16 ஜூலை, 2010

விஜயின் வேலாயுதம் - 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் படபூஜை!

இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பூஜை சென்னையில் 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது.

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடிக்கிறார்கள். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலிருந்து விஜய் ரசிகர்கள் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முன்னதாக ரசிகர்கள் மெரினாவில் இருந்து ஜோதி ஏந்தி ஊர்வலமாக வந்து விஜய்யிடம் ஜோதியை கொடுத்தனர்.

விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகரன் - ஷோபா சந்திரசேகரன், எடிட்டர் மோகன் - அவரது மனைவி, ஜெயம் ராஜா - அவரது மனைவி, தயாரிப்பாளர் ஸ்ரீதர் - அவரது மனைவி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், படத் தொடக்கவிழாவை எளிமையாக நடத்தும்படி தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எதனையும் பிரம்மாண்டமாகச் செய்பவர். தசாவதாரம் பட பாடல் வெளியீட்டுக்கு செய்த மிகப் பெரிய பிரமாண்ட விழாவெல்லாம் எனக்கு வேண்டாமென அவரைக் கேட்டுக்கொண்டேன்.

நான் அவ்வளவு பெரிய நடிகனும் அல்ல. எனக்கு ரசிகர்கள் தான் முக்கியம். எனவே இந்த விழாவுக்கு அவர்களையே பிரதம விருந்தினர்களாக அழைத்துள்ளோம். எல்லோருக்கும் ஆஸ்கார் விருது ஆசை இருக்கும். ஆஸ்கார் பிலிம்ஸ் படத்தில் நடிக்கும் ஆசையும் இருக்கும். வேலாயுதம் படத்தின் மூலம் எனக்கு ஆஸ்கார் நிறுவனத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜெயம் ராஜா ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவரது தம்பி ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்குவார். முதல் முறையா வேற ஒரு நாயகனை வச்சு படம் பண்ணுறார். என்னையும் உங்க தம்பியா நினைச்சுக்கோங்கன்னு அவரிடம் சொல்லியிருக்கிறேன். என்ன...

நான் அவர் அளவுக்கு கலர் இல்லை. சச்சின் படத்துக்கு பிறகு ஜெனிலியா இந்த படத்தில் என்னுடன் நடிக்கிறார். தமிழ்ல நடிச்சாங்க, தெலுங்கு சினிமா பக்கம் போனாங்க, ஹிந்திக்கும் போனாங்க, அப்பிடியே போய் விடலாமென நினைச்சவங்களை பிடித்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம். என விஜய் சொன்ன போது சபையில் கரவொலி கிளம்பியது.

(ஐஃபா விழாவுக்கு இலங்கை வர நினைச்ச விடயம் தான்) இன்னொரு நாயகி ஹன்சிகா மோத்வானியும் ஏராளமான தெலுங்கு சினிமாக்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் தனுஸ், ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால குஷ்பு இருந்தது போல இருக்கிறார், என சான்றிதழும் கொடுத்தார்.

படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், 2011ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் ஆக இந்த படம் இருக்கும். பொதுவாக படத்தை பார்க்கும்போதுதான் சீட் நுனியில் இருப்போம். இந்த படத்தின் கதையை கேட்கும்போதே நான் நுனி சீட்டில்தான் இருந்தேன். அவ்வளவு விறுவிறுப்பான கதை, என்றார். விஜயுடன் இவர் இணையும் இரண்டாவது சந்தர்ப்பம் இது. (முன்னர் வேட்டைக்காரன்)

விழாவில் வேலாயுதம் படத்தின் ஆரம்பக்கட்ட புகைப்படங்களைத்தொகுத்து டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் திரைக்கதை புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்க, இயக்குநர் ஜெயம் ராஜா பெற்றுக்கொண்டார். இன்னொரு நிகழ்வாக விஜய்யின் செயலாளரும் சினிமா பத்திரிகை தொடர்பாளருமான பி.டி. செல்வகுமார் விஜய் பற்றி எழுதிய 'விஜய்யின்' சாதனை நாயகனின் சரித்திரப் படைப்பு' என்ற புத்தகத்தை விஜய் வெளியிட்டார்.

