25 ஆகஸ்ட், 2010

பொது எதிரணி தொடர்பில் ஹக்கீம் மனோவுடன் ரணில் இன்று பேச்சு

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுவான எதிரணியினை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெளிவுபடுத்துகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரை இன்று மாலை 3.00 மணிக்கு கேம்பிரிஜ் ரெஸலிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதன்போது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள் மற்றும் சரத் பொன்சேகா எம்.பி.யின் விடுதலை தொடர்பாக எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஐ.தே. முன்னணியில் அங்கம் வகிக்காத ஏனைய அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். இப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை எமது தலைவர் மேற்கொள்வார் என்றார்.

மனேகணேசன் கருத்து

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.தே. கட்சியுடன் மட்டுமே தனித்து இணைந்து பயணத்தை மேற்கொள்வதென்பது சாத்தியமற்றதாகும். எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அமைக்கப்பட்ட பொதுவான எதிர்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட வேண்டுமென்பதையே நாளைய (இன்று) பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தவுள்ளோம்.

அத்தோடு தமிழ் மக்களின் முழு எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் ஐ.தே.கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த இருவிதமான செயற்பாடுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எமது பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தெடுத்து எமது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.எனவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்துடன் ஐ.தே. கட்சி பேச்சு நடத்துவது எதிர்கட்சி கூட்டமைப்பு உருவாக்குவதற்கு பாதகமாக அமையும்.

எமது பாராளுமன்ற எம்.பி.க்கு எதிராக கட்சி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். இதேவேளை, ஐ.தே. கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதில் தமக்கு எதுவிதமான எதிர் கருத்தும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முறைப்பாடு



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை குறித்து மாநகர சபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்குமாகாண முதலமைச்சர் சி;சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்

காளிகோயில் வீதி புன்னைச்சோலையைச் சேர்ந்த சகாயமணி நேற்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்துவிட்டு ஆசீர்வாதம் என்ற மாநகர உறுப்பினரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு தனது வீடு நோக்கிப் புறப்பட்ட இவர் இன்னமும் வீடு சென்று சேரவில்லை என தெரியவருகிறது.

இவர் காணாமல் போயுள்ளமை காரணமாக மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போயுள்ளமை குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

உயிராபத்து அறிவித்தல் தனிச் சிங்களத்தில்...! : பேராதனை பூங்காவில் அவலம்!

பேராதனைப் பூங்காவில் தனிச்சிங்கள மொழியிலான அறிவித்தலால் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரும் சிங்கள மொழி தெரியாதவர்களும் எதிர்நோக்கும் ஓர் ஆபத்து பற்றிய செய்தி பரவலாகப் பேசப்படுகிறது.

தூரியான் மரத்தின் கீழ் யானை கூடச் செல்லாது என்று எம் முன்னோர்கள் கூறுவர்.

இப்போது தூரியான் பழம் காய்த்துள்ள காலம். யானைகள் நிச்சயமாக பேராதனை தாவரவியற் பூங்காவில் அதி உயர்ந்த தூரியான் மரத்திற்குக் கீழ் நடந்து செல்லும் சாத்தியம் இல்லை. எனினும், மனிதர் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதல்லவா?

விடயம் தெரியாத, அறிவித்தலை விளங்கிக் கொள்ள முடியாத, உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் அணியணியாக தூரியான் மரத்தை அண்டிய பகுதிக்குச் செல்கின்றனர்.

தவறுதலாக ஒரு பழம், எவரது தலையிலாவது விழுந்தால்.....? உயிர் ஆபத்து கூட ஏற்படும் சாத்தியமுள்ளது.

ஆபத்து விளைவிக்கும் ஒரு மரத்தின் கீழ் தனிச் சிங்களத்தில் மட்டும், 'தூரியான் மரத்திற்குக் கீழாகச் செல்ல வேண்டாம்' என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருப்பது சரிதானா?

சிங்களம் வாசிக்கத் தெரியாத வெளிநாட்டவர் மட்டுமல்லாது தமிழ் மக்களும் கூட இந்த ஆபத்துக்கு உள்ளாக நேரிடுகிறதே?

இன,மொழி சமத்துவம் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கும் எம் சகோதர மொழி 'பெரியவர்கள்' கூட, இவ்வாறு அம்மரத்தைக் கடந்து தான் செல்கின்றனர். அறிவித்தல் பலகையைப் பார்க்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், "இதென்ன, சிங்களத்தில் மட்டும் இந்த அறிவித்தல் வைக்கப்பட்டிருக்கின்றது, தமிழ், ஆங்கில மொழிகளில் இல்லையே...." என்ற சிந்தனை அவர்களுக்கும் வரவில்லையே? ஏன்...?

தம்மவர் மட்டும் உயிர் பிழைத்தால் போதும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற தன்னலப் போக்குத்தான் அவர்கள் கண்களை மறைத்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.

