14 மார்ச், 2011

இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு: 11 பெண்கள் உட்பட 13பேர் கைது
வென்னப்புவ மற்றும் தங்கொட்டுவ பகுதிகளில் நீண்டகாலமாக செயற்பட்டுவந்த விபசார விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்து 11 பெண்கள் உட்பட 13பேரை கைது செய்துள்ளனர்.

மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த விடுதியை சுற்றிவளைத்ததாகவும் கைதான 11பெண்கள் 20வயதிற்கும் 25வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான பெண்கள் காலி கருவலகஸ்வௌ, புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்கள் மீண்டும் பிரிவினைவாதிகளிடம் சிக்கிவிடக் கூடாது: சம்பிக ரணவக்க

தமிழ் மக்கள் மீண்டும் பிரிவினைவாதிகளிடம் சிக்கிவிடாமல் ஆளும் கட்சிக்கு இம்முறை மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை மத்திய அரசாங்கமே வழங்க முடியும். இத் தேர்தலில் அரசாங்கத்தை தோல்லியடையச் செய்வதால் நட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ்- சிங்கள மக்களிடையே தற்போத எந்தப் பிரச்சினையும் கிடையாது. எனவே இடம்பெயர்ந்த மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்நாட்டில் எரிப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையினால் மசகு எண்ணெயின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போதிலும் உள்நாட்டில் எரிப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினால் மசகு எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் அதிரித்து கொண்டே செல்கின்றது. மசகு எண்ணெய் பெரலொன்று தற்போது 115 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

மசகு எண்ணெய் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், ஈரான் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பழைய விலையிலேயே எண்ணெயை இன்றும் கொள்வனவு செய்கின்றது.

தூரநோக்கில் சிந்தித்து செயற்பட்டமையினால் எரிப்பொருட்களின் விலைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

1கோடி 43இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிநாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டு புதிய வாக்காளர் இடாப்பின்படி ஒரு கோடியே 43 இலட்சத்து 15ஆயிரத்து 417 பேர் வாக்களிப்பதற்கு பதிவுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி ஜப்பானுக்கு ஒரு மில்லியன் டொலர் உதவி விசேட மருத்துவ குழுவும் பயிற்சிபெற்ற முப்படை அணியும் அனுப்ப ஏற்பாடு
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட் டுள்ள ஜப்பானிய மக்களின் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக பத்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக (கிட்டத்தட்ட 11 கோடி ரூபா) வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக் கைகள் எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தரவுக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

இலங்கை- ஜப்பான் நட்புறவை யும் இராஜதந்திர தொடர்புகளை யும் மேலும் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் சுனாமி அனர்த்த த்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பா னிய மக்களின் வாழ்க்கை தரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக விசேட மருத்துவக் குழுவொன்றை யும் விசேட பயிற்சி பெற்ற முப்படை அணியொன் றையும் ஜப்பானுக்கு அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட் டுள்ள ஜப்பானிய மக்களை கூடிய விரைவில் சுமுக நிலைக்குட்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பாக உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்துக்கும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நட்பு நாடு என்ற ரீதியில் ஜப்பான் பாரிய அளவில் செயற்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு பாதுகாப்புக் கடமையில் 50,000 பொலிஸார்,25,000 படையினர்உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (14) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரசாரக் கூட்டம், மக்கள் சந்திப்பு, உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். அதேவேளை நாளை (15) நள்ளிரவுக்கு முன்னர் வேட்பாளர்களின் காரியாலயங்களும், வீடுகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் அலங்காரங்களும் நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கட்சி செயலாளர்களின் கலந்துரையாடலின் போது இது தொடர்பான இணக்கம் காணப்பட்டதாகவும் எனவே அவ்வாறான அலங்காரங்களை அப்புறப்படுத்தாத காரியாலயங்களில் உள்ள அலங்காரங்களை பொலிஸார் அப்புறப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் இடம் பெறும், எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் பிரதேசத்தில் பொலிஸாருக்கு புறம்பாக இராணுவத்தினரும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக வரவழைக்கப்படுவ ரென்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வேளையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது இறுதிக்கட்ட கூட்டங்களை நடத்திவருகின் றன.

அரச தரப்பு கட்சியினர் இதுவரை மேற்கொண்ட வேலைத்திட்டங்களையும் இனியும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில், எதிரணியினர் தாம் கிராம சபைகளை கைப்பற்றுவதன் மூலம் செய்யக்கூடிய பணிகளை தெரிவித்து மக்களிடம் வாக்குக் கேட்டுவருகின்றனர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுங்கேணி பிரதேச சபைக்குரிய இறுதி பிரசாரக் கூட்டம் கடந்த வெள்ளிமாலையும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபைக்குரிய கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவும் நடைபெற்றன.ஐந்து தமிழ் கட்சிகளுடைய தலைவர்க ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. ஆனந்தசங்கரி, ரி. சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபெற்ற எந்த தரப்பு கூட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லை. குறைந்தளவானவர்களே பங்குகொண்டனர்.