விஜயுடன் முதன் முதலில் கைகோர்க்கும் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா படம் பற்றி தெரிவித்த சில சுவாரசியமான விடயங்கள், இது ஒரு மாஸ் ஹீரோவுக்கான படம். சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களினால், அவன் மக்களின் நாயகனாக எவ்வாறு உருவெடுக்கின்றான் என்பதே படத்தோட கதைச்சுருக்கம்.

இதில் விஜய் ஒரு துடிப்புள்ள இளைஞனாகவும், ஜெனிலியா ஊடகவியலாளராகவும் நடிக்கிறார்கள். ஹன்ஸிகா மற்றும், சரண்யா மோகன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைப் பகுதிக்காக சந்தானம் மற்றும் சத்தியன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் விஜயின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காக சித்திக் ஒரு பக்கம் முயன்று கொண்டிருக்கும் போது, காவல் காதல் வெளியாக முன்னரே வேலாயுதம் படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வைகோ கைதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், சென்னையில் ம.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடையை மீறி, இலங்கைத் துணை தூதரகத்தை அகற்றப் போவதாக புறப்பட்ட வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தனர்.

கைதான அனைவரையும் சென்னை 18ஆவது பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் வைத்தனர். வைகோ தற்போது கடலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உட்பட தலைவர்கள் கைதானதை கண்டித்து மதுரை நீதிமன்றம் முன், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ்ச் சங்கத் தலைவர் சின்ராஜா தலைமை வகித்தார். ம.தி.மு.க., பொருளாளர் ஆசைதம்பி, சட்ட துறை செயலாளர் சந்திரன், வக்கீல்கள் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மனோகரன், சிவக்குமார், சங்கரநாராயணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வேலுநாச்சியார் பேரவை சார்பில் வக்கீல் பாண்டியன் தலைமையில் தனியான ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றதாக இந்தியஎ செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

தர்ஷிகா கொலை தொடர்பான சந்தேக நபர் பிணையில் விடுதலை

வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் கொலை தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சந்தேக நபரான டாக்டரை பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை இன்று மேல்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும் விசாரணைகளின் போது இவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மையினர் பிரச்சினை தீராமல் அரசியலமைப்புத் திருத்தமா?






சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறையை ஸ்தாபிப்பது பற்றியும் பேசிப் பயனில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகண சபை உறுப்பினர் நா. குமரகுருபரன் இதனைத் தொவித்தார் தகவல் வெளியாகி உள்ளது .

"அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேசவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதாகத் தெரியவில்லை.

யுத்தம் முடிவடைந்ததும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். எனினும் அதற்கு எந்தளவு முன்னுரிமை வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

நாட்டில் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இருப்பினும் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த வகையில் சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.

இன்னல்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு முதலில் சரியான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஈராக்கில் தீ விபத்து : ஒரு இலங்கையர் உட்பட 29 பேர் பலி

ஈராக்கிலுள்ள சொமா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுலைமானிய நகர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரும் மற்றும் பிலிப்பைன்ஸ், கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

பங்களாதேஷ் யுத்தக் கப்பல் கொழும்பு வருகை:அத்துல செனரத் தகவல்

பங்களாதேஷ் யுத்தக் கப்பலான 'பி.என்.எஸ்.அனுசந்தன்' நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

இந்த யுத்தக் கப்பலானது ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும். இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படை ஒழுங்கமைக்கும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் கப்பலில் வந்தோர் கலந்து கொள்வர்.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளைப் பேணும் பொருட்டே இந்நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிலிருந்து வந்த யுத்தக் கப்பலில் வந்த படையினர் திருகோணமலையில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு 1 ஆண்டு ஜெயில்; புதிய சட்டம் வருகிறது






சிறுவர், சிறுமிகளில் பலர் பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். அப்படி பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகளை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. தேசிய அளவில் ஹெல்ப் லைனும் உள்ளது. என்றாலும் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது நீடிக்கிறது.

