2 ஜூலை, 2010

பிரான்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவருக்கு ஜெயில்





பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் முதலாவது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றி




இலங்கையின் வைத்திய வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

இதன் மூலம் தேசிய வைத்தியசாலை மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

40 வயதான ஒரு நோயாளிக்கு இந்த மாற்று கல்லீரல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மூளை செயலிழந்து வாழ முடியாத நிலையிலிருந்த நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.இவரிடமிருந்து சிறுநீரகமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சைக்காக 24 மணி நேரம் செலவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இதுவரையில் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கே பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு சுமார் 5 மில்லியன் ரூபா வரையில் செலவிட வேண்டியும் இருந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அரிய சாதனை இந்நிலைமையை மாற்றியமைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இறுதிக்கட்டப் போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு ஐநா செயலாளர்நாயகம் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கவும் கடந்த 22ஆம் திகதி ஐநா நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி கெத்தரின் அஷ்டன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான் கி மூன், இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்திருந்த கூட்டறிக்கையில் மனித உரிமைகள் விவகாரம் முக்கிய விடயமாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா எதிர்ப்பு

அதேவேளை, இந்த நிபுணர் குழுவுக்கு நேற்றையதினம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது சீன அரசாங்கம்.

இலங்கை அரசு இவ்விடயத்தைக் கையாளும் என்று தாம் நம்புவதாகக் கூறியுள்ள சீனா, பான் கி மூனும், உலக நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு நிலைமையை உறுதிப்படுத்த அந்நாட்டுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

ஏற்கனவே ஐ.நா குழுவுக்கு அமெரிக்கா தனது ஆதரவையும், ரஷ்யா தனது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய அரசாங்கம் இதுகுறித்து இன்னமும் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளருக்கு மானியம் : அமைச்சர் திட்டம்

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த சமரசிங்க திட்டமிட்டுள்ளார்.

பெருந்தோட்டக் கைத்தொழிற்துறைகளில் ஒன்றான தெங்கு உற்பத்தியின் பிரதான தயாரிப்பு தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய் ஒரு போத்தலின் உற்பத்திச் செலவு 186 ரூபா வரை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக, அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ததேகூ உயர்மட்டக் குழு 4ஆந் திகதி இந்தியா விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு ஒன்று எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேற்படிக் குழுவினர் 5, 6, 7 ஆகிய திகதிகளில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் உட்பட உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் இன்றைய நிலை மற்றும் இறுதித் தீர்வு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழுவில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்-பிரதமர்


உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து நாடு தன்னிறைவை அடைய வேண்டும். இதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார்.

பாண் சாப்பிடக் கூறும் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் வாயை கோதுமை மா பசையால் ஒட்டி சோளக் காட்டு பொம்மைகளை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. உற்பத்தி அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகள் குறையும். கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்டுள்ளார். இலக்கத்தை வைத்துக் கொண்டு விவாதிப்பதில் எவ்விதமான நன்மையும் இல்லை. தேசிய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள், சலுகைகள் தொடர்பில் எவருமே கூறுவதில்லை. உணவில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே அபிவிருத்தியடைய முடியும். மக்களுக்கு பலத்தையும் மன நிம்மதியையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்.

பாண் தொடர்பில் கதைக்கின்றனர். ஏன் அரிசி, சோளம் உற்பத்தி குறித்து கதைப்பதில்லை. நாட்டிற்குள் சகல பொருட்களையும் உற்பத்தி செய்து மூன்று மாதங்களில் தன்னிறைவு அடையும் யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்களை தைரியமூட்ட வேண்டும். நாம் மட்டுமல்ல, எதிர்க் கட்சியினரும் உற்சாகமூட்ட வேண்டும். தேசிய உற்பத்தியை அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்களில் தங்கியிருக்கவோ கையேந்தவோ தேவையில்லை.