இதேவேளை பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணியொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பொலிஸார், 20 ஆயிரம் முப்படையினர் மற்றும் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் என 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணி 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன் தேர்தல் தினமான எதிர்வரும் 17ஆம் திகதி கலகமடக்கும் படை, நடமாடும் காவல் சேவை, வீதி பாதுகாப்பு சேவை ஆகிய பல சேவைகள் இடம்பெறுவதுடன், தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கென தனியான பிரிவும் சேவையில் ஈடுபடும்.

வாக்கு பெட்டிகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல தனியான பாதுகாப்பு செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியதாக 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 14 பேர் வேட்பாளர்கள் என்றும் தேர்தல் பாதுகாப்புக்கான விசேட பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உணவு, குடிநீரின்றி மக்கள் அவதி 10,000 பேர் வாழ்ந்த கிராமம் முற்றாக அழிவு

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் குடிப்பதற்கு நீர் மற்றும் போதிய உணவுகளின்றி கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில பிரதேசங்களில் மின்சாரம் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களாகிய நிலையில் நூடில்ஸணும், சோறுமே தமக்கு உணவாக வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

சுனாமி அனர்த்தத்தினால் சுமார் ஜப்பானில் 2000 பேர் உயிரிழந்திருப்பதுடன் இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந் துள்ளனர்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக மாற்றப்பட்டு ள்ளதுடன், முகாம்களிலுள்ளவர்களுக்கு தொண்டுப் பணியாளர்கள் குடிநீர் போத்தல்களை வழங்கி வருகின்றனர்.

நேற்றையதினம் 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்கென ஜேர்மனியிலிருந்து பயிற்சியளிக்கப்பட்ட நாய்களும், மீட்புப் பணியாளர்களும் ஜப்பான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

மீட்புப் பணிகளுக்காக ஒரு இலட்சம் ஜப்பான் பாதுகாப்புப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பூமி அதிர்வினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளார்களா என்பது குறித்தும் படையினர் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 2.4 மில்லியன் வீடுகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன், 1.4 மில்லியன் வீடுகளில் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகம் உள்ளிட்ட பல சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தால் அணு உலை முற்றாக வெடித்துச் சிதறும் நிலையிருந்து பாதுகாப்பதற்கு ஜப்பான் அமெரிக்காவிடம் அவசர உதவி கோரியுள்ளது. அதே நேரம் மீட்புப் பணிகளுக்கென இராணுவத்தை அனுப்பி உதவுமாறும் கோரப்பட்டுள்ளது.

பாரிய பூகம்பத்தால் ஆயிரம் பேர்வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் பேர் வாழ்ந்த கிராமமொன்று முற்றாக அலைகளினால் அடிக்கப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்தோரின் நிலவரம் இது வரை தெரியவில்லை யெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சத்துக்கும் மேலானோர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி யுள்ளனர்.

ஜப்பானின் அணு உலை நிலையங்கள் வெடிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இவற்றைப் பாதுகாக்க ஜப்பான் அரசு அமெரிக்காவிடம் அவசர உதவி கோரியுள்ளதுடன் மீட்புப் பணிகளிலும் ஈடுபடும் பொருட்டு இராணுவத்தையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் நஓட்டாகான் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு தேசிய அனர்த்த வாரத்தை பிரகடனம் செய்துள்ளார்.

அணு நிலையங்களிலுள்ள நீரை குளிர வைக்கும் உயர் ரகத் தாங்கிகள் வெடித்ததால் வானளவிற்கு புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்: இருதரப்பு பேச்சுவார்த்தை இந்தியாவில் உயர் மட்டக்குழு 27 இல் டில்லி பயணம்


இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய முதற்கட்ட பேச்சு வார்த்தை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கென இலங்கையின் உயர் மட்டக்குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி புது டில்லி செல்லவுள்ளது.

இக்குழுவில் வெளிநாட்டமைச்சு, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு மற்றும் கடற்படை அதிகாரிகளும் இடம்பெறவுள் ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அடுத்தவாரம் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானி கருடனும் பேச்சுவார்த்தையொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் தவறெனக் கூறியுள்ளனர். இது விடயத்தில் நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் முனைப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணும் வகையில் இரு நாடுகளுக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் போது மேற்படி விடயம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக அது தொடர்பிலான முதலாவது பேச்சுவார்த்தையே எதிர் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதெனவும், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உயர் மட்டக்குழுவொன்று இந்தியா செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

இன்னொரு இனத்துடன் பகைமை காட்டி நாட்டை முன்னேற்ற முடியாது திருகோணமலையில் ஜனாதிபதி உரை


இன்னொரு இனத்துடன் எப்போதும் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டைப் பிரித்துக்கொண்டு எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று திருகோணமலையில் தெரிவித்தார்.

