6 மே, 2011

ஒசாமா சுடப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு


அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளன.

இந்நிலையில் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கஞ்சாச் செடிகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

கோவா மற்றும் கிழங்குப் பயிர்களுடனேயே கஞ்சாவும் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒசாமா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதனால் கஞ்சாவை அவர் வலி நிவாரணியாக பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை இச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அபோடாபாட்டிலுள்ள குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அர்ஷாட் கான் மற்றும் தாரிக் கான் ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மற்றையவர்களை விட வசதியானவர்களாக இருந்துள்ளனர்.

அவர்களின் பணியாளர்களுக்கு உயர் ஊதியத்தினை வழங்கியுள்ளனர்.

மேலும் அவ்வீட்டின் அருகில் விளையாடும் குழந்தைகளின் பந்துகள் அவர்களின் வீட்டுத் தோட்டத்திற்குள் விழுந்த சந்தர்ப்பங்களில் புதுப்பந்தினை வாங்குவதற்கு பணம் வழங்குவது அவர்களது வழக்கமெனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே பல குழந்தைகள் அவ்வீட்டுத் தோட்டத்தினுள் பந்தை வேண்டுமென்றே வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களே அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது அதிகமானோர் இவ்வீட்டினைப் பார்வையிட வரத் தொடங்கியுள்ளதுடன் அவ்வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீடானது காஷ்மீரில் இயங்கி வரும் ஹிஷ்புல் முஜாயிடீன் அமைப்பிற்குச் சொந்தமான தென இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து வேட்டை

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்து அதனை ஐ.நா.வுக்கு அனுப்ப ஷபுலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம்ஞூ முடிவெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தக் கையெழுத்து வேட்டையில் புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த ஈழநேரு கருத்து தெரிவிக்கையில்,

'இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் காரணமாகும். எனவே இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி முதல் சென்னை வரை கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். பின்னர் இதனை ஐ.நா.வுக்கு அனுப்புவோம். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்: தயாசிறி எம்.பி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து தேநீர் கொடுத்து அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி அதில் ஒருபகுதியினரை அரசாங்கம் தம்வசப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி தெரிவித்தார்.

தமிழ் மக்களை இனியும் ஏமாற்றி காலத்தை தாழ்த்தி கொண்டிருக்காமல் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுக்களை நடத்தி தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐ.நா. வின் நிபுணர் குழுவின் அறிக்கை, தருஸ்மன் அறிக்கை என பலகோணங்களில் விமர்சிக்கும் அரசாங்கம் அதை தற்போது திருட்டுத்தனமாக அமுல்படுத்தி வருகின்றது. அவசரகாலச் சட்டத்திலுள்ள ஒழுங்கு விதிகளை ஆரம்பித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கின்றது.

எமது நாட்டில் செயற்படுத்த வேண்டியவற்றை ஐ.நா., தருஸ்மன் கூறுகின்ற வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் ஜனநாயகத்தை நாமே செயற்படுத்த வேண்டும். பயங்கரவாதம் இருந்தபோது நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்பட்டது. இன்று அச்சட்டம் தேவையில்லை. அதனை நீக்கிவிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது தான் தருஸ்மன் அறிக்கையினை விலத்தி கொள்ள முடியும்.

புலிகள் ஒழிக்கப்பட்டதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் தீர்வை பெற்று தருவதாக இந்தியாவிடம் கூறினர். தற்போது கூட்டமைப்புடன் பேச்சு நடத்துகின்றனர்.

கூட்டமைப்பினரை அழைத்து பேசி தேநீர் கொடுத்து கூட்டமைப்பிற்குள் பல பிளவுகளை ஏற்படுத்தி ஒரு பகுதியினரை தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை வைத்து கொள்வதற்கான வழியாகவே அதனை பயன்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாது, அமெரிக்கா, இந்தியா, ஐ.நா. என்று ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேவேளை, சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.