அறிவித்தலை வாசித்துப் புரிந்து கொள்ள முடியுமாயின், அல்லது யாராவது அருகிலிருந்து எச்சரிப்பார்களாயின் உயிராபத்தைத் தவிர்க்கலாமல்லவா?

எந்த ஓர் ஆபத்தும் ஏற்பட முன் காப்பதே வேண்டற்பாலது. ஆபத்து நேர்ந்த பின் அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை.

எனவே சம்பந்தப்பட்டோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற பெண்ணின் உடலில் 23 ஆணிகள்

சவுதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடலில் ஆணிகளை அடித்து மோசமான முறையில் சித்திரவதைப்படுத்தப்பட்ட இலங்கை பெண் படுகாயமடைந்த இலங்கை திரும்பியுள்ளார்.

குறித்த பெண்ணின் உடலில் 23 ஆணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தான் வேலைக்கு சென்ற வீட்டு எஜமான் இரும்பு ஆணிகளை சூடாக்கி தனது உடலில் அடித்ததாகவும் அந்த தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மகாவலி கங்கையில் நீராடிய மூவரை காணவில்லை

மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமற் போயுள்ளனர்.

இவர்கள் மூவரும் நீரில் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

தாய், மகன், மகள் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பேராதனைப் பொலிஸ் பிரிவில் உள்ள கொஹா கொடை என்ற இடத்தில் இவர்கள் நீராடும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் கொழும்பு கொட்டஹேன பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

இவர்களைத் தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஆற்றில் அதிக நீர் ஓடுவதனால் தேடும் பணிகள் சற்று தாமத மாகியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நேபாளத்தில் விமான விபத்து; 14 பேர் பலி

நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 14 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிது. மோசமான வானிலையே இவ்விபத்துக்கு காரணம்.

நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியமான லுக்லாவிற்குச் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் தலைநகர் கத்மண்டுவுக்கு திரும்பிவந்து கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சிறிய விமானத்தில் 11 பயணிகளும் 3 விமான உத்தியோகஸ்தர்களும் இருந்தனர். பலியானவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, விமானம் விழுந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் அடைவது சிரமமாகவுள்ளதாக நேபாள அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர்களை அனுப்பியபோதிலும் கடும் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை அவை அடையவில்லை என காத்மண்டு விமான நிலைய அதிகாரி திரிரட்ணா மனாதர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை வவுனியாவில் 900 ஏக்கர் தயார் நிலையில்




வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செய்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன.

மன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்கை நெறிகள் ஆரம்பம் கிளிநொச்சியில் நேர்முகப் பரீட்சை பூர்த்தி


வன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கவென பத்து தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு தொழிற் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 30ம் திகதி தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னிப் பிரதேச பணிப்பாளர் ரீ. வினோதராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :-

பத்து தொழிற்பயிற்சி நிலையங்களினதும் நிர்மாணப் பணிகளை இம்மாதமே பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்ப ட்டிருந்தது. இருப்பினும் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்டுளள் தொழிற் பயிற்சி நிலையத்தின் அமைப்புப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பயிற்சி நிலையத்தில் அலுமினிய இணைப்பு மற்றும் இலத்திரனியல் வயரிங்க ஆகிய கற்கை நெறிகள் முதலில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. ஒரு கற்கை நெறிக்கு முப்பது பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற மூன்று தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கற்கை நெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நிறைவுற்றுள்ளன. மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் நிலையங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிலையங்களதும் நிர்மாணப் பணிகளை செப்டெம்பர் மாதம் 30ம் திகதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

5 ஆண்டுகளில் யாழ். மீன்பிடி தொழில் வளம் 35 வருடத்துக்கு முன்னைய நிலையை எட்டும்




யாழ். மீனவ சங்க சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு
யாழ். மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் வளம் இன்னும் ஐந்தாண்டுகளில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய நிலையை எட்டுமென்று யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வீ. நவரட்ணம் தெரிவித்தார்.

அரசாங்கம் மீனவர்களுக்கு அளிக்கும் உதவிகளை அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல், பண்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டால் 35 வருடங்களுக்கும் முன்னைய நிலையை அடைய முடியுமென்று அவர் கூறினார்.

1983 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மீன் பிடியின் 20% யாழ். மாவட்டத்தில் பிடிக்கப்பட்டது. மாதம் நான்காயிரம் மெற். தொன் வீதம் வருடத்திற்கு 48 ஆயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னைய காலத்தைப் போன்று அதிகரிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நவரட்ணம் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணத்தில் மீன்வளம் கடந்த 20 ஆண்டுகளாக அழிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அழிக்கப்பட்டு வருகின்றது. சென்னையிலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி வரையிலான கடற் பிராந்தியத்தில் மீன் வளம் அழிக்கப்பட்டுவிட்டது. தற் போது இலங்கையின் வடபகுதிக் கடலி லும் அழிக்கப்படுகிறது. முறையற்ற விதத்தில் மீன்பிடிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. கடந்த 20 வருடங்களாகத் தமிழக மீனவர்கள் வடபகுதிக் கடல் வளத்தை அனுபவித்தார்கள்.

