10 ஜூலை, 2011

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்
போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைக் குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை நிலையை ஐ.நா. தெளிவுபடுத்த வேண்டும் என்றுஅவுஸ்திரேலிய செனட்சபை வலியுறுத்தியுள்ளது.

அந்த நாட்டின் செனட்சபையின் உறுப்பினரான பொப் பிறவுண் இது தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்தப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஏகமனதாக அது நிறைவேறியது. வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக செனட்சபையில் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை. வழமைக்குமாறாக இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகாரஅமைச்சர் கெவின் ரூட் கவனம் எடுக்க வேண்டும் என்று பொப் பிறவுண் கடித மூலம் அவரைக் கேட்டுள்ளார்.

ஐ.நா.வில் உள்ள தமது அரசின் சார்பிலான செயலகம் ஊடாகத்தான் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் மீள் விசாரணை செய்யுமாறு கோரவிருப்பதாக கெவின் ரூட் தெரிவித்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இலங்கையே பதில் கூற வேண்டும்:இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள்


மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேசத்தின் கேள்விகளுக்கும் தருஸ்மன் அறிக்கைக்குமான பதிலை இலங்கையே வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளையில், தமிழ்நாட்டு அரசாங்கமும் தமிழ்நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறை, கரிசனை தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டுகின்ற அதீத ஈடுபாடு என்பவற்றை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியாது.

தமிழக அரசினதும் தமிழ்நாட்டு மக்களினதும் இந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டையும் கருத்தையும் உதாசீனப்படுத்திவிடவும் முடியாது என்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லிக்கு வருகை தந்திருந்த தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியர்கள், சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் உதவிச் செயலாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.

மேற்படி இரு சந்திப்புகளும் கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமை தனித்தனியாக இடம்பெற்றன. இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் இருவரும் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சாஸ்திரி பவனில் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரைச் சந்தித்தனர். அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரை புதுடில்லி சவுத் புளக்கில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது வெளிவிவகார உதவிச் செயலாளர்களும் உடனிருந்தனர்.

இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்களுடனான சந்திப்பின்போது தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், தருஸ்மன் அறிக்கை இலங்கை தொடர்பானதே அன்றி இந்தியா தொடர்பானதல்ல. எனவே, இலங்கை அரசாங்கமே இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்தியா மீது காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தனவே என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், உண்மைதான். காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான உரிய பதிலை இந்தியா வழங்கியது. நாம் வேறெந்த நாட்டையும் துணைக்கு அழைக்கவில்லை. இந்தியாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. அதற்கமைய பதிலளித்தோம் என்று கூறினார்.

தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா என்பன இலங்கைக்குச் சார்பாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் பதிலளிக்கையில்,மற்றைய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கருத்துக் கூறமுடியாது என்று குறிப்பிட்டனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் கருத்துத் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு அறிக்கை என்பன உணர்வுபூர்வமானவை. தமிழ் நாட்டில் தமிழர்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டில் இருந்து 22 மைல்களுக்கு அப்பால் மிக அருகில் வாழும் தமது இனம் சார்ந்த மக்கள் குறித்து கரிசனை, அக்கறை கொள்வது இயல்பே.இந்தகைய போக்கு இன்று மட்டுமல்ல. கடந்த காலங்களிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் அரசாங்கம் உணர்வுபூர்வமற்றதாக இருக்க முடியாது. தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை மற்றும் கருத்தை உணர்வுபூர்வமற்றது என இந்திய மத்திய அரசும் கருத முடியாது என்று பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவுவடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டின் பின்னர். குடாநாட்டினில் இருந்த பெரும்பாலக்ஷின நினைவுச் சின்னங்கள், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மில்லர் ஞாபகார்த்த சிலையும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் கரும்புலித் தாக்குதலின் நினைவு எச்சமாக, சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்திருந்தது. அக்கட்டிடத் தொகுதியையே இடித்து அகற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் படையினரால் போர்வெற்றியை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுவரும் நினைவு எச்சங்கள் பற்றி அவர் எதுவுமே கூறியிருக்கவில்லையென தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...