26.12.2009.
- நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ள சுமார் 1815பேர் இன்று முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை பகுதியில் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசஅதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரிவைச் சேர்ந்த 1200பேரும், மன்னார் மாந்தை கிழக்குப் பிரிவைச் சேர்ந்த 615பேரும் இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 10,000பேர் வரையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு குடியேற்றப்பட்ட அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை வசதிகள், கூட்டுறவு கடைகள், பாடசாலைகள் இயங்க ஆரம்பித்து விட்டதுடன் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்து பதிவுகளை மேற்கொண்டுள்ளவர்களில் 1815பேரே இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதேவேளை, ஒட்டுசுட்டான் கிழக்கு பகுதியில் மேலும் 328 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள கப்பல் நான்காம் கட்டப்போரின்போது புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டது-
இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட கப்பல் புலிகளின் நான்காம் கட்ட ஈழப்போரில் கொள்வனவு செய்யப்பட்டதென கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் ஆயுதக் கடத்தலுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் புலிகளால் ஒருமுறையேனும் இக்கப்பலில் ஆயுதங்களைக் கடத்த முடியவில்லையென்றும் கடற்படையினர் கூறியுள்ளனர். பிரித்தானியா லொய்டர்ஸ் நிறுவனத்தினரிடமிருந்து இக்கப்பல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென தெரிவித்துள்ள கடற்படையினர், இவற்றில் சிலவை ஜப்பானிய தயாரிப்புக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். புலிகள் மொத்தம் 5 கப்பல்களைக் கொள்வனவு செய்ததாகவும் எஞ்சிய 4 கப்பல்களில் ஒன்று கனடாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து இரண்டு ராடர்கள் கைப்பற்றல்-
முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இரண்டு ராடர் இயந்திரங்களை பொலீசார் மீட்டுள்ளனர். இந்த ராடர் இயந்திரங்கள் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த ராடர் இயந்திரங்கள் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டவையென்றும் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த ராடர்கள் சுமார் 80மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என்று தெரிவித்துள்ள பொலீசார், கடற்படையினரை உளவுபார்க்கவே இவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ராடர்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை படையினரும், பொலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
42இலங்கையர்கள் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பினர்-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கென சென்றிருந்த நிலையில் அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்த 42பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் சென்றவர்களே இவ்வாறு இன்று நாடுதிரும்பியுள்ளனர். எசமானர்கள் மற்றும் எசமானிகளால் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர்களையே நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இனந்தெரியாத ஆயுததாரிகளால் தம்புள்ள வர்த்தகர் படுகொலை-
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5மணியளவில் இடம்பெற்றதாக தம்புள்ளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் குறித்த வர்த்தகர்மீது கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலீசார் தெரிவித்துள்னர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 55வயதுடைய தம்புள்ளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய மேலுமிருவர் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுதலை-
இந்தியக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை நாட்டுக்கு திருப்பியழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கடந்தமாதம் இந்த மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவிப்பதற்காக இந்தியத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.