சில இடங்களில் குழந்தைகளை பெற்றோர் மட்டுமின்றி மாற்றாந்தாய், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடித்து துன்புறுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் சட்டம் 2009 என்ற பெயரில் அந்த சட்டத்துக்கான வரை முறைகள் உருவாக்கப்பட்டு விட்டன.

இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில், சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும் என்றார்.

குழந்தைகளை துன்புறுத்து வதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.

அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.

பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும்.

ராக்கிங் குற்ற நிகழ்வுகளுக்கு தண்டனை கொடுக்கும் அம்சமும் இந்த சட்டத்தில் வர உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா சீனா போரில் உயிரிழந்தார் 48 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரர் உடல் மீட்பு

இந்தியா சீனா போரில் உயிரிழந்தார்    48 ஆண்டுகளுக்கு பிறகு    ராணுவ வீரர் உடல் மீட்பு

1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் நடந்தது. இந்த போரின் போது அருணாசல பிரதேசத்தில் டோக்ரா ரெஜிமெண்ட் என்ற படைப் பிரிவில் சேர்ந்து போரிட்ட வீரர்கரம் சந்த் கடோச். இவர் இந்த போரில் வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் அப்போது கிடைக்க வில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் பனி மூடிய சிகரத்தில் ஒரு ராணுவ வீரர் உடல் கெட்டுப் போகாமல் கிடந்தது. சீருடை அணிந்த நிலையில் இருந்தார். உடனே உடலை மீட்டு கொண்டு வந்தனர். சீருடையில் இருந்த அடையாள பேட்ஜை வைத்து அவர்யார் என்று அடையாளம் காணப்பட்டது.

இவரது சொந்த ஊர் இமாசலபிரதேச மாநிலம் பாலம் பூர் ஆகும். கடோச் 1959-ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19. அவர் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் இந்தியா- சீனா இடையே போர் ஏற்பட்டது. அருணாசலபிரதேசத்தில் 4-வது டோக்ரா, ரெஜி மண்ட்டில் சேர்ந்து சீனாவை எதிர்த்து போரிட்டார்.இதில் அவர் 22 வயதில் வீரமரணம் அடைந்தார்.

48 ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. சொந்த ஊரான பாலம்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன.

பனி மூடிய சிகரத்தில் பனிக்கட்டிகளுக்கு இடையே உடல் கிடந்ததால் கெட்டுப் போகாமல் இருந்திருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு ராணுவ வீரர் போரில் இறந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய உடல் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி கடோச்சின் உறவினர்கள் கூறும் போது, எங்கள் குடும்பத்தில் ஒருவராக கடோச் இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பண்டிவிரிச்சானில் மக்கள் மீள்குடியேற்றம்

மடு உதவி அரசாங்க பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.பண்டிவிரிச்சானில் சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது மீள்குடியேற்ற நடடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 6 நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 110 குடும்பங்களை சேர்ந்த 257 பேர் திங்கட்கிழமை அன்று பெரிய பண்டிவிருச்சான் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசையலமைப்பு குறித்து கலந்துரையாட ஜேவிபிக்கு அரசு அழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்துரையாட ஜே.வி.பிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இத்தகவலை அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அண்மையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வீரமக்கள் தினம்!

இன்றையதினம் வீரமக்கள் தினத்தின் இறுதி நாளாகும். தமிழீழ விடுதலை புலிகளால் கொழும்பு நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட த.வி.கூ. யின் செயலர் அமரர் அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட யூலை -13ம் திகதியில் இருந்து புளொட் செயலர் அமரர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட ய+லை 16ம் திகதி வரையிலான பகுதியை வீரமக்கள் தினமாக பிரகடனப்படுத்தி வீரமக்கள் தினம் கடந்த 20 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.


