15 ஜூன், 2010

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டு. விதவைகளுக்கு சுயதொழில் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவிகளை வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இந்திய உயர்ஸ்தானிகருட னான பேச்சுவார்த்தையின் போதே இந்திய அரசு இந்த நிதியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள 800 விதவைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு நிதி உதவி மற் றும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு விசேட பயிற்சி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளன. எதிர்வரும் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

கல்முனையில் சிவில் பாதுகாப்புக் குழு அடையாள அட்டைகள் யாவும் ரத்து போலி அட்டை கைப்பற்றப்பட்டதையடுத்து மாற்று நடவடிக்கை


பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்குரிய அடையாள அட்டையைப் போன்ற போலியான அட்டையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்முனை பிரதேசத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் செல்லுபடியற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் இன்று 15ம் திகதியுடன் செல்லுபடியற்றதாகி விடுவ தாக கல்முனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களிலிருந்து அவர்களை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதற்காக சிவில் பாது காப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்க ளுக்கு அதிகார பூர்வமான அடையாள அட் டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மீனவர் மேம்பாட்டுக்கு ரூ.550 இலட்சம் இலகு கடன் 70 பேருக்கு முதற்கட்டமாக நேற்று வழங்கி வைப்பு

வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 550 இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் இலகு கடனாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மீனவர்களில் 70 பேருக்கு நேற்று முதற்கட்டமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களின் மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு இலங்கை வங்கியின் ஊடாக இலகு கடன் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன யாழ்.குருநகரில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மீனவர்களுக்கான இலகுக் கடனை வழங்கி வைத்தார்.

தலா 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 4 இலட்சம் ரூபா வரையான தொகை அந்தந்த மீனவர்களின் தேவைக்கமைய வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த மீனவர்களில் 160 மீனவர்கள் இந்த இலகுக் கடன் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இவர்களில் 70 மீனவர்களுக்கே நேற்று முதற்கட்டமாக வழங்கப்பட்டது என்றார்.

வலை, மீன்பிடி உபரகணங்கள் போன்றவற்றிற்கு அவர்கள் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளனர். இந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு முதல் வருடம் கொடுக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து எந்த அறவீடும் அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட மாவட்ட மீனவ அபிவிருத்தி திணைக்கள கட்டடத்தை அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று திறந்து வைத்தனர்.

சகல நவீன வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உட்பட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை மந்திரி பிரிஸ் பாராட்டு


"பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் பாராட்டியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தெற்காசிய பிராந்தியத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார். இந்தியாவின் வளர்ச்சியோடு, மற்ற தெற்காசிய நாடுகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என, அவர் விரும்புகிறார். அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது, மன்மோகன் சிங்கின் இந்த செயல்பாடு தெரியவந்தது. மன்மோகன் சிங்கின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இவ்வாறு பெரிஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரச்சினைகளைத் தீர்க்க நடமாடும் சேவை : ம. மா. சபை நடவடிக்கை

மத்திய மாகாண சபை 2000 கிராமங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு நடமாடும் சேவைகளை நடத்தியுள்ளது.

நான்காவது நடமாடும் சேவை நேற்று ஹரிஸ்பத்துவையில் இடம்பெற்றது. அதன்போது அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 1000 பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன என மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை அமைச்சர்களாக அனுஷியா சிவராசா, சுனில் அமரதுங்க, நிமல் பியதிஸ்ஸ, பந்துல யாலேகம ஆகியோருடன் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவும் பிரசன்னமாகி பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர்.

இதற்கு முன் மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, கண்டி மாவட்டத்தில் தெல்தெனியா ஆகிய இடங்களிலும் நடமாடும் சேவைகள் இடம்பெற்றன. நான்காவது நடமாடும் சேவையின் போது, கண்காட்சி உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது.

அத்துடன் சுயதொழில் முயற்சி, விவசாயம் போன்றவற்றுக்கான உபகரணங்கள் மற்றும் சுய கடன் திட்டத்திற்கான ஆவணங்கள் என்பனவும் கையளிக்கப் பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பயிரை மேய்கிறது வேலி.

நாட்டின் சகல வர்த்தக நிலையங்களிலும் விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது நுகர்வோர் அதிகார சபையின் கடுமையான உத்தரவாகும். நேற்றுமுதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கிறது.

இந்த நடைமுறையை அரச அதிகாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை வசூலித்திருக்கிறார்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள்.

அவ்வாறு இரண்டு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஐவரை, பணியிலிருந்து நீக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தம்மிடம் பணம் வசூலித்ததாக வவுனியா பொலிஸாருக்கு 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறு சுயலாபம் கருதி செயற்படுவார்களேயானால் நாட்டின் எதிர்காலம் என்னாவது?
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் இந்தோனேஷியக் கடலில் மூழ்கி பலி
இந்தோனேஷியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடிப் படகில் செல்ல முயன்ற ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 12 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

திலீப்குமார் லக்‌ஷ்மன், பகீரதன் ஆகியோரே உயிரிழந்த இலங்கைத் தமிழர்களாவர். ஏனைய 10 அகதிகளும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இச்சம்பவம் குறித்து இந்தோனிஷிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆனால் இந்தோனேஷிய அரசு இச்சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று அறிவித்துள்ளது.

உயிரிழந்த இலங்கைத் தமிழர்கள் இருவரும் கடந்த வருடமும் இந்தோனேஷியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு இப்படியான ஒரு படகுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் அச்சமயம் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...