இதேவேளை, அரசுக்கு எதிராக மின்னஞ்சல் அனுப்புபவர்களை பற்றி தேடுகிறது. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஜனநாயகம், மனித உரிமை மீறப்படுமாயின் ஜனாதிபதி ஏற்கனவே காட்டிய வழியில் சென்று இங்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்து கூறி அவற்றை தடுக்கும் பணிகளை நிறைவேற்ற நாம் தயார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய நாடுகள் சபை எமது அமைப்பு அறிக்கையை தெளிவுப்படுத்துவோம்: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, மனித உரிமைபேரவை, அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தருஷ்மன் அறிக்கையை முன் வைத்து நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டோம். ஆனால் அந்த அறிக்கையை வைத்துக் கொண்டு எமக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. இந்த விடயத்தில் எமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும். அதற்கான இராஜதந்திர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை இந்த இடத்தில் வெளிப்படுத்த முடியாது என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, நிமால் சிறிபால டி சில்வா ஆகியேக்ஷிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில், வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த மேதினக் கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்தியுள்ளோம். அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மக்கள் வெள்ளம் போன்று திரண்டு வந்தனர். முக்கியமாக வடக்கிலிருந்து 7000த்துக்கும் மேற்பட்ட மக்கள் எமது மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எமது அரசாங்கத்தின் பலத்தை நாங்கள் அரசியல் ரீதியாக மற்றுமொருமுறை உலகத்துக்கு வெளிக்காட்டியுள்ளோம். இந்நிøலயில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகின்றன.

அதனால் நாங்கள் பெருமையோ அகங்காரமோ கொள்ளவில்லை. மாறாக எம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டும் மக்களின் ஜனநாயக மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டும் நாட்டை முன்னேற்றி வருகின்றோம். மேலும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தினை தெளிவுபடுத்துவோம். ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் எமது செயலாளர் ஆவார். அந்த வகையில் தருஷ்மன் அறிக்கையானது தவறானது என்பதனை தெளிவுபடுத்துவோம்.

இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு சில சர்வதேச சக்திகள் எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் எமது அரசாங்கம் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டு முன் செல்லும். இந்த நாட்டின் தலைவர்களில் அதிகளவில் சவால்களுக்கு முகம் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். பிரபாகரன் பிரச்சினை, யுத்தக் குற்றக் விடயம், அழுத்தங்கள் என பல சவால்களை எமது ஜனாதிபதி எதிர்கொண்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அக்ஷீமரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் தலைவராக வரப் போகின்றவர் ஆகியோரின் கருத்துக்களைப் பார்க்கும் போது நாம் மிகவும் பலமான இடத்தில் இருக்கின்றமை தெளிவாகின்றது என்றார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிடுகையில், தருஷ்மன் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெளிவான பதிலை வெளியிட்டுள்ளார்.

தருஷ்மன் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு ஆவணமல்ல. ஐ.நா. வின் பாதுகாப்பு சபை, மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய நிறுவனங்களினால் அந்த அறிக்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது வெறுமனே பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நிறுவப்பட்ட குழுவாகும்.

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்தக் குழுவையும் அறிக்கையையும் ஏற்கவில்லை. இதன் பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐ.நா. செயலாளரே கூறிவிட்டார். அதன் மூலம் இந்த ஆவணம் எந்த பலமும் அற்றது என்பது தெளிவாகின்றது. எனினும் இந்த அறிக்கை தொடர்பில் நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம்.

ஆனால் இந்த அறிக்கையைக் காரணம் காட்டி நாங்கள் ஐ.நா. வுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம். அவ்வாறு செய்ய முடியாது. காரணம் நாங்கள் ஐ.நா. வில் அங்கத்துவம் பெற்றுள்ளோம். ஆனால் எம்மை அசௌகரியப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தடுக்க எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். அதற்காக நாங்கள் இராஜதந்திர ரீதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா. பாதுகாப்பு சபை, மனித உரிமை பேரவை, அணிசேரா நாடுகள் அமைப்பு என்பன எமது தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு எமக்கு உதவ தயாராக உள்ளன. அது எவ்வாறு என்று தற்போது கூற முடியாது. ஆனால் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவரோ கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே தேவையான நேரத்தில் தேவையான பதிலை நாங்கள் வழங்குவோம்.

விரைவில் வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று எமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துவார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும். இந்தோனேசியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் எமது நாட்டின் தூதுக்குழு கலந்து கொண்டு நிலைப்பாட்டை விளக்கும். எனவே நாட்டு மக்கள் எக்காரணம் கொண்டும் பயப்பட வேண்டாம். எமது முன்னிலையில் ஒரு சவால் உள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் தயக்ஷிராக இருக்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவாலை முறியடித்து முன்னேறுவார் என்றார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், புலிகள் ஒழுக்கமுள்ள அமைப்பு என தருஷ்மன் அறிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்ததாக ஐ.நா. வின் சகோதர நிறுவனமான யுனிசெப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. அப்படியானால் தருஷ்மன் குழு யுனிசெப் அறிக்கைகளை வாசித்ததில்லையா? இது தொடர்பில் கவலையடைகின்றோம்.