இன, மத, மொழி, குல மாகாண பேதங்களையும், பகைமை, குரோதங்களையும் மறந்து சகலரும் ஒன்றுபட்டால் தான் நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

நாம் பிறந்த இந்தத் தாயகத்தைப் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மேம்படுத்துவது எம்மெல்லோரதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுங்கு செய்திருந்த திருகோணமலை மாவட்ட மாநாடு திருமலை மெக்கைஸர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இம்மாவட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொலிஸாரின் அறிக்கை படி இப்போது தேர்தல் தொடர்பான வன்முறைகளும், சண்டைகளும் கட்சிகளுக்கிடையில் இடம்பெறுவது மிகவும் குறைந்து விட்டது.

ஆனால், கட்சிக்குள்ளான அபேட்சகர்களுக்கிடையில் தான் அதிக சண்டைகளும், மோதல்களும் இடம்பெறுகின்றன. விருப்பு வாக்குக்காகவே இச்சண்டை இடம்பெறுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.

ஜயவர்தன தயாரித்து வழங்கிய தேர்தல் முறையின் பிரதிபலிப்புத் தான் இது. ஆளுக்காள் சண்டை பிடித்துக்கொள்ளும் தேர்தல் முறையைத் தான் அவர் எமக்கு வழங்கியுள்ளார்.

எம்மால் எப்போதும் இன்னொரு இனத்துடன் பகைமை பாராட்டி, சண்டை பிடித்து, நாட்டை பிரித்துக் கொண்டு வாழவும் முடியாது. அபிவிருத்தி அடையவும் முடியாது. அதனால் இது நாம் பிறந்த மண். நாம் இன, மத, குல, மொழி, மாகாண பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயற்பட்டால் தான் எம்மால் முன்னேற முடியும் இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். நாம் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு எமது தாயகத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்.

சிலர் எம்மை வெட்டினாலும் பச்சை அல்லது நீலம் அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு என்றபடி கூறுவார்கள். ஆனால், எமது உடம்மை வெட்டினால் சிவப்பு நிற இரத்தம் தான் வரும். என்றாலும் பசிவரும்போது இந்த நிறங்கள் எமக்கு உதவாது.

எமது கிராமங்களில் பாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சீரில்லாவிட்டால் நாம்தான் கஷ்டப்பட நேரிடும். துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.

நாட்டில் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்கள் நாமே என்பதை நிரூபித்துள்ளோம். இதனை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும், பாரிய அபிவிருத்தி இடம்பெறுகின்றது. கிழக்கு அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றோம். இன்று கொழும்பு, மட்டக்களப்பு உட்பட முழு நாட்டுக்கும், துரிதமாக செல்லக் கூடிய வகையில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

திருமலை ஆஸ்பத்திரி ஐநூறு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அன்று இப்பகுதியில் நிலவிய நிலமை இப்போது இங்கில்லை. கடலில் மீன்பிடிக்கவோ, விவசாயம் செய்யவோ இப்போது தடைகள் எதுவும் கிடையாது.

திருமலை மாவட்டம் உட்பட முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். இதன் நன்மைகளை இந்நாட்டு மக்களும், அவர்களது எதிர்கால சந்ததியினரும் அனுபவிப்பர். உங்களை நான் பாதுகாப்பேன்.

நான் உங்களது தோழன். உங்களது உறவினன். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் என்னை நம்புங்கள். 17ம் திகதி வெற்றிலை சின்னத்தை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.

இம்மாநாட்டில் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, பிரதியமைச்சர்கள், சுசந்த புஞ்சிநிலமே, எம். கே. டி. எஸ். குணவர்தன, மாகாண ஆளுநர்கள் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, ரியர் அட்மிரல் மொகாக் விஜேவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக், முன்னாள் பிரதியமைச்சர் நஜீப் ஏ. மஜீத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

பாம்பாட்டியின் உயிருக்கே உலைவைத்த நாகம்பாம்பாட்டி யொரு வர் தான் ஆட்டிய பாம்பினா லேயே தீண்டப்பட்டு மரண மான சம்பவம் பது ளையில் நடந்துள்ளது.

இச்சம்பவம் குட்டிகலைப் பகுதியின் துங்கம என்ற இடத்தில் சனியன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மரணமானவர் எல். ஜேம்ஸ்ராஜா என்ற 35 வயது நிரம்பிய பாம்பாட்டி யாவார்.

