14 ஜனவரி, 2010

அரசியல் தீர்வொன்றை முன்வைப்பார் என்ற நம்பிக்கையிலேயே மகிந்தவை நாம் ஆதரிக்கின்றோம்- புளொட்

எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுமிடத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு சிறந்தவொரு அரசியல் தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர், புலிகளின் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை அரசு ஆரம்பித்து செயற்படுத்தி வரும் இவ்வேளையில் இவற்றைக் குழப்பி எமது சமூகத்திற்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவுள்ளோம். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் தமக்குள் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்டவை என்பது வெளிப்படையானது.
இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பாராளுமன்றம் எப்போதும் குழப்பகரமானதாகவே இருக்கும். தனக்கென ஒரு பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிராதவரை சரத் பொன்சேகாவினால் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லமுடியாது. மகிந்த ராஜபக்ஸவினது அரசாங்கத்திலும் இனவாதகொள்கையுடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் மகிந்தவிடமுள்ளது. இவற்றை கருத்திலெடுத்தே நாம் வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றோம். இவ்வாறு நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பொய் கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக் கூடாது - நிட்டம்புவையில் ஜெனரல் சரத்

வெறும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, எந்தவொரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் போதிலும் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிட்டம்புவையில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
"நான் என்னுடைய கொள்கைகளை மிக எளிதான முறையில் முன்வைத்துள்ளேன். உங்களைத் திசை திருப்புவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை. அவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்டும் பார்த்தும் ஏமாற வேண்டாம்.
சுயநலங்களைத் தவிர்த்து நாட்டுக்காக செயற்படுபவர்கள் யாரென்பதை இனங்காண வேண்டும். நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்துக்களின் தைப்பொங்கல் காலத்து எதிர்பார்ப்புகள் எமது பிரதேசத்தின் பன்மைத்துவத்துகுக்கு எடுத்துக்காட்டு

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கொண்டாடப்படும் தைப் பொங்கல் பண்டிகையின்போது இந்துக்கள் தம் பாரம்பரிய கலாசார மரபுகளை அனுஷ்டித்து, அவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்து, எதிர் காலம் குறித்தும் எமது சமூகத்தில் அமைதி, சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்படவும் சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன் மைத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு: இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப்பொங்கல் மரபுகளையும், கிரியைகளையும் இந்துக் கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின் றனர். இரண்டு வகையில் புனிதமாகக் கரு தப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறு வடைகளுக்காகவும், அதை அளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங் கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபலமான இந்துப் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசாப்தங்களாக அவர்களின் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக் கிடைத்திருப்பது அவர்களது மகிழ்சிக்குப் பெரிதும் காரணமாய் அமைகிறது.

இன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும் வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை வாழ் அனைத்து இந்துக்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எம்மிடையே சமாதானமும், சுபீட்சமும், நல்ல நம்பிக்கையும்இ புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்துகொள்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா-சம்பந்தன் திருட்டு ஒப்பந்தத்தை 27ம் திகதி கிளித்தெறிவேன்- மஹிந்த ராஜபக்ஷ

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்காக ஒன்றுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். எங்களது நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம். இங்கு கையடிக்க வராதீர்கள் என்று சொல்லும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகரான என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஐ. ம. சு. முன்னணியின் இரத்மலானை ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்மலானை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது நாடு துண்டாடப்பட்டிருந்தது. பயங்கரவாதம் அரசோச்சியது. பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்து தான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம்.
நாட்டை மீண்டும் ஐக்கியப் படுத்தினோம். பிளவுபட்டிருந்த மக்களையும் ஒன்றுபடுத்தி னோம். இதன் பயனாக வெளிநாட்டு அழுத்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண் டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பயனாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய முடிந்தது.
புலிகளையும் தடைசெய்ய முடிந்தது. இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புக் களைச் செய்துதான் நாடு விடுவிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றொரு இரகசிய உடன்படிக்கை என்ற செய்தியைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
திருட்டுத் தனமான இரகசிய உடன்படிக்கை கள் ஊடாக நாடு துண்டாடப்படவோஇ காட்டிக்கொடுக்கவோ ஒரு போதும் இடமளி யேன். சரத் பொன்சேகா சம்பந்தனுடன் செய்துள்ள திருட்டு உடன்படிக்கையை எதிர்வரும் 27ம் திகதி கிழித்தெறிவேன். உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தைப் பெற்றுத் தருவேன். சிறந்த உலகிற்கு இட்டுச் செல்லு வேன் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, ரோகித போகொல்லாகம, ஜீவன் குமாரதுங்க, தினேஷ் குணவர்தன, எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா அபிவிருத்திப் பணிகள் அரச அதிபர் தலைமையில் மீளாய்வு

வவுனியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நாளை (15) வவுனியா செயலகத்தில் கூட்டமொன்று நடைபெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்வதுடன், 2010ஆம் ஆண்டு திட்டமிடப் பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப் படுமென அரச அதிபர் தெரிவித்தார்.
வவுனியா நகர் முழுவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கும் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏ-பீ தரத்திலான சகல பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. புளியங்குளம், நெடுங்கேணி- ஒட்டுசுட்டான் பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமா கின்றன. நெலுக்குளம்-நேரியகுளம், செட்டிக்குளம் பாதையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாயககுரல்

புதன்கிழமை 13.01.2010

வடக்கு கிழக்கில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்னர் குடாநாட்டில் தேர்தல் பிராச்சாரங்கள் சுதந்திரமாக மேற்கொள்ள முடிவதால் ஜனாதிபதி வேட்பாளர்களும் வடபகுதியை நோக்கி படை எடுக்கத்தொடங்கிவிட்டனர். மக்களுக்கும் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் மிகவும் அக்கறை செலுத்தி வருகின்றனர். கடந்த வாரம் - வடக்கில் - வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரு வேட்பாளர்களும் நேரடியாக தமது பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.


தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் தமது நிலைப்பாட்டை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட காலத்திலேயே அறிவித்திருந்தன. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் மீறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் கூட்டமைப்பில் உள்ள இன்னொரு கட்சியான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என அறிவித்திருந்தது.


ஆரம்ப காலத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் எனக் கூறி ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மறைமுகமாக செயல்பட்டனர். இப்போது எட்டு அம்சக் கோரிக்கையுடன் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் அறிவித்துள்ளார். அதே வேளை சரத் பொன்சேகாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்படி எந்த ஒப்பந்தங்களும் கிடையாது என இரா.சம்பந்தன் அந்த செய்தி தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மீள்குடியேற்றம், புலிகளை விடுதலை செய்தல், அதிபாதுகாப்பு வலையங்களை அகற்றல்., மீன்பிடிதுறை உட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகவே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.


சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது இனப்பிரச்சினை பற்றியாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அது கூட அங்கு குறிப்பிடப்படவில்லை. காரணம் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் இரு பிரதான கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும்(ஜே.வி.பி.) ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக நேர் எதிரான கருத்து முரண்பாடுகள்; இருப்பது தெரிந்ததே. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட ஜே.வி..பி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. இந்த நிலையில் இவர்கள், ~~இலங்கை சிங்களவர் நாடு என்ற இனவாதக் கருத்தை அடி மனதில் கொண்டிருக்கும் சரத் பொன்சேகாவிடம் எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும். இவை அனைத்தும் தமிழ் தேசியக் கூட்மைப்புக்கு தெரியாததல்ல.


எதிர்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சரத் பொன்சேகாவை ஆதரித்து வன்னியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காகவே சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.


இனப்பிரச்சினை தொடர்பாக தேர்தல் முடிந்த பின்னரே பேசலாம் என்று ஜனாதிபதி தெரிவித்தது தமக்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறிய சம்பந்தர் இப்போது எந்த நம்பிக்கையில் சரத்தை ஆதரிக்கிறார் என்பது புரியவில்லை.


வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கூட்டமைப்பு கூறுகிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு சட்டவிரோதமானது என்பதால் வடக்கையும் கிழக்கையும் தனி மாகாணங்களாக பிரிக்கவேண்டும் என நீதிமன்றத்தை அணுகியது ஜே.வி.;பி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கில் இணைப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு கூறி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்து தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் சரத் என். சில்வா. இந்த நீதியரசர் சில்வாவும் ஜே.வி.பி.யும்தான் சரத் பொன்சேகாவின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்பார்களா?


அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நீக்குவது தொடர்பாக கூட்டமைப்பு தெரிவிக்கிறது. யுத்தம் முடிந்த கையுடன் நடந்த பாதுகாப்புச் சபைகூட்டத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு தொடர்பாக வைத்த ஆலோசனைகளில் ஒன்று புலிகள் மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்கு இப்போதுள்ள இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் இராணுவத்தை புதிதாக சேர்த்து வடக்கு கிழக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது. இந்த எண்ணத்துடன் செயல்பட்ட சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு வலையம் தொடர்பாக சாதகமான முடிவை எப்படி எதிர்பாhர்க்கமுடியும்.


மீள்குடியேற்றம், புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டு மீன்பிடித் தடைகளும் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. A-9 பாதை எந்த நேரமும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக கூட்டமைப்பு யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவிக்கிறார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பான கூட்டமைப்பின் முடிவை கண்டித்து சிவாஜிலிங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இனப்பற்றுள்ள எந்த தமிழனும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான். திருகோணமலை அரச அதிபராக ஒரு இராணுவ அதிகாரியை நியமிப்பதா என எதிர்ப்பு தெரிவித்தவர் இரா.சம்பந்தன்;. வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்தவர் சம்பந்தன். ஆனால் இப்போது நாட்டின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரி வருவதற்கு ஆதரவு வழங்கும் சம்பந்தன் தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவிக்கிறார்.


சரத் பொன்சேகா நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பளம் அதிகரிப்பு எனத் தெரிவிக்கிறார். இது மாதத்திற்கா அல்லது வருடத்திற்கா எனக் குறிப்பிடப்படவில்லை. ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தான் பதவி ஏற்று ஆறு மாதகாலத்துக்குள் ஒழிப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அறிவிப்பை அமைச்சரவைக்கு அனுப்பப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்று நிறைவேற்றிய பின்னர் சர்வசன வாக்கெடுப்பிலும் மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். தற்போதை தேர்தல் முறையில் தனித்து இந்தப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும்; பெறமுடியாது. எனவே ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் இணைந்தே ஜனாதிபதி முறையை மாற்ற முடியும்.


இன்றைய சூழலில் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை என்று தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்ற அரசியல் அவதானிகளின் குற்றச்சாட்டு நியாயமானதே.

மேலும் இங்கே தொடர்க...