பின்லாடனை பயங்கரவாதி எனக் கூறும் மேற்கு, புலிகளை விடுதலை அமைப்பு என குறிப்பிட்டுள்ளது.

புலிகளுக்கு முப்படைகள் இருந்தன. அல் கொய்தாவுக்கு அவ்வாறு இருக்கவில்லை. புலிகளுக்கு தனி நிலப்பகுதி இருந்தது. ஆனால் அல் கொய்தாவுக்கு தனி நிலம் இருக்கவில்லை. அல் கொய்தா இரண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் புலிகள் இயக்கம் சுமார் 300 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்த வந்த 600 புலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் புலிகள் அரச தலைவர்கள் ?????படுகொலை செய்துள்ளனர். அந்த வகையில் புலிகள் மிலேச்சத்தனமான அமைப்பாகும். இவ்வாறான அமைப்பை எவ்வாறு ஒழுக்கமுள்ள அமைப்பு என்று கூறுவது? இதேவேளை, ஐ.நா. சாசனத்தில் பயங்கரவாதம் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. அதாவது மேற்கு நாடுகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனை பயங்கரவாதம் என்றும் இப்பகுதி நாடுகளில் ஏதாவது பயங்கரவாத பிரச்சினை ஏற்பட்டால் அதனை புரட்சி என்றும் மேற்குலகம் கூறிவிடும்.

மேலும் புலிகள் இயக்கம் முஸ்லிம் அடிப்படைவாத பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் இன்று எமது நாட்டின் பாதுகாப்புக்கு நேட்டோ அமைப்பு வந்திருக்கும்.

எனவே உலக நாடுகள் பயங்கரவாதம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுடன் கூடிய வரைவிலக்கணம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசனை முன் வைக்கின்றோம். அமெரிக்க உதவி இராஜாங்க செயலக்ஷிளரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் இலங்கை வந்த ரொபட் ஓ பிளேக் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா உதவவில்லை என்ற அவரது அறிவிப்பு, இலங்கையுடன் நெருங்கிய உறவைப் பேணுவது குறித்த அமெரிக்காவின் விருப்பம் என்பன தொடர்பில் அவர் ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ரொபட் ஓ பிளேக் அங்கு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல் ரீதியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் உடன்படுகின்றோம். அரசியல் தீர்வின் அவசியத்தை உணர்ந்துள்ள நாங்கள் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். மேலும் ரொபேட் ஓ பிளேக்கின் கருத்துக்கள் தொடர்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.

தருஷ்மன் அறிக்கை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. அதனால் சிறிய தாக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த பொறியில் சிக்கிவிட வேண்டாம் என மக்களிடம் கேட்கின்றோம்.

தமிழ்க் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர் கூற்று ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரியும் உரிமை இருக்கும் என்றால் ஏன் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து வாழ முடியாது என்று குறித்த எம்.பி. கேட்டுள்ளார்.

ஆணும் பெண்ணும் பிரிந்து வாழலாம். ஆனால் சகோதரர்கள் பிரிந்து வாழ முடியாது. சிங்கள மக்களும் தமிழ், முஸ்லிம் மக்களும் சகோதரர்கள் ஆவர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழுவின் சிபார்சுகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்: பான் கீ மூன்


ஐ,நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் சொத்துக்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வுக்கான இலங்கையின் விதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன கடந்த செவ்வாய்க்கிழமை பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின் போதே பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் பேச்சாளர் மார்டின் நெசேர்க்கி, பாலிச கொஹனவுடனான சந்திப்பின் போது இரு முக்கிய விடயங்களை பான் கீ மூன் வலியுறுத்தினார். நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து பொறுப்புக்கூறல் கடப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துவது இலங்கைக்கு நல்லது என்றும் பான் கீ மூன் சந்திப்பின் போது எடுத்துக்கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கையிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும், பாலித கொஹனவுடனான சந்திப்பு முறையான பதில் அல்ல என்றும் ஐ.நா. வின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இட்ட ஓலமே ஐ.நா.வின் அறிக்கை: த.தே.கூ

