புனர்வாழ்வளிக்க
ப்பட்ட 120 முன்னாள் போராளிகளுக்கு தச்சுத்தொழில், மேசன், வயரிங், வெல்டிங் போன்ற தொழில்துறைசார் பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு இன்று இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கம் முன்னெடுத்த இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை, ஐரோப்பிய ஒன்றியத்தின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியம் வழங்கியது. அதேவேளை ஒக்ஸ்பாம் நிறுவனம் இந்தத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் புனர்வாழ்வுக்கான ஆணையாளர்நாயகம் பிறிகேடியர் சுதந்த ரணசிங்க, புனர்வாழ்வு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜித முனி சொய்ஸா, இராணுவ உத்தியோகத்தர்களின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஆலோசகர் விலி வன்டென்பெர்க் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கத் தலைவர் கோசல விக்கிரமநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்களுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் சங்கம் மற்றும் ஜேர்மன் அரசு அங்கீகரித்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன் வங்கி வைப்பு புத்தகமும் கையளிக்கப்பட்டது. அதேவேளை சிறப்பாக பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு டூல்ஸ் கிட்டும் வழங்கப்பட்டது. அதேவேளை பயிற்சியை சிறப்பாக பூர்த்தி செய்த இரு மாணவர்களுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
அங்கு உரையாற்றிய அமைச்சர் டியு குணசேகர-
வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் போராளிகளும் இராணுவத்தினரும் ஒன்றிணைந்து நாட்டை மாத்திரமல்ல மக்களையும் மீள இணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும். புனர்வாழ்வளிப்பது என்பது சவால்மிக்கதும் செலவுமிக்கதுமான விடயமாகும்.
மனிதாபிமான முறைப்படி இவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமுதாயத்தில் சிறப்பாக வாழ வைக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். சரணடைந்த 10ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேரை விடுதலை செய்துள்ளோம் ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
சர்வதேசத்தின் முன் இலங்கை குறித்துத் தப்பான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் நிரூபித்துள்ளோம். இவ்வாறான செய்திகள் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.