அரசியல் தரிசனம் அல்ல, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் நாம் நம்புகிறோம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

60 வருடங்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். இனிமேலும் அந்த நிலையிலேயே இருக்கக் கூடாது. குறிப்பாக எதிர்க் கட்சியினர் பாண் குறித்தே பேசுகின்றனர். கோதுமை மாவில் பசை செய்து அவர்களின் வாய்களை ஒட்டி சோளக் காட்டு பொம்மைகளை தயாரிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து இலாபத்திற்கு உண்டு குழிகளை நிரப்பி பிச்சைக்காரர்கள் ஆகுவோம் என்றே எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். 2011 மிகவும் பலமான வரவு செலவுத் திட்டத்தை மஹிந்த சிந்தனையின் மூலமாக முன்வைக்க முடியும். அதற்காக நாம் கைகோர்க்க வேண்டும். கல்வி ரீதியில் மக்களை தயார்படுத்தாமல் பொருளாதாரத்தை மேம்படச் செய்ய முடியாது. சம்பாதிக்க வேண்டும், எமக்காக செலவழிக்க வேண்டும். பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மதங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. துன்பத்திலிருந்து மீண்டு இன்பமான வாழ்க்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் காலடி எடுத்து வைத்துள்ளோம். அதற்காகவும் அதனை உறுதிப்படுத்தவும் நாம் செயற்பட வேண்டும். உழைக்காமல் அதனைச் செய்ய முடியாது. தாய் நாடு ஒருவருக்கு உரித்துடையது அல்ல. எமது நாடு என்ற உணர்வை வெளிநாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் தாய் நாட்டை பாதுகாத்து ஒரு முன்மாதிரியாக உலகத்தின் முன் திகழ முடியும்.

இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகரின் நாடு என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். இன பேதமின்றி சகலரும் ஒருவரே என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி சர்வதேசத்துடன் முகம் கொடுக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலிய புதிய குடியேற்றச் சட்டம் எதிரொலி: 15 ஆயிரம் இந்திய மாணவர்களின் கதி என்ன?





குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் புதிய குடியேற்றச் சட்டத்தை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் பாதிப்பாக அங்கிருந்து சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்படக்கூடும் என வெளிநாடு வாழ் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் வயலார் ரவி கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் குடியேறும் தொழிலாளர்களை குறைக்கும் நோக்கத்தில் புதிய குடியேற்றச்சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அமல்படுத்தியுள்ளது. ரூட் தலைமையிலான அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்தது.

இதன்படி திறன்சார் தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. முன்னதாக இந்த தொழில்கள் எண்ணிக்கை 450 ஆக இருந்தது. அது 150 ஆக குறைந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள தொழில்கள் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் நிரந்தர குடியுரிமை பெறுவதுடன் வேலையும் பெற்று வந்தனர்.

தற்போது அந்த பட்டியலிலிருந்து முடித்திருத்தும் தொழில், சமையல் கலை உள்ளிட்டவை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா சென்று நிரந்தரக் குடியுரிமை பெறும் நோக்கத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் இத்தகைய படிப்புகளில் சேர்ந்து பயில்கின்றனர். இனி நிலைமை மாறிவிடும். எனினும் இப்போது பயிலும் இந்திய மாணவர்கள் 2012ம் ஆண்டு வரை படிப்பை தொடர சலுகை அளித்துள்ளது ஆஸ்திரேலியா.

தொழில்படிப்பு அளிக்கும் கல்வி நிறுவனங்களை மூடிவருகிறது ஆஸ்திரேலியா. இத்தகைய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர்.

புதிய குடியேற்றச் சட்டத்தை அமல்படுத்தும்போது இந்திய மாணவர்களின் கவலையை கருத்தில் கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து, தொழில்கல்வி பயிலும் இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக நிறுவனங்கள் உறுதிதந்தால் அத்தகைய மாணவர்கள் 2012வரை தங்கியிருக்கலாம் என அரசு தரப்பில் உத்தரவாதம் தெரிவிக்கப்பட்டது.

