17 செப்டம்பர், 2009

மட்டக்களப்பில் சர்வ மதத் தலைவர்களின் 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று ஆரம்பம்


சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சர்வோதய ஒன்று கூடல் மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் 3 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.

நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன தலைமையில் நேற்று மாலை இப்பயிற்சிப் பட்டறை வைபவ ரீதியாக சர்வ மத தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் பேரருட்திரு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, மௌலவி ஐ.எம்.இலியாஸ் ஆகியோர் மங்கள தீபம் ஏற்றி இதனை ஆரம்பித்து வைத்தனர்.

குறிப்பாக இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக தெற்கிலிருந்து 50இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார்களும் வருகை தந்திருந்தனர்.

நேற்று மாலை ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறை நாளை மாலையுடன் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

"தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சாத்வீக வழியிலும், ஆயுத போராட்டத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில் சரியான தீர்வொன்று அம்மக்களுக்குக் கிடைக்க வேண்டும்

இந்தக் கோரிக்கையை தெற்கு மக்கள் ஊடாகவே அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டியிருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு மக்களையும் இதில் இணைத்துக் கொள்வதன் மூலமே இனங்களிடையே ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

இதுவே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்" என இதில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா. விசேட பிரதிநிதி கொழும்பு வருகை: இன்று வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்கிறார்


ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். போருக்கு பிறகான நிலைமைகள் குறித்தும் இதர மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் அவர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

லின் பாஸ்கோ வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பருவ மழை காலத்தின் போது அங்குள்ள தங்கும் வசதிகள் குறித்து உதவி வழங்கும் நிறுவனங்கள் பெரும் கவலையடைந்துள்ளன. மேலும் போர் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு விசாரணை குறித்தும் அவர் இலங்கை அரசுடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான விசாரணைகள் குறித்து முன்னர் எழுந்த சர்வதேச கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியது. அவருடன் பரந்துபட்ட அளவில் ஆலோசனைகளை நடத்தவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருந்தாலும் அதில் மனித உரிமைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...
யாழ். முகாம்களிலுள்ள வெளிமாவட்ட மக்களை வவுனியா அனுப்ப நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வவுனியா முகாம்களுக்கு அனுப்பி வைப்பதென வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரச செயலகத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்திற்கமைய யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 928 குடும்பங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வவுனியா முகாம்களை வந்தடைந்ததன் பின்னர், அங்கிருந்து அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் வவுனியா மெனிக்பாம் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோர் படிப்படியாகப் படையினரால் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் 1000 பேரை இன்று வியாழனன்று அங்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது


அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று - கல்முனை வீதி, சம்மாந்துறை - நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று - பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...