முள்ளிவாய்க்காலில் ஐயோ என தமிழர்கள் இட்ட ஓலமே ஐ.நா. அறிக்கையாக இன்று வெளிவந்துள்ளது. இவ்வாறான நிலையில் புதைகுழியில் இருக்கின்ற புலிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை நீடிக்க முயற்சிக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதைகுழியில் இருக்கின்ற புலிகளை தோண்டியெடுத்து அவசரகால சட்டத்தை நீடித்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

நாட்டில் நிலவுகின்ற பொருட்களின் விலை அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்கள் நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. புரட்சி வெடித்தால் அரசாங்கம் 6 மாதங்களுக்கு கூட ஆட்சியில் இருக்க முடியாத நிலைமை ஏற்படும்.

இவ்வாறான நிலையில் ஐ.நா.வின் அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். அது வெறும் அறிக்கையல்ல. தமிழ் மக்கள் 60 வருடங்களாக அனுபவித்த அநீதிகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கியதாகவே இந்த அறிக்கை இருக்கின்றது. இவற்றை கவனத்தில் கொண்டு இனியாவது நிரந்தர சமாதானத்தையும் தீர்வையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு, பல் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஐயோ என்று இட்ட ஓலமே இன்று ஐ.நா அறிக்கையாக வெளிவந்துள்ளது.

கையொப்பங்களை திரட்டி, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் இதற்கு பதிலளித்து விட முடியாது. கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

புலிகளின் ஆதரவாளர்கள் இருப்பதாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதில் எந்த பயனும் இல்லை. நிரந்தரமான சமாதானமும் தீர்வும் காணப்பட வேண்டும். தமிழ் மக்களின் கண்ணீரும் இரத்தமுமே இந்த அறிக்கையில் வெளிவந்துள்ளமையினால் அதனை வரவேற்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனை போன்று ஒஸாமாவின் மரணமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம்போல ஒஸாமாவின் மரணமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரபல்யமான நாடு எடுத்திருக்கும் நடவடிக்கை எமக்கு தைரியம் ஊட்டுகின்றது என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.

இருதரப்பினரிடையே யுத்தம் இடம்பெறுகின்ற போது அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையானதொரு நிகழ்வு என்பதனால் அதனை கிளறிக் கொண்டிருக்காமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நிபுணர் குழுவின் அறிக்கையை இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டனர். இதற்கு சாட்சியாக மே தினத்தில் ஜனாதிபதியின் பின்னால் மக்கள் அணிதிரண்டிருந்தனர். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தலைவர் உட்பட பலர் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர். எனினும் டொலருக்கு அடிமையானவர்கள் மட்டுமே இந்த அறிக்கையை வரவேற்கின்றனர். தாய்நாட்டை நேசித்தால் மட்டுமே வீட்டில் கூட பிரச்சினையின்றி இருக்க முடியும் இது டொலருக்கு அடிமையானவர்களுக்கு புரிவதேயில்லை.

ஒசாமா கொல்லப்பட்டு விட்டார் என்கின்றனர். இன்னும் சிலர் கொல்லப்படவில்லை என்கின்றனர். இது தொடர்பில் எமக்கு எதுவுமே தெரியாது என்றாலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டது போல ஒபாமாவின் மரணமும் உறுதி செய்யப்படல் வேண்டும்.

புலிகள் பற்றி பேசாமல் நாட்டின் பாதுகாப்பு குறித்து பேச முடியாது. புலிகளின் நடவடிக்கைகள் இலங்கையில் முடுக்கி விடப்பட்டாலும் வெளிநாடுகளில் இருப்பவர்களின் செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன. அங்கிருக்கின்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் ஆயுதப் பிரிவினருடன் சிலர் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

அவசரகாலச் சட்டத்திலுள்ள பல விதிகளை நாங்கள் நீக்கிவிட்டோம். நாட்டிற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய சில விதிகளைத் தவிர ஏனைய விதிகள் நீக்கப்பட்டு விட்டன. தற்போது அவசரகாலச் சட்டத்திலுள்ள விதிகள் பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியதல்ல என்பதனால் இத்தொடர்பில் அஞ்ச தேவையில்லை.

