்திய வங்கி கட்டடத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு உதவியவர் என சங்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று இரகசிய பொலிசார் கைது செய்துள்ளனர். செட்டிகுளம் மணிக் முகாமிலிருந்து 60 வயதிற்கும் மேற்பட்டவராக போலி தகவல்களை சமர்ப்பித்து முகாமிலிருந்து வெளியேற முற்பட்டபோதே இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்ணம் என்ற மேற்படி நபரே 200 கிலோ வெடிமருந்துகளை வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு எடுத்துவந்தவர் என அப்போதைய விசாரணைகளில் தெரியவந்திருந்ததாகவும் சம்பவத்தையடுத்து இவர் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப்பகுதிக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
ஸ்ரீ.ல.சு.கட்சி மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்:சோனியா அனுப்பி வைப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்காக இலங்கை ஜனாதிபதிக்குத் தங்களுடைய பாராட்டுக்களைக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவிப்பர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சந்திர தேவ் மற்றும் ஜெயந்தி நடராஜனை தனது கட்சி பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் கரம்சிங், முதலில் கிஷோர்சந்திர தேவை தொடர்பு கொண்டு, கட்சியின் முடிவை தெரிவித்திருந்தார். கிஷோர்சந்திர தேவ் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியிலும், அதன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். தமிழ் சரளமாக பேசக் கூடியவர். அதனால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க கட்சி தீர்மானித்தது.

ஆனால் அவர்,

"இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்குத் தான் செல்ல இயலாது"எனக் கட்சித் தலைமைக்கு தெரிவித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, நிவாரணப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக, நேற்று முன்தினம் காலை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்றிருந்தார்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் நினைவு சொற்பொழிவில் அவர் கலந்து கொண்டார்.

பின் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகமவை, பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்


15.11.09

தமிழர் பிரச்னை: அரசியல் தீர்வு காண இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு, நவ. 14: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டுமென்று இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு "திடீர்' பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை, இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்னையில் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் அரசியல் ரீதியில் தீர்வுகாண வேண்டும். இதில் எந்த ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. மத, இன வேறுபாடு எந்த இடத்திலும் தலை தூக்கக் கூடாது.


இலங்கையில் போரில் ராணுவம் வெற்றி பெற்றிருந்தாலும், அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய வெற்றியாக அமையும். அரசியல் சாசன சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வும், சம அந்தஸ்து மற்றும் சம உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டம், சமுக நீதி, மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் போன்றவை நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு உள்பட்டு அனைவருக்கும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறை இடைவெளியும் குறைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


இலங்கையில் விரைவில் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜபட்ச இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முப்படைகளின் தளபதி பதவியிலிருந்து விலகியுள்ள சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ராஜபட்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தியப் படை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்று பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இங்கே தொடர்க...
நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப
உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும்

ஸ்ரீல. சு. க. தேசிய மாநாட்டில் ஜனாதிபதி

உலகின் எத்தகைய பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும் சரி அவர்களது அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத் தயாரில்லை. நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலா- பாராளுமன்றத் தேர்தலா? எதுவாயினும் மக்கள் எதிர்பார்ப்பவை நிறைவேற்றும் வகையில் அதற்கான தீர்மானத்தை கட்சி மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று கெத்தாராம விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

நாட்டின் பழமையான கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கென பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். தேடித் திரிகின்றார்கள்.

இத்தகைய பலவீனமுற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் உலகத்தை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குப் பலமேது? என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி; அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அது இலங்கை அரசியலில் புலிகள் தொடர்புபடாத தேர்தலாகவே அது இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட இத்தேசிய மாநாட்டில் வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

‘இனி நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இத்தேசிய மாநாட்டில் ஐந்து முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அரசியல், படையினருக்கான கெளரவம், நாட்டின் பொருளாதாரம், தேசிய ஒற்றுமை, சர்வதேச நட்புறவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரேரணைகளை முறையே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் முன்வைத்தனர்.

இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது வருடாந்த தேசிய மாநாட்டை நடத்தும் இக்காலகட்டமானது எமது நாட்டிற்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் முக்கிய மானதொரு காலகட்டமாகும்.

இன்று இலங்கையில் பிறந்த ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தாம் இலங்கையர் என பெருமையாகக் கூறமுடியும். அதற்கான சூழலை நாம் உருவாக்கியுள்§¡ளம்.

உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதத்தை ஒழிப்பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அரசாங்கத்தைப் பாதுகாக்கச் செயற்பட்டவர்கள் கட்சி ஆதரவாளர்களே. நாட்டை மீட்கும் பயணத்திலும் நாட்டு மக்களோடு இணைந்து நாட்டைப் பாதுகாக்கச் சென்ற வர்களும் அவர்களே.

அதுமட்டுமன்றி கிழக்கில் தொடங்கி தெற்கு வரை நாம் நடத்திய மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியையும் விட 25 இலட்சம் அதிகப்படி வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகள் எமது விடயத்தில் தலையிடாது, தடுத்து நிறுத்தியதும், நாம் எமது ஜனாதிபதியுடன் உள்ளோம் என உலகிற்கு வெளிப்படுத் தியதும் அவர்களே. இத்தகைய கட்சி ஆதரவாளர்களால் நாம் பெருமைப்படுகின் றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாநாட்டில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற பெருமை எமக்குள்ளது.

இன்று இந்த நாட்டில் சிறுபான்மை என்று எவருமில்லை நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளே. நாம் மஹிந்த சிந் தனையில் தெரிவித்த வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

நாம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவ தில்லை. சொன்னதை செய்வோம். செய் வதை சொல்வோம்.

எமது கட்சி ஜனநாயகக் கட்சியாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகலரும் எமது கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். நாம் எவருக்கும் பயந்து செயற்படவில்லை. மக்கள் தீர்மானமே எமது தீர்மானமாகும். மக்களே இந்நாட்டின் மன்னர்கள். நாம் ஒருபோதும் அதை மறக்க மாட்டோம். மக்கள் சேவையையும் நாம் மறக்க மாட்டோம்.

நாம் அனைவரும் இணைந்து இந்த அழகான தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வடக்கிலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளும் கலை நிகழ்ச்சியொன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...