புதிய குடியேற்றச் சட்டத்தின் காரணமாக இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நிச்சயம். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மாணவர்கள் வரை தாயகம் திரும்பக்கூடும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதாக ஆஸ்திரேலியா உறுதி அளித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் தொழில்கல்வி பயின்றால் வேலையும் கிடைக்கும் நிரந்தர குடியுரிமையும் கிடைக்கும் என ஆசை காட்டி ஏராளமான மாணவர்களை ஏஜெண்டுகள் அனுப்பிவந்தனர். இனிமேல் சமையல் கலை, முடித்திருத்தும் தொழில் போன்ற படிப்புகளுக்கு செல்வோருக்கு ஆஸ்திரேலிய அரசு விசா வழங்காது.

இந்திய மாணவர்கள் தற்போது படித்துவரும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்றுப்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு தரப்படுகிறது. முந்தைய குடியேற்றச்சட்டத்தின் படி ஆஸ்திரேலியா சென்ற மாணவர்கள் தொழில்கல்வி படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அத்தகையோர் அந்த படிப்புகளை முடிக்க ஆஸ்திரேலிய அரசு வழிகாண வேண்டும் என்றார் வயலார் ரவி.

ஆஸ்திரேலியாவில் சீனர்களுக்கு அடுத்தபடியாக 1 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும்: ஜெயலலிதா

இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை, குழு ஒன்றை அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு அரசும், முதல்வர் கருணாநிதியும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் ஐ.நா. சபை ஆதரவு கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை தலைவரின் இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபட்ச அரசு குற்றம் செய்யவில்லை என்றால், ஐ.நா. குழுவை இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், ராஜபட்ச அரசு செய்த கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகமில்லை.

÷கருணாநிதி மீது குற்றச்சாட்டு: இலங்கையில் போர் முடிந்த 19.5.2009-ம் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியதை தமிழக மக்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள தமிழர்களும் நம்பினார்கள். போர் முடிந்து விட்டது என்று நம்பி, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தவர்கள் மீது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இரண்டே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

போர் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்காத அப்பாவி மக்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனால், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொல்ல, இலங்கை அரசுக்கு கருணாநிதி உதவி செய்திருக்கிறார்.

எனவே, ராஜபட்ச சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான்.

ஐ.நா. சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அ.தி.மு.க. குழு அவர்களைச் சந்திக்கும். கருணாநிதி போர் குற்றவாளி என அறிவிக்கத் தேவையான ஆதாரங்களை ஐ.நா. குழுவிடம் அ.தி.மு.க. அளிக்கும்.

சதிச் செயல்களால் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்காக இதையாவது நாம் செய்ய வேண்டும். இதைத்தான் நம்மால் செய்ய முடியும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

விமான நிலையங்களில்




விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்தினால் பயணிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேவிட் பிரென்னர் கூறியிருப்பதாவது:
விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட உள்ள முழு உடல் ஸ்கேனிங் கருவிகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்-ரே கதிர்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. சாதாரணக் கருவிகளை விட இந்த வகை ஸ்கேனர்கள் 20 மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தக் கூடியன.
குறிப்பாக குழந்தைகள் இந்த கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவர். ஸ்கேனர்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
எனவே, இது போன்ற முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப கருவியை வடிவமைப்பது நல்லது என்று டெய்லி மெயிலில் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, உலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில் பிரென்னரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ததாக அமைந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்டருக்கு 7 ஆண்டு சிறை





ஆஸ்திரேலியாவில் மூன்று நோயாளிகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, இந்திய வம்சாவளி டாக்டர் ஜெயந்த் படேலுக்கு (60) 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.÷

கடந்த 2003- 2005-ம் ஆண்டுகளில் பன்டாபெர்க்ஸில் உள்ள மருத்துவமனையில் ஜெயந்த் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு அவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். அறுவைச் சிகிச்சைக்கு பின் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

ஜெயந்த்தின் அறுவை சிகிச்சைக் காரணமாக அவர்கள் மூவரும் உயிரிழந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த குயின்ஸ்லாந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் பைரன், ஜெயந்த்தின் சிகிச்சை காரணமாக அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த குற்றத்திற்காக ஜெயந்த்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டைனை விதிக்கப்படுகிறது என வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

நோயாளிகளை உடல் ரீதியாக வருந்தச் செய்த குற்றத்திற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...