மோதல்கள் இடம்பெறும் போது உயிர் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனினும் அதனை கிளறிக் கொண்டிருக்காமல் யுத்தத்தில் சேதமடைந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

அழுத்தங்கள் எந்த வடிவில் வந்தாலும் தளரமாட்டோம் சர்வதேச குடும்ப சுகாதார தின வைபவத்தில் ஜனாதிபதி

* மனிதாபிமான நடவடிக்கையை ஒழிவு மறைவின்றியே முன்னேடுத்தோம்

* 30 வருடகாலம் பயங்கரவாதத்தினுள் சிக்கியிருந்த மக்களை மீட்டது குற்றமா?மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான, உலகின் அழுத்தங்களைக் கண்டு நாம் ஒருபோதும் தளர்வடைய மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

முப்பது வருடங்கள் நீடித்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து, அழிவுகளை நிறுத்தி, அங்கு சிக்கியிருந்த அப்பாவி மக்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து, நாட்டில் அச்சம், பீதியின்றி சுதந்திரமாகக் வாழக்கூடிய சூழல் எம்மால் ஏற்படுத்தப்பட்டிருப்பதை குற்றமாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

சர்வதேச குடும்ப சுகாதார தின ஞாபகார்த்த வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பான தாய்மைக்காக செயற்திறன்மிக்க குடும்ப சுகாதார சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்று கையில், பொதுவாக இன்று முழு நாடும் உலகின் பல விதமான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரமிது. நாம் 30 வருட கால யுத்தத்தை முழுமையாக ஒழித்துக் காட்டியுள்ளோம். இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது. அச்சம், பீதியின்றி வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளின் உயிர்களை காவு கொண்டுள்ளது. வடக்கென்றாலும், தெற்கென்றாலும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பெடுக்கவிருந்த இந்நாட்டுப் பிரஜைகளையே நாம் இழந்துள்ளோம். இப்படியான அழிவையே நாம் நிறுத்தியுள்ளோம். முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை நாம் பதவிக்கு வந்ததும் குறுகிய காலத்தில் அதனை முழுமையாக முடித்தோம். நாம் நாட்டுக்கும், மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

இது நாட்டை அபிவிருத்திப் பாதை யில் நகர்த்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம். முப்பது வருடங்கள் பின்தங்கியுள்ள நாட்டை துரிதமாக முன்னேற்ற வேண்டிய தேவை எம்முன்னால் உள்ளது. அந்த அபிவிருத்தி பாதையில் பயணிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அபிவிருத்தி அடையாத பிரதேசங்களையும், யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாவை ஒதுக்கி செலவிட்டு வருகின்றோம்.

பாதை தவறிய இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து வருகின்றோம். இப்படியான நிலையில் எமக்கு சாட்சியமில்லாமல் குற்றப்பத்திரிகையொன்று முன்வைக்கப்படுகின்றது. அதில் எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டை விடுவிக்க முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க சிலர் துணை புரிகின்றனர். 1987-1990 காலப்பகுதியில் தென் பகுதியில் நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம், வீதிக்கு வீதி டயர்களில் இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள்.

வரலாற்றில் இப்படியான நிலமை ஒரு போதுமே ஏற்படவில்லை. நாம் குரூர பயங்கரவாதத்தை ஒழிக்கும் போது இப்படியான நிலமை ஏற்படவில்லை. நேருக்கு நேர் போராடி பெரிய பயங்கரவாதியை ஒழிப்பதற்கு எமது படையினர் மேற்கொண்ட போராட்டம் இன்று தவறாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் சிக்குண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை விடுவித்தமை மற்றும் பயங்கரவாத அழிவுகளை நிறுத்தியமை என்பவற்றை குற்றமாக்கி விட இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று சிலர் அற்பத்தனமாக சிந்தித்து அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளும் வகையில் வெவ்வேறு விதமான அறிக்கைகளை அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் டொலர்களுக்காகவும், அரசியல் நலன்களுக்காகவும் அறிக்கைகள் அனுப்புகிறார்கள். இவற்றின் விளைவுகளுக்கே நாம் இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்றாலும் இவற்றுக்காக நாம் தளர்வடைய மாட்டேம். எமக்குப் பொறுப்புள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எல்லா பேதங்களையும் மறந்து நாட்டுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க எல்லோரும் ஒன்றுபட்டுள்ளார்கள்.

