17 டிசம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு-

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்றுமாலை 7.00மணியளவில் கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு அங்கத்துவம் கொண்ட குழுவை நியமிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அரங்கம் சார்பிலான குழுவுக்கு இன்று மூவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி திரு.வீஆனந்தசங்கரி, திரு.த.சித்தார்த்தன், திரு.அ.இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். கடந்த 11.12.2010அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்; மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பாக ஒருமித்த குரலில் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு வரைபை யாப்பதற்கு இருதரப்பின் அங்கத்துவமும் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று அரங்கம் கூடி மேற்படி மூவரையும் தெரிவுசெய்ததுடன், மேலும் இருவரை குழுவில் இணைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மீன்பிடி வலைக்குள் சிக்கிய இராட்சத கடற்பன்றிகள்





மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில் கடற்தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் இராட்சத கடற்பன்றிகள் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடற்பன்றிகளைக் கரைக்குக் கொண்டுவந்துள்ளதாக கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

பன்றிகளை கரைக்குக் கொண்டு வந்த மீனவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பன்றிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவற்றைப் பார்வையிட வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பௌத்த கலாசாரத்துக்கு அடிபணிந்தே சிறுபான்மையினர் வாழவேண்டும் :தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்




சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் என்ற கொள்கைக்கு இணங்காத எந்தவொரு நபருக்கும் உள்நாட்டில் இடமில்லை என தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள பௌத்த கலாசாரத்திற்கு அடிபணிந்தே ஏனைய சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள கலாசாரமும் அதன் மொழிகளுமே தேசிய கொள்கைகளாக கருதப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியும். ஆனால் தேசிய பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டவர்களாகவே அவர்கள் வாழ வேண்டும். மேலும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள தடையானது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டில் சில சக்திகளும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் சிலவும் கருத்துக்களை வெளியிடுகின்றன. இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை எந்தவொரு நாட்டிற்கும் அஞ்சாது. ஏனென்றால் சகல அதிகாரங்களையும் கொண்ட தனி சிங்கள இராச்சியமே இலங்கையாகும்.

எனவே இந்தியா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாடுகளின் சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். தேசிய கீதம் விடயத்தில் யாருக்கும் தலையிட உரிமை கிடையாது. அது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : கொட்டாஞ்சேனையில் சம்பவம்




கனடாவிலிருந்து நாடுதிரும்பிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொட்டாஞ்சேனை ஹின்னி ஹப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து நாடு திரும்பிய இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றுக்காலை இவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்தகொண்டதாக கூறப்படும் குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் சிகிச்சை பெறுவதற்காகவே இவர் இலங்கை வந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தூக்கில் தொங்கியநிலையில் இவரது சடலம் நேற்று மீட்கப்பட்டபோது அதற்கு அருகில் தமிழினால் எழுதிய கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் திவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல:





எல்லாவல மேதானந்ததேரர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.

சிங்கள மக்களோ சிங்கள அரசியல் வாதிகளோ ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். 1983 கலவரத்துக்கு சிங்கள மக்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லை. அதில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள மக்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னர் வடக்கில் சுமார் 40 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தனர். ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றபோதிலும் இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்களாகிய குறித்த சிங்கள மக்களை மீள்குடியேற்றுமாறு கூறுவதற்கு யாருமில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு நேற்று கொழும்பில் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்றது
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்கு தல யாத்திரை செல்வோருக்கு இலவச வீசா



இலங்கையிலிருந்து இந்தியாவுக் குத் தல யாத்திரை மேற்கொள்கிற வர்க ளுக்கு இலவச வீசா வழங்கும் நடை முறை அமுல்படுத்தப் பட்டுள்ளது. இம் மாதம் முதலாந் திகதியிலிருந்து உடனடியாக அமு லுக்கு வரும் வகை யில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.


இலங்கையருக்கு ‘சிம் கார்ட்’ பெறுவதை
இலகுபடுத்தவும் ஏற்பாடு

‘கோபியோ’ அமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் நடத்திய பேச்சுவார்த் தையை அடுத்து இதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாத்திரை செல்பவர்கள் மத விவகார அமைச்சில் உறுதிக் கடிதமொன்றைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இலவச வீசாவைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தது பத்துப் பேராவது ஒரு தடவையில் யாத்திரை செல்வதாக உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை யர்கள் இந்தியா சென்றடைந்ததும் கைய டக்கத் தொலைபேசிக்கான ‘சிம் கார்டை’ பெறும் நடைமுறையை இலகு வாக்குவ தாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் இணக் கம் தெரிவித்ததாக பிரபா கணேசன் எம். பீ. தெரிவித்தார்.

இந்தியா செல்லும் இலங்கையர்கள் ஏற்கனவே பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுபற்றி கோபியோ பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்ற அமைச்சர் பிரதி அமைச்சர், வடக்கு விஜயம்


மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகள் வடக்கே ஒரு வார கால விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பிக்கும் இந்த விஜயம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை இடம்பெறுமென மீள்குடியேற்ற அமைச்சின் ஊடகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். 18ம் திகதி முதல் 24ம் திகதி வரையும் இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமது விஜயத்தை மேற்கொள்வார்கள்.

குறித்த மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், அத்துடன் இந்த விஜயத்தின்போது மீள்குடி யேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்வார் களென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சகல இலத்திரனியல் ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் 6 ஆண்டு திட்டத்துக்கு அங்கீகாரம்



சகல அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு 2017ல் பூர்த்தி செய்யப்படும்.

தற்பொழுது சகல இலத்திரனியல் ஊடகங்களும் ‘அனலொக்’ தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பம் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2017ல் அனலொக் முறை முற்றாக நீக்கப்படும்.