கடந்த 13ம் திகதி மலரஞ்சலியுடன் ஆரம்பமாகிய வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்றையதினம் வவுனியா கோயில் குளம் உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள அவரது சமாதியில் நினைவஞ்சலி நிகழ்;வினை தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் இடம்பெறும் என்று புளொட் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றைய நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட அவ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சக விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரணித்த போராளிகள், பொதுமக்;கள், தலைவர்கள், கல்விமான்களுக்கு தமது அஞ்சலியை தெரிவிப்பர் என்று புளொட் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 900 குண்டுகள் ஜப்பானில் கண்டெடுப்பு






உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட 900-த்துக்கும் அதிகமான வெடிக்காத குண்டுகள் ஜப்பானில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

÷2-ம் உலகப் போரின்போது ஜப்பான் மீது அமெரிக்க படைகளால் குண்டுமழை பொழியப்பட்டது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த நகரங்கள் கூண்டோடு அழிந்தன.

÷இந்த நிலையில் ஜப்பானின் ஒக்கினாவா நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தன. அப்போது சாலையோரம் இருந்த ஒரு ஹோட்டல் இடிக்கப்பட்டது. ஹோட்டல் இருந்த பகுதிக்கு கீழே பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸக்ஷ்ர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கு நிதானமாக பள்ளம் தோண்டி குண்டுகள் மெதுவாக எடுக்கப்பட்டன. வெடிக்காத நிலையில் மொத்தம் 902 குண்டுகள் அகற்றப்பட்டன.

÷இதுகுறித்து இடோமான் நகர மூத்த போலீஸ் அதிகாரி கியோகடா மேடோமரி கூறியதாவது:

÷2-ம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான குண்டுகளை வெடிக்காத நிலையில் அவர் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஜப்பானை விட்டு அமெரிக்க ராணுவம் சென்றபோது சுமார் 10 ஆயிரம் டன் வெடிக்காத குண்டுகளை அவர்கள் விட்டுச் சென்றதாகத் தெரியவந்தது.

÷இதுவரை ஏராளமான டன் எடையுள்ள வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வெடிகுண்டுகள் கிடைத்து வருவதால் ஜப்பானைச் சேர்ந்த தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும்போதும், கட்டடப் பணிகளில் ஈடுபடும்போதும் மெட்டல் டிடெக்டரை கையில் வைத்திருப்பர்.

÷அவ்வாறு சோதனை செய்தபோது இந்த ஹோட்டலுக்குக் கீழே வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 902 குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுத்தோம். இந்த வகை குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிகிறது என்றார் அவர்.

÷இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கப் படைகளுடன், ஜப்பான் படைகள் நடத்திய போரில் அதிகம் பாதிக்கப்பட்டது ஒகினாவா நகரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 83 நாட்கள் நடந்த போரில் சுமார் 1.90 லட்சம் ஜப்பானியர்கள் இறந்தனர். இதில் பாதிப்பேர் ராணுவத்தினர். மற்றவர்கள் பொதுமக்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: ஸ்டாலின்



இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மின் தடை என்பது நாடு முழுவதும் இருந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மின் தடையைப் போக்க முடிந்த அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை 19 ஆம் தேதி முதல்வரும் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் தடை மிகவும் குறைவாகவே உள்ளது. நெய்வேலியில் அமைக்கப்பட்டுவரும் புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியை தொடங்கி விட்டால் தமிழகத்தில் மின் தேவை பூர்த்தியாகிவிடும்.

அதிமுக தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அதைத் தூக்கி நிறுத்த ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். இதன் தாக்கம்தான் கோவையில் நடைபெற்ற அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஜெயலலிதாவும் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். தற்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி திமுகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர். கீழக்கரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கீழக்கரையில் புதிய தாலுகா செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் ஒரே அரசாங்கமே இயங்குகிறது என்ற சிந்தனையில் செயற்பட வேண்டும்

கிளிநொச்சி அரச ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி

வட பகுதியில் சேவை செய்ய வடக்கு மருத்துவர்கள் முன்வருவதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் தமது மக்களுக்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளில் உள்ளனர். மக்கள் இவர்களை அழைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அரச ஊழியர்கள் மத்தியில் பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வடபகுதி அரச ஊழியர்கள் அனைவரும், இப்போது ஒரே அரசாங்கமே இயங்குகிறது என்ற சிந்தனையிலேயே செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை உணர்ந்து வடக்கு மக்களின் 30 வருட கண்ணீருக்கு விடைகொடுக்க அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியம்.