இம் மரணம் தொடர்பாக பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில், சட்ட வைத்திய அதிகாரி பி. எம். எம். ஹேரத் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டிருந் தார். மரணம் தொடர்பாக இறந்தவரின் சகோதரரான எல். ராஜ்குமார் வயது 33 சாட்சியமளிக்கையில், “இறந்துள்ளவர் எனது சகோதரனாவார்.

வழமையாகவே பிடிக்கப்படும் பாம்புகளின் விஷப்பற்களை அகற்றியே, பெடடிக்குள் விடுவார். சம்பவதினம் புதிய நாகபாம்பொன்றைப் பிடித்து, அதன் பற்களைப் பிடுங்காமல் பெட்டிக்குள் போட்டுவிட்டார்.

சம்பவதினம், எனது சகோதரன் தொழிலை ஆரம்பிக்கும் வகையில் பெட்டிக்குள்ளிருந்த பாம்பை வெளியே இழுக்கும் போது, அப்பாம்பு அவரைத் தீண்டியுள்ளது. அதனையடுத்து அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லை என்றார்.

பலரது சாட்சியங்களைப் பதிவு செய்த மரண விசாரணை அதிகாரி, இறுதியில் பாம்பு தீண்டியதனால், உடம்பெங்கும் விஷம் பரவி, இம்மரணம் சம்பவித்துள்ள தென்று தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த அயராது உழைப்பேன்


மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதே மறைந்த தலைவர் சந்திரசேகரனின் கணவாக இருந்தது. அதனை நிறைவேற்றுவதற்காகவே நான் மலையக மக்கள் முன்னணியில் அரசியல் துறை தலைவராக பொறுப்பேற்றுள்ளேன்.

எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இலட்சியத்தை அடைவதற்காக முழுமையாக என்னை அர்ப்பணித்து பாடுபடுவேன் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தினகரனுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன்று மலையக இளைஞர், யுவதிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

இவர்களை ஒன்றிணைத்து சரியான தலைமைத்துவத்தை வழங்கினால் எமது மலையக இளைஞர், யுவதிகளும் பல சாதனைகளை செய்வார்கள். அத்தோடு இவர்களுக்கான முறையான வேலைத்திட்ட ங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இதனை நாம் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனவே இதனை நடைமுறைப்படுத்த எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற்றுத்தருவதன் மூலம் இந்த இலக்கை இலகுவாக அடைய முடியும். இதற்கு நான் முழு உத்தரவாதம் தருகின்றேன்.

நான் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த பொழுது கட்சி பேதங்களை மறந்து அனைவருக்கும் பொதுவாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அது இந்த மக்களுக்கு நன்றாக தெரியும். என்னை இன்றும் எனது மக்கள் ராதா அண்ணன் என்றுதான் பாசத்தோடு கூப்பிடுகின்றார்கள். அதனை நான் என்றும் விரும்புகின்றேன்.

நான் தேர்தல் காலங்களில் வரும் வழமையான அரசியல்வாதி அல்ல. என்னை சந்திப்பதற்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. நான் பாராளுமன்றத்திற்கு சென்றவுடன் எனது கைத் தொலைபேசி இலக்கத்தை மாற்றவில்லை. இன்றும் பழைய ராதா அண்ணனாகவே இருக்கின்றேன். நான் அரசியலில் எந்த உயரத்திற்கு சென்றாலும் இப்படித்தான் இருப்பேன்.

நான் 1991 ஆம் ஆண்டு நுவரெலிய பிரதேச சபை தலைவராக பொறுப்பேற்ற பொழுது அந்த சபையை இலங்கையின் தலை சிறந்த பிரதேச சபையாக மாற்றி அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் சிறந்த பிரதேச சபைக்கான விருதை பெற்றுக்கொண்டேன். எனவே, என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் நல்ல அனுபவம் இருக்கின்றது. இந்த மக்களுடைய கஷ்டங்களை நன்கு அறிந்தவன், மக்களோடு மக்களாக இருப்பவன்.

இன்னும் சில மாதங்களில் தொழிலாளர் களின் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். எனவே, இந்த மக்களை வேலை நிறுத்தம் என்று காலத்தை வீனடிக்காமல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி வேலைநிறுத்தம் செய்வதாயின் அது சரியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் இந்த மக்களுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில் நாம் அனைத்தையும் மறந்து ஒத்துழைக்க தயாராகவுள்ளோம்.

நான் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தது இந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. இந்த மக்களின் லயன் முறைகள் ஒழிக்கப்பட்டு முழுமையான கல்வி பெற்ற சமூகமாக மாற வேண்டும். பொருளாதார ரீதியில் மற்ற சமூகங்களுக்கு நிகராக நாமும் உயர்வடைய வேண்டும். எனது முழு நம்பிக்கையும் இந்த சமூக முன்னேற்றத்திலேயே இருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...