அதனை நாம் பாராட்டுகின்றோம். அதனால் இப்பிரச்சினைக்கு நாம் முகம் கொடுப்போம். எம்மிடம் கூறுவதற்கு விடயங்கள் உள்ளது. இதனை நாம் இரகசியமாக செய்யவில்லை. நாம் மனித உரிமையைப் பாதுகாத்தபடியே மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தோம். இல்லாவிட்டால் எவ்வளவு வெள்ளைக்கொடிகளை எம்மால் பார்த்திருக்க முடியும்.

ஆகவே, நீங்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்கள். உங்களால் பிரசவிக்கப்படுகின்ற குழந்தைகள் நல்ல போஷாக்குமிக்கவர்களாகவும், நாட்டுக்குப் பங்களிப்பு செய்யக் கூடியவர்களாகவும் திகழ பணியாற்றுங்கள்.

எமது நாட்டில் குடும்ப சுகாதார சேவை 1929ம் ஆண்டில் ஆரம்பமானது. அந்த வகையில், மருத்துவ மாதுகள் சேவைகளுக்கு இந்நாட்டில் நீண்ட வரலாறு உள்ளது.

அன்று பெண்மணியொரு வர் கர்ப்பம் தரித்தால் அப்பெண் குழந் தையை பிரசவிக்கும் வரையும் அவருக்குரிய சகல சேவைகளையும் செய்து கொடுப்பதை மருத்துவ மாதுகள் தமது பொறுப்பாகக் கருதி செயற்பட்டனர். இதனடிப்படையில் கர்ப்பிணிகளை மருத்துவ மாதுகள் அடிக்கடி கண்காணித்து வந்தனர். அவர் களது வீடுகளுக்கு இவர்கள் ஒவ்வொரு நாளும் செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

அன்றைய காலத்தில் கர்ப்பிணி பெண்களின் விடயத்தில் டொக்டர்களை விடவும் மருத்துவ மாதுகளே அதிக கரிசனை காட்டினர். குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாகப் பிரசவிக்கச் செய்வதில் இவர்கள் தீவிர கரிசனை காட்டினர். நான் மாத்தறை, பாலட்டுவவில் தான் பிறந்தேன். எமது கிராமத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் தான் டொக்டர் விக்கிரமசிங்க இருந்தார். என்றாலும் எமக்கும் டொக்டரை விடவும் மருத்துவமாது தான் அதிக சேவை செய்துள்ளார்.

மருத்துவ மாதுகளின் சேவை மிகவும் கெளரவமானது. பெறுமதிமிக்கது. அன்று உங்களுக்கு கிராமத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. நீங்கள் பொற்றுக் கொண்ட அனுபவம் எமது குழந்தைகளைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியது.

எமது குடும்ப சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த சேவையாளர்களில் ஒருவருக்கான விருதைப் பெற்றுள்ளார். இன்று நாம் அந்த நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

எமது நாட்டில் தாய் சேய் உயிரிழப்பு பெரிதும் குறைந்துள்ளது. இவை அனைத்தும் உங்களது சேவையின் பலனாக இந்நாடு பெற்றிருக்கும் நன்மைகள் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடுகள் தொடர்பாகவும் உங்களுக்குப் புரிந்துணர்வுள்ளது. உங்களது சேவை குறித்து மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை இருக்கின்றது. அதனால் நாமும் சமூகமும் உங்களது சேவையைப் பாராட்டுகின்றோம்.

இதே வேளை குழந்தைகள் குறித்து பேசுகின்ற நாம் மந்த போஷாக்கு குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மந்த போஷாக்கை ஒழிப்பது எமது பொறுப்பாகும். இதன்படி குழந்தைகளுக்குப் போஷாக்கான உணவைப் பெற்றுக் கொடுப்பதும எமது கடமையாகும்.