அதேநேரம் வளத்தை அழித்தும் விட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர். இது குறித்து தமிழக மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பண்பான மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 24 மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியா சென்றிருப்பதாகவும் கூறினார். யாழ். மாவட்டத்தில் உள்ள 117 மீன்பிடிக் கிராம சங்கங்களும் 10 பிரதேச செயலகப் பிரிவுகளின் சமாஜங்களும் உள்ளன.

இவை அனைத்தின் சார்பிலும் தமிழகம் சென்றுள்ள பிரதிநிதிகள் அங்கு கலந்துரையாடிய விடயங்களை மக்களுடன் (மீனவர்களுடன்) பகிர்ந்து, அவர்களின் அபிப்பிராயங்களுடனே தீர்மானம் எடுத்து அரசுக்கு அறிவிக்க வேண்டும்.

முதலில் மக்களின் பிரச்சினைகளை அறிய வேண்டும் என்று குறிப்பிட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் நவரட்ணம், கடற் தொழில்துறை அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இழுவைப் படகுகளையும் தங்கூஸ் வலைகளையும் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டிருப்பதாகவும், அதன்படி மீனவர்களும் பண்பான முறையில் மீன்பிடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு செயற்படுவதன் மூலமே யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலவச பாட நூல் விநியோகம் இன்று ஹோமாகம புதிய களஞ்சியசாலையில் வைபவம்


2011ம் கல்வியாண்டுக்குரிய அரசாங்கப் பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் விநியோகம் ஹோமாகமையில் இன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.

இலவச பாடநூல்களுக்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சகல அரச பாடசாலைகள், பிரிவேனாக்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 25 மில்லியன் பாட நூல்கள் அச்சிடப்பட்டு வருவதுடன் இவை 364 வகையான பாடநூல்களாகு மெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளரும் பிரதி பரீட்சைகள் ஆணையாளருமான புஷ்பகுமார தெரிவிக்கையில் :-

கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது இம்முறை இலவச பாடநூல்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக ஹோமாகமயில் புதிய நூல் களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது. பாடநூல்கள் அச்சிடப்படும் வேளையிலேயே பாடநூல்கள் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.

கல்வியமைச்சானது சலுசல நிறுவனத்தி ற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலேயே பாடநூல்களைக் களஞ்சியப்படுத்தி வந்துள்ளது. இம்முறை இரண்டரைக் கோடி ரூபா செலவில் ஹோமாகமையில் புதிதாக நிர்மாணிக்கப்ப ட்டுள்ள களஞ்சிய சாலையில் பாடநூல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அங்கிருந்து விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

இக்களஞ்சியசாலை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் களஞ்சிய சாலைகளுக்காக செலவிடப்படும் பல இலட்ச ரூபாய்களை மீதப்படுத்த முடியும் என கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

இன்று 25ம் திகதி ஆரம்பமாகும் பாடநூல் விநியோக நடவடிக்கைகள் டிசம்பர் 12ம் திகதியுடன் நிறைவுறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக்கொடி யுடனான கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுக் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இலங்கை கப்பல் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கென்யா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகங்களிடம் கோரப்பட்டுள்ளன.

சோமாலியாவில் இலங்கைத் தூதரகம் இல்லையென்பதால் மேற்படி கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துமாறு கென்னியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கோரப்ப ட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்: ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம்



வாராந்தம் நடமாடும் சேவை நடத்த முடிவு
வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிரு க்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடமாடும் சேவை நடத்தப்பட்டபோதிலும், சுமார் நூறு பேர் அளவில் மாத்திரமே நேரடியாக வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகனங்களின் அடிச்சட்டக இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பவற்றைப் பரீட்சித்து அவற்றைக் கணினித் தரவுகளுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் உரிமையை உறுதிப்படுத்தி வாகனங்களைப் பெற்றுச் செல்ல முடியுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

வாகனங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமுகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடமாடும் சேவைகளையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர், இந்தப் பணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களைத் தவிர்த்து அடுத்த வார இறுதி நாட்களில் நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. இதேவேளை, கொள்வனவின் பின்னர் முறையாகப் பதிவு செய்யப்படாத வாகனங்கள், உரிமை மாற்றத்தின் பின்னர் ஆவணங்களைச் சரியாக மாற்றாதிருக்கும் வாகனங்கள், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ‘கைவிடப்பட்ட வாகனங்கள்’ என வகைப்படுத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக் கையளிப்பதுடன், உரிய ஆவண ங்களைத் தொலைத்தவர்கள் தொடர்பிலும் முறையான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களைத் தவிரவும் இன்னமும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களும் கனரக வாகனங்களும் அடையாளம் காணப்படவுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்த பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனப் பரிசோதகர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...