இதற்கான செலவை அரசாங்கம் ஏற்க உள்ளதோடு, பல அயல் நாடுகளில் ஏற்கெனவே டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனலொக் முறையில் இருந்து டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறுவதற்கு 2015 வரை தனியார் துறைக்கு அவகாசம் வழங்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

தினமின’ மேலும் 100 ஆண்டுகள் பயணத்துக்கு தயாராகிவருகிறது


நூறு ஆண்டுகள் இலங்கை வாசகர்களுக்கு பங்களிப்பை வழங்கியுள்ள தினமின மேலும் நூறு ஆண்டுகளுக்கான பய ணத்துக்கு தயாராகி வருகிறது. இலங்கையர்கள் என்ற ரீதியில் இது நாங்கள் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய மகிழ்ச்சி தரும் செய்தி யாகும்.

தினமினவின் இந்த செயற்பாட்டை அளப்பதற்கு கடந்த நூறு வருடங்களில் முகங் கொடுக்க நேர்ந்த பல்வேறு சவால்களை வெற்றிகொண்டு தைரியத்துடன் முன்னேறிச் செல்லும் பாதையை உற்று நோக்குவதே சரியானதாகும் என்று தினமின பத்திரிகையின் நூற்றாண்டை முன்னிட்டு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கணேகல விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

எமது நாடு அந்நிய ஆட் சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஆரம்பிக் கப்பட்ட தினமின தேசிய பத்திரிகையாக அபி மானத்துடன் எழுந்து நின்றது. நாட்டின் சுயாதீனத்துவம் மற்றும் தேசிய தனித்துவம் ஆகிய வற்றையே தினமின எப்போதும் சார்ந்து நின்றது.

அந்நியத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தேசிய சக்திகளுக்கு துணை நின்றதுடன், தேசிய உரிமை மற்றும் கலாசார பெருமையையும் அது பாதுகாத்து வந்தது. கண்ணியம் மிகுந்த பத்திரிகை துறையில் முன்னிலை வகித்ததுடன் உயர் தரத்துடன் கூடிய பத்திரிகை துறைக்காக சரியான மொழிப் பிரயோகம் அத்தியாவசியமானது என்பதை சுட்டிக் காட்டியது. இவ்வாறான தேசாபிமான நடவடிக்கைகளுக்கு வழி வகுத்த தினமின ஆரம்பகர்த்தா டி. ஆர். விஜேவர்தனவுக்கு

இனத்தின் நன்றிகள் உரித்தாகட்டும். நூறு ஆண்டுகள் சென்றாலும் தினமின வுக்கே உரித்தான தனித்துவம், மனதுக்கு பிடித்தமான ஊடக முறைமை இன்னும் தொடரும் வகையில் செயற்பட்ட பின் னாள் முகாமைத்துவத்தின் சேவையை நாம் மதிக்கின்றோம்.

தசாப்த காலங்களாக இந்நாட்டில் இடம்பெற்ற பாரிய அரசி யல் சர்ச்சைகள், பொருளாதார பிரச்சினை மற்றும் உண்மையான தேசிய நீரோட் டத்துக்காக இடம்பெற்ற சமூக நிகழ்வுகளின் வேதனையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் சிங்கள வாசகர்களுக்காக இன்றுவரை தினமின முன்னேற்றகரமான ஊடக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுதந்திரத்தின் பின்னர் அதிகாரத்துக்கு வந்த அனைத்து அரசாங்கங்களையும் தினமின ஆதரித்து வந்துள்ளது. இன்றும் அதுபோலவே செயற்படுகிறது. அதிகாரத்துக்கு வரும் அரசாங்கம் மக்களுக்காக ஆற்றும் சேவை தொடர்பாக மக்களுக்கு புரிய வைப் பதற்காக தினமின அவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் மகத்துவத்துடன் நாட்டில் இன்று வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளுடன் போட்டியிட்டு எழுந்து நிற்கும் வகையில் தினமின எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டி யவை என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடையில்லை



தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை யில்லை. அரசியல மைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு தேசிய கீதம் இசைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க வேண் டுமென தவறான அபிப்பிராயம் பரப் பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மா நாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசிய லமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் மெட்டையோ உச்சரிப் பையோ மாற்றாது பாட முடியும். அதற்குரிய கெளரவம் வழங்கப் பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சிங் களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூற முடியாது. அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்க முடியும். ஐ.தே.க. ஆட்சியில் தேசிய கீதத்தின் மெட்டை மாற்ற முயற்சி நடந்தது. தேசிய கீதத்தை இசைத்து நடனம் ஆட இடமளிக்க முடியாது. சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
மேலும் இங்கே தொடர்க...

தலைமன்னார்-இராமேஸ்வரம்; கொழும்பு-தூத்துக்குடி கப்பல் சேவைகள் இலங்கை - இந்தியா கடற்போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் தினமும் பெருமளவு வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இருநாட்டுக்குமிடையில் கடற் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு நாட் டுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதோடு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார்.

இதன் பிரகாரம், முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும். தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விமான போக்குவரத்து சேவை மாத்திரமே இடம்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பத்தில் கப்பல் சேவைகள் நடைபெற்ற போதும் யுத்தம் காரணமாகக் கடந்த 30 வருடங்களாக கப்பல் சேவை இடம்பெறவில்லை.

மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதனூடாக பெருமளவு மக்கள் நன்மையடைய உள்ளனர். விமானத்தில் பயணம் செய்வதைவிட குறைந்த செலவில் கப்பலில் பயணம் செய்ய வாய்ப்புக்கிட்ட உள்ளதோடு பயணிகளுக்கு புதிய பயண அனுபவமும் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...