இந்நாட்டில் மந்த போஷாக்கு குறித்து பேசப்படுவதற்கு தவறான உணவுப் பழக்க வழங்கங்கள் தான் காரணம். என்றாலும் எமது நாட்டில் மந்த போஷாக்கு நிலையை போக்குவதற்கு பயிரிடுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம், திவிநெகும குடும்ப பொருளாதார அலகுத் திட்டம் என்பன பெரிதும் உதவும். இத்திட்டங்களை ஊக்குவிப்பதற்கு நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். உங்களது ஆலோசனைகளை கிராம மக்கள் பெரிதும கேட்பார்கள். அது குழந்தைகளுக்கு போஷாக்குமிக்க உணவுகள் கிடைக்க பெரிதும் உதவும் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. சாசனத்தில் பயங்கரவாதம் என்ற பதத்தை சேர்க்க இலங்கை பரிந்துரைக்கும்பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சாசனத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே ஐக்கிய நாடுகள் சாசனத்தில் பயங்கரவாதம் தொடர்பான வாச கத்தை உள்ளடக்குவது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு இலங்கைக்கு அதிகாரமுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் இலங்கை மாத்திரமே பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது நாடாகும். கடந்த 30 ஆண்டுகாலமாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக எமது நாடு பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. பயங்கரவாத யுத்தம் காரணமாக நாடு பல தலைவர்களையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.

யுத்தம் தொடர்பாகவும், பயங்கரவாதம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அனுபவம் இருக்கின்றது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவமுள்ள நாடென்ற வகையில், ஐ.நா சாசனத்தில் “பயங்கரவாதம்" என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்வதன் மூலம் பயங்கரவாதம் தொடர்பாக உலக நாடுகளுக்கு எமது அனுபவங்களையும், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதையும் உலகிற்கு தெளிவாக எடுத்துகாட்ட முடியும்.

இந்த பயங்கரவாதம் என்ற பதத்தை ஐ.நா சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் இதனை சமர்ப்பித்த தருஸ்மன் எதிர்காலத்தில் அமெரிக்கா, நியூயோர்க் நகர் சென்று இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த தருஸ்மன் அறிக்கை தொடர்பாக மன்னிப்பு கேட்பார் என அவர் தெரிவித்தார்.

உலகளவில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயம் தருஸ்மன் அறிக்கையாகும். இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ ஆவணமல்ல. இது தருஸ்மன் என்பவரினால் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்தை துடைத்தெறிய பலம்வாய்ந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கை எமக்கு மிகவும் பலம் சேர்க்கும்

தாய்நாட்டை நேசித்தால் மட்டுமே வீட்டில் நிம்மதியாக வாழ முடியும்
யுத்த காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக் களை கிண்டி கிளறிக்கொண்டிராமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டி யெழுப்ப அனைவரும் உதவ வேண்டும் என பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திலிருந்து, தற் போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளூரில் சுதந் திரமாக நடமாடும் முன்னாள் புலி உறுப்பினர்களுடன் தொடர் புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயன்று வருவதுடன், புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டை தொடர் ந்தும் நடத்தவும் முயன்று வருகின்ற னர்.

புலிகள் இயக்கத்தை முற்றாக எமது நாட்டிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு சமாதானத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை முழு உலகத்திலிருந்தும் துடைத்தெறிவதற்கு பலம்வாய்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளது எமக்கு மிகவும் பலமாக இருக்கிறது.

பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டது அவரல்ல என்றும் இன்னொரு சாரார் கூறுகின்றனர். எதுஎவ்வாறாயினும் பிரபாகரனைப் போல் பின்லேடனின் மரணமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கையை இந்த நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர். கடந்த மேதினத்தின் போது இனம், மதம், மொழி, பிரதேசம், கட்சி வேறுபாடின்றி மக்கள் இதனை நிகழ்த்திக்காட்டிவிட்டனர்.

ஐ.தே.க தலைவர் உட்பட ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் இந்த அறிக்கையை நிராகரித்துவிட்டனர். டொலர்களுக்கு அடிமையானவர்கள் சிலர் மட்டுமே இதனை வரவேற்றனர். தாய்நாட்டை நேசித்தால் மட்டுமேதான் வீட்டில் கூட நிம்மதியாக வாழ முடியும். தாயை, தந்தையை நேசிப்பது போன்று தாய்நாட்டை நேசிக்கவேண்டும்.

இரு தரப்புக்கும் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிரிழப்புக்கள் இடம்பெறுவது இயற்கையே. இதனை கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதில் பலனில்லை. நாட்டை கட்டியெழுப்ப உதவ வேண்டும்.

அவசரகாலச் சட்டத்தின் முழுமையான சரத்துக்களும் இப்போது அமுலில் இல்லை. மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு எதுவித தடையுமில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிக்கக்கூடிய எதுவும் இப்போது அமுலில் இல்லை.