அரசாங்கம் கடனுதவிகளைப் பெற்றே வடக்கின் அபிவிருத்தியை மேற் கொள்கின்றது. இதனை நன்குணர்ந்தவர்களாக அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். கண்ணீருடன் வாழ்ந்த மக்க ளின் வாழ்வில் சுபீட்சம் மலர அர்ப்ப ணிப்புடன் உழைக்க வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் உங்களுடையதே. கடந்த காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு நீங்கள் அவர்களுக்கேற்ப செயற்பட வேண்டியிருந்தது. அதனை நாம் அறிவோம்.

கடந்த தேர்தலிலும் அதன் வெளிப்பாடு பிரதிபலித்தது.

இப்போது அவ்வாறில்லை. ஒரே அரசாங்கமே உள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் செயற்படாவிட்டால் இங்குள்ள அரச உத்தியோகத்தர்களை அம்பாந்தோட்டைக்கு மாற்ற நேரிடும்.

துன்ப துயரங்களுக்குள்ளான மக்களுக்குச் சேவை வழங்கும் போது அன்பையும் அரவணைப்பையும் சேர்த்து வழங்குவதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை வழங்குவது அவசியம்.

உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டு புதிய பிரச்சினைகளை உருவாக்காமல் கவனமாக செயற்பட வேண்டும்.

இரணைமடுக் குளம் பகுதி புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதியாகும். நாட்டைப் பிளவுபடுத்தும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இடம். புலிகளின் முக்கியஸ்தர் அன்டன் பாலசிங்கம் ‘சீ பிளேனில்’ வந்து காரியமாற்றிய இடம். அத்தகையதொரு இடம் மீட்கப்பட்டு இந்தளவு விரைவாக இங்கு அமைச் சரவைக் கூட்டத்தையே எம்மால் நடத்த முடிந்துள்ளது.

இரணைமடுக் குளம் இலங்கையிலுள்ள முக்கிய நான்கு நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்று. இங்கிருந்து வடபகுதி எங்கும் நீர் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் ‘சீ பிளேன்’ சேவை நடத்துவோம். அது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

6628 பேருக்கு ஆசிரியர் நியமனம் 554 பட்டதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க 18இல் நேர்முகம்


பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக அடுத்த பாடசாலை தவணைக்கு முன்னர் 6628 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இதன்படி, 554 பட்டதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நாளை மறுதினம் (18) நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :- பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக 8200 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கொழும்பில் அமைக்கப் பட்டுள்ள 60 நிலையங்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.

இதுதவிர 3174 அழகியற் கலை ஆசிரியர்களை நியமிக்க நிதி அமை ச்சு அனுமதி வழங்கியுள்ளது. இவர் கள் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கேற்ப நியமிக்கப்ப டுவர்.

பட்டதாரிகளை அழகியற்கலை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் கோரப்படும். அது தொடர்பான விளம்பரங்கள் இன்றைய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 6க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

சகல கல்வியியல் கல்லூரிகளில் இருந்தும் வெளியான 2900 ஆசிரியர்களுக்கும் அடுத்த தவணைக்கு முன்னர் நியமனம் வழங்க உள்ளோம். இந்த நியமனங்களின் மூலம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவு நீங்குமென கருதுகிறோம்.

இதேவேளை ஆசிரியர்களின் இடமாற்றத்தையும் முறையாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 640 கிராமங்களில் 105 மில். கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதமாக்க தேசிய செயற்பாட்டு நிலையம்






வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதமாக்குவதற்காக தேசிய செயற்பாட்டு நிலையமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வடக்கில் 640 கிராமங்களில் 105 மில்லியன் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 2,60,000 கண்ணிவெடிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி 20% மாத்திரமே கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இதற்கென 860 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

90% இராணுவத்தினரே கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதாகக் கூறி அழைத்துச் சென்று அவர்களை மீண்டுமொரு முகாமில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களின் சொந்த வாழ்விடத்திற்குச் செல்லவிடாமல், உயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?’ என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல’, 30 வருட காலமாக வாழ்வதற்கான உரிமையே இருக்கவில்லை, எனவே அங்கு மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. பாதுகாப்புக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்க்க முடியாதவை. சொந்தக் காணி என்று உரிமை கோருபவர்கள் அதற்கான எந்தச் சான்றும் இல்லாமல் இருக்கின்றனர். அதனால்தான் மீள்குடியேறுவதில் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அதியுயர் பாதுகாப்பு வலயமும் முகாம்களும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானவை-அரசாங்கம்

அபிவிருத்தி,பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாது.

