இலங்கையின் இறுதிப்போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் வல்லுனர்களை கொண்டு தாம் உறுதி செய்த பிறகே அவற்றை ஒளிபரப்பியதாக அந்த ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கெலம் மெக்ரே பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த ஆவணப்படத்தின் பல படக்காட்சிகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சில அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆவணப்படத்தில் இருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை எப்படி உங்களால் உறுதிப்படுத்த முடியுமென்று கெலம் மெக்ரே அவர்களிடம் பிபிசி சார்பில் கேட்கப்பட்டபோது அவர் மேற்கண்ட பதிலை அளித்தார்.
“இதில் காண்பிக்கப்பட்ட இரண்டு படக்காட்சிகளின் தொகுப்புகள் இலங்கையில் போர் நடைபெற்ற போது எடுக்கப்பட்டவை. அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்டவை. அதற்குப்பிறகு வரும் படக்காட்சிகள் இலங்கை இராணுவத்தினர் மொபைல் தொலைபேசியில் எடுக்கப்பட்டவை. அதில் நிராயுதபாணிகளாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை காட்டும் படங்கள், இறந்தவர்களின் நிர்வாண உடல்கள், கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது ரீதியிலான காட்சிகள் ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்டவை," என்றார் கெலம் மெக்ரே.
அந்தப் படங்களை தாங்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்து அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், அறிவியல் ரீதியாக பல்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தபிறகே இதன் நம்பகத்தன்மையை தாங்கள் உறுதி செய்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதை போலியானது என்று கூறுபவர்களுடன் வாதிடுவது கடினமான விடயம் என்று தெரிவித்த அவர், இது போலியானது அல்ல என்று தங்களால் கூற முடியும் என்றும் ஏனென்றால் மிகக்கடுமையான சோதனைகளுக்கு இந்தப் படக்காட்சிகள் உட்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
“இந்த காட்சிகள் எந்த வகையான தொலைபேசியில் எடுக்கப்பட்டன், என்ன தேதியில் இவை எடுக்கபப்பட்டன என்பது குறித்தெல்லாம் எமது தரப்பில் என்னவெல்லாம் சோதனைகளை நடத்தப்பட வேண்டுமோ அதை உரிய வல்லுநர்களை கொண்டு நடத்தி உறுதிப்படுத்திக் கொண்டோம். அந்த வல்லுநர்கள், காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை ஆராய்ந்தார்கள். இவை சுயாதீனமான வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டன. எனவே இவை உண்மையற்றவை என்றோ மோசடி செய்யப்பட்டவை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உண்மையாக நடைபெற்ற சம்பவங்களை உண்மைத்தன்மையுடன் நாங்கள் காட்டியுள்ளோம்", என்றார் கெலம் மெக்ரே.
அதேசமயம் இலங்கை அரசாங்கம் இந்த ஆவணப்படத்தில் இருக்கும் சில காட்சிகளை அறிவியல் வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்ததாகவும், அவை கோர்வையாக இல்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டு, சில இடங்களில் குரல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களே என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த கெலம் மெக்ரே, இலங்கை அரசாங்கம் ஒரு வல்லுநரை பயன்படுத்தியுள்ளதாக அறிவதாகவும், வல்லுநர்களை விமர்சிப்பது தனது பணி கிடையாது என்றும் தெரிவித்தார்.
“இலங்கை அரசு ஒருவரை பயன்படுத்தியுள்ளனர்; ஐ நாவோ நான்கு வல்லுநர்களை பயன்படுத்தியது; நாங்கள் இருவரை பயன்படுத்தியுள்ளோம். இலங்கை அரசு மேற்கோள்காட்டும் ஆஸ்திரேலிய வல்லுநரைத்தவிர இந்தப் படத்தை பார்த்து ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களும் இவை ஆதாரமானவைதான் என்று கூறியுள்ளனர். எனவே இந்தப் படக்காட்சிகள் நம்பகமானவைதான் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஒரு செய்தியாளர் என்கிற முறையில் ஆராய்ந்து செய்தி வெளியிடுவதுதான் எனது பணி. அந்த ஒரு வல்லுநருக்கும் மற்ற வல்லுநர்களுக்கும் இடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவது எனது பணி இல்லை", என்றார் கெலம் மெக்ரே.