பயங்கரவாதமொன்று நாட்டில் மீண்டும் தலையெடுக்க வழிவகைகள் செய்யக்கூடிய சரத்துக்கள் மட்டுமே இப்போது அமுலில் உள்ளன என்றும் பிரதமர் டி. எம். ஜயரட்ன கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு தெரியாமல் ஒஸாமா வாழ்ந்திருக்க முடியாது அமெரிக்கா சந்தேகம், அறிக்கை சமர்ப்பிக்குமாறு அழுத்தம்


அல்கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இவ்வளவு காலமும் பாகிஸ்தான் அரசுக்கோ, உழவுத்துறைக்கோ தெரியாமல் எவ்வாறு மறைந்து வாழ்ந்தார் என்பதை இஸ்லாமாபாத் தெளிவாக விளக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. பின்லேடனைக் கைது செய்யவோ, கொலை செய்யவோ இவ்வளவு நீண்டகாலம் தேவைப்பட் டிருக்கமாட்டாது.

பாகிஸ்தான் அரசாங்கம் அல் கைதாவுக்கு ஒரு முகமும், மேற்கு நாடுகளுக்கு வேறு முகமும் காட்டியதாலே ஒஸாமாவைக் கொலை செய்ய ஒரு தசாப்தம் தேவைப்பட்டதாகவும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு விரிவான அறிக்கையொன்று வெளியிட வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்நிலைமை வாஷிங்டன், இஸ்லாமாபாத் உறவுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. ஒஸாமாவைத் தேடி வஸிரிஸ்தான் மாநிலத்தில் பல வருடங்களாக நேட்டோ படைகள் குண்டு மழை பொழிந்தன. ஆனால் நான்கு வருடங்களாக ஒஸாமா பின் லேடன் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அப்போடாபாத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரின் இந்த மாளிகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளார்.

இவ்வளவு இறுக்கமான பாதுகாப்புகளை மீறி எவ்வாறு பின்லேடன் அப்போடாபாத் வந்தார். நான்கு வருட வாழ்க்கையில் ஒரு துளி தகவல்களும் வெளியே வராதது ஏன்? ஒஸாமா வாழ்ந்த மிகப் பெரிய மாளிகையை கட்டும் போது அரச, நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்? போன்ற கேள்விகளை சி. ஐ. ஏ. அடுக்கிக் கொண்டே போகிறது.

இவ்வாறுள்ள நிலையில் ஒஸாமா வாழ்ந்த வீட்டில் இருந்து ஐந்து கணனிகள், ஆவணங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ஒஸாமாவின் வங்கிக் கணக்குகள், அருடன் தொடர்புடையோர், அல்- கைதாவின் எதிர்கா இராணுவத் திட்டங்கள் என்பவற்றை கண்டறியலாம் என நம்பப்படுகிறது. இவை வெளியே வந்தால் இன்னும் நிலைமைகள் மோசமாடையும்.

அமெரிக்காவின் சந்தேகஙக்ளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அல் கைதா, தலிபான் என்பன பாகிஸ்தானின் எதிரிகள். முன்னாள் ஜனாதிபதி முஷ்ரஃப் காலத்தில் இருந்து பாகிஸ்தானில் மிக மோசமான தாக்குதல்களை இந்த அமைப்புகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் மின்சார கம்பனியில் 61 கோடி ரூபா நிதி மோசடி பொது முகாமையாளர் பணி நீக்கம்


இலங்கை தனியார் மின்சார கம்பனி (லெக்கோ) பொது முகாமையாளர் கலாநிதி அசந்த பெரேராவை வேலை நீக்கம் செய்ய மின்சார சபை பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெக்கோ பொது முகாமையாளர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

பெக்கோ நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 61 கோடி ரூபா நிதி மோசடி தொடர்பிலே இவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இங்கு இடம்பெற்ற 52 கோடி ரூபா நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்போது 61 கோடி ரூபா நிதிமோசடி இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து இவர் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இடைநிறுத்தப்பட்ட பெக்கோ பொது முகாமையாளரை மின்சார சபை பொது முகாமையாளர் ஹந்ரா ஜயவீர மின்சார சபை பிரதான பொறியலாளராக நியமித்துள்ளார். மின்சார சபை பணிப்பாளர் சபையின் அனுமதியின்றியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மேற்படி பதவியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டுள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...