நாட்டின் பாதுகாப்புக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் படை முகாம்களும் முக்கியமானதாகும் என்று அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மக்கள் மீளக்குடியர்த்தப்படுகின்றனர் அவர்களுக்கென ஒரு துண்டு காணி வழங்கப்படுகின்றது. அவர்கள் ஆகாயத்தில் குடியேற்றப்படவில்லை காணி உறுதியிருந்தாலும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை அவர்களுக்கு வழங்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் மீளக்குடியமர்த்தும் போது வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் போதுமானது இல்லை என்பதை நான் அறிவேன். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை முதன் முதலாக சந்திக்கின்றவர்களுக்கு அதே உணர்வு ஏற்படும். ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது அகதிகளுக்கு கூடுதலாகவே நாம் செய்துள்ளோம்.

அமெரிக்காவின் இராணுவ முகாம் கொரியாவில் இருக்கின்றது அதேபோல நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களும் அதியுயர்பாதுகாப்பு வலயங்களும் முக்கியமானதாகும். அவை நிச்சயமாக இருக்கவேண்டியவையாகும். அதற்கான நிலங்களை உற்பத்தி செய்யமுடியாது. பாதுகாப்பை கவனத்தில் கொண்டே முகாம்கள் அமைக்கப்படும். நினைத்த இடங்களில் எல்லாம் முகாம்களை அமைத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அமைக்கமுடியாது. வீதிகளை நிர்மாணிக்கப்படுகின்ற போது சில வீதிகள் வீடுகளுக்கு இடையில் செல்லும் அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு காணியும் வழங்கப்படுகின்றது.

மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படவில்லை என்றும் அவர்கள் மீளவும் அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவதற்காக தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர் அவைத்தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர்த்தப்பட்ட காணியை காணி உரிமையாளர்கள் கோரும் சம்பவங்கள் 10 வீதமே இருக்கின்றன. அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படுவதுடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது காணி இருப்பதற்கான உறுதி பத்திரங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு அக்காணி மீளவும் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் இங்கே தொடர்க...

திருமண பதிவு செய்யாத 7000 இலங்கைத் தமிழர்கள்





தமிழகத்தில் உள்ள 115 இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்களது திருமணத்தை பதிவு செய்யாமல் இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை பெற முடியாத சூழல் ஏற்படும் என, ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.நடேசலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரினால், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை அரசு பராமரித்து வருகிறது.


இவர்களில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் பெறுவது அவர்களுக்கும், பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பானதாகும். எனவே, திருமணப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள முகாம்களில் வசித்து வருபவர்களில் தற்போது திருமணம் செய்துகொண்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியிலுள்ள அகதிகள் முகாமில் 172 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 62 தம்பதிகளும், ராயனூர் முகாமில் வசித்து வரும் 494 குடும்பங்களில் 45 தம்பதிகளும் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

எனவே, அவர்களது திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் முகாம் ராயனூரில் 14ந் தேதி நடைபெற்றது. இதில், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகாந்தி, மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.நடேசலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து நடேசலிங்கம் கூறுகையில்,

“தமிழகத்திலுள்ள 115 முகாம்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 7 ஆயிரம் பேர் திருமணம் செய்துகொண்டு தங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. எனவே, அந்தந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக அவர்களின் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இந்தப் பதிவு இருந்தால்தான் பிறக்கும் குழந்தைக்கு இலங்கை குடியுரிமை பெற முடியும். எனவே, இந்தப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, திருமணங்